Friday, February 27, 2015

வாயில் வெள்ளிக்கரண்டியோடு!

'நீ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருந்தால், அவர் கூறியபடியே நீ அவருக்குச் சொந்தமான மக்களினமாய் இருப்பாய்' (இணைச்சட்டம் 26:18)

'வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறப்பது!' (to be born with a silver spoon) என்ற ஆங்கிலச் சொல்லாடலைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பிறப்பிலேயே ஒருவர் பெரிய பணக்காரராக இருப்பதைக் குறிப்பதுதான் இந்தச் சொல்லாடல்.

நாம் ஒருவேளை பிறந்தபோது கையில் விரலோடுதான் பிறந்திருப்போம். சரி. பரவாயில்லை. உண்மையிலேயே கரண்டியோடு பிறந்தால் எவ்வளவு அசௌகரியமாக இருக்கும்?

நீங்கள் பிறக்கும் போது எப்படி இருந்தாலும், உங்களுக்கு அருகில் இருக்கும் நபர்களைக் காட்டிலும் நீங்கள் சிறியவர்களாக இருந்தாலும், நீங்கள் என் பார்வையில் மதிப்பு பெற்றவர்கள் என்கிறார் யாவே இறைவன்.

இத்தாலியில் ஒருவர் மற்றவரைக் கூப்பிடும்போது பயன்படுத்தும் பல வார்த்தைகளில் ஒன்று எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். அந்த வார்த்தை என்னவென்றால் 'தெசோரோ மியோ!' - அதாவது, 'என் புதையலே!'

புதையல் என்றால் மூன்று அர்த்தங்கள்:

அ. நம் எதிர்பார்ப்பு இல்லாமல் வருவது.
ஆ. மிகவும் மதிப்பு வாய்ந்தது. (சில நேரங்களில் கவுண்டமணி-செந்தில் கண்டுபிடிக்கும் புதையல் போல நமக்கு வெறும் செப்புக்காசுகளும் கிடைப்பதுண்டு!)
இ. மிகவும் அரியது.

இந்த மூன்றையும் இவர்கள் உணர்ந்து சொல்கிறார்களோ இல்லையோ இந்த வார்த்தையில் இவ்வளவு அர்த்தங்கள் உள்ளன.

யாவே இறைவன் நாளைய முதல் வாசகத்தில் இஸ்ராயேல் மக்களைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் இது: 'நீங்களே என் புதையல்!'

இது கடவுளிடமிருந்து வரும் கொடையாக இருந்தாலும், இதோடு சேர்ந்து ஒரு கடமையும் வருகிறது. அதாவது, கடவுளை அன்பு செய்து, அவரின் வழிகளில் நடப்பது.

கடவுள் இஸ்ரயேல் மக்களை மட்டுமல்ல, நம்மைப் பார்த்துச் சொல்லும் வார்த்தையும் இதுவே.

கடவுளின் பார்வையில் நாம் அரிதானவர்கள், மதிப்பு மிகுந்தவர்கள். அப்படியென்றால் அதற்கேற்ற முறையில் நாம் நடந்து கொள்வதும் அவசியம்.

பொற்கிண்ணத்தை வைத்து குப்பை அள்ளினால் எப்படி இருக்கும்?

பொற்கிண்ணம் ஆலயத்தின் பலிபீடத்தில் தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதையே தூய பவுலடியார் திமோத்தேயுவுக்கு எழுதும் இரண்டாம் திருமுகத்தில் அழகாகச் சொல்வார்:

'ஒரு பெரிய வீட்டில் பொன், வெள்ளிக் கலன்கள் மட்டுமல்ல, மண் மற்றும் மரத்தாலான கலன்களும் உள்ளன. அவற்றுள் சில மதிப்புடையவை. சில மதிப்பற்றவை. ஒருவர் மதிப்பற்றவற்றிலிருந்து தம்மைத் தூய்மையாக வைத்துக் கொண்டால், அவர் மதிப்புக்குரிய தூய கலனாகக் கருதப்படுவார். அவர் எந்த நற்செயலையும் செய்ய ஆயத்தமாயிருப்பார். தம் தலைவருக்கும் பயனுள்ளவராயிருப்பார்!' (2:20-21)

நாம் கடவுளின் பார்வையில் புதையல்கள் என்றால், நம் நண்பர்களையும் அப்படிக் கூப்பிடலாம்தானே!

ஏனெனில், நம் நண்பர்களும் நாம் எதிர்பாராமல் நம் வாழ்வில் வந்தவர்கள்தாம்! மதிப்பிற்குரியவர்கள்தாம்! அரிதானவர்கள்தாம்!


3 comments:

  1. அழகான பதிவு! இறைவனின் பார்வையில் நாம் எத்துணை விலையேறப்பெற்றவர்களெனக் காட்ட எத்துணை வார்த்தைகள்.??!! 'அரிதானது; மதிப்பு மிக்கது; புதையலது; பொற்கிண்ணம் போன்றது.....' வாழ்வில் நாம் கீழே விழும் நேரங்களில், நம்மைப் பிறர் குறைத்து மதிப்பீடு செய்யும் நேரங்களில் இந்த வார்த்தைகள் போதுமே நம்மைத் தூக்கி நிறுத்த.நம் பெருமையை மட்டுமல்ல, நமக்குக்கொடையாக்க் கிடைத்திருப்பவர்களின் பெருமையையும் உணருவோம்!
    அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்..தந்தையே! தாங்கள் கூட எனக்கு ஒரு " தெசோரோ மியோ!" தான். இந்தப் புதையலை , இந்தக் கொடையை இறைவன் என்றென்றும் ஆசீர்வதிப்பாராக! என் பெருமையை நானே உணரச்செய்த பதிவு இன்றையது. நன்றியும்! பாராட்டும்!

    ReplyDelete
  2. Anonymous2/28/2015

    Dear yesu good mor. Reflection is good. Thereso mio

    ReplyDelete
  3. நீ என் கண்களுக்கு விலையேறப் பெற்றவள் என்ற இறைவாக்கியத்திற்கு முக்கியமான 3 அர்த்தங்களை உள்ளடக்கிய புதையல் என்ற தலைப்பின் மூலம் எடுத்தியம்பிய விதம் பாராட்டுக்கள்.

    ReplyDelete