Wednesday, February 4, 2015

நாமும் ஓடலாம்! தாண்டலாம்!

உம் துணையுடன் நான் பந்தயக்குதிரையை விட வேகமாக ஓடுவேன்.

என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன்.

(திபா 18:29)

இரண்டு நாட்களுக்கு முன்பாக திபா 18ன் மூன்று வசனங்களைப் பற்றி எழுதினேன். அதே திருப்பாடலில் உள்ள மற்றொரு வசனத்தைப் பற்றி (18:29) எழுத விழைகிறேன் இன்று.

நம் தமிழ் மொழிபெயர்ப்பில் 18:29ன் முதல் பகுதி 'உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்' என தரப்பட்டுள்ளது. 'ராட்ஸ்' என்ற எபிரேய சொல்லை 'ஓடுவேன்' என்றும் மொழி பெயர்க்கலாம். 'நசுக்குவேன்' என்றும் மொழிபெயர்க்கலாம். அதே போல 'கதார்' என்ற வார்த்தையை 'பந்தயக்குதிரை' என்றும் 'படை' என்றும் மொழிபெயர்க்கலாம். 18:29ன் இரண்டாம் பகுதி மதிலைத் தாண்டுவதைப் பற்றிச் சொல்வதால், 'ஓடுவதே' சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும் என்பது என் கருத்து. ஏனெனில், வசனத்தின் முதல் பகுதியில் 'ஓடும்' திருப்பாடல் ஆசிரியர், இரண்டாம் பகுதியில் 'மதிலைத் தாண்டுகிறார்'.

18:29அ 'உம் துணையுடன்' என்று உள்ளது. 19:29ஆ 'என் கடவுளின் துணையால்' என்று உள்ளது.

18:29அ கடவுளை நோக்கி நேராகச் சொல்வதாகவும், 18:29ஆ தனக்குத் தானே அல்லது மற்றவர்கள் முன் சொல்வதாகவும் இருக்கிறது.

18:29 ஐ 18:4ன் பின்புலத்தில் பார்ப்போம்:

'சாவின் கயிறுகள் என்னை இறுக்கின.
அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன.
பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின.
சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன'

'கயிறுகள்', 'சுழல்கள்', 'கண்ணிகள்' - இந்த மூன்றுமே ஒருவரின் காலின் வேகத்தைத் தடுப்பவை. இரண்டு கால்களும் கட்டப்பட்ட கழுதையோ, கழுத்தும், காலும் இணைத்துக் கட்டப்பட்ட  கன்றுக்குட்டியோ வேகமாக நடக்க முடிவதில்லை. அவைகளின் வேகத்தைக் குறைக்கவும், ஓட்டத்தைத் தடுக்கவும் மனித மூளை கண்டுபிடித்ததே இது. ஆற்றின் ஓட்டத்தில் இருக்கும் சுழல்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலே எனக்குத் தலைசுற்றும். சுழல்களை நேருக்கு நேர் பார்த்தது திருச்சிக்கு அருகில் இருக்கும் முக்கொம்பில் தான். ஆற்று மணலில் கால் ஊன்றி நிற்க முடிந்தாலும், அந்த இடத்தில் சுழல்கள் இருந்தால் அங்கே மண் கூட புதை மணலாக மாறிவிடுகிறது. 'கண்ணிகள்' என்பது ஒரு வேடர் சமூக வார்த்தை. 'கண்ணிகள்' என்றாலே நம்ம ஒன்னாங்கிளாசுல படிச்ச வேடனும், கண்ணியும் என்ற கதைதான் நினைவிற்கு வருகிறது. வேடன் வருவதைப் பார்த்து எல்லாப் பறவைகளும் வலையோட ஓடி, அப்புறம் ஒரு எலி கிட்ட போய் ஹெல்ப் கேட்டு, அப்புறம் அந்த எலி வலையைக் கடிச்சு விடுமே! நினைவிருக்கா!

தன் எதிரிகள் தன்னைச் சூழ்ந்திருந்தபோது தான் நடக்கக் கூட முடியாமல், அவர்களின் பிரசன்னம் கயிறு போல, சுழல் போல. கண்ணி போல இருந்ததாக உணர்கிறார் தாவீது.

மேலும், இந்தக் கயிறுகள், சுழல்கள் மற்றும் கண்ணிகள் யாருடையவை என்றால் 'சாவினுடையவை' - பாதாளம் என்பதும் சாவையே குறிக்கிறது. ஏனெனில் இறப்போர் அனைவரும் 'சேயோல்' எனப்படும் பாதாளத்திற்குச் செல்வர் என்பது இசுராயேலரின் நம்பிக்கை. அவர்களின் மற்றொரு நம்பிக்கை என்னவென்றால் கடவுள் மட்டுமே இந்த பாதாள உலகின் மேலும், சாவின் மேலும் ஆட்சி செலுத்தக் கூடியவர்.

இதே கருத்தை நாம் இணைச்சட்ட நூல் 32:39லும் வாசிக்கின்றோம்:

'கொல்பவரும் நானே.
உயிரளிப்பவரும் நானே.
காயப்படுத்துபவரும் நானே.
குணமாக்குபவரும் நானே.'

மேலும், சாவு என்ற ஒன்று மட்டும் தான் நாம் தப்பிக்க முடியாத ஒன்று. நோய் வராமல் இருந்திடலாம். முதுமையைக் கூட தள்ளி வைத்துவிடலாம். ஆனால், சாவு கட்டாயம் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. இந்த சாவு என்பது உயிர் நம்மைவிட்டு பிரியும் அந்த ஒரு நொடியில் நிகழ்வதல்ல. மாறாக, இயற்கை நம்மை அன்றாடம் இந்த அனுபவத்திற்குத் தயாரிக்கிறது. நாம் வளரும் போது நம் உடலில் செல்கள் அழிகின்றன. புதிய செல்கள் பிறக்கின்றன. நாம் நடக்கும் போது கூட முதல் அடி இறந்தால் தான் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். நாம் பேசும் போது கூட முதல் வார்த்தை இறந்தால் தான் அடுத்த வார்த்தை பிறக்க முடியும். ஒரே அடியில் நின்றால் பயணம் தொடர்வதில்லை. ஒரே வார்த்தையில் நின்றால் உரையாடல் புரிவதில்லை. ஆக, ஒவ்வொன்றிலும் நாம் இறந்து கொண்டே இருக்கின்றோம். நாம் கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் ஏதோ ஒரு வகையில் இறந்து, ஏதோ ஒரு வகையில் புதிதாகப் பிறக்கின்றோம்.

நம்மைச் சூழ்ந்திருக்கும் பல பிரச்சினைகளில் இந்த பயம்தான் நம்மை அதிகம் கட்டுவிக்கிறது. 'மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்' என்கிறது திபா 23:4. நம் வாழ்க்கை முழுவதுமே சாவின் நிழல் படர்ந்திருக்கிறது.

நமக்கு வரும் பிரச்சினைகள், உடல்நலக் குறைவு, உறவுகளில், உணர்வு நிலைகளில் வரும் பிரச்சினைகள், நம்மைப் பிடிக்காதவர்கள் செய்யும் சதி, நாமாக தேடி இழுத்துக் கொண்ட சிக்கல்கள் - இவை அனைத்துமே இன்று நம்மைப் பிடித்திருக்கும் கயிறுகள், சுழல்கள், கண்ணிகள் தாம். இவைகள் நம் வாழ்க்கையின் ஓட்டத்தை தளரச் செய்கின்றன. நம் கால்களைக் கட்டிப் போடுகின்றன.

இவைகளை வெற்றி கொள்ள என்னதான் வழி?

'கடவுளின் துணை'

'ஓடுவேன்' - 'தாண்டுவேன்' - இந்த இரண்டு வார்த்தைகளால் தாவீது தான் அடைந்த முழுமையான விடுதலையைச் சொல்லி விடுகின்றார்.

கண்ணியில் சிக்கி, கால்கள் நெருக்கப்பட்டு ஒரு அடி கூட எடுத்த வைக்க முடியாமல் இருக்கும் ஒருவர் ஓடவும், மதிலையும் தாண்டவும் வலிமை பெறுகிறார்.

'கடவுளின் துணை' என்று சும்மா சொன்னால் ரொம்ப ரெலிஜியசாக இருக்கும்.

கடவுள்னா என்ன?

நமக்கு நம்பிக்கை தரும் எல்லாமே நம் கடவுள். நமக்கு பயம் தரும் எல்லாமே நம் சாத்தான்.

நாம் நெருங்கிப்பழகும் ஒருவர் நமக்கு நம்பிக்கை தருகிறாரா! அவரும் கடவுள் தான். நாம் நிர்ணயித்து அதை நோக்கி ஓடும் லட்சியம் நம்பிக்கை தருகிறதா! அதுவும் கடவுள் தான். கடவுள் இப்படித்தான் இருப்பார் என்று சொல்லிவிட முடியாதுதானே!

நமக்கு நம்பிக்கை தரும் ஏதாவது ஒன்றைப் பற்றிக்கொண்டாலே போதும்!

நாமும் ஓடலாம்! தாண்டலாம்!



3 comments:

  1. 'சாவு'..தானைத்தலைவனையும் தள்ளாட வைக்கும் வார்த்தை.ஆனால் இருள் சூழும் பள்ளத்தாக்கில் நாம் நடக்க நேரிடினும் நமக்குப் பயமில்லை' நாம் சொல்வதற்கு காரணம் 'அவர்' நம்மோடு இருப்பதனால்.நிறைய உரமூட்டும்,ஊக்கமூட்டும் வார்த்தைகள் இன்றையப் பதிவில்.'இணைச்சட்ட' நூலின் வரிகள் நம்மைத் தாங்கிப்பிடிக்க ஒருவர் இருக்கிறார் என்று நமக்குக் கூறுகின்றன." ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று பிறக்க முடியும்", மேலும் "நமக்கு நம்பிக்கை தரும் ஏதேனும் ஒன்றைப் பற்றிக்கொண்டாலே நாமும் ஓடலாம்; நாமும் தாண்டலாம்" ...போன்ற வரிகள் ....நம்மை சிந்திக்க வைக்கின்றன.சிந்திக்கத் தூண்டிய தந்தையை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கட்டும்!

    ReplyDelete
  2. "நமக்கு வரும் பிரச்சினைகள், உடல்நலக் குறைவு, உறவுகளில், உணர்வு நிலைகளில் வரும் பிரச்சினைகள், நம்மைப் பிடிக்காதவர்கள் செய்யும் சதி, நாமாக தேடி இழுத்துக் கொண்ட சிக்கல்கள் - இவை அனைத்துமே இன்று நம்மைப் பிடித்திருக்கும் கயிறுகள், சுழல்கள், கண்ணிகள் தாம். இவைகள் நம் வாழ்க்கையின் ஓட்டத்தை தளரச் செய்கின்றன. நம் கால்களைக் கட்டிப் போடுகின்றன.

    இவைகளை வெற்றி கொள்ள என்னதான் வழி?

    'கடவுளின் துணை'"
    மிக அருமை!
    சாவு பற்றி ஞாபகமூட்டி தவக்காலம் அருகில் வருவதை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. Anonymous2/04/2015

    Dear Yesu by the Grace of God, i can do all things. thank you for your inspiring message

    ReplyDelete