Saturday, February 7, 2015

கொடி உயர்வது போல

இன்று மாலை எங்க அம்மாவுடன் பேசிக்கொண்டிருந்த போது கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் எங்க ஊர் முருகன் கோவிலில் தைப்பூசம் கொண்டாடப்பட்டதாகச் சொன்னர்கள். அந்த முருகன் கோவிலுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. அந்தக் கோவிலில் உள்ள மயில் (கல்-மயில்) எங்க அப்பா இந்துவாக இருந்தபோது வாங்கிக் கொடுத்ததாம். ஆக, இன்று அவர் இல்லையென்றாலும், நாங்கள் கிறிஸ்தவர்கள் என்றாலும் எங்களையும் இந்தத் திருவிழாவிற்கு அழைப்பார்கள். இந்த நாளில் கிறிஸ்தவர்-இந்து என்ற பேதமெல்லாம் யாரும் பார்ப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் கிறிஸ்துமசுக்கு நம்ம கோயிலுக்கு வருவாங்க. நாங்க தைப்பூசத்துக்கு அவங்க கோயிலுக்குப் போவோம். ஆனா, எங்க அம்மா குடும்பம் மட்டும் வராது. அது ஏன்னு கேட்டா அதற்கு ஆயிரம் காரணம் சொல்வாங்க. சரி அதை விடுவோம்.

இந்த ஆண்டு என்ன சிறப்பு என்றால் முருகன் கோவிலில் கொடியேற்றி விழாக் கொண்டாடினார்களாம். இதற்காக புதிய கொடிமரம் ஒன்றும் செய்தார்களாம்.

நம் நண்பர் ஐஏஎஸ் அவர்களும் தங்கள் பங்கின் திருவிழாவிற்கு கொடியேற்றியதாகச் சொன்னார்கள்.

கிறிஸ்தவ மரபில் கொடியேற்றி நாம் திருவிழா கொண்டாடும் வழக்கம் இந்துக்களிடமிருந்து தான் நமக்கு வந்திருக்கிறது. இந்துக்களிடமிருந்து என்று சொல்வதைவிட அது ஒரு இந்தியப் பண்பாடு என்றே சொல்லலாம். இது இன்று நேற்று இருந்ததல்ல. கேரளாவில் தோமையார் கால்பதித்த போதே அங்கு நடப்பட்ட கொடிமரங்களைப் பார்த்து வியந்ததாகவும், அந்த மரங்களை அழிக்க மனமில்லாமல், அதன் மேல் சிலுவையை வைத்து, சிலுவைக் கொடிமரங்களாக மாற்றியதாகவும் வரலாறு உண்டு;. இன்றும் கேரளாவின் ஏறக்குறைய அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் முகப்பில் பளபளவென கொடிமரம் இருப்பதையும், அந்தக் கொடிமரத்திற்கு எண்ணை ஊற்றி வேண்டுதல் செய்வதையும் காணலாம்.

கொடி என்பது அரசனோடும், ஆள்வோரோடும் சம்பந்தப்பட்டது என்றாலும் இதன் தோற்றம் கண்டிப்பாக குகைமனிதர்கள் காலத்தில் இருந்திருக்கும். ஒரு குகையிலிருந்து வேட்டைக்குப் புறப்படும் மனிதன் தன் குகை இதுதான் என்று அடையாளப்படுத்துவதற்காக சிறிய கொடியை நட்டு வைத்திருக்கலாம். அதுவே காலப்போக்கில் வேட்டையாடி முடித்துவிட்டு தன் வீடு திரும்பச் சிரமப்பட்ட குகை மனிதன் தன் வீட்டை தூரத்திலேயே அடையாளம் காணவும், வழியை சுலபமாகக் கண்டுபிடிக்கவும் கொஞ்சம் உயரமான கம்பில் ஏதாவது ஒரு துணியைத் தொங்கவிட்டிருக்கலாம். துணி பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஆக, தான் வேட்டையாடிய விலங்கின் தோலை வர்ணம் பூசியோ அல்லது புகையடித்தோ பயன்படுத்தியிருக்கலாம். சமூகம் வளர வளர, நாடோடி வாழ்க்கை மறைந்து ஆற்றங்கரைகளில் வசிக்கத் தொடங்கிய நேரத்தில் ஒரு ஊரை மற்றொரு ஊரிடமிருந்து அடையாளப்படுத்த கொடி போன்ற ஒன்றைப் பயன்படுத்தியிருக்கலாம். இப்படியாக அது வளர்ந்து இன்று நாடுகளுக்கு, மதங்களுக்கு, விளையாட்டு டீம்களுக்கு, வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளுக்கு (கறுப்பு, வெள்ளை, ரெட் கிராஸ்) என கொடிகள் வளர்ந்து விட்டன.

கொடி என்றால் அடையாளம்.

அடையாளம் எப்படி உருவாகிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.

மதுரைக்குக் போகும் வழியில் பசுமலை வரும்போது கொஞ்சம் ஜன்னல் வழியாக எட்டிப்பாருங்கள். வழியெங்கும் சிற்பிகள் கற்களைச் செதுக்கிக் கொண்டிருப்பார்கள்: பிள்ளையார், முருகன், சரஸ்வதி என அனைத்துக் கடவுள்களும் பிறக்கும் இடம் அதுதான். மேலும் அங்கேதான் உபயம், ஆர்.ஐ.பி போன்ற கல்வெட்டுகளும் செதுக்கப்படும். செய்து முடித்த சிலைகளின் ஓரமாக வைக்கப்பட்டிருக்கும். அதைக் கூர்ந்து பார்த்தால் அங்கே தான் டீ கிளாஸ் கிடக்கும் அல்லது யாராவது ஈரத்துணியைக் காயப்போட்டிருப்பார்கள். யாரும் கண்டுகொள்ளாமல் அங்கே இருக்கும். ஆனால், அதே சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மூலஸ்தானத்திற்குச் சென்றுவிட்டால் அதன் மேன்மை மாறிவிடுகிறது. அதை யாரும் கல் என்று சொல்வதில்லை. சிலை என்றும் சொல்வதில்லை. அதைச் செதுக்கிய சிற்பியும் அதன் மேல் உரிமை கொண்டாட முடிவதில்லை. எல்லாவற்றையும் கடந்து கடவுளின் அடையாளமாக மாறிவிடுகிறது. இப்போது அதைத் தொட்டாலோ, கண்டுகொள்ளாமல் விட்டாலோ அது தீட்டு எனவும், அவமரியாதை எனவும் கருதப்படுகிறது.

ஒரு அடையாளம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கும் போது அது மிகப்பெரிய சக்தியாக மாறிவிடுகிறது.

அதுபோலத் தான் தேசியக் கொடியும். துணிக்கடையில் டெய்லர் கையில் இருக்கும் வரை தான் அது துணி. அதுவே மரத்தில் ஏறிவிட்டால் அதன் மதிப்பு கூடிவிடுகிறது.

'கோமகன் என்பவன் கொடியுடையவன்' - என்கிறது புறநானூறு. அதாவது அரசன் ஒருவன் போருக்குச் செல்லும் போதும், அல்லது தன் நகரத்தை ஆளும்போதும் அவனுக்கு அடையாளமாக இருப்பது கொடி.

புலிக்கொடியோனே என்று பாண்டிய மன்னனை இளங்கோ புகழ்வதை நாம் சிலப்பதிகாரத்தில் வாசிக்கின்றோம். முருகனுக்கு மற்றொரு பெயர் சேவற்கொடியோன்.

கொடிமரம் நமக்கு என்ன சொல்கிறது?

கொஞ்சம் ஃப்ராய்டியின் வார்த்தையில் சொன்னால் கொடி மரம் என்பது ஒரு ஃபேல்லஸ். அதாவது, ஆற்றல் மற்றும் வீரத்தின் சின்னம். ஆகையால் தான் பண்டைய அரசர்கள் தங்கள் வீரத்தின் அடையாளமாக கொடிமரங்களை நட்டினர். அல்லது தூண்களை எழுப்பினர். டெல்லியில் உள்ள குதுப்மினார், அசோகா தூண், ரோமின் பெரிய ஆலயங்களின் முன் உள்ள தூண், எகிப்தின் பிரமிடுகளை ஒட்டிய தூண், நாம் விவிலியத்தில் வாசிக்கம் அசேராக் கம்பம் அனைத்தும் வீரத்தின், ஆற்றலின் அடையாளங்கள் தாம்.

நாம் நம் ஆலயத்தில் கொடியேற்றும் போது அந்தப் புனிதரை அல்லது மாதாவை அல்லது இயேசுவை நாம் நம் அரசனாக, அரசியாகக் கொண்டுள்ளோம் என எல்லார் முன் அறிக்கையிடுகிறோம்.

கொடைக்கானல், எல்லீஸ் நகர், ஞானஒளிவுபுரம் போன்ற இடங்களில் திருவிழாக் கொடியேற்றங்களின் போது நான் பார்த்த காட்சிகள் இன்றும் என் கண்முன் வந்து போகின்றன. அழுகையோடும், கண்ணீரோடும் நிற்கும் இறைமக்கள், மேள தாளம், பூ, மாலை, தூபம், சாம்பிராணி என கமகமக்கும். மேலும் கொடியிறக்கத்தின் போதும் பலர் அந்தக் கொடியைத் தொட்டு ஆசீரைப் பெற்றுக்கொள்வார்கள். இந்தக் கொடியைத் தயாரிப்பதிலும் அதிக சிரத்தை காட்டுவார்கள். வேளாங்கண்ணியின் கொடியேற்ற நிகழ்வும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்வு என்பது மறுக்க முடியாதது.

நாம் எதோடு நம்மை அடையாளப்படுத்துகிறோமோ அதாகவே நாம் மாற வேண்டும். இதுதான் கொடி நமக்கு வைக்கும் சவால்.

மூலைக்கு மூலை நம் நாட்டுக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, வெளிநாட்டு வியாபாரத்துக்கு கைதட்டிக் கொண்டிருந்தால் நாம் நம் கொடியை அவமதிக்கவே செய்கிறோம்.

'ஆசியுரைகளும், மந்திரிப்புகளும்' என்ற நூலில் உள்ள கொடி மந்திரிப்பு செபத்தில் அழகான வாக்கியம் ஒன்று உண்டு:

'இந்தக் கொடி உயர்வது போல எங்கள் உள்ளமும், எண்ணமும் உயர்வதாக!'



3 comments:

  1. "கொடி"... இது எப்பொழுதும் ஏதோ பக்தி,மரியாதை போன்ற நம்மைப்பரவசத்தின் உச்சத்திற்குக் கொண்டுசெல்லும் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது.இதற்குப்பின்னனி குகை மனிதன் காலத்திலிருந்தே வருகிறது என்பது சுவையான விஷயம்." நாம் எதோடு நம்மை அடையாளப்படுத்துகிறோமோ அதுவாக நாம் மாற வேண்டும்.' உண்மைதான்.அடுத்த முறை கொடி ஏற்றப்படும்போது கண்டிப்பாக " இந்தக் கொடி உயர்வது போல் எங்கள் உள்ளமும்,எண்ணமும் உயர்வதாக'...என்று என் மனம் சொல்லும். புதையுண்ட பல விஷயங்களைத் தோண்டியெடுத்து அதன் ந்திமூலம்,,,ரிஷிமூலம் கண்டுபிடித்து எமக்குப் புதையல் போல் தரும் தந்தையே இறைவன் தங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete
  2. Anonymous2/07/2015

    Yesu Good morning. Three things to share with you. 1.Now a days I get up with a good spirit. I decide the day how it should be. Of course by the grace of God. 2.Flag hoisting went on well. Many people fell at my feet and sought for blessing. Felt so unworthy and truly prayed for my simple people. Yes tears filled my eyes. 3My younger brother with his wife flies to California on 28th February to work for Apple IT industry. Presently works for Infosys mangalore.God is so good to us. Ok yesu let me take the Rosary and go for a an hour of walk in the school premises. See you. Have a great day.

    ReplyDelete
  3. Dear IAS, thanks a lot for the updates. My sincere wishes to you and to your brother. Have a nice day. Love.

    ReplyDelete