Friday, February 20, 2015

நுகம்

வேடிக்கையான கதை ஒன்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒரு ஏழைக்குடியானவன் தன் பண்ணையாரின் தோட்டத்தில் விறகு பொறுக்கச் செல்கின்றான். தனக்குரிய வேலையை முடித்துவிட்டு, விறகுகளும் பொறுக்கிக்கொண்டு வீடு திரும்புகிறான். விறகுக்கட்டு அழுத்திக் கொண்டே வருகிறது. விறகுக்கட்டையின் சுமையோடு அவன் தள்ளாடவும் செய்கிறான். சற்று நேரத்தில் அவன் பின்னாலயே ஒரு டிராக்டர் வரும் சப்தம். சற்றே திரும்பிப் பார்க்க அது தன் பண்ணையாரின் டிராக்டர் என்றதும் சந்தோஷம். தன்னையும் அதில் ஏற்றுக்கொள்ளுமாறு பண்ணையாரிடம் கேட்கின்றார். பண்ணையாரும் அவனை ஏற்றிக்கொள்கின்றார். சற்று தூரம் போனதும் பண்ணையார் திரும்பிப் பார்க்க, இவன் விறகுக்கட்டைத் தலையில் வைத்தவாறே நின்று கொண்டு பயணம் செய்வதைப் பார்க்கின்றார். 'ஏம்ப்பா! அதைக் கொஞ்சம் கீழே இறக்கி வைச்சுட்டு சுகமா வரலாம்ல!' என்கிறார். 'இல்லயா! எனக்கு நீங்க டிராக்டர்ல இடம் கொடுத்ததே சந்தோஷம். என் சுமை என்னோட போகட்டும்! இதையும் இறக்கி வச்சி நான் உங்களுக்குக் கஷ்டம் கொடுக்க வேணாம்!' என்று பதில் சொல்கிறான்.

'உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு...' (எசாயா 58:9)

நேற்றைய முதல் வாசகத்தின் தொடர்ச்சியே நாளைய முதல் வாசகமும். நேற்றைய வாசகத்திலும் 'நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ... ... எவ்வகை நுகத்தையும் உடைப்பதன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு' (எசாயா 58:6) என்று நாம் வாசித்தோம்.

இந்த ஏழைக்குடியானவனைப் போல வாழ்க்கை என்ற டிராக்டர் பயணத்தில் நாம் இறக்கி வைக்காமல் சுமந்து கொண்டு வரும் சுமைகள் நிறையவே இருக்கின்றன.

'நுகம்!'

இந்த வார்த்தை உழவு உலகின் வார்த்தை. ஏர் பிடித்து உழும்போது ஏரை மாடுகளோடு இணைக்கும் குறுக்குக் கம்பும், மாட்டு வண்டியின் வண்டிப்பகுதியை மாடுகளின் மேல், அல்லது ஒற்றை மாட்டின் மேல் இணைக்கும் குறுக்குக் கம்பும் தான் நுகம்.

நுகம் ஒரு மரக்கட்டை. மாடுகளையும் ஏரையும், மாடுகளையும் வண்டியையும் பிணைக்கும் ஒரு இணைப்புக் கோடு. மாடுகளுக்கும், வண்டிக்கும் தொடர்பை ஏற்படுத்தக் கூடியது நுகம் தான். சமஸ்கிருத வார்த்தையான 'யோகா'விற்கும் 'நுகம்' என்றே பொருள். அதாவது, யோகா தான் நம் உடலில் உள்ள ஆன்மாவையும், உடலுக்கு வெளியே இருக்கும் பெரிய ஆன்மாவான 'பிரம்மாவையும்' இணைக்கிறது.

இந்த மாடுகள் என்ன நினைக்குமாம்? அன்றாடம் நுகத்தை தங்கள் கழுத்தில் வாங்கி வாங்கிப் பழக்கப்பட்டு, இந்த நுகங்களும் தங்களின் கழுத்தின் ஒரு பகுதி போல என்று நினைக்குமாம்! (மாடு நினைக்கிறது உனக்கு எப்படித் தெரியும் என்று கேட்காதீங்க!) அண்மையில் டிவியில் நாய்க்கான உணவு விளம்பரம் பார்த்தேன். அந்த விளம்பரத்தின் இறுதியில் - 'இன்னும் மேம்படுத்தப்பட்ட சுவையோடு!' என்று போட்டார்கள். எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்: 'மேம்படுத்தப்பட்ட சுவைன்னு யார் டேஸ்ட் பண்ணியிருப்பா?' - அத மாதிரிதான் இதுவும்! சரியா?

மாடுகளை எஜமானன் அல்லது அதன் உரிமையாளன் அடிமைப்படுத்தித் தன் வேலைக்குப் பயன்படுத்தும் ஒரு உபகரணமே நுகம். ஆக, நுகம் என்பது அடிமைத்தனத்தின் அடையாளம். செதேக்கிய அரசன் காலத்தில் பாபிலோனியா அடிமைப்படுத்தப்படும் என்பதை எரேமியா இறைவாக்கினர் கழுத்தில் நுகத்தைச் சுமந்து கொண்டு இறைவாக்கு உரைக்கும் நிகழ்வை நாம் அறிவோம் (காண்க. எரேமியா 27).

நுகம் இணைக்கிறது அப்படின்னு சொல்றோம்! பின் எப்படி இது அடிமைத்தனம் ஆகலாம்?

இதுதான் இன்றைய சிந்தனை.

மனிதர்கள் தங்களிலே நிறைவு இல்லாதவர்கள். ஏதாவது ஒன்றோடு அவர்கள் தங்களை இணைத்துக்கொண்டிருத்தலில் தான் தங்களின் நிறைவை அவர்கள் காண்கிறார்கள். நம் உள்ளத்தில் எப்போதும் ஒரு அநாதை உணர்வும், பாதுகாப்பற்ற உணர்வும் நீங்காமல் நிலைகொண்டுள்ளது. அதனால் தான் நாம் மற்றவர்களைத் தேடுகிறோம். மற்றவைகளோடு நம்மையே இணைத்துக்கொள்ள விரும்புகிறோம்.

தாயின் கருவறையில் நம்மைத் தாயோடு இணைக்கும் தொப்புள் கொடியும் ஒரு நுகம் தான். அதாவது, அது நம்மைத் தாயோடு இணைக்கிறது. ஆனால், அந்த நுகம் இருந்து கொண்டே இருந்தால் நல்லா இருக்குமா? சரியான நேரத்தில் தொப்புள் கொடி அறுக்கப்படவில்லையென்றால் அது தாய்க்கும், சேய்க்கும் ஆபத்தாக மாறிவிடுகின்றது. இந்த இணைப்பு அறுந்து வெளியே வரும்போது நாம் முதல் பாதுகாப்பற்ற உணர்வை அனுபவிக்கின்றோம். இந்த உணர்வின் வெளிப்பாடே கண்ணீர். இந்த உலகிற்குப் பயத்தோடே நாம் வெளியே வருவதால் தான் நாம் நம் கைகளைக் கூடி இறுக்க மூடிக்கொண்டு பிறக்கின்றோம். (இது ஒரு அதிசயம் தான்! ஏனெனில் கையை விரித்துக்கொண்டு பிறந்தால் நம் பிஞ்சு நகம் நம் பிறப்பின் குழாயைச் சேதப்படுத்தும் வாய்ப்பும் உண்டு!) பிறந்தபின் கைகளை விரிக்கும் நாம் எதையாவது பற்றிக்கொள்ளவே விரும்புகிறோம் - படிப்பு, பெயர், பணம், பொருள், புகழ், பக்தி, உறவு - ஒன்றை விட்டு மற்றொன்றை நாம் பிடித்து அவற்றோடு இணைத்துக்கொள்ள விரும்புகிறோம். அப்படி இருக்கும் இணைப்பு காலப்போக்கில் அடிமைத்தனமாகவும் மாறும்போதுதான் அது ஆபத்தாகி நம் மகிழ்வைக் குலைக்க ஆரம்பிக்கிறது.

எந்த நுகம் நம்மை இணைக்கிறதோ, அதே நுகம் நம்மை அடிமைப்படுத்தவும் செய்கிறது.

இதில் பிரச்சினை என்னன்னா? எந்த நுகம் நம்மை இணைக்கிறது, எந்த நுகம் நம்மை அடிமைப்படுத்துகிறது என்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. சில நேரங்களில் இணைக்கும் நுகத்தை அடிமைத்தனம் எனவும், அடிமைத்தனத்தை நல்ல நுகம் என்று கூட நாம் நினைத்துவிடத் தொடங்குகிறோம்.

நுகம் நமக்கு வெளியில் தான் இருக்க வேண்டும் என்பதல்ல. நமக்கு உள்ளேயும் இருக்கலாம். நம் உள்ளத்தில் இருக்கின்ற எதிர்மறை உணர்வுகள், பயம், சின்னச் சின்ன இன்பங்களின் பின்னால் போகும் நிலையற்ற மனப்பக்குவம் என்று நம் உள்ளுக்குள்ளும் நுகங்கள் இருக்கலாம்.

இந்த நுகங்களை நாம் அடையாளம் காணுதலே அவைகளை அகற்றுவதற்கான முதல் படி.

இப்படி இருக்கும் நுகங்களை நாம் அகற்றிவிட்டால் அதன் பலன் என்ன என்பதை தொடர்ந்து எசாயா எழுதுகின்றார்:

'இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்.
ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்.
வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்.
உன் எலும்புகளை வலிமையாக்குவார்.
நீயும் நீர் பாய்ந்த தோட்டம் போலும்,
ஒருபோதும் வற்றாத நீரூற்று போலும் இருப்பாய்.'
(எசாயா 58:10ஆ-11)



5 comments:

  1. ரொம்பவும் அழகான,நமது அன்றாட வாழ்க்கையை சீர்படுத்தக்கூடிய பதிவு இன்றையது.ஏழைக்குடியானவன்- பண்ணையார் பற்றிய துணுக்கு சிரிப்பை வரவைத்தாலும் ஆழ்மனத்தைத் தட்டி எழுப்பி சிந்திக்கவும் வைக்கிறது. ' நுகம்' சொல்லும்போதே இதன் அழுத்தத்தை உணரமுடிகிறது.நம்மிடம் இருக்கும் நுகம் நம்மை இணைக்கிறதா அல்லது அடிமைப்படுத்துகிறதா....சிந்திக்க வேண்டிய தருணம்தான் இது.நம்மை விழுத்தாட்டும் நுகங்களை வேறருக்கும் போது " இருள் நடுவே உதிக்கும் ஒளியில் ஆண்டவர் நம்மை வழிநடத்துவார்".... ஆறுதலான வார்த்தைகள். இப்படி ஆன்மீகத்தையும்,அன்றாட வாழ்க்கை முறையின் செயல்பாடுகளையும் கலந்தே எமக்களிக்கும் தந்தையே! உம்மிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்....நன்றி.

    ReplyDelete
  2. Anonymous2/21/2015

    Yesu very good reflection. I appreciate you for writing Sunday reflection and publishing it through watsapp. Hats off to you friend

    ReplyDelete
  3. Anonymous2/21/2015

    Yesu very good reflection. I appreciate you for writing Sunday reflection and publishing it through watsapp. Hats off to you friend

    ReplyDelete
  4. Thanks IAS. Have a blessed Sunday. Love.

    ReplyDelete
  5. நுகம் அடிமைத்தனத்தின் அடையாளம் .. அப்புறம் எப்பிடி இயேசு என் நுகம் இனிது னு சொல்லுறார் ? ஏன்னா அதே நுகம் வண்டியையும் மாட்டையும் இணைக்கிற மாதிரி ஏசு நம்மையும் பிதாவையும் இணைக்கிறார் .. இப்போ தான் சாமி இதோட அர்த்தமே எனக்கு புரியுது .. எப்பிடி இப்டிலாம் யோசிக்கிறீங்க ?

    ReplyDelete