Sunday, February 22, 2015

டு நாட் காஸ்ஸிப்!

'உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே!' (லேவியர் 19:16)

டு நாட் காஸ்ஸிப்!

'காஸ்ஸிப்' என்னும் ஆங்கில வார்த்தையை விக்கிபீடியா மொழிபெயர்க்கிறது: 'ஒருவரின் தனிப்பட்ட மற்றும் சொந்தமான உணர்வுகள் பற்றிய அடுத்தவரின் பயனற்ற பேச்சு அல்லது வதந்தி!'

உளவியிலிலும் சமூகவியிலிலும் மிகவும் ஆராயப்படும் ஒன்று 'காஸ்ஸிப்'. 'எனக்கு யாரோ சொன்னாங்க! அதை நான் உனக்குச் சொல்றேன்!' - இதுதான் காஸ்ஸிப்பின் எழுதப்படாத சூத்திரம். 'காஸ்ஸிப்' ஒருவகையில் சமூகத்தை இணைக்கவும் செய்கிறது. அதாவது ஒருவரைப் பற்றி பேசப்படும் 'காஸ்ஸிப்' பேசுபவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திவிடுகிறது. உதாரணத்திற்கு, ஒரு பங்கு அருட்பணியாளரைப் பற்றி அந்தப் பங்கைச் சார்ந்தவர்கள் பேசுகிறார்கள் என்றால், தங்களையறியாமலேலே - தாங்கள் சண்டைக்காரர்களாக இருந்தாலும்! - ஒரே குழுவாக இணைந்துவிடுகின்றனர். இது ஒரு 'சப்கான்சியஸ்' ப்ராசஸ்.

'காஸ்ஸிப்' (gossip) என்ற வார்த்தை 'காட்' (god), 'சிப்' (sibb or sebb)  என்ற இரு வார்த்தைகளின் இணைப்பு. அதாவது, 'காட்' (god), 'சிப்ளிங்' (sibling) - இதிலிருந்து தான் 'காட் சைல்ட்' (godchild) - அதாவது, திருமுழுக்கின் போது ஞானப்பெற்றோர் கைகளில் ஏந்தி நிற்கும் 'ஞானக்குழந்தை!'.

இதன் உருவாக்கம் வந்தது எப்படி? மருத்துவம் இன்னும் முன்னேறாமல் இருந்த நேரம் பெண்கள் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்டனர். அப்படி வீட்டிலேயே பேறுகாலம் நடக்கும் அறையில் அந்தப் பெண், மருத்துவச்சி மற்றும் அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இருப்பது வழக்கமாம். குழந்தை பிறந்தவுடன் இந்த உறவினர் அல்லது நண்பர் தான் வெளியே வந்து அங்கே காத்திருப்பவர்களிடமும், பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் 'என்ன குழந்தை!' 'எந்நேரம் பிறந்தது!' (godparent) என்றெல்லாம் சொல்வாரம். இவரே பின்னர் குழந்தையின் 'காட்-பேரன்டாகவும்' இருப்பாராம். இவரை காட்-பேரண்ட்டாக நியமிக்க காரணம் என்ன? பிரசவம் நடக்கும் பெண்ணிற்கும், மருத்துவச்சிக்கும் இடையே சாட்சியாக, கடவுளின் பிரதிநிதியாக இருப்பவர் இந்தப் பெண். இந்தப் பழக்கம் இன்னும் வெளிநாடுகளில் இருக்கின்றது - அதாவது, மருத்துவமனைகளில் பிரசவம் நடக்கும் போது பெண்ணின் தாய் அல்லது உறவினர் அல்லது நண்பர் உடனிருக்கிறார். அவரே பின்னர் 'காட்-பேரன்ட்டாகவும்' மாறுகிறார். மருத்துவச்சியோடு சேர்ந்து குழந்தையை முதன்முதலில் பார்க்கும் பேறு இவருக்குத்தான் கிடைக்கின்றது.

இப்படி ஒரு 'காட்-சிப்ளிங்கைப்' பற்றி 'காட்-பேரண்ட்' உற்றார், உறவினர்களிடம் சொல்லும் தகவல் பரிமாற்றம், ஒருவர் மற்றவரைப் பற்றி பேசும் பேச்சுக்கான 'காஸ்ஸிப்' என மாறிவிட்டது. 'டு காஸ்ஸிப்!' - என்று இதை வினைச்சொல்லாக முதன்முதலில் பயன்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்.

பெயர் ஆராய்ச்சி விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது இப்படி 'தண்டவாளத்தில் எலுமிச்சம் பழம் வைக்கும் வேலை' பார்க்கலாம் என நினைக்கிறேன்!

நாம் ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசுவது அல்லது ஒருவரின் சொந்த உணர்வுகளை, உறவுகளைப் பற்றிப் பேசுவது தவறு என்று தெரிந்தாலும் நாம் ஏன் அப்படிப் பேசுகிறோம்?

அதற்குக் காரணங்கள் இரண்டு (நிறைய இருக்கலாம்!):

அ. ரிவார்ட். நாம் அடுத்தவரைப் பற்றிப் பேசும்போது நமக்குள்ளேயும் வெளியேயும் ஒரு ரிவார்ட் கிடைக்கிறது. உள்ளுக்குள் கிடைக்கும் ரிவார்ட் என்ன? 'நான் அவனை விட அல்லது அவளை விட பெரியவன் அல்லது பெரியவள்', 'அவனிடம் அல்லது அவளிடம் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது!' என்னும் உணர்வு. வெளியிலிருந்து கிடைக்கும் ரிவார்ட் என்ன? நம்மிடம் புறங்கூறுபவருக்கும், நமக்கும் ஏற்படுகின்ற ஒரு 'கெமிஸ்ட்ரி!' வீட்டுல நல்லா பாருங்களேன். பக்கத்து வீட்டு அக்கா வந்து உட்கார்ந்துட்டா, 'என்ன இவ இந்நேரம் இங்க வர்றா! வேலையைக் கெடுக்குறாளே!' ஒரு சீரியல் நிம்மதியா பார்க்க முடியுதா!' என்று புலம்புவோம். அந்த அக்கா ஊர் விஷயங்களைப் பேசப் பேச நாம் அவங்களோட நம்மையறியாமலே நெருங்கி விடுறோம். 'இந்தாக்கா கொஞ்சம் காஃபி குடி!' என்று காஃபி போடுவோம். அல்லது நம்ம பையனைப் பார்த்து, 'டேய்! எந்நேரமும் டிவி தானடா? கொஞ்சம் வால்யூமைக் குறைக்கலாம்ல! நாங்க பேசிக்கிட்டு இருக்கோம்ல! - இவ்வளவு நேரம் டிவி பார்த்தவங்க இவங்கதான்! இப்படியாக, உள்ளுக்குள் ஒரு 'தேவையற்ற' மகிழ்ச்சி. வெளியிலிருந்து கிடைக்கும் அங்கீகாரம்.

ஆ. ரெஃபரென்ஸ். 'புறங்கூறுதல்' வழியாக நாம் பெறும் செய்தி ஒரு ரெஃபரென்ஸ் பாய்ன்டாக மாறிவிடுகிறது. 'உங்க வீட்டுக்கு அந்த மாணிக்கம் அடிக்கடி வந்துட்டுப் போறான் போல!' அப்படின்னு நம்மகிட்ட யாரோ சொல்றாங்கன்னு வையுங்க. இந்த மாணிக்கம் நம்ம ஆஃபிசில இருந்து சும்மா லீவ் போட்டாலும், 'இவன் ஒருவேளை நம்ம வீட்டுக்குத்தான் லீவு போட்டுட்டுப் போறானோ?' என மனம் பதைத்துக் கொண்டே இருக்கும். ஆக, ஒரு செய்தி ஒருவரின் நடத்தைக்கான ஒப்பீட்டுப் புள்ளியாக மாறி விடுகிறது. சில நேரங்களில் காஸிப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அதாவது நம்ம பக்கத்து வீட்டுக்காரர் தனக்கு இமெயிலில் ஒரு கோடி விழுந்ததா நம்பி அஞ்சு லட்சத்தை பேங்க்ல போட்டு ஏமாந்துட்டார்னு வைங்க. அந்தச் செய்தியை நாம் 'காஸ்ஸிப்பாக' கேட்கும் போது, நாம் அந்த மாதிரி மின்னஞ்சல் வந்தா கவனமாக இருக்க, நம் மூளையில் ஒரு 'ரெஃபரென்ஸ்' பாய்ன்டாகவும் பதிந்து விடுகிறது.

புறங்கூறுதல் நம் நேரத்;தையும், ஆற்றலையும் விரயமாக்கும் ஒரு பெரிய காரணி. இன்று சமூக வலைத்தளங்கள் இந்த 'புறங்கூறுதலை' இன்னும் வேகமாக்குகின்றன. ஒரு காலத்தில் கடிதத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, இன்று 'க்ளிங்' என்ற ஒரு சத்தத்தில் கைக்குத் தகவல் வந்துவிடுகிறது. ஆக, நாம் இப்போதுதான் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் யாரையாவது பற்றிப் புறங்கூறுமுன் மூன்று சின்னக் கேள்விகளைக் கேட்கலாம்:

அ. இஸ் இட் ட்ரூ?

ஆ. இஸ் இட் கைன்ட்?

இ. இஸ் இட் நெசஸரி?

மற்றொரு விஷயம். நம்மிடம் அடுத்தவர்களைப் பற்றிப் பேசுபவர்கள், நம்மையும் பற்றி அடுத்தவர்களிடம் பேசுவார்கள் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்றே சொல்வோம். அதை நன்றே சொல்வோம். அதைச் சொல்ல வேண்டியவரிடம் சொல்வோம்!

இன்றும் - என்றும்!


1 comment:

  1. இன்றைய முதல் வாசகத்தின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அழகாக,ஆழமாக,அழுத்தமாக கொடுத்துள்ளீர்கள்.' காஸிப்'...இவ்வார்த்தையின் ரிஷிமூலம்,நதிமூலம் மிக சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.அதென்ன.." தண்டவாளத்தில் எலுமிச்சம்பழம் வைக்கும் வேலை?"... விளங்கவில்லை.'புறங்கூறுதல்'...ஆமாம், இச்செயல் ஒரு கொலைக்குச் சமம் என்பதைப்பல சமயங்களில் நாம் உணர்வதில்லை. காதைத்தீட்டிக்கொண்டு கேட்பவர் இருப்பதனால் தான் புறங்கூறுபவரும் இருக்கிறார்கள்.முதலில் நம் செவிகளைப் புனிதப்படுத்துவோம்.ஆம்...தந்தையின் வார்த்தைகளில் " ஒன்றே சொல்வோம்; அதை நன்றே சொல்வோம்;அதைச் சொல்ல வேண்டியவரிடம் சொல்வோம்"....நன்றி! அனைவருக்கும் இந்த வாரம் இனிய வாரமாகட்டும்.....

    ReplyDelete