Monday, February 23, 2015

இறைவேண்டல்

'நீங்கள் அவ்வாறு செபிக்க வேண்டாம்...
ஏனெனில்...உங்களுக்கு என்ன தேவையென்று உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்.
ஆகவே,
நீங்கள் இவ்வாறு செபியுங்கள்...'
(காண்க மத்தேயு 6:7-15)

செபம். புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல்.

நம்மையறியாமலேயே நாம் கற்றுக்கொண்ட பல பழக்கங்களில் ஒன்று செபித்தல்.

செபம் என்பது அடிப்படையில் ஒரு தகவல் பரிமாற்றம். கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரை நோக்கி தன் தேவைக்காகத் தகவல் பரிமாற்றம் செய்வது செபம் அல்லது மன்றாட்டு.

ஆக, இங்கே இருவர் இருக்கின்றனர். ஒருவர், தேவையில் இருப்பவர். மற்றவர், தேவையைப் பூர்த்தி செய்பவர். மன்றாட்டு எப்பொழுதும் கீழிருந்து மேல்நோக்கி செல்கின்றது.

செபம் பற்றியும், செபத்தில் தேவையான விடாமுயற்சி பற்றியும் நற்செய்தி நூல்களும், புதிய ஏற்பாட்டு கடிதங்களும் நிறையவே சொல்கின்றன.

மேலும் செபத்தில் தேவையான நம்பிக்கை, மனவுறுதி ஆகியவையும் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன.

நாளைய நற்செய்தி வாசகத்தில இயேசு புறவினத்தாரின் செபம் போல உங்கள் செபம் இருக்கக் கூடாது என்று தன் சீடர்களுக்கு வலியுறுத்துகின்ற இயேசு, ஒரு முன்மாதிரியான செபத்தையும் தருகின்றார்.

அப்படி இருக்கக் கூடாது, ஆனால் இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இயேசு இடையில் சொல்வது, 'உங்களுக்கு இவையெல்லாம் தேவையென்று உங்கள் வானகத் தந்தைக்குத் தெரியும்!'

தவக்காலத்தின் முதல் நாளில் 'உங்கள் தந்தை' என்று நாம் சிந்தித்தோம். இந்த வாசகப் பகுதியில் நாம் காணும் வார்த்தை 'வானகத் தந்தை'. ஆக, இந்த வார்த்தை முன்னிறுத்துவது என்ன? நம் தந்தை வானகத்தில் இருக்கிறார். நாம் கீழே, பூமியில் இருக்கிறோம். செபம் கீழேயிருந்து, மேல் நோக்கிப் புறப்பட்டுச் செல்கிறது.
இப்ப நம்ம கேள்வி என்னன்னா, 'அவருக்குத்தான் நம் தேவை என்ன என்று தெரியுமே!' அப்படியிருக்க நாம் ஏன் அதைக் கேட்க வேண்டும்?

தினமும் காலையில் எழுந்தவுடன் கடவுளுக்கு நாம் ரிமைன்டர் கொடுக்க வேண்டுமா என்ன? இன்னைக்கு நான் இதச் செய்யப்போறேன், அவங்களப் பார்க்கப் போறேன், நீண்ட பயணம் போறேன் - நீதான் பார்த்துக்கணும்! அப்படின்னு சொல்லனுமா?

செபம் கடவுளுக்குத் தேவை என்பதல்ல. அது நமக்குத் தேவை. இந்தச் செபம் தான் கடவுளின் உடனிருப்பை நமக்கு நினைவுபடுத்துகின்றது.

நமக்கு உறவினர்கள் அல்லது நண்பர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். எதற்காக அவர்களோடு உரையாட நாம் பிரியப்படுகிறோம்? பேசாவிட்டால் உறவு முறிந்து விடும் என்பதற்காகவா. இல்லை. நம் உரையாடலில் நாம் ஒருவர் மற்றவரோடு இருக்கின்ற உடனிருப்பை ஒருவருக்கொருவர் நினைவுபடுத்திக்கொள்கின்றோம். ஆனால், கடவுளுக்கு இந்த நினைவுபடுத்தல் தேவையில்லை. நமக்குத் தேவையாக இருக்கிறதே!

ஆகவே, செபம் என்பது ஒரு நினைவூட்டல். யாருக்கு? நமக்கு! யாரைப் பற்றி? கடவுளைப் பற்றி!

பல நேரங்களில் செபம் என்பது நமக்கு ஒரு 'விஷ் லிஸ்ட்' போலத்தான் இருக்கிறது. 'இது வேண்டும்! அது வேண்டும்! நான் நல்லாப் படிக்கணும்! என் மகனுக்கு நல்ல வரன் அமையணும்!' இப்படி விண்ணப்பங்கள் தான் அதிகம் இருக்கிறது.

ஒருசிலர் சொல்வார்கள்: முதலில் புகழ்ச்சி, இரண்டு மன்னிப்பு, மூன்று நன்றி, நான்கு விண்ணப்பம் என நம் செபம் இருக்கவேண்டும். இது எப்படி இருக்கிறது என்றால் முதலில் உள்ள மூன்றும் கடவுளின் தலையில் 'ஐஸ்கட்டி' வைப்பது போலத்தான் இருக்கின்றது.

செபம் என்பது ஒரு உறவு. அதற்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனம் கூட செபம்தான். நம் உள்ளத்தின் உள்ளறையில் இருக்கின்ற இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவே செபம்.


5 comments:

  1. 'செபம்'...நம் உயிரோடு, உணர்வோடு கலந்துவிட்ட ஒரு விஷயம்.இந்த உணர்வு எப்படி வந்தது நமக்குள்? விடை காண முடியாத வினா.' கீழிருக்கும் ஒருவர் மேலிருக்கும் ஒருவரோடு செய்யும் உணர்வுப் பரிமாற்றமே செபம்'....அழகான சிந்தனை.அதையும் தாண்டி நாம் நைந்து போன நிமிடங்களில் நாம் சாய்ந்து கொள்ள நமக்கு ஒரு தோள் இருக்கிறது என்று உணர்த்துவது கூட இந்த செபம்தான்.இறைவனின் உடனிருப்பை நமக்கு உணர்த்தக்கூடிய இந்த செபம் " நமது உள்ளத்தின் உள்ளறையில் இருக்கிற இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவே"... தந்தையின் விளக்கம் அருமை!!!

    ReplyDelete
  2. Anonymous2/23/2015

    E' molto bello e anche bei pensieri

    ReplyDelete
  3. Anonymous2/24/2015

    Dear Yesu nice reflection on prayer. Faithfulness means to me is the best form of prayer. Waiting to meet Virudhunagsr district colletor.

    ReplyDelete
  4. Anonymous2/24/2015

    Dear Yesu nice reflection on prayer. Faithfulness means to me is the best form of prayer. Waiting to meet Virudhunagsr district colletor.

    ReplyDelete
  5. செபம் என்பது ஒரு உறவு. அதற்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனம் கூட செபம்தான். நம் உள்ளத்தின் உள்ளறையில் இருக்கின்ற இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவே செபம்.Dear Yesu Very Excellent.

    ReplyDelete