Wednesday, February 6, 2019

சிறுநுகர் வாழ்வு

இன்றைய (7 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 6:7-13)

சிறுநுகர் வாழ்வு

இன்று வாழ்வியல் மேலாண்மை மற்றும் நிதி மேலாண்மையியலில் அதிகமாகப் பேசப்படும் கருத்துருக்களில் ஒன்று, 'சிறுநுகர் வாழ்வு' (மினிமலிஸ்ட் லிவிங்) - அதாவது, குறைவான பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்வது. 21 பொருள்களை வைத்து 21 நாள்கள் வாழ்வது, 100 பொருள்களை வைத்து 100 நாள்கள் வாழ்வது என நிறைய ஆலோசனைகள் இதில் உள்ளன. இத்ததைய வாழ்க்கை முறையின் பின்புலமாக இருப்பது நிதி மேலாண்மையும், இட மேலாண்மையும். அதாவது, எனக்கு 10க்கு 10 அறைதான் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த அறையில் தேவையற்றதை எல்லாம் வைக்காமல் - அதாவது, காட்சி பெட்டி, மரம், செடி, கொடி - தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொள்வது. டிவியை நான் கணிணியில் பார்க்க முடியும் என்றால் டிவியைத் தவிர்ப்பது. கணிணியை நான் மொபைலில் இயக்க முடியும் என்றால் கணிணியைத் தவிர்ப்பது, என்னுடைய வேலைகளை மிகச் சாதாரண ஃபோனே செய்யுமென்றால் ஸ்மார்ட்ஃபோனைத் தவிர்ப்பது போன்ற செயல்கள் இதில் அடங்கும்.

நாம் ஒரு பொருளை 21 நாள்கள் பயன்படுத்தவில்லை என்றால் அது நமக்குத் தேவையற்ற பொருள் என்கிறது இக்கொள்கை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு இப்படிப்பட்ட ஒரு சிறுநுகர் வாழ்வக்குத் தன் சீடர்களைத் தயாரிக்கின்றார்.

சீடர்களின் அனுமதி இல்லாமல் அவர்களை அழைத்த இயேசு, அவர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களைப் பணிக்கும் அனுப்புகின்றார். அவர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். இது பாதுகாப்பு மற்றும் உடனிருப்புக்காக இருக்கலாம்.

எவையெல்லாம் வைத்துக்கொள்ளலாம்: கைத்தடி, மிதியடி, ஒரே அங்கி. மற்றபடி, உணவு, பை, கச்சையில் காசு அனுமதி இல்லை.

ஒரு மாற்று அங்கி கூட இயேசு அனுமதிக்காதன் காரணம் என்ன? ஒரே அங்கியைப் பல நாள்கள் பயன்படுத்துவது அங்கே ஏற்புடையதா? அல்லது இங்கே அங்கி என்பது மேலாடையைக் குறிக்கிறதா என்பது நமக்குத் தெரியவில்லை.

அதே வேளையில், அவர்கள் இடம் விட்டு இடம் நகரவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

குறைவான பொருள்கள், ஒரே இடம் - இந்த இரண்டும் சீடத்துவத்திற்கான அவசியமாக இயேசு முன்வைக்கின்றார்.

சீடர்கள் எந்தவொரு நிலையிலும் குறைவுபட்டுக்கொள்ளவில்லை. நற்செய்தியைப் பறைசாற்றுகிறார்கள். பேய்களை ஓட்டுகிறார்கள். உடல் நலமற்றவரைக் குணமாக்குகிறார்கள்.

இயேசுவின் இந்தப் போதனை சொல்வது இதுதான்: 'ஒரு மனிதரை அளவிடுவது அவருடைய பொருள்களோ அல்லது இயக்கமோ அல்ல. மாறாக, அவருடைய இயல்பே.'

ஒரு வகையில் பார்த்தால், இறப்பை மனதில் வைத்து வாழுங்கள் என்று சொல்வதுபோல இருக்கிறது இயேசுவின் போதனை. இப்படி யோசிப்பது கொஞ்சம் எதிர்மறையாகத் தெரியலாம். ஆனாலும், இன்று நாம் சேர்க்கின்ற பொருள்களும், நாம் நகர்கின்ற இடங்களும் நம் இயல்பையும், இருப்பையும் கூட்டுவதில்லைதானே!

பொருள்களை இன்று நாம் குறைக்கமுடியவில்லை என்றாலும் கூட்டாமல் இருந்தால் நலம்!

2 comments:

  1. வாழ்வியல் மேலாண்மை, நிதி மேலாண்மை,சிறுநுகர் வாழ்வு என்று என் போன்ற சாமான்யர்களுக்குக் கொஞ்சம் தூரமான பல விஷயங்களைத் தனக்கே உரித்தான மேலாண்மையோடு அலசிவிட்டு,இன்றைய வாழ்வின் எதார்த்தங்களைத்தொடுகிறார் தந்தை.'குறைவான பொருட்கள்,ஒரே இடம்'.. இன்றையத்தலைமுறையினருக்கு இந்த ஸ்லோகம் பொருந்துமா ..தெரியவில்லை.ஆனாலும் பொருந்த வேண்டுமெனும் அவரது கூற்றுக்கு அவர் தரும் நியாயம்.." ஒரு மனிதனை அளவிடுவது அவருடைய பொருள்களோ அல்லது இயக்கமோ அல்ல.மாறாக அவருடைய இயல்பே." இந்த வார்த்தைகளை ஏற்கனவே வாழ்வாக்கிச் சென்றுவிட்ட பெருந்தலைவர் காமராஜ்,ஏ.பி.ஜே அப்துல் கலாம் போன்றவர்கள் நம்மிடையே வாழ்ந்தவர்கள் தாம். இப்படிப்பட்ட வாழ்க்கை சாத்தியமா?'எனப் புருவத்தைத் தூக்குபவர்களுக்குத்
    தந்தையின் இறுதிவரி சற்றே ஆறுதல் தருகிறது...ஆம்! பொருட்களை இன்று நாம் குறைக்க முடியவில்லை என்றாலும் கூட்டாமல் இருக்கலாமே!
    இந்த இட மற்றும் நிதி மேலாண்மையை வாழும் முறையைத் தந்தை விவரிக்கும் விதம் அற்புதம்....அவற்றை வாழ்வாக்கினால் மட்டுமே! எதைஎதையோ முயற்சி செய்யும் மானுடம் இதுபோன்ற விஷயங்களையும் முயற்சித்தால் எத்துணை நலம்! இறை வார்த்தைகளின் பின்னனியில், சரியான விதைகளை,சரியான இடத்தில்,சரியான நேரத்தில் தூவும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. பதிவின் ஆரம்பத்தில் வரும் சிலுவைச்சின்னத்துடன் கூடிய ' உன் வாழ்வை எளிமையாக்கு'' எனும் வார்த்தைகள் ' விரைவில் முடியப்போகும் உன் வாழ்க்கைக்கு இத்தனை ஆடம்பரம் தேவையா?' என்று எச்சரிப்பது போல் உள்ளன. தந்தையின் இந்த யுத்திக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete