Friday, February 15, 2019

பொறுப்புணர்வு

இன்றைய (16 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 8:1-10)

பொறுப்புணர்வு

நாசி ஜெர்மனியின் வதை முகாமில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கைதிகள் ஒவ்வொருவிதமாகக் கொல்லப்பட்டனர். ஒருநாள் ஏறக்குறைய 100 கைதிகள் ஒன்றாகக் கூட்டப்படுகின்றனர். ஒரே வரிசையில் நிறுத்தப்படுகின்றனர். 'தோட்டத்தில் உள்ள மண்வெட்டிகளின் எண்ணிக்கை ஒன்று குறைவுபடுகிறது. எடுத்தவர் ஒரு ஸ்டெப் முன் வரவும்!' என்ற கட்டளை ஒலிப்பெருக்கியில் கொடுக்கப்படுகிறது. கைதிகள் நடுவில் பயம் சட்டென உருவாகிறது. 'எடுத்தவர் கொல்லப்படுவார்' என்று நினைக்கிறார்கள். அடுத்த சில நொடிகளில், எல்லாரும் இணைந்து ஒரு ஸ்டெப் முன் வருகிறார்கள். கைதிகளுக்கும் ஆச்சர்யம். காவலர்களுக்கும் ஆச்சர்யம்.

'மண்வெட்டியைத் தவறாக வேறிடத்தில் வைத்தவர் கொல்லப்படுவார். எவரோ ஒருவர் கொல்லப்படுவதற்குப் பதிலாக, நான் ஏன் கொல்லப்படக்கூடாது?' என்று எல்லாரும் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதால் எல்லாரும் உயிர் தப்புகிறார்கள் அன்று.

இன்று, தான் செய்கிற செயலுக்கேப் பொறுப்பேற்க மறுக்கும் நிலை இருக்கும்போது, அடுத்தவர்களுக்காக பொறுப்பேற்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

பொறுப்புணர்விற்கும், பொறுப்பேற்றலுக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. தன் செயலுக்குப் பொறுப்பேற்கும் ஒருவர்தான் பொறுப்புணர்வோடு செயல்பட முடியும்.

இன்றைய முதல் வாசகமும் (தொநூ 3:9-24) நற்செய்தி வாசகமும் (மாற் 8:1-10), 'பொறுப்பேற்றல்-பொறுப்புணர்வு கொள்தல்' என்ற மையத்தில் சுழல்கின்றன.

விலக்கப்பட்ட கனியைத் தின்றாயிற்று. கடவுளுக்குப் பயந்து மறைந்தாயிற்று. முதற்பெற்றோர் கொண்டிருந்த வெட்கம் அவர்களை ஒருவர் மற்றவரிடமிருந்தும், கடவுளிடமிருந்தும் அந்நியப்படுத்திவிட்டது.
ஆதாமிடம், 'நீ கனியை உண்டாயோ?' எனக் கடவுள் கேட்க, 'நீர் தந்த அந்தப் பெண் எனக்குக் கொடுத்தாள்' என்று பழியை பெண்ணின் மேல் போட, 'பாம்பு என்னை ஏமாற்றியது' எனப் பெண் பாம்பைக் காட்டுகிறாள்.

இவர்கள் இருவரும் தங்கள் செயலுக்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

ஆனால், இன்றைய நற்செய்தியில் ஒரு மாற்று நிகழ்வைப் பார்க்கிறோம்.

பாலைநிலத்தில் ஒரு கூட்டம் இயேசுவோடு மூன்று நாள்கள் தங்கியிருக்கிறது. அவர்களின் பசியை எப்படிப் போக்குவது? அல்லது யார் போக்குவது? என்ற கேள்வி எழுகிறது. சீடர்களோ முதற்பெற்றோர் போல, 'இத்தனை பேருக்குப் பாலைநிலத்தில் எப்படி உணவளிப்பது?' என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்க முனைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தங்களின் இயலாமைக்குக் காரணமாக மக்களின் எண்ணிக்கையையும், நிலத்தின் இயல்பையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், இயேசு அவர்களைப் பார்த்து, 'உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?' என்று கேட்டு, 'தரையில் அமர மக்களுக்குக் கட்டளையிடுகிறார்' - இரண்டு செயல்களும் ஒரே நேரத்தில் நடக்கின்றன.

ஆக, முதல் அற்புதம் சீடர்களுக்கும், இரண்டாம் அற்புதம் மக்களுக்கும் நடக்கிறது என்று சொல்லலாம்.

'இவர்களின் பசிக்கு நான் பொறுப்பு' என்று இயேசு பொறுப்பேற்றதால், பொறுப்புணர்வு இயல்பாகவே வந்துவிடுகிறது.

நாம் செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கும்போதுதான் நாம் வளர முடியும். என்னிடம் உள்ள தவறான பழக்கத்தை விடுவது என்றாலும் சரி, என்னையே முன்னேற்றிக்கொள்வது என்றாலும் சரி, எல்லாமே 'பொறுப்பேற்பு' என்ற புள்ளியில்தான் தொடங்குகின்றன. இந்தப் 'பொறுப்பேற்பு' ஒவ்வொரு புள்ளியாய் நான் 'பொறுப்புணர்வோடு' கடந்து செல்ல என்னைத் தூண்டுகிறது.


1 comment:

  1. "தான் செய்கின்ற செயலுக்குப் பொறுப்பேற்கும் ஒருவரால் தான்பொறுப்புணர்வோடு செயல்பட முடியும்." உண்மையிலும் உண்மை!!!தான் பெற்ற பிள்ளைகளுக்கே பொறுப்பேற்க மறுக்கும் பெற்றோர் இருக்கும் பூமியில்,யாரோ பெற்ற பிள்ளைகளின் "பசிக்கு நான் பொறுப்பு"'என்று பொறுப்பேற்ற இயேசு நமக்கு சற்று வித்தியாசமானவராகவே தெரிகிறார்..என் வாழ்வின் வளமானாலும் சரி....வெற்றி,தோல்வியானாலும் சரி எல்லாமே 'பொறுப்பேற்பு' எனும் புள்ளியில் தான் தொடங்குகிறது என்பதை இன்றைய இளைய சமுதாயம் உணரவும்,அந்தப் புள்ளிகளை ஒண்றிணைத்து ஒரு அழகான 'கோலமாக' மாற்றி வாழ்வில் உயரங்களை எட்டவும் இறைவன் அவர்களுக்குத் துணை நிற்பாராக! இன்றைய காலத்தின் தேவையறிந்து 'பொறுப்பேற்பு' எனும் புள்ளியிட்ட தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete