Friday, February 1, 2019

திடீரென வருவார்

இன்றைய (02 பிப்ரவரி 2019) திருநாள்

திடீரென வருவார்

இன்று ஆண்டவர் இயேசு காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளைக் கொண்டாடுகிறோம். சில கிறிஸ்தவ திருச்சபைகளின் வழிபாட்டில் இன்றுதான் கிறிஸ்து பிறப்புக்காலம் நிறைவு பெறுகிறது.

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். மலா 3:1-4) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

இறைவாக்கினர் மலாக்கி - இதுதான் இறைவாக்கு நூல்களின் இறுதி நூல் - வரப்போகிற அரசர் பற்றிய முன்னறிவிப்பைக் கொடுக்கின்றார்.

'நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார்!'

ஆக, தலைவரின் வருகை எதிர்பாராத விதமாக இருக்கிறது. எதிர்பாராமல் நிகழும் ஒன்று எதிர்மறையாக இருந்தால் அது நமக்கு அதிர்ச்சியையும், நேர்முகமாக இருந்தால் அது வியப்பையும் தருகின்றது. தலைவரின் வருகை நேர்முகமானது. அவரின் வருகை நமக்கு வியப்பையும் ஆச்சர்யத்தையும் கொடுக்கிறது.

இத்தலைவர் என்ன செய்வார்? 'வெள்ளியைத் தூய்மைப்படுத்துபவர் போல் அமர்ந்திருப்பார்.' வெள்ளியை நெருப்பில் போட்டு அதன் கறை போகும் அளவிற்குக் காத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் வெள்ளியில் கொல்லனின் முகம் தெரியும். அந்த நேரம் அவர் உடனே நெருப்பிலிருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். இதுதான் தூய்மையான வெள்ளிக்கு அறிகுறி. கொஞ்சம் நேரம் ஆகிவிட்டால் வெள்ளி நெருப்போடு கரைந்துவிடும். ஆக, திடீரென வருபவர் மட்டுமல்ல தலைவர். மாறாக, சரியான நேரத்தில் வருபவர்.

குழந்தையையும், நெருப்பையும் கையில் ஏந்துதல் - இதைப்பற்றிச் சிந்திப்போம்.

குழந்தை இயேசுவை பெற்றோரும், சிமியோனும், அன்னாவும் கைகளில் ஏந்தி நின்றனர் அன்று.
மெழுகுதிரிகளை ஏந்தி நிற்கின்றோம் நாம் இன்று.

அஸ்தமனத்தில் இருக்கின்ற சிமியோனும் அன்னாவும் உதய சூரியனைக் கண்டுகொள்கின்றனர். இந்த நாளில் அஸ்தமனமும், உதயமும் கை கோர்க்கின்றன. ஒரு நாளில் எருசலேம் ஆலயத்திற்கு ஏறக்குறைய 100 குழந்தைகளுக்கு மேல் கொண்டுவரப்படுவர். இப்படிப்பட்ட ஒரு பின்புலத்தில் சிமியோன் எப்படி யோசேப்பு-மரியாளின் குழந்தையை மட்டும் கண்டுகொண்டார் என்பது நமக்கு முதல் வியப்பாக இருக்கிறது.

புத்தக வாசிப்பைப் பற்றிச் சொல்லும்போது, 'நீ புத்தகத்தை தெரிவு செய்வதில்லை. மாறாக, புத்தகம்தான் உன்னைத் தெரிவு செய்கிறது' என்பார்கள். அதைப் போல, இங்கே சிமியோன் குழந்தையைக் கண்டுகொள்ளவில்லை. குழந்தைதான் சிமியோனைக் கண்டுகொள்கிறது.

சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்துகிறார்.

குழந்தையைக் கையில் ஏந்துதல் ஒரு கலை. குழந்தையைக் கையில் ஏந்துதல் நமக்கு மூன்று வாழ்க்கைப் பாடங்களைச் சொல்கிறது.
அ. குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் அக்குழந்தையின் முகத்தில் தன் முகம் பார்க்கிறார்.

கையில் ஏந்துபவரைக் குழந்தை அவரின் குழந்தைப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவ்வாறாக, ஒருவரின் தொடக்கத்தை, ஒருவரின் ஊற்றை, ஒருவரின் வேர்களைக் கண்டுகொள்ளச் செய்கிறது குழந்தையைக் கையில் ஏந்தும் நிகழ்வு. இவ்வாறாக, குழந்தையைக் கையில் ஏந்துதல் நம்மை நம் கடந்த காலத்தோடு இணைக்கிறது.

ஆ. குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் அக்குழந்தையில் புதிய உருவாக்கத்தைப் பார்க்கிறார்.

ஒவ்வொரு பொருளுக்கும் இரண்டு நிலை உண்டு. எடுத்துக்காட்டாக, இரும்பு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இரும்பு வெறும் இரும்புதான். ஆனால், அதற்குள் நிறைய உருவாக்கங்கள் பொதிந்திருக்கின்றன. அது ஆணியாக மாறலாம், குதிரை லாடமாக மாறலாம், கடிகார ஸ்பிரிங்காக மாறலாம், பல்பின் டங்கஸ்டனாக மாறலாம். இப்படி அது நிறைய உருவாக்கங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் ஒரு தொடர்புள்ளி. அது எங்கேயும் எப்படியும் மாறிக்கொள்ளும் தன்மை கொண்டிருக்கிறது. இவ்வாறாக, குழந்தையைக் கையில் ஏந்துதல் நம்மை நம் எதிர்காலத்தோடு இணைக்கிறது.

இ. குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் அதன் இயல்பையும், இயக்கத்தையும், ஸ்பரிசத்தையும் இன்றில் உணர்கிறார்.

குழந்தையைக் கையில் ஏந்தும் நபர் தன் இன்றைய இருப்பை உணர்ந்து கொள்கிறார். 'இன்றுதான்' நம் வாழ்வில் மிக முக்கியமானது. அதே நேரம் நாம் அதிகம் மறந்துவிடக் கூடியது. இயேசுவைக் கையில் ஏந்தும் சிமியோன், 'உமது மீட்பை இன்று என் கண்கள் கண்டன' என்று தன் இருப்பை உணர்கிறார். தன் ஏக்கம், எதிர்பார்ப்பு அனைத்தும் இன்றில் நிறைவு பெறுவதை உணர்கிறார். ஆக, இன்றிற்கு மிகவும் அழகாக விடையும் பகர்கிறார்: 'உம் சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர்!'

நாம் இன்று கைகளில் ஏந்தும் மெழுகுதிரிகளும் - நம் நேற்று, நாளை, இன்று என மூன்று காலங்களையும் நினைவிற்குக் கொண்டுவருகின்றன. திரி எரிய, எரிய அதன் நேற்று மறைகிறது. திரி எரிய, எரிய அது புதிய உருவாக்கத்தை தன் ஒளி மற்றும் கதகதப்பில் தருகின்றது. திரி எரிய, எரிய அது அதை வைத்திருப்பவரின் இருப்பை அவருக்கு நினைவூட்டுகிறது.

இன்றைய நாளை நாம் அர்ப்பணத்தின் நாள் என்றும் கொண்டடுகிறோம். குறிப்பாக, துறவற அர்ப்பணத்தை.

அர்ப்பணம் செய்யும் ஒருவர் தன் இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும், நிகழ்காலத்தையும் ஒருசேர ஏந்தி நிற்கிறார். அர்ப்பணம் செய்பவர் வானிலிருந்து குதித்தவர் அல்ல. அவரும் மற்றவர்களைப் போல குழந்தையாகப் பிறந்து, மனித வலுவின்மையில் வளர்ந்தவர். அவருக்கும் நிறைய காயங்களும், பழைய சுமைகளும் இருக்கும். அதே நேரம், அர்ப்பணம் செய்பவர் தன் அர்ப்பணத்தின் வழியாக தன் வாழ்வை மற்றவர்களுக்குக் கொடுத்த மற்றவர்களின் எதிர்காலத்திற்கு வெளிச்சமாக மாற விரும்புகின்றார். இந்த இரண்டு காலங்களையும் அவர் இணைத்து நிகழ்காலத்தில் தன் நொறுங்குநிலையில் நிற்கின்றார்.

இன்று நாம் அர்ப்பண நிலையில் இருக்கும் அருள்பணி இனியவர்களுக்காக இறைவேண்டல் செய்யும் வேளையில், நாமும் நம்மை இறைவனுக்கு அர்ப்பணம் செய்ய முன்வருவோம். நம் கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு நிகழ்காலத்தை, இன்றை வாழ அவரிடம் வரம் வேண்டும்.

இன்று என்ற நிகழ்காலம் நெருப்பில் இடப்பட்ட வெள்ளி போன்றது. அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் அது காலம் என்ற நெருப்பில் கரைந்துவிடும்.

சரியாகக் கையாளத் தெரிந்த ஒருவர் இன்றைய இரண்டாம் வாசகம் (காண். எபி 2:14-18) சொல்வது போல, 'இரக்கமும் நம்பிக்கையும் கொண்டவராய் தம் சகோதர சகோதரிகளைப் போல ஆவார்!'


1 comment:

  1. "அஸ்தமனத்தில் இருக்கிற அன்னாவும்,சிமியோனும் உதய சூரியனைக்கண்டு கொள்கின்றனர்" என்று கூறும் தந்தை தினம் எருசலேமுக்குக்கொண்டு வரப்படும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுள் சிமியோன் குழந்தை இயேசுவை மட்டும் இனம் கண்டு கொண்டது எப்படி எனும் கேள்வியையும் முன்வைக்கிறார்.ஆங்கிலத்தில் wishful thinking என்று சொல்வார்கள்.நமக்கு எது தேவையோ..அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதுவே நம் கண்களுக்குத் தெரியுமாம்.அது மட்டுமல்ல..இங்கே கண்டுகொண்டது சிமியோன் மட்டுமல்ல...குழந்தை இயேசுவும் தான் எனும் விளக்கம்,தன்னை நோக்கிக்காத்திருப்போருக்குத் தம்மை வெளிப்படுத்துபவரே "நம் இறைவன்" என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறது.
    இந்த நிகழ்வில் உள்ள அர்பணிப்பைத் தந்தை அருட்பணியாளர்களுக்குரியதாகக் கூறுவது அழகான செய்தியாகப்படுகிறது.அர்ப்பணம் செய்தவர்களின் நிறைகுறைகளை சிலாகிக்கும் தந்தை அவர்களுக்காக வேண்டுதல் செய்ய நம்மை அழைக்கிறார்.நாமும் நம்மையும் அர்ப்பணம் செய்வது மட்டுமின்றி,நம் கடந்த காலம்,எதிர் காலத்தை மறந்து நிகழ்காலத்தை மட்டுமே வாழும் வரம் கேட்போம்.அழகான தொரு அர்ப்பண வாழ்வுக்கேற்ற அழகான பதிவு. தந்தைக்கு என் நெஞ்சம் நிறை பாராட்டுக்கள்!!!

    ReplyDelete