Monday, February 11, 2019

காணிக்கை ஆயிற்று

இன்றைய (12 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற்கு 7:1-13)

காணிக்கை ஆயிற்று

கடந்த வாரத்தில் டுவிட்டரில் கவிதை ஒன்றைப் படித்தேன்:

'ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியும்
ஒவ்வொன்றை நினைவுபடுத்துகிறது நமக்கு.
'இன்றிலிருந்து இளைய மகனின் வீட்டுக்கு'
என்று மாதத்தின் முதல் தேதி புறப்பட்டாள் பாட்டி'

இன்று வகுப்பில் பத்துக் கட்டளைகள் நடத்திக் கொண்டிருந்தேன். பத்துக் கட்டளைகளைப் பற்றி நிறைய வாசிக்க முடிந்ததால் பத்துக் கட்டளைகளை நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

'உன் தந்தையையும், தாயையும் மதித்து நட!'

இதுதான் கட்டளை. இந்தக் கட்டளை விடுதலைப் பயணம் 20ஆம் அதிகாரத்தில் 5வது கட்டளையாகவும், நம் கிறிஸ்தவ மரபில் 4வது கட்டளையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

பத்துக்கட்டளைகளில் முதல் 4 கட்டளைகள் இறைவனை மையப்படுத்தியதாகவும், மற்ற 6 கட்டளைகள் மனித உறவுகளை மையப்படுத்தியதாகவும் இருக்கின்றன. மேலும், பத்துக் கட்டளைகளில் 8 கட்டளைகள் எதிர்மறையாக (அதாவது, 'இதைச் செய்யாதே!') என்றும், 2 கட்டளைகள் நேர்முகமாக (அதாவது, 'இதைச் செய்') என்றும் தரப்பட்டுள்ளன.
அந்த நேர்முகமான இரண்டு கட்டளைகளில் ஒன்றுதாம்: 'உன் தந்தையையும் தாயையும் மதித்து நட!'

'உன் தந்தை தாய்க்கு கீழ்ப்படி' என்று கட்டளை அறிவுறுத்தவில்லை. ஏனெனில், ஒருவரை வெறுத்துக்கொண்டே நாம் அவருக்குக் கீழ்ப்படிய முடியும். ஆனால், மதிப்பு இருக்கிற இடத்தில் வெறுப்பு இருக்காது. மேலும், 'மதிப்பு' என்பதற்குப் பயன்படும் வார்த்தை கடவுளுக்கும் பயன்படுத்தப்படுவதால், கடவுளையும் பெற்றோரையும் ஒரு நிலையில் வைக்கிறது பழைய ஏற்பாடு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சமகாலத்துப் பரிசேயர்களிகளின் வெளிவேடத்தைக் கேள்வி கேட்கின்றார். அதில் அவர் சுட்டிக்காட்டுவது தந்தை-தாய் மதித்தல். பரிசேயர்கள் தங்களுக்குப் பணம் வர வேண்டும் என்பதற்காக, 'ஒருவர் தன் தந்தை தாயை மதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதற்கு பரிகாரமாக ஒரு குறிப்பட்ட தொகையை கொர்பான் எனக் கோவிலுக்குச் செலுத்திவிட்டால் போதும். அவர்கள் விலக்கு அளிக்கப்படுவார்கள்' என்றார்கள். ஆக, வயதான பெற்றோருக்கு ஆகும் செலவை குறைத்துக்கொள்ளவும், ஆலயத்திற்கு காணிக்கை செலுத்திவிட்டு குற்றவுணர்விலுருந்து தப்பித்துக் கொள்ளவும் இது வசதியாக இருந்தது. இதன் காரணமாக இயேசுவின் சமகாலத்தில் நிறைய முதியவர்கள் தெருக்களில் அடுத்தவர்களின் இரக்கத்தைக் பெற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

ஆக, பரிசேயர் என்ற சிலரின் தன்னலம் மற்றவர்களின் தன்னலத்திற்கும் தூபம் போடுவதாக இருக்கிறது. மனித உயிருக்கு இருக்கும் மிகப்பெரிய இன்ஸ்டிங்ட் தன்னலம். 'நான் நல்லா இருக்க எதையும் செய்யலாம்' என்று உள்ளே ஒரு குரல் நம்மைக் கூப்பிட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த தன்னலத்திலிருந்து மனிதனைப் பிரித்து எடுக்கும் வேலையைத்தான் கட்டளைகள் செய்தன.

இன்றைய முதல் வாசகமும் நமக்கு இந்த அழைப்பையே தருகின்றது. படைப்பின் தொடக்கத்தில் கடவுள் மானிடரை 'ஆணும் பெண்ணுமாகப் படைக்கின்றார்' - ஒருவர் மற்றவருக்காகப் படைக்கிறார்.

கடவுளின் படைப்பின் தொடக்கத்திலும், பத்துக் கட்டளைகளிலும் தன்னலம் இல்லை. மனித மரபுகள் உருவான பின் தன்னலம் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம்.

தன்னலத்திலிருந்து விடுபட்டால் எத்துணை நலம்!


1 comment:

  1. இன்று திரும்பும் திசையெல்லாம் இருக்கும் 'முதியோர் இல்லங்கள்' பற்றி நமக்கு இடித்துரைக்கும் பதிவு.எத்தனையோ மறையுரைகள்,சொற்பொழிவுகள்....எதுவுமே நம் இளைய சமுதாயத்தினரின் தன்னலம் போக்குவதாகத் தெரியவில்லை. முதியோரின் 'புறக்கணிப்பு' இயேசுவின் காலத்திலிருந்தே இருந்ததாகத் தந்தை குறிப்பிடுவது 'இன்னொரு இயேசு' பிறந்து வந்திடினும் எதுவும் மாறப்போவதில்லை என்பதையே உணர்த்துகிறது.சில விஷயங்கள் தன்னிலேயே இருக்க வேண்டும்.பெற்றவர்களை மதித்து நடப்பதும் இதைச் சார்ந்த விஷயமே! ஆதிமனிதனிடம் இல்லாத தன்னலம் பின்னால் வந்த மனிதனிடம் ஊடுருவியதற்கு யார் பொறுப்பேற்க முடியும்? தான் பெற,ற பிள்ளை தன்னை உதாசீனப்படுத்தும் போது தன்னுடைய கடந்த காலம் குறித்து வருந்தி என்ன பயன்? இந்த மானுடத்தையே மதித்த,நேசித்த பல மகான்கள் வாழ்ந்த பூமியில் நம்மைப் பெற்றவர்களை மட்டுமேயாவது மதிக்கப் பழகுவோம். யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய,யாரும் நடைமுறைப்படுத்த வேண்டிய தொரு நற்பழக்கத்தைப்பற்றிய சிந்தனையைத் தட்டி எழுப்பிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete