Tuesday, February 12, 2019

தீட்டுப்படுத்துபவை

இன்றைய (13 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 7:14-23)

தீட்டுப்படுத்துபவை

நம் மனம் எந்நேரமும் 'தூய்மை-தீட்டு' என்ற பின்புலத்தில்தான் எல்லாவற்றையும் பார்க்கிறது. காலையில் எழுந்தவுடன் படுக்கையைச் சரி செய்வது தொடங்கி, உடல், உறைவிடம், சந்திக்கும் நபர்கள், உண்ணும் உணவு என எல்லாவற்றையும் 'தூய்மை-தீட்டு' என்றே பிரித்துப் பார்க்கிறது. ஐம்புலன்கள் வழியாகத் தான் பெறும் செய்தியை வைத்து, 'தூய்மை-தீட்டு' என அனைத்தையும் பிரிக்கும் மனம் என்னவோ தன்னகத்தில் இருக்கின்ற 'தூய்மை-தீட்டு' பற்றி மிக எளிதாகக் கண்டுகொள்ளாமல் விடுகிறது.

மனத்தின் இந்த கண்டுகொள்ளாமை பற்றி எச்சரிக்கின்றார் இயேசு.

'தூய்மை-தீட்டு' என்பது நமக்கு வெளிப்புறத்தில் இல்லை.

எப்படி?

என் மனம்தான் 'தூய்மை-தீட்டு' என்ற பாகுபாட்டை உருவாக்கிறது.

மேலும், தன்னிலே அனைத்தும் பாகுபாடு இல்லாதவைதாம். எடுத்துக்காட்டாக, இரயிலில் ஊசி பாசி விற்கும் குறத்திமகள் ஒருத்தியை எடுத்துக்கொள்வோம். அவள் தான் தூய்மையற்று இருப்பதையே விரும்புகிறாள். ஏனெனில், அவள் தன்னைத் தூய்மையாக வைத்திருந்தால் அவளின் பாதுகாப்பின்மையில் அதுவே அவளுக்கு அபாயமாக மாறிவிடும். அவளைப் பொறுத்தவரையில் 'கறையும் நல்லதே!'

இரண்டாவதாக, தீட்டனாவை - குறிப்பாக, பரத்தைமை, களவு, கொலை, விபச்சாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி. பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு போன்றவை - வெளியில் இல்லாமல் மனிதரின் உள்ளத்தில் ஊற்றெடுத்து அவர்களையும் அவர்களைச் சுற்றியிருப்பவர்களையும் மிகவும் மோசமாகப் பாதிக்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண்.2:4-9,15-17) முதல் மனிதன் ஆதாமை ஏதேன் தோட்டத்தில் விட்டபோது, நன்மை-தீமை, வாழ்வு என இரண்டு மரங்களைச் சுட்டிக்காட்டுகின்றார். இம்மரங்கள் மனிதனைத் தீட்டாக்கியதில்லை. மாறாக, 'நான் கடவுளைப் போல இருக்க வேண்டும்' என்ற பேராசையே தன் பெண்ணோடு இணைந்து மரத்தை நோக்கிக் கையை நீட்ட அவனைத் தூண்டுகிறது.

ஆக, இரண்டு விடயங்கள்:

1. தூய்மை-தீட்டு பாகுபாடு என் மனம் சார்ந்தது. எனக்குத் தூய்மையாகத் தெரிவது மற்றவருக்குத் தீட்டாகவும், மற்றவருக்கு தூய்மையாகத் தெரிவது எனக்குத் தீட்டாகவும் தெரியலாம்.

2. மனதின் தீய எண்ணங்களை அறிதலும், அவற்றைக் களைதலும் உள் மற்றும் வெளிப்புறத் தூய்மைக்கு வழிவகுக்கும்.

1 comment:

  1. இன்றையப் பதிவில் நிறைய இடங்களில் தந்தையின் " டச்"கள் வாசித்து இரசிக்கும்படி உள்ளன..ஐம்புலன்கள் வழியாகத் தான் பெறும் செய்தியை வைத்து,'தூய்மை- தீட்டு' என அனைத்தையும் பிரிக்கும் மனம் என்னவோ தன்னகத்தே இருக்கின்ற 'தூய்மை- தீட்டு' பற்றி மிக எளிதாகக் கண்டுகொள்ளாமல் விடுகிறது...அருமை.குறத்தி மகளின் தூய்மை அவளுக்குப் பாதுகாப்பின்மையாக மாறிவிடும் எனக்குறிக்கும் " கறையும் நல்லதே!".... அருமை.ஆதிமனிதனைப் பாவத்திற்கு அழைத்தது மரமல்ல..அவனும் கடவுளைப் போல ஆகிவிடலாம் எனும் பேராசையே!.... அருமை.இத்தனை அருமைகளைத் தந்து விட்டு நம்மை வாழ்விற்கிட்டுச் செல்லும் விஷயங்களையும் கூடவே தருகிறார் தந்தை.'தூய்மை- தீட்டு'..இரண்டுமே என் மன வரையறுதலுக்குட்பட்டது; என்னைப்பாதிக்கும் ஒரு விஷயம் என் அயலானைப் பாதிக்க வேண்டிய அவசியமில்லை.தீய எண்ணங்களை அறிதலும்,அவற்றைக்களைதலுமே என்னை உள் மற்றும் வெளிப்புறத்தூய்மைக்கு இட்டுச் செல்லும்...அருமையிலும் அருமை.பாராட்டுக்கள்!!!

    ReplyDelete