Tuesday, February 26, 2019

யார் பெரியவர்?

இன்றைய (26 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:30-37)

யார் பெரியவர்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'யார் பெரியவர்?' என்று தங்களுக்குள் வாதாடிக்கொண்டிருந்த தன் சீடர்களுக்கு சிறு குழந்தை ஒன்றை முன்மாதிரியாக வைக்கின்றார் இயேசு.

இயேசு தன் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றிப் பேசும் வார்த்தைகளைச் சீடர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றனர். அவர்களுடைய எண்ணமெல்லாம், 'நமக்குள் யார் பெரியவர்?' என்ற கேள்வியை மையமாக வைத்து இருக்கிறது.

நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும், நாம் நம்மைப் பற்றி நினைக்கும்போதும், நமக்கு அடுத்திருப்பவரைப் பற்றி நினைக்கும்போதும், நம்மை அறியாமலேயே நம் மூளை மற்றவருடன் நம்மையே ஒப்பீடு செய்து, 'அவரைவிட நான் எந்தவிதத்தில் பெரியவர்?' என்று கணக்குப் போடுகிறது. அல்லது எதிர்மறையாக, 'என்னைவிட அவர் சிறியவர்' என்று சிலவற்றைப் பட்டியலிடுகின்றோம். பெரியவர் - சிறியவர் பேதம் என்பது நம் மூளையின் எண்ணமே தவிர, அடிப்படையில் பெரியவர்-சிறியவர் என்ற பேதம் படைப்பில் கிடையாது. இதை நம் முன்னோர்கள் தெளிவாக உணர்ந்ததால்தான், 'நீர் வழிப்படும் புணைபோல் ஆருயிர் முறைவழிப்படும் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' (புறநானூறு 192) என்றனர்.

சிறு பிள்ளைகள் தங்கள் மனத்தில் இத்தகைய பேத உணர்வு கொண்டிருப்பதில்லை. ஆகையால்தான் இயேசு அவர்களை முன்மாதிரியாக வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். சீஞா 2:1-11), சீராக்கு, அக்கால சீடர்களுக்கு அறிவுரை பகர்கின்றார்: அருள்பணிப் பயிற்சிக்கு வரும் மாணவன் ஒருவனிடம் பேசுவதுபோல இருக்கின்றது அவருடைய அறிவுரை: 'குழந்தாய், ஆண்டவருக்குப் பணிபுரிய நீ முன் வந்தால், சோதனைகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு செய்துகொள். உள்ளத்தில் உண்மையுள்ளவனாய் இரு. உறுதியாக இரு. துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாதே. ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொள். அவரை விட்டு விலகிச் செல்லாதே. உன் வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவாய். என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள். இழிவு வரும்போது பொறுமையாக இரு.'

இப்படித் தொடரும் இவருடைய அறிவுரை சீடனுக்கு உற்சாகம் தருவதாகவும், அதே நேரத்தில் வாழ்க்கைத் தெரிவில் உறுதியாக இருக்க வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

ஆக, இன்று நம் மூளை, 'நீ பெரியவன்! நீ பெரியவள்!' என்று நம்மைப் பார்த்துச் சொன்னால், அல்லது 'அவனைப் பார்!' 'அவளைப் பார்!' என்று அடுத்தவைரைப் பார்க்கச் சொல்லி நம்மைத் தூண்டினால், சற்றே அமைதி காப்போம் சிறு பிள்ளைபோல. ஏனெனில், இவ்வெண்ணங்கள் உண்மை அல்ல. நம்மை ஏமாற்றும் பெரிய திருடன் நம் மூளையே. மூளை சொல்வதை விடுத்து, முதல் வாசகம் சொல்லும் மனத்திற்குச் செவிசாய்த்தால் எத்துணை நலம்!


2 comments:

  1. Yes!
    மூளை சொல்வதை விடுத்து,...இனி முதல் வாசகம் சொல்வதற்கு செவிமடுக்கிறோம் ... நிச்சயமாக!
    நம் மூளையே....இனி இறை செய்திக்கு செவிசாய்க்கும் வண்ணம் பழக்கப்படுத்துகிறோம்....
    பக்குவமடைகிறோம்.

    நன்றி.நன்று.

    ReplyDelete
  2. இன்றையத் திருப்பலி முடிந்தபிறகே தந்தையின் பதிவைப் பார்க்க நேரிட்டது. முதல் வாசகத்தின் அத்தனை வரிகளும்,அறிவுரைகளும் எனக்கே சொல்லப்படதுபோல் உணர்ந்தேன்.தந்தையோ அருள்பணி பயிற்சி மாணவனுக்கு சொல்லப்பட்டது போல உணர்வதாகக் குறிப்பிடுகிறார். வாசிக்கும் அனைவருமே தங்களுக்கென சொல்லப்படது போல் உணர்வதே ஒரு ஆசிரியருக்கு வெற்றி என நினைக்கிறேன்.சிறியவள்- பெரியவள் என படைப்பில் இல்லாத ஒன்று குறித்து நம் மூளை எனும் திருடன் சொல்வதை விடுத்து தந்தையின் எண்ணப்படி முதல் வாசகம் சொல்லும் விஷயங்களுக்கு மனத்தை செவிசாய்ப்போம்.

    சிறியவர்- பெரியவர் பேதம் குறித்த தந்தையின் புறநானூற்று வரிகள்.....நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் நதிமூலம்,ரிஷிமூலம் பாராமல் எடுத்துக்கொள்ளலாம் எனும் தந்தையின் முற்போக்கு சிந்தனைக்கு ஒரு சபாஷ்!

    ReplyDelete