Friday, February 22, 2019

கூடாரங்கள் அமைப்போம்

இன்றைய (23 பிப்ரவரி 2019) நற்செய்தி (மாற் 9:2-13)

கூடாரங்கள் அமைப்போம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உருமாற்ற நிகழ்வை வாசிக்கின்றோம். இந்நிகழ்வில் ஓர் உயர்ந்த மலையின்மேல் இயேசுவும் அவருடைய முதல் வட்டத் திருத்தூதர்கள் பேதுருவும் யாக்கோபும் யோவானும் இருக்கின்றனர். திடீரென இயேசு தோற்றம் மாறுகிறார். அவருடைய முகம் மாறுகிறது. ஆடைகள் மின்னுகின்றன. எலியாவும் மோசேயும் தோன்றுகின்றனர். அவர்கள் இயேசுவோடு உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நேரத்தில், பேதுரு இயேசுவோடு உரையாடுகின்றார்.

'ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்கள் அமைப்போம்'

தான் பேசுவது என்னவென்று தெரியாமலேயே அவர் பேசியதாக மாற்கு பதிவு செய்கின்றார்.

பேதுரு ஒரு வித்தியாசமான நபர்.
இவர் மீன்பிடித் தொழில் செய்தவர். இப்போது தனக்குத் தொடர்பே இல்லாத ஒரு தொழில் பற்றி, 'கூடாரம் அமைப்பது' பற்றி பேசுகின்றார். மீன்பிடித் தொழில் நடப்பது கடலில். கூடாரம் அமைப்பது தரையில். மீன்பிடிக்கு படகை நகர்த்த தங்கள் கயிற்றைக் கம்பியிலிருந்து அகற்ற வேண்டும். கூடாரம் அமைக்க தங்கள் கயிற்றைக் கம்பியில் கட்ட வேண்டும். காற்று இல்லையேல் மீன்பிடி சாத்தியமில்லை. காற்று இருந்தால் கூடாரம் சாத்தியமில்லை. இப்படியாக ஒன்றுக்கு ஒன்று முரணான இயல்புகள் உடைய இரண்டையும் ஒன்றிணைப்பவராக பேதுரு இருக்கிறார்.

மேலும், மீன்பிடிக்கும் ஒருவர் 'நாம் மலையிலேயே இருப்பது நல்லது' என்று சொல்வது மிக மிக அரிது.

ஆக, உருமாற்ற நிகழ்வு இயேசுவை மாற்றியதோ இல்லையோ, பேதுருவை முழுமையாக மாற்றிவிடுகிறது. இதுதான் இறைப்பிரசன்னத்தின் வல்லமை.

ஆடு மேய்ப்பவரை எகிப்திற்கு அனுப்புவது, கொல்லச் சென்றவரைத் தடுத்தாட்டுக்கொள்வது என இறைப்பிரசன்னம் எதுவும் செய்யும். இதன் ஆற்றல் அளப்பரியது. இதன் ஆற்றலை அனுபவிக்க ஒருவர் தற்கையளிப்பு செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

'தற்கையளிப்பு' என்றால் என்ன?

'நான் பேசுவது என்னவென்றே எனக்குத் தெரியாத அளவிற்கு' நான் இறைவனால் ஆட்கொள்ளப்படுவதே தற்கையளிப்பு. என் பேச்சு எனக்குத் தெரியாத அந்த நேரத்தில்தான் அவரின் பேச்சு எனக்குப் புரிய ஆரம்பிக்கும். பல நேரங்களில் நான் என் பேச்சையே கேட்டுக்கொண்டிருப்பதால்தான் என்னால் அவருடைய பேச்சைக் கேட்க முடியவில்லை. என் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருப்பதால்தான் நான் என் தொழில் பற்றியே கவலைப்பட்டுக்n;காண்டிருக்கிறேன். புதிய தொழிலை அல்லது முன்னெடுப்பை எடுக்கத் தயக்கம் காட்டுகிறேன்.

இன்றைய முதல் வாசகம் (காண். எபி 11:1-7), நம்பிக்கை என்றால் என்ன என்பதை வரையறை செய்கிறது: 'நம்பிக்கை என்பது எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி. கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.'

நான் கொள்ளும் நம்பிக்கை என்னை இறைப்பிரசன்னத்திற்கு தற்கையளிப்பு செய்யத் தூண்டுகிறது. அந்தப் பிரசன்னம் நான் நம்பிக்கையில் வளர உதவுகிறது.

2 comments:

  1. Great! Rev.Yesu.!
    இறை பிரசன்னம், தற்கையளிப்பு, நம்பிக்கை...

    ReplyDelete
  2. "இயேசுவின் உருமாற்ற நிகழ்வு பேதுருவை முழுமையாக மாற்றிவிட்டது" என்பது தந்தையின் பார்வையின் புதுக்கோணம்.இப்படி ஒருவர் மாற்றம் அடைவது "இறைப்பிர சன்னத்தின் வல்லமை" என்கிறார் தந்தை.இப்படியொரு இறைப்பிரசன்னம் என்னுள் நிகழ வேண்டுமெனில் நான் என் நிலை மறந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட வேண்டுமெனவும்,அதுவே 'தற்கையளிப்பு' என்பதும் என்னுள் கூட ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணரமுடிகிறது." நம்பிக்கை என்பது எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை" ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாக ஒரே பதிவில் இரு அழகான விஷயங்கள்.
    மீன் பிடித்தொழில் மற்றும் கூடாரம் அமைப்பது குறித்து தந்தை அளித்திருக்கும் ஒப்புமை விளக்கம் இவர் ஒரு 'Jack of all trades' என அடையாளம் காட்டுகிறது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete