Thursday, June 7, 2018

திருஇருதய பெருவிழா

நாளைய (8 ஜூன் 2018) நற்செய்தி (யோவா 19:31-37)

திருஇருதய பெருவிழா

நாளை இயேசுவின் திருஇருதய பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருஇருதயப் பெருவிழா அருள்பணியாளர்களின் அர்ப்பண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது.

'ஆனால் படைவீரர் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வெளிவந்தன.' என நாளைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.

விவிலியத்தில் இரண்டு பேருடைய விலா திறக்கப்படுகிறது.

படைப்பின் தலைமகனாகிய முதல் ஆதாம்.

படைப்பின் பிதாமகனாகிய இரண்டாம் ஆதாம் இயேசு.

முதல் ஆதாம் ஆழ்ந்து தூங்குகின்றார்.
இரண்டாம் ஆதாம் இறந்து தொங்குகின்றார்.

முதல் ஆதாமின் விலாவைத் திறப்பவர் ஆண்டவராகிய கடவுள்.
இரண்டாம் ஆதாமின் விலாவைத் திறப்பவர் படைவீரர்.

முதல் ஆதாமின் விலாவிலிருந்து எலும்பு எடுக்கப்பட்டது.
இரண்டாம் ஆதாமின் விலாவிலிருந்து இரத்தமும், தண்ணீரும் எடுக்கப்படுகின்றன.

எலும்பு என்பது நம் உடலின் திடப்பொருள்.
தண்ணீர் என்பது நம் உடலின் திரவப்பொருள்.

இரத்தம் என்பது திடப்பொருளின் மேல் பரவிக்கிடக்கும் நாளங்களில் ஓடும் திரவப்பொருள்.

திடமும், திரவமும் கலந்தால்தான் மனிதம் பிறக்க முடியும்.

இதையேதான் பட்டினத்தாரும்,

ஒரு மட மாதும் ஒருவனும் ஆகி
இன்ப சுகம் தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணித மீது கலந்து

என எழுதுகின்றார்.

அதாவது, இங்கே ஆணிடம் ஊறும் விந்து மற்றும் பெண்ணிடம் ஊறும் சுரோணிதம் கலந்து குழந்தை உருவாகிறது என்கிறார். இவரின் கூற்றுப்படி விந்து மனித உடலின் திடப்பகுதிக்கும், சுரோணிதம் மனித உடலின் திரவிப்பகுதிக்கும் காரணமாக இருக்கிறது.
படைப்பில் இதுவரை மேலோங்கி இருந்த எலும்பின்மேல் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் தெளிக்கப்படுகிறது. இதன் பொருள் என்ன? படைப்பு உயிர் பெறுகிறது.

எசேக்கியேல் 37:1-14ல் நாம் பள்ளத்தாக்கில் நிறைந்து கிடந்த உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

படைப்பு முழுவதும் உலர்ந்து எலும்புகள். படைப்பின்மேல் விழும் இயேசுவின் இரத்தமும் தண்ணீரும் உலர்ந்தவற்றிற்கு ஈரம் தருகிறது.

திருஇருதயப் பெருநாளில் காய்ந்துபோன, உலர்ந்துபோன நம் உடலை, உள்ளத்தை, மனதை இறைவன் தன் இரத்தத்தால், தண்ணீரால் ஈரமாக்க அவரிடம் அவற்றை கொண்டுவருவோம்.

இது முதல் பொருள்.

இரண்டாவதாக, ஒவ்வொரு திருப்பலியிலும் அருள்பணியாளர் திராட்சை இரசத்தை ஒப்புக்கொடுக்கும்முன், திருக்கிண்ணத்தின் இரசத்தோடு ஓரிரு தண்ணீர்த் துளிகளைச் சேர்க்கின்றார். அப்படி அவர் சேர்க்கும்போது சொல்லப்படும் செபம் இதுதான்:

'இந்த தண்ணீர் மற்றும் இரசத்தின் மறைபொருளால்
நாங்கள் கிறிஸ்துவின் இறைத்தன்மையில் பங்குபெறுவோமாக.
அவரே தாழ்வுற்று எங்களின் மனிதத்தன்மையில் பங்கேற்றார்.'

ஒவ்வொரு திருப்பலியிலும் நாம் 'இரத்தம்,' 'தண்ணீர்' என்ற இரண்டையும் கலந்து இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். 'இரத்தம்' அல்லது 'இரசம்' இயேசுவின் இறைத்தன்மையையும், 'தண்ணீர்' நம் ஒவ்வொருவரின் மனிதத்தன்மையையும் குறிக்கிறது. கிண்ணத்தில் ஊற்றப்பட்டவுடன் இரண்டும் பிரிக்க முடியாத அளவுக்கு ஒன்றோடொன்று கலந்துவிடுகின்றன.

நம்மிடம் பிரிக்க முடியாதபடி இறை மற்றும் மனித இயல்புகள் இருக்கின்றன. இயேசு தன்னிடமும் இவை இருந்தன என்பதை தன் விலாவைத் திறந்து காட்டிவிட்டார்.

ஆக, நம்மிடம் இருக்கும் இந்த இரண்டு இயல்புகளும் ஒருங்குநிலையில் இயங்க இன்றைய நாளில் செபிக்கலாம்.

மூன்றாவதாக,

இன்று நம் எல்லா இதயங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுப்போம். இதயம் சார்ந்த நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இதயத்தின் இருப்பை நாம் அதன் நோயின்போதுதான் நாம் உணர்கிறோம். ஆனால், நம் இயக்கத்திற்குக் காரணமான இந்த இதயத்தைப் பாதுகாக்க நம் உணவுப்பழக்கம், உடற்பயிற்சி, நல்ல உணர்வுகள் அவசியம் என்பதை இன்று நாம் நன்றாக உணர்கிறோம். நம் இதயங்களைப் பேணிக்காக்க இன்று உறுதி எடுக்கலாம்.


இயேசுவின் திருஇருதயமே, என் நம்பிக்கையை உமது பேரில் வைக்கிறேன்!


2 comments:

  1. எத்தனை எத்தனை அழகான விஷயங்களை உள்ளடக்கியதொரு பதிவு.விவிலியத்தில் இரண்டு பேருடைய விலா திறக்கப்படுகிறது என ஆரம்பித்து படைப்பின் முதல் மகனாகிய ஆதாமிற்கும்,படைப்பின் பிதாமகனாகிய இயேசுவுக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பட்டியலிடுவதிலிருந்து,திடமும் திரவமும் கலக்கும் போதுதான் ' மனிதம்' பிறக்கும் என்ற உண்மையை மெய்ப்பிக்க பட்டிணத்தாரை துணைக்கழைப்பதிலிருந்து,ஒவ்வொரு பலியிலும் அருட்பணியாளர் இரசத்தை ஒப்புக்கொடுக்கையில் சொல்லும் அழகு வரிகளிலிருந்து எல்லாமே இயேசுவின் திரு இருதயத்தை மட்டுமல்ல.. நம் இதயத்தையும் நமக்குச்சுட்டிக்காட்டுகிறது.நம் நம்பிக்கையின் கொடுமுடியான ஒரு விஷயத்தை கூறியதோடல்லாமல் அதைக்குறித்த நம் வாழ்க்கை பற்றியும் வளமாக்க வழி சொல்கிறார் தந்தை..நம் இயக்கத்திற்குக் காரணமான நம் இதயத்தைப்பாதுகாக்க நல்ல பழக்கங்களோடு நல்ல உணர்வுகளும் அவசியம் என்கிறார் தந்தை. உண்மையே!
    என்னுடைய பள்ளி வாழ்க்கையின் 11 ஆண்டுகளை நான் கழித்தது " இயேசுவின் திரு இருதயப்பள்ளி" என்பதால் எனக்குள் இருந்த அந்த பக்தியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றியுள்ள தந்தைக்கு என் வாழ்த்துக்கள்! தந்தையின் நம்பிக்கையை மட்டுமல்ல; நம் அனைவரின் நம்பிக்கையையும் இயேசுவின் திரு இருதயத்தின் மீது வைப்போம். தந்தைக்கும்,அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete