Tuesday, June 12, 2018

சிறியவர் பெரியவர்

நாளைய (13 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:17-19)

சிறியவர் பெரியவர்

'யார் பெரியவர்?' என்ற கேள்வி நற்செய்தி நூல்களில் திருத்தூதர்கள் ஒருவர் மற்றவரைப் பார்த்துக் கேட்டுக்கொள்ளும் கேள்வியாக இருந்தாலும், நாளைய நற்செய்தி வாசகத்தில் பெரியவர் யார்? சிறியவர் யார்? என்ற வரையறையைத் தருகின்றார் இயேசு.

ரொம்ப எளிதான புரிதல்தான்.

கட்டளைகளில் மிகச் சிறியதை மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் சிறியவர்.
கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்து அதை கற்பிக்கிறவர் பெரியவர்.

ஆக, சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளிதான் இயேசுவைப் பொறுத்தவரையில் 'சிறியவர்' 'பெரியவர்' என்ற அடையாளத்தைத் தருகின்றது.

இன்றைக்கு பணம், பதவி, படிப்பு, பின்புலம் ஆகியவற்றை வைத்துத்தான் பெரியவர்கள் நிர்ணயம் செய்யப்படுகின்றார்கள். ஆனால், இவையெல்லாம் தாண்டிய ஒரு அடையாளம்தான் இயேசு முன்வைப்பது.

இயேசுவின் சமகாலத்தில் நிறைய போதகர்களும், மறைநூல் அறிஞர்களும் தாங்கள் போதிப்பது ஒன்று, செய்வது மற்றொன்று என வாழ்ந்தனர். இந்த நிலையைத்தான் இயேசு கடிந்துகொள்கிறார்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளைக்கும் நாம் செய்கின்ற செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்தால் நமக்கு நாமே பெரியவர் ஆகிவிடலாம்.

எப்படி?

நாளை காலை 5:30 மணிக்கு எழ வேண்டும் - என நான் எனக்குச் சொல்கிறேன். அதே போல காலையில் எழுந்துவிடுகிறேன். என் சொல்லுக்கும், செயலுக்கும் நெருக்கம் வந்துவிட்டது. ஆக, என் மனது என்னை அறியாமல் தன்மதிப்பு கொள்ளத் தொடங்குகிறது. 'என்னால் முடியும்!' என்று நேர்முகமான ஆற்றலை எனக்குத் தர ஆரம்பிக்கிறது.

ஆனால் நான் 5:30 என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு எழுந்தால் என் மனம் என் வார்த்தைகளை நம்ப மறுக்க ஆரம்பிக்கிறது. 'சின்ன விஷயத்தையே உன்னால் செய்ய முடியவில்லையே!' என்று என் ஆற்றலைக் குறைத்துவிடுகிறது.

ஆக, சொல்லும் செயலும் இணைந்து சென்றால் அடுத்தவர் முன்னிலையில் நாம் சிறியவர்-பெரியவர் என்றல்ல. நமக்கு நாமே பெரியவர் ஆக முடியும்.

1 comment:

  1. " நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கும்,செய்கின்ற செயல்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்தால் நமக்கு நாமே பெரியவராகி விடலாம்."பெரியவர் ஆவது எப்படி என்னும் உத்தியைப்போட்டு உடைக்கிறார் தந்தை ஏசு.அவருடைய கருத்தை மெய்ப்பிக்க " ஐந்து மணிக்கு எழவேண்டு மென நினைத்து எழும்போது நம் மனது நம்மையும் அறியாமல் நம்மை மதிக்கிறது எனவும்,அதை நாம் செய்யாதபோது நம் மனது நம்மை நம்ப மறுக்கிறது" எனவும் கூறுகிறார்.ஐந்து மணிக்கு எழுவது என்பது பெரிய விஷயமில்லை.ஆனால் இதைச்செய்வதாகத் தீர்மானம் பண்ணி செய்யாத போது அது பெரிய விஷயமாகிறது. இதனால் நாம் கற்றுக்கொள்வது....நம் சொல்லும் செயலும் இணையும் போது அடுத்தவர் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார் என நான் கவலைப்படத்தேவையில்லை.ஏனெனில் எனது மனமே என்னைக்கொண்டாட ஆரம்பித்துவிடும. ஆகவே "நம்மைப் பெரியவர்,சிறியவராக்குவது நம் பணமோ,பதிவியோ,பட்டமோ,பின்புலமோ அல்ல... நமது சொல்லும்,செயலும் இணைந்து இருப்பது தான்" என்று ஆணித்தரமாய் அறிக்கையிடும் தந்தைக்கு என் நன்றிகளும்!! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete