Friday, June 22, 2018

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

நாளைய (23 ஜூன் 2018) நற்செய்தி (மத் 6:24-34)

நாளைக்காக கவலைப்படாதீர்கள்!

முனிவர் ஒருவர் பிச்சை கேட்டு பணக்காரர் ஒருவரிடம் சென்றாராம்.

'எனக்கு சாப்பிட ஏதாவது கொடு!'

'இன்று போய் நாளை வாருங்கள். நாளை தருகிறேன்!'

'ஓ...நாளைக்கு வரைக்கு இருப்போம் என்று தெரியும் அளவிற்கு நீ பணக்காரானா?'

ஞானம் பெற்றார் அவர். தன்னிடம் உள்ள அனைத்தையும் முனிவருக்கு அள்ளிக் கொடுத்தாராம் அவர்.

நிற்க.

இரண்டு நாள்களுக்கு முன் என் நண்பர் என்னைப் பார்க்க வந்தார். அவர் வந்த நேரம் நான் ஒரு வருட திட்டமிடல் செய்துகொண்டிருந்தேன். அவர் ஒரு வருடம் செய்ய வேண்டியதையும் அவர் திட்டமிட்டார். திடீரென்று தன் திட்டமிட்ட பேப்பரை கிழித்த அவர், 'இது வேண்டாம்! ரொம்ப செயற்கையாக இருக்கிறது. இன்று மாலை நான் மதுரைக்குப் போகணும். அதுதான் என் திட்டம்!' அவ்வளவுதான்.

நிற்க.

'நாளைக்காக கவலைப்படாதீர்கள்' என்று இயேசு சொல்வதையும், நாம் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம், ஒரு வருடம், ஐந்து வருடங்கள் என திட்டமிடுவதையும் எப்படி சமரசம் செய்துகொள்வது?

'குருவியைப் பார், கிளியைப் பார், காட்டுமலர்களைப் பார்' என்று சொல்கிறார் இயேசு.

ஆனால், அவைகளுக்கு திட்டமிடல் தேவையில்லை.

பத்தாயிரம் வருடங்களுக்கு முன் குருவி எப்படி கூடு கட்டியதோ அப்படியேதான் இன்றும் கட்டுகிறது.

ஒரே மாதிரி இருக்கத்தான் அது படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், மனிதர்கள் அப்படியில்லை. அவர்களால் ஒவ்வொரு நொடியையும் தங்கள் விருப்பம்போல தெரிவு செய்து வாழ முடியும். தெரிவு மற்றும் கட்டின்மை வந்தவுடன் கவலை வந்துவிடுகிறது.

வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நமக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருக்கிறது. எல்லாவற்றையம் நாம் திட்டமிட்டாலும் திட்டமிடுதலையும் தாண்டிய செயல்கள் நடந்தேறிவிடுகின்றன. திட்டமிடாமல் இருந்துவிட்டாலும் பின்னால் வருந்துகின்ற சூழல் வந்துவிடுகிறது.

ஆக, திட்டமிடுவோம். ஆனால், கவலைகள் இல்லாமல் வாழ கட்டின்மையைத் தழுவிக்கொள்வோம்.

நாளைக்கு காலையில் நான் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான் என் திட்டம் என வைத்துக்கொள்வோம்.

இன்று மாலையிலிருந்து பனி பெய்கிறது, புகைமூட்டமாக இருக்கிறது, காற்று வேகமாக அடிக்கிறது. சிகரம் ஏற முடியவில்லை. திட்டமிட்டபடி நடக்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். குற்றவுணர்வுகொள்ளவும் வேண்டாம். நாளை மறுநாள் வரை பார்ப்போம். தட்பவெப்ப நிலை சீராகவில்லையா. உடனே தரை திரும்புவோம். யாரிடம் போய் நான் என்னை நிரூபிக்க வேண்டும்.

பிறரிடம் நான் என்னையே நிரூபிக்க வேண்டும் என்று கவலைப்பட்டால் அது வேண்டாம். பிறருக்குத்தான் என்னைப் பற்றி அறிந்துகொள்ள நேரமில்லையே. ஏனெனில் அவரைப் பற்றியும் அறிந்துகொள்ள எனக்கு நேரமில்லையே!

ஆக, அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

இருந்தாலும், நாளைய நாள் தொல்லையில்லாமல் இருக்க நம்மால் எதை செய்ய முடிந்தாலும் அதை செய்யலாம். மனிதர்களால் தான் நாளையிலும், நேற்றிலும் வாழ முடியும். பறவைகள் மற்றும் பூக்களுக்கு அது சாத்தியமில்லை.



3 comments:

  1. பல நேரங்களில் நாம் அடுத்தவருக்கு ஏதோ நம்மை நிருபிக்கத் திட்டம் போட்டு உள்ளதையும் இழந்து கைகளைப் பிசைந்து நின்றிருப்போம்.தந்தை கூறுகிறார்.... "அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.இருப்பினும் நாளைய நாள் தொல்லையில்லாமல் இருக்க நம்மால் எதைச்செய்ய முடிந்தாலும் செய்யலாம்.மனிதர்களால் தான் நாளையிலும்,நேற்றிலும் வாழலாம்.பறவைகள் மற்றும் பூக்களுக்கு அது சாத்தியமில்லை. ஆனாலும் திட்டமிடுவோம்; கவலைகள் இல்லாமல் வாழக் கட்டின்மையைத் தழுவிக்கொள்வோம்." எத்தனை அனுபவப்பூர்வமாகப் பேசுகிறார் தந்தை!அவருடைய ஒவ்வொரு எழுத்தும் அனுபவத்திற்கு வயது ஒரு முட்டுக்கட்டை இல்லை என்பதைக் காட்டுகிறது.அந்தப் படத்தில் உள்ள பறவைகள்! எனக்கும் அவை போல பறக்க ஆசைதான்! முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைபட்டது போல் இருக்குல்ல!!!?? ஆசைப்படுவதில் தப்பில்லையே!

    ReplyDelete
  2. I thought only Fr. Yesu is a sincere 'Sigamani.' But his friend seems to be no less than him. Congrats to both! May God bless them.

    ReplyDelete