Thursday, June 14, 2018

இச்சையான பார்வை

நாளைய (15 ஜூன் 2018) நற்செய்தி (மத்தேயு 5:27-32)

இச்சையான பார்வை

கடந்த வாரம் தெ பெர்சனஸ் எம்பிஏ என்ற மேலாண்மையியல் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அதன் ஆசிரியர் 'மோனோஐடியலிஸம்' என்ற ஒன்றைப் பற்றிப் பேசுகின்றார். அதாவது, நாம் செய்ய வேண்டிய ஏதாவது ஒன்றை மூளைக்குச் சொல்லிவிட்டால் மூளை அதை ஒட்டியதை அப்படியே செய்யும்.

உதாரணமாக, சாலையில் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். நூற்றுக்கணக்கான கார்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. அவற்றில் சிலவற்றை நாம் கூர்ந்து பார்க்கிறோம். சிலவற்றை பொதுவாக பார்க்கிறோம். ஆனால், 'மாருதி ஆல்டோ 800- கிரே கலர்' கார் வாங்க வேண்டும் என இந்த நாள்களில் மனம் சிந்தித்துக்கொண்டிருக்கிறது என வைத்துக்கொள்வோம். அடுத்த நாள் சாலையில் செல்லும்போது நம் கண்களுக்கு 'மாருதி ஆல்டோ 800 - கிரே கலர்' கார்கள் நிறைய தென்படும். எல்லா நாளும் எல்லா கார்களும் ஓடுகின்றன. ஆனால் நம் மூளைக்கு நாம் கொடுக்கின்ற கட்டளையை வைத்து அது நம் பார்வையைச் சுருக்கி விடுகிறது.

நம் உணர்வு உறுப்புக்களுக்கும், மூளைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

நாம் பார்ப்பவை, கேட்பவை, தொடுபவை, நுகர்பவை, ருசிப்பவை அனைத்தையும் மூளை பிராசஸ் செய்கிறது. அதே போல நாம் எதைப் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும், தொட வேண்டும், நுகர வேண்டும், ருசிக்க வேண்டும் என மூளை நம் உறுப்புக்களுக்குக் கட்டளையிடுகிறது.

நாளைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விபச்சாரம் செய்தல் பற்றிய போதனையில் 'இச்சையான பார்வையே' விபச்சாரம் என்கிறார். அதாவது, ஒருவர் ஒரு பெண்ணை வன்முறையாக நெருங்குகின்றார் என்றால், அவர் உடல் அளவில் நெருங்குவதற்கு முன் தன் மூளையில் அவரை நெருங்கிவிட்டார் என்பதுதான் இயேசுவின் வாதம். ஆக, வெளியில் உடல் அளவில் நடக்கும் நிகழ்வைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், மூளையில் நடக்கும் முதல் நிகழ்வையே கட்டுப்படுத்திவிடுங்கள் என்கிறார் இயேசு. இவ்வாறாக, நோய்க்கான அறிகுறியைக் குணமாக்குவதைவிட நோயின் வேரைக் குணமாக்க அழைப்புவிடுக்கின்றார் இயேசு.

நம் கண்கள் - நம் மூளைக்கு தகவல்களைக் கொண்டுவரும் முக்கியமான உறுப்பு இது. ஆக, இதன் வழியாக நாம் எதைப் பார்க்கிறோம் என்பதும், நம் மூளை எதைப் பார்க்கச் சொல்கிறது என்பதைப் பற்றியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையா?


1 comment:

  1. "அவர்,இவர்" என்றில்லாமல் எல்லோரையும் ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் ஒரு பதிவு. வெளியில் உடல் அளவில் நடக்கும் நிகழ்வுகளைக்கட்டுப்படுத்த வேண்டுமென்றால், மூளையில் நடக்கும் முதல் நிகழ்வையே கட்டுப்படுத்தி விடுங்கள் என்கிறார் இயேசு.உண்மைதான்... நோயைக்குணமாக்குவதை விட,நோயின் வேரை குணமாக்குவதே விவேகம்.அதிலும் கண்டிப்பாக நம் உடலின் ஜன்னல்களாம் கண்கள் வழியே எதைப்பார்க்கிறோம்... மூளை எதைப்பார்க்கச்சொல்கிறது என்பதைப்பற்றிக் கண்டிப்பாகக் கவனமாக இருக்க வேண்டுமென்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.வளரும் குழந்தைகளுக்கும்,வளர்ந்த குழந்தைகளுக்கும் ஏற்றதொரு அழகான பதிவு.
    ஆமாம்! எனக்கொரு சந்தேகம்...எதற்காகத் தந்தைக்கு இந்த " ஆல்டோ 800- கிரே கலர்" மீது இப்படியொரு obsession? அதுவும் கூடத் தங்களின் மூளை சொல்வது தானா?!

    ReplyDelete