Tuesday, June 5, 2018

சகோதரர் எழுவர்

நாளைய (6 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 12:18-27)

சகோதரர் எழுவர்

இத்தாலிய மொழியில் 'இ ஸெத்தெ ஃப்ரலெ;லி' (சகோதரர் எழுவர்) என்ற காமெடி மேடை நாடகம் ஒன்று உண்டு. ஒரு பெண். அவரை மூத்த சகோதரர் மணக்கிறார். அவர் ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். பின் ஒருவர் பின் ஒருவராக அந்தப் பெண்ணை மணக்கின்றனர். முதலாமவர் அந்தப் பெண்ணை மணக்கும்போது அவருக்கு வயது 20. கணவருக்கு வயது 25. ஏழாம் நபர் மணக்கும்போது அவருக்கு வயது 55. வயது வித்தியாசம், பாலின வித்தியாசம், ஏற்கனவே இருந்த உறவு முறை மாற்றம், ஒவ்வொருவரும் அந்தப் பெண்ணை இம்ப்ரஸ் செய்யும் விதம், இந்த திருமணத்தின்மேல் சமூகத்தின் பார்வை, அவர்களுக்குள் புரிந்துகொள்ளாமை - இப்படி பல விடயங்களை நகைச்சுவையாகச் சொல்கிறது அந்த நாடகம். ஆனால், இவ்வுலக வாழ்வோடு அந்த நாடகம் முடிந்துவிடுகிறது.

இன்று நம் சமூகத்தில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் எப்படி இருக்கும் என்பதை நாமே கற்பனை செய்துகொள்ளலாம்.

நாளைய நற்செய்தி வாசகத்தில் சதுசேயர்கள் இயேசுவைச் சோதிக்க வருகிறார்கள். இவர்கள் அறிவாளிகள். நிறைய படித்தவர்கள். ஆகையால் இவ்வுலகம் சாராததை விடுத்து மறுவுலகு சார்ந்த ஒன்றை கேட்கிறார்கள். இவர்கள் உயிர்ப்பின்மேல் நம்பிக்கை கொள்ளாதவர்கள். இவர்கள் பணக்காரர்கள். அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் உயிர்ப்பு பற்றியும், மறுவாழ்வு பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு இவ்வுலகமே மோட்சம்தானே. மறுவுலகம், உயிர்ப்பு எல்லாம் மிடில் கிளாஸ் வகுப்புகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை.

'உயிர்ப்பு இருக்கா? இல்லையா?' என்று நேரடியாகக் கேட்காமல், அப்படி உயிர்ப்பு என்ற ஒன்று இருந்தால் அது எவ்வளவு நகைப்புள்ளதாக இருக்கும்? என்ற எண்ணத்தில் 'ஒரு பெண் - ஏழு கணவர்கள்' எடுத்துக்காட்டைச் சொல்கின்றனர்.

'உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது' - என ஒரே வார்த்தையில் பதிலை முடிக்கின்றார் இயேசு. திருமணம் என்பது கடவுள் மனிதனின் தனிமைக்குத் தந்த மருந்து. அப்படித்தான் விவிலியம் சொல்கிறது. உயிர்ப்புக்குப் பின் மனிதர்கள் தனிமை உணர்வை அடைவதில்லை. அவர்கள் 'விண்ணகத் தூதரைப் போல' இருப்பர். தூதர்கள் உணர்வுகளைக் கடந்தவர்கள். ஆக, அவர்களுக்குத் திருமணம் தேவையில்லை.

மேலும், இறந்தவர்கள் கடவுளில், கடவுளுக்காக, கடவுளோடு என மாறிவிடுகிறார்கள்.

இந்த நிலை இறப்பிற்குப் பின்தான் சாத்தியமா?

இல்லை.

இங்கேயும் நாம் உணர்வுகளைக் கடந்து, அனைவரையும் கடவுளில், கடவுளுக்காக, கடவுளோடு அன்பு செய்ய முடியும் என நினைவூட்டுகிறது நாளைய முதல் வாசகம் (காண். 2 திமொ 1:1-3, 6-12). எப்படி?

முன்பின் தெரியாத திமொத்தேயுவை, 'என் அன்பார்ந்த பிள்ளை' என பவுலால் எப்படி அழைக்க முடிந்தது? அப்படித்தான்.


2 comments:

  1. அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் உயிர்ப்பு பற்றியும், மறுவாழ்வு பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு இவ்வுலகமே மோட்சம்தானே. மறுவுலகம், உயிர்ப்பு எல்லாம் மிடில் கிளாஸ் வகுப்புகளுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டவை.

    truth!

    ReplyDelete
  2. தன்னைத்,தன் இறைத்தன்மையை மீண்டும் மீண்டும் சீண்டும் படித்த,பணக்காரர்களை,அவர்களது அரை குறை அறிவை சாடுகிறார் இயேசு.உயிர்ப்புக்குப்பின் மனிதர்கள் விண்ணகத்தூதரைப்போல் இருப்பதாலும்,அவர்கள் உணர்வுகளைக் கடந்தவர்கள் என்பதாலும் அவர்களுக்குத் மிருமணம் தேவையில்லை என்றும்,மேலும் இறந்தவர்கள் கடவுளில்,கடவுளுக்காக கடவுளோடு, மாறிவிடுகிறார்கள் எனவும் விவிலியத்தைத் துணைக்கழைத்துக் கூறுகிறார் தந்தை.மேலும் இறப்பிற்கு முன்பாகவும் நமக்கு இந்த உணர்வுகளைக்கடந்த,கடவுளுக்காக கடவுளோடு அன்பு செய்யும் நிலை நம்மால் முடியுமெனவும் கூறுகிறார்.இதை ஆணித்தரமாக நானும் ஆமோதிக்கிறேன்.நமக்கு சிறிதும்,இரத்த பந்தம் இல்லாத,ஊரும் தெரியாத,உறவும் இல்லாத எத்தனை பேர் நம் உணர்வில்,உயிரில் கலந்து போகிறார்கள்! இதுவும் உணர்வுகளைக்கடந்த நிலைதானே!மேலும் 'திருமணம் என்பது கடவுள் மனிதனின் தனிமைக்குத் தந்த பரிசு' என விவிலியம் கூறுவதாக எடுத்து வைக்கிறார் தந்தை..திருமணம் முடிக்காதவர்களை அவர் 'பரிதாப' லிஸ்டில் சேர்க்கிறாரா தெரியவில்லை.அவருக்கு ஒரு ஆறுதலான வார்த்தை...இன்று திருமணம் முடித்த பலர் 'தனிமை'யின் 'இனிமை' தேடி அலைகின்றனர். எல்லாமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான்! தந்தைக்கு ஆறுதலாயிருக்குமே என்றுதான் சொல்கிறேன்.அவ்வளவே!!!

    ReplyDelete