Monday, June 4, 2018

உருவமும் எழுத்தும்

நாளைய (05 ஜூன் 2018) நற்செய்தி (மாற்கு 12:13-17)

உருவமும் எழுத்தும்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற நான்காம் ஆண்டு நிறைவின் நினைவாக வெளியிடப்பட்ட நாணயம் ஒன்றை நேற்றுப் பார்த்தேன்.

நாணயத்தின் ஒரு பக்கத்தில் இரக்கத்தின் இறைவன் மனிதரைக் கட்டித் தழுவுவது போலவும், மறு பக்கத்தில் திருத்தந்தை அவர்களின் ஆயர்பணி இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் இந்த நாணயத்தில் இல்லை.

இந்த நாணயத்தை வைத்திருப்பதால் என்ன பயன்? அல்லது இந்த நாணயத்தின் பொருள் என்ன? அல்லது இந்த நாணயத்தை ஏன் சேகரிக்கிறார்கள்? அல்லது ஏன் வெளியிடுகிறார்கள்?

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தந்தை ஆளுகைக்கு இந்த நாணயம் சான்று.

எந்த நாணயமும் சொல்வது யாருடைய ஆளுகை என்பதைத்தான்.

நாணயம் ஒன்றைக் காட்டி இயேசுவின் 'நாணயத்தை' சோதிக்க வருகிறார்கள் 'ஏரோதியர்கள்.' ஏரோதியர்கள் இரட்டை உள்ளம் கொண்டவர்கள். அதாவது, தங்களை ஆள்வதற்கு தங்களின் மன்னன் ஏரோதுதான் தகுதியானவன் என்பது ஒரு உள்ளம். இருந்தாலும் அந்நிய நாட்டு அரசனின் உருவம் பதித்த நாணயத்தை வைத்திருப்பது இரண்டாவது உள்ளம்.

தன் இனத்து இரத்தம்தான் தன்னை ஆள வேண்டும் என்றால் ஏரோதியர்கள் யூதனான ஏரோதின் உருவத்தையோ அல்லது யூதக் கடவுளான யாவே இறைவனின் உருவத்தையோ கொண்ட நாணயத்தை வைத்திருக்க வேண்டும். இவர்கள் தாங்களே தங்கள் கொள்கைக்கு பிரமாணிக்கமாக இல்லாமல் இயேசுவின் பிரமாணிக்கத்தை சோதிக்க வருகின்றனர்.

இவர்களின் இரட்டை உள்ளத்தை தோலுரிக்கின்றார் இயேசு: 'சீசருக்கு உரியதை சீசருக்கு கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுங்கள்.'

இங்கே இயேசு 50-50 பிரமாணிக்கத்தை முன்வைக்கவில்லை. மாறாக, ஓர் அரசியல் புரட்சிக்கு வித்திடுகின்றார். சீசருக்கு உரியதைக் கொடுத்து (உரோமை அரசை அழித்து) அவனை அனுப்பிவிடுங்கள். பின் கடவுளுக்கு உரியதை முழுமையாகக் கொடுங்கள்.

கடவுளுக்கு பிரமாணிக்கம் என்று சொல்லிக்கொண்டு சட்டை பாக்கெட்டில் சீசரைத் தூக்கிக்கொண்டு திரிவது நலமன்று என்கிறார் இயேசு.

என் பிரமாணிக்கம் யாருக்கு? - என்பது நாளைய நற்செய்தி எழுப்பும் கேள்வி.

1 comment:

  1. திருத்தந்தையின் பெருந்தன்மைக்குத் தன் வஞ்சகமற்ற வார்த்தைகளால் வாழ்த்துப்பா பாடித் தன் பதிவை ஆரம்பித்துள்ளார்தந்தை. ஏரோதியருக்கு மட்டுமா இரட்டை உள்ளம்? எத்துணை முறை " கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை" யாக மனசாட்சியின் குரல்வளையை நெரித்துவிட்டு நியாயத்திற்குப் புறம்பாக கை நீட்டுகிறோம்?? கடவுளுக்குப்பிரமாணிக்கம் என்று சொல்லிக்கொண்டு சட்டைப்பாக்கெட்டில் சீசரைத்தூக்கிக்கொண்டு திரிவதாகத் தந்தை கை நீட்டுவது நம்மையும் பார்த்துத்தான்." என் பிரமாணிக்கம் யாருக்கு?" யோசிக்க சொல்கிறார் தந்தை.யோசிப்போம்." நாணயம் இல்லாத ஏரோதியர்கள் இயேசுவின் நாணயத்தைச் சோதிக்கிறார்கள்." வார்த்தைகள் கொப்பளிக்கின்றன தந்தையின் கை வண்ணத்தில். வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete