Friday, June 1, 2018

எங்களுக்குத் தெரியாது

நாளைய (2 ஜூன் 2018) நற்செய்தி (மாற் 11:27-33)

எங்களுக்குத் தெரியாது

இயேசுவும் அவருடைய சீடர்களும் எருசலேமுக்கு வருகின்றனர். வந்தவரிடம், 'எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கின்றீர்?' என்று கேள்வி எழுப்புகின்றனர் தலைமைக்குருக்களும் அவர்களது சகாக்களும்.

'அதிகாரம்' - இது மிக முக்கியமான வார்த்தை.

யாருக்கு அதிகாரம் இருக்கிறது? - இந்தக் கேள்விதான் வாழ்வில் நம் பல செயல்பாடுகளை நிர்ணயிக்கிறது.

சிகப்பு லைட் எரிந்தாலும் கடந்துவிடலாம் என நினைத்து காரின் ஆக்ஸிலேட்டரைக் கொடுக்கும் நாம் டிராஃபிக் போலீஸ் நிற்பதைப் பார்த்தவுடன் கியரை டவுன் செய்து வண்டியை நிறுத்துகிறோம். நாம் வண்டியில் இருக்கிறோம். அவர் கீழே நின்று கொண்டிருக்கிறார். அவரை விட நமக்குத்தான் இப்போது வசதி. வேகமாக அவரையும் இடித்துக்கொண்டு போய்விடலாம். ஆனாலும் நாம் அமைதியாக இருக்கின்றோம். ஏனெனில் 'அதிகாரம்' அவரிடம் இருக்கிறது.

வேஷ்டியை இடுப்புக்கு மேல கட்டி நிற்கும் எங்க வாட்ச்மேன் நான் உள்ளே வரும்போது அப்படியே நிற்கிறார். ஆனால் என்னுடன் இல்லத்தின் அதிபர் வரும்போது வேஷ்டியை இறக்கிவிடுகிறார். ஏனெனில் அதிபருக்கு இருக்கும் 'அதிகாரம்.'

நம் அதிகாரம் மதிக்கப்படாதபோது நம்மை அறியாமல் நமக்கு கோபம் வந்துவிடுகிறது.

இயேசுவையும் அவரின் பணிகளையும் கண்டு தங்களையும், தங்களின் பணிகளையும் அவரோடும், அவற்றோடும் ஒப்பிட்ட தலைமைக்குருக்கள் தங்களின் அதிகாரம் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கிறார்கள்.

இவர்கள் அவரைக் கேள்வி கேட்க, அவரும் அவர்களை எதிர்கேள்வி கேட்கின்றார்.

பதில் தெரிந்திருந்தும் தப்பித்துக்கொள்வதற்காக 'எங்களுக்குத் தெரியாது' என்கின்றனர்.

'அறியாமை' - இது ஒன்றுதான் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியும்.

நம்மை அறியாதவர்கள்மேல் நாம் அதிகாரம் செலுத்துவதில்லை. இல்லையா?

'தெரியாது' என்று சொல்லி இயேசுவின் அதிகாரத்தை ஏற்க மறுக்கிறார்கள் தலைமைக்குருக்கள். இயேசுவும் அதே நாணயத்தைக் கொண்டு அவர்களை அமைதியாக்குகின்றார்.


2 comments:

  1. சிக்னலில் நிற்கும் ட்ராஃபிக் போலிஸுக்கும், தந்தையின் கேட்டில் நிற்கும் வாட்ச்மேனுக்கும் இருக்கும் 'அதிகாரம்' தன்னுள் ஏற்படுத்தும் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார் தந்தை.நம் அதிகாரம் மதிக்கப்படாதபோது கோபப்படும் நாம் அடுத்தவரின் அதிகாரத்தை மதிக்கத்தவறுகிறோம். Indifference என்ற உணர்வைக்காட்டுவதன் மூலம் பிறரின் அதிகாரத்தை இழிவு படுத்துகிறோம்.' 'தெரியாது' என்று சொன்ன தலைமைக்குருக்கள் செய்ததும் அதேதான்.ஆனால் அவர்களை அமைதியாக்க இயேசு கையாண்ட நாணயம் நம்மிடம் உள்ளதா? யோசிப்போம்....."பார்க்கும் எதிலும் பாடம் கற்கலாம்".. தந்தையிடம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.வாழ்த்துக்கள,!!!

    ReplyDelete
  2. Yesu good evening. Nice reflection.

    ReplyDelete