Monday, June 11, 2018

மலைமேல் இருக்கும் ஊர்

நாளைய (12 ஜூன் 2018) நற்செய்தி (மத் 5:13-16)

'மலைமேல் இருக்கும் ஊர் மறைவாய் இருக்க முடியாது!'

கொடைக்கானல் மலையில் தங்கியிருந்து இரவில் சுற்றிலும் பார்த்தால் நிறைய விளக்குகள் எரிவது தெரியும். நின்று எரியும் விளக்குகள். நகர்ந்து கொண்டே இருக்கும் வாகனங்களின் விளக்குகள். ஆலய எல்.இ.டிக்கள், ஹோட்டல் விளம்பரங்கள் என நிறைய தெரிவது வானத்து நட்சத்திரங்கள் கொஞ்சம் இறங்கி வந்தது போல இருக்கும்.

தமிழில் 'உள்ளங்கை நெல்லிக்கனி,' 'வெள்ளிடை மலை,' 'கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு' என்ற சொல்லாடல்கள் உள்ளன.

அதாவது, நேருக்கு நேர் தெரிகின்ற ஒன்றை மறைக்க முடியாது.

இப்படித்தான் இருக்க வேண்டும் சீடரின் குணம் என்கிறார் இயேசு.

மற்றவரால் மறைத்துவிட முடியாத அளவிற்கு நம் குணம் உயர்ந்துவிட்டால் நாமும் ஒளிவீசலாம். இல்லையா?

'துன்பத்தால் மனஉறுதியும்,
மனஉறுதியால் தகைமையும்,
தகைமையால் எதிர்நோக்கும் விளையும்' (உரோ 5:3) என்ற பவுலின் வார்த்தைகள் இன்றைய காலை செபத்தில் வந்தன.

'தகைமை' என்றால் 'கேரக்டர்' அல்லது 'நடத்தை' என்று இன்று நான் கண்டுபிடித்தேன்.

ஆக, மனஉறுதிதான் என் நடத்தையை உருவாக்குகிறது.

ஒளியாக, உப்பாக இருப்பதும் ஓர்நாள் நிகழ்வு அல்ல. அது என் தொடர்நடத்தையால் வரும் பயன்.

1 comment:

  1. " துன்பத்தால் மனவுறுதியும்.........தகைமையால் எதிர் நோக்கும் விளையும்" எனும் காலை செபத்தின் வரிகளில் ஆரம்பித்து தகைமை எனும் வார்த்தைக்கு "நடத்தை" எனும் வார்த்தையைப் பொருளாகக் கண்டுபிடித்ததாக சொல்கிறார் தந்தை.ஒருவரின் நடத்தைக்கு மூலகாரணம் " மன உறுதி" என்றும் அந்த மன உறுதியை ஒருவர் அடைந்து விட்டால் அவர் இந்த உலகத்திற்கு ஒளியாக,உப்பாக இருப்பது சாத்தியம் என்கிறார்.இதுவும் ஒரு நாள் கூத்து அல்ல; தொடர் நடத்தையின் காரணமாக வரும் விஷயம் என்கிறார்." மன உறுதி" ....பல நேரங்களில் என் வார்த்தையில் உள்ள உறுதி என் செயலில் இல்லை தான்.இறைவனிடம் எதை எதையோ கேட்கும் நாம் இந்த " மள உறுதி" யை 'எனக்குத்தா' என்று கேட்போம்.பின் ஒருவரால் மறைத்து விட முடியாத அளவிற்கு நாமும் உயர்ந்து ஒளி வீசலாமே! அதற்குப்பின் கொடைக்கானல் மலையின் விளக்குகள் மட்டுமல்ல; ஒளி வீசும் நம் வாழ்க்கை கூட பிறர் நிமிர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாய்ப் போகும்.வாழ்க்கையின் சாதாரணங்களை அசாதாரணமாக்கும் தந்தையை இறைவன் ஆசீர்வதிப்பாராக!

    ReplyDelete