Sunday, October 30, 2016

ஒரு மனத்தவராய்

நாளைய முதல் வாசகத்தில் (காண். பிலிப்பியர் 2:1-4) கிறிஸ்து பற்றிய பாடலை எழுதுவதற்கு முன் வரும் அறிவுரைப் பகுதியை வாசிக்கின்றோம்:

'அப்படியானால் நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து,
ஒரு மனத்தவராய் இருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்!'

கிரேக்கத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது 'ஒருமை,' 'பன்மை' சிக்கல் வருகிறது.

அதாவது, ஒருமையில் எழுதப்பட்டதை நாம் மரியாதை கருதி பன்மையில் மொழிபெயர்க்கிறோம். 'நீங்கள் செய்யுங்கள்!' என்பதை நாம் மரியாதைக்குரிய ஒருவரைப் பார்த்து ஒருமையிலும், அல்லது மொத்தமாக பன்மையிலும் பயன்படுத்துகிறோம்.

முன்நிற்பவர் யார் என்று தெரியாதபோது பொருள் மாறிவிடுகிறது.

'நீ ஒருமனத்தவராய் இரு!' என்பதுதான் மொழிபெயர்ப்பு.

அதாவது, மொத்தமான திருச்சபையை நோக்கி பவுல் பேசினாலும், அவரின் வார்த்தைகள் தனிப்பட்ட நபர்களை நோக்கியே இருக்கின்றன.

நான் எனக்குள்ளே ஒருமனத்தவராய் இருப்பது சில நேரங்களில் கஷ்டமாக இருக்கிறது.

ஏழைகளைப் பார்த்தால் இரங்க வேண்டும் என்னும் நான்

அவர்களைப் பார்த்தால் வண்டியை விட்டு இறங்குவது கூடக் கிடையாது சில நேரங்களில்.

அப்படிப்பட்ட நேரங்களில் நான் இருமனப்பட்டுத்தானே இருக்கிறேன்.

வாழ்க்கை என்பதே நாம் இருமனப்படுதலிருந்து ஒருமனப்படுதலை நோக்கி பயணம் செய்வதுதான் என நினைக்கிறேன்.

அந்த ஒருமனப்படுதல் வரும்போது நாம் அவரில் கலந்துவிடுகிறோம்.

1 comment:

  1. ' ஒரு மனத்தவராயிருப்பது'....நல்லது தான்.ஆனால் அது எப்படி சாத்தியம்? எந்நிலையிலும் ஒரே மாதிரி மனநிலையிலிருக்க நாம் ஜடங்களில்லையே! உயிரோடும்,,இரத்தம்,,சதை,எலும்போடும் இருக்கும் மனிதர்கள் தம் சூழ்நிலைக்கேற்ப மாறுவதுதானே முறை? ஒரு மனத்தவராயிருப்பதை எப்படி ஒரே மாதிரியான செயல்களில் நிருபிக்க முடியும்? ஏழைகளைப் பார்த்தால் இரங்க வேண்டும் என நினைக்கும் தந்தை அதை நிருபிக்க ஒவ்வொரு முறையும் வண்டியிலிருந்து இறங்க வேண்டும் என்பது எங்ஙனம் சாத்தியமாகும்? அழகான ஒரு புன்முறுவலை உதிர்த்து விட்டு தன் வண்டிப்பயணத்தை தொடரலாமே! நம்மை ஒருமனத்தவராக வைத்திருப்பது நம் மனத்தில் காட்டும் 'உறுதி' யன்றி அதை வெளிப்படுத்தும் முறையல்ல என்றே நினைக்கிறேன்.எண்ணம் ஒன்றும் செயல் ஒன்றுமாக இருக்கும் இரட்டை வேடம்தான் நம் மனத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமேயொழிய நம் உணர்வுகளை வெளிப்படுத்தும் முறைகளல்ல.ஆனாலும் தந்தையின் அந்த இறுதி வரிகள்..." வாழ்க்கை என்பதே நாம் இருமனப்படுதலிலிருந்து ஒருமனப்படுதலை நோக்கி பயணம் செய்வதுதான்."ஆம்! அது மட்டும் நமக்கு இயலுமெனில் நாம் அவரில் கலந்து விடுகிறோம். கஷ்டமான விஷயம்தான்.ஆனால் முயன்றால் முடியாதது உண்டோ? தந்தை நினைக்குமளவுக்கு இல்லையெனினும் நம்மால் இயன்ற அளவு முயலலாமே!சிறிய விஷயமானாலும் மனிதனை இறைவனளவுக்கு உயர்த்தக்கூடிய வித்தைகளைச் சொல்லித்தரும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete