Monday, October 24, 2016

மறைபொருள்

'இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது!'

(காண். எபேசியர் 5:21-33)

கணவர்-மனைவியர் வாழ்வுமுறை குறித்து எபேசு நகரத் திருச்சபைக்கு நாளைய முதல்வாசகத்தில் அறிவுறுத்தும் பவுலடியார், திருச்சபை - கிறிஸ்து, மனைவி - கணவர் என்ற ஒப்புமையைப் பயன்படுத்தி திருச்சபையைப் பற்றிய புதிய கருதுகோளையும் முன்வைக்கின்றார்.

நாம் கொண்டாடும் ஒவ்வொரு திருப்பலியிலும், எழுந்தேற்றத்தின் பின், 'இது விசுவாசத்தின் மறைபொருள்' என்கிறோம். அதாவது, இயேசுவின் உடல் - இரத்தம் என்னும் மறைபொருளை உணர்ந்து கொள்ள விசுவாசம் அல்லது நம்பிக்கை தேவை.

அதுபோலவே, திருச்சபை - கிறிஸ்து, மனைவி - கணவர் என்ற உறவுநிலைகளை அறிந்து கொள்ளவும் நம்பிக்கை தேவை.

'மறைவாய் இருக்கும் பொருளே' மறைபொருள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகள் இருக்கிறது என்பது எனக்கு மறைபொருள்.

அதாவது, நான் அங்கே சென்றதில்லை. என் கண்களால் பார்த்ததில்லை. என் கால்கள் அங்கு நடந்ததில்லை. இருந்தாலும், நான் நம்பிக்கையால் அது இருப்பதாக ஏற்றுக்கொள்கிறேன். ஏற்கனவே போய்-வந்தவர்கள் சொன்னதைப் பற்றியும், அங்கே வாழ்பவர்களின் பகிர்தலிலிருந்தும், கூகுள் மேப், விக்கிபீடியா சொல்வதிலிருந்தும் என நிறைய தரவுகளை நான் நம்புகிறேன்.

கபிரியேல் மார்சல் என்ற மெய்யியலாளர் 'மறைபொருள்' (mystery) என்பதற்கு புதிய விளக்கம் தருகிறார். வாழ்க்கையின் எதார்த்தங்களை 'மறைபொருள்' (mystery),  'பிரச்சினை' (problem) என இரண்டாகப் பிரிக்கிறார்.

இரண்டும் இரண்டும் நான்கு என்பது ஒரு பிரச்சினை. அது எத்தனையாக இருந்தாலும் நம்மை பாதிப்பதில்லை.

ஆனால், எனக்கும் என் நண்பனுக்கும் இடையே உள்ள நட்பு என்பது ஒரு மறைபொருள். அதாவது, நான் அதில் ஒரு உறுப்பாக இருக்கிறேன். பிறப்பு, வாழ்க்கை, இறப்பு, கடவுள், ஆன்மீகம் என்பவை எல்லாம் மறைபொருள். ஏனெனில் நான் அவற்றின் ஒரு உறுப்பாக இருக்கிறேன். என்னையே அவற்றிலிருந்து துண்டித்து நான் தள்ளி நிற்க முடியாது.

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள உறவு, கணவன்-மனைவி என்ற உறவை ஒத்திருக்கிறது என்றால், நான் அந்த உறவுக்குள் இருக்கும்போதுதான் அதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது.

நான் அந்த உறவுக்குள் இல்லாத வரை அது எனக்கு ஒரு ப்ராப்ளம் என்ற அளவில்தான் இருக்கிறது.

ஆக, இரண்டு விடயங்கள்:

அ. நம்பிக்கை என்ற கண் கொண்டு மறைபொருளைப் பார்ப்பது
ஆ. என் வாழ்க்கையின் பொருளை அதன் உள்ளே நின்று கொண்டு பார்ப்பது

1 comment:

  1. என் புத்திக்கு கொஞ்சம் ஓவரான விஷயம் தான்.முதல் தடவைப் படித்தவுடன் ஒன்றும் புரியவில்லை.கூட இருமுறை படித்தபோது ஏதோ புரிந்தது....புரியாதது போலவும் இருந்தது. பொதுவாக நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களைத்தான் ' மறைபொருள்' என்கிறோம்.ஆனால் தந்தை நட்பு,பிறப்பு,இறப்பு, வாழ்க்கை....இப்படி நம் புரிதலுக்குட்பட்ட விஷயங்களை அதிலும் நாம் ஒரு உறுப்பு என்றளவில் சம்பந்தப்பட்ட விஷயங்களை 'மறைபொருள்' என்கிறார். என்னைப்பொருத்தவரை என் புத்தியால் புரிந்து கொள்ள இயலாத விஷயங்களை அது சமயம் சம்பந்தப்பட்டதாக இருப்பின் 'விசுவாசத்தின்' கண்கொண்டும், மற்றவையாக இருப்பின் நமக்கு முன்னால் இருந்தவர்கள்தான் இதற்கு முன்னோடிகள் எனும் 'நம்பிக்கை' கண்கொண்டும் பார்ப்பது தான் பழகிப்போன விஷயம்....என் புத்திக்கெட்டிய விஷயமும் கூட. மற்றபடி இக்காலத் தலைமுறையினர் வழியில் சிந்திப்பது என் புத்திக்கெட்டாத 'மறைபொருள்.' எப்படியோ தனக்குத் தெரிந்த விஷயங்களைத் தன்னைச் சுற்றியிருப்போரும் தெரிந்துகொள்ள வேண்டுமெனும் தந்தையின் பரந்த மனதுக்கு என் பாராட்டுக்கள்!!!

    ReplyDelete