Thursday, October 13, 2016

கடவுள்நிலை

நாளைய நற்செய்தியில் 'சிட்டுக்குருவிகள்' பகுதியை வாசிக்கின்றோம்.

இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா?

நீங்கள் சிட்டுக்குருவிகளைவிட மேலானவர்கள்.

எத்தனையோ முறை இப்பகுதியை வாசித்திருந்தாலும் இன்று வாசிக்கும் போது ஒரு வரி புதிய அர்த்தத்தை கொடுத்தது.

'அக்காலத்தில் ஒருவரை ஒருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தபோது' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகின்றார்.

மேலும், 'உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன' என்றும் 'சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்' என்றும் சொல்கிறார்.

'தலைமுடி எண்ணுவது' என்பது 'ஹைபர்போல்' ('மிகைப்படுத்துதல்') என்னும் இலக்கியக்கூறு.

அதாவது, நிறையக் கூட்டத்தில் நீங்கள் ஒரு நபராக இருந்தாலும் ஒவ்வொருவரும் என் பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்ற செய்தியை இயேசு சொல்கிறார்.

கடவுளின் பார்வையில் எல்லாருக்கும் முதன்மை இடம்.

இது எப்படி சாத்தியமாகும்?

எல்லாருக்கும் முதன்மை இடம் கொடுப்பது எனக்கு பல நேரங்களில் சிரமமாக இருக்கிறது.

'நீ யாருக்கு உடனே பதில் மெசேஜ் அனுப்புகிறாயோ அவரே உனக்கு முதன்மையானவர்' என்று டுவிட்டரில் கீச்சு ஒன்றை வாசித்தேன்.

'முதன்மைப்படுத்துவது' கடினமாக இருக்கிறது.

சில நாள்களில் பணி முதன்மையானதாக இருக்கிறது.

சில நேரங்களில் உடல்நலம் முதன்மையானதாக இருக்கிறது.

சில நேரங்களில் நண்பர்கள் முதன்மையானதாக இருக்கின்றனர்.

சில நேரங்களில் பயணம் முதன்மையானதாக இருக்கிறது.

எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிற்கும் எல்லாருக்கும் முதன்மையான நிலையை கொடுப்பதுதான் கடவுள்நிலை என நினைக்கிறேன்.

காசு கொடுத்து வாங்கப்பட்ட குருவி என்றாலும் சரி, கொசுறாக வந்த குருவியானாலும் சரி இறைவனின் பார்வையில் இரண்டும் முதன்மையானவையே.

2 comments:

  1. வெளியூர் சென்று களைப்புடன் வந்த எனக்கு இன்றையப் பதிவைத் திறந்தவுடனே நான் சோர்ந்து போகும் சமயங்களிலெல்லாம் எனக்குத் திடமளிக்கும் 'அதே' வார்த்தைகள். மனம் சிலிர்த்துப்போனேன்.ஆமாம்...."எதற்காக என் மனம் கலங்க வேண்டும்? எதற்காக சோக ரேகைகள் என்னைத் தாக்க வேண்டும்?" ....இந்தச் சிட்டுக்குருவியைப் படைத்தவரின் பார்வை இமை மூடாமல் என்னைக் காத்துக்கொண்டிருக்கையில்!? பார்த்துக்கொண்டிருக்கையில்!? இவ்வரிகளைப் படித்தவுடன் கண்கள் சிறிது கலங்கிடினும் மனம் கொஞ்சம் திடப்படுவதென்னவோ உண்மைதான். இந்தச் 'சிட்டுக்குருவிகள்' பகுதி வாசிக்கும் ஒவ்வொரு முறையும் மனத்தை வருடிக் கொடுப்பதும் உண்மைதான். ஆனால் இன்றையப் பகுதி எல்லோருக்கும் ஒரே மாதிரி செய்தியை சொல்வதில்லை என்பதை தந்தையின் வரிகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.தந்தையின் வயதில் உள்ளவர்களுக்குத் தங்கள் பட்டியலில் எதை/ யாரை முன்னிலைப்படுத்துவது பிரச்சனை எனில் என் வயதில் உள்ளவர்களுக்கு நாங்கள் யாருடைய பட்டியலிலாவது இருக்கிறோமா என்ற கேள்வியே வலியைத்தருகிறது.அத்தகைய தருணங்களில் ஒருவருக்கு ஆறுதல் மருந்து இந்த 'சிட்டுக்குருகளே!' என்னதான் இந்த 'தலைமுடிகள் எண்ணப்பட்டிருக்கின்றன' போன்ற விஷயங்கள் கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டவை எனினும், அப்பப்ப 'நான் 'ஒருவேளை கொசுறா வந்த குருவியோ' எனும் எண்ணம் என்னை சங்கடத்தில் ஆழ்த்தினாலும் 'அவரின்' பார்வையில் 'எல்லோருமே முதன்மையானவர்கள்'தான் என்பது ஆறுதலான விஷயம்.உடல் சோர்வையும்,மனச்சோர்வையும் ஒருசேர போக்கிய வார்த்தைகளுக்காக,அதிலும் முக்கியமாக அழகு வார்த்தைகளடங்கிய அந்தச் சிட்டுக்குருவியின் படத்திற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்....நன்றிகளும்!!!

    ReplyDelete
  2. How precious are we... lovely...

    ReplyDelete