Sunday, October 2, 2016

நல்ல சமாரியன்

நாளைய நற்செய்தியில் (காண். 10:25-37) 'நல்ல சமாரியன்' எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம்.

இந்த இறைவாக்கு பகுதியை கடந்த முறை வாசித்தபோது இரண்டு விஷயங்கள் என்னைத் தொட்டன:

அ. 'கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத்திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?' என்று இயேசு திருச்சட்ட அறிஞரிடம் கேட்கின்றார். திருச்சட்ட அறிஞர், 'அவருக்கு இரக்கம் காட்டியவரே' என்று பதில் தருகின்றார்.

அதாவது, 'சமாரியன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதை வேண்டுமென்றே தவிர்க்கின்றார் இந்த அறிஞர். 'சமாரியன்' என்ற பெயரை பயன்படுத்துவது கூட தீட்டு என்று யூதர்கள் கருதியதை தோலுரிக்கின்றார் லூக்கா.

எனக்கு ஒரு டவுட்.

'சமாரியன்' என்ற பெயரையே பயன்படுத்த தயங்கிய இந்த அறிஞர் இந்த சமாரியன் செய்ததுபோல செய்திருப்பாரா?

ஆ. இயேசு 'நீரும் போய் அப்படியே செய்யும்' என்று கூறினார்.

ஐந்து வசனங்களுக்கு முன்னால், 'அப்படியே செய்யும். அப்போது நீர் வாழ்வீர்' என்று சொல்லும் இயேசு, இப்போது, 'நீர் வாழ்வீர்' என்ற பகுதியை விட்டுவிடுகின்றார்.

அதாவது, அடுத்தவருக்கு இரக்கம் காட்டுதல் அல்லது அன்பு காட்டுதல் என்பது அந்த இரக்கம் அல்லது அன்பு நமக்கு வாழ்வு தரும் என்பதற்காக அதைச் செய்யக் கூடாது.

இரக்கத்தை இரக்கத்திற்காக மட்டுமே காட்ட வேண்டும். அதை விடுத்து, நாம் வாழ்வு பெற இரக்கம் அல்லது அன்பு காட்டினால் நாம் அடுத்தவரை பயன்படுத்துபவராக மாறிவிடுவோம்.

மனிதர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர்!

1 comment:

  1. நாம் அடிக்கடி கேட்டு,வாசித்து பழக்கப்பட்ட ஒரு பகுதியானாலும் அதில் இன்று ஒரு புதிய விஷயத்தை எடுத்து வைக்கிறார் தந்தை.கள்வர் கையில் அகப்பட்டவருக்கு அடுத்திருப்பவர் ' சமாரியன்' தான் என சொல்லத்தயங்கிய திருச்சட்ட அறிஞர் அந்த சமாரியன் செய்த செயலை ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்ட வில்லை. இது அந்த அறிஞரின் பெருந்தன்மையைக் காட்டுவதாக நான் உணர்கிறேன்.அப்படி இருந்தும் இயேசு அவரிடம் " அப்படியே செய்யும்; அப்போது நீர் வாழ்வீர்" என்று முன்னுரைத்த பகுதியின் பின் பகுதியை நீக்கிவிட்டு " நீரும் போய் அப்படியே செய்யும்" என்றுரைப்பதாகக் கூறும் தந்தை அதற்காகத் தந்திருக்கும் விளக்கம் பொருள் பொதிந்தது.ஆம் எல்லாமே வியாபார மயமாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் பொருள்கள் நேசிக்கப்படுவதும்,மனிதர்கள் உபயோகப்படுத்தப்படுவதும் நாம் அறிந்த ஒன்றுதான். எந்த ஒரு நற்செயலையும் அச்செயலின் நலன்கருதி,தன்மை கருதி செய்வதை விட்டு அந்தச்செயலினால் நமக்கு வரும் ஆதாயத்தை ஆராயத்தொடங்கினால் அந்த நற்செயலும் கூட வியாபாரமாகிவிடும். ஒருவர் புரியும் நற்செயலை இப்படி மாறுபட்ட கோணத்தில் விமரிசிக்கும் தந்தையின் மன ஓட்டத்தை அவருடைய எழுத்துக்களில் அடிக்கடி பார்த்து இரசித்திருக்கிறேன்.ஆம்! " மனிதர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்; அவர்கள் ஒருபோதும் பயன்பாட்டுப் பொருள்கள் அல்லர்". உணர வைத்த தந்தைக்கு என் உள்ளம் நிறைந்த பாராட்டுக்கள்!!!

    ReplyDelete