Monday, June 9, 2014

தூயதோர் உள்ளம் வேண்டுமே!

இந்த மூன்று வார்த்தைகள் தாம் தாவீது அரசர் செபிக்கும் திருப்பாடலின் (திபா 51) மையம். பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்த பின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது இப்பாடல். இன்றும் கத்தோலிக்கத் திருஅவையில் ஒப்புரவு என்னும் அருட்சாதனம் நிறைவேற்றப்படும்போது இது பாடலாகவோ, அல்லது தனிப்பட்ட நபரின் செபமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பாடலின் பின்புலத்தை (2 சாமுவேல் 12:1-8) திரும்பவும் ஒருமுறை எண்ணிப் பார்த்து தாவீது செய்தது தவறா? தவறு என்றால் அது என்ன?

எருசலேம் நகரம். ஒரு மதிய வேளை. படைவீரர்களும் அமைச்சர்களும் மக்களும் போருக்குச் சென்றுவிட்டனர். ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையும் போர்க்களத்தில் இருக்கின்றது. தூக்கம் வரவில்லை. மாடியில் உலாவலாம் என்று மாடிக்குச் செல்கிறார் தாவீது. கொஞ்ச தூரத்திற்கு அப்பால் ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பது அவர் கண்ணில் படுகிறது. அந்த நேரத்தில அவங்க குளிச்சது தப்பா? அல்லது அந்த நேரத்தில் தாவீது வாக்கிங் போனது தப்பா?

'அது யார்?' எனக் கேட்கிறார். 'இத்தியனான உரியாவின் மனைவி பெத்சேபா!' என்கின்றனர். அவர் ஒரு பெண். அந்நிய இனத்தைச் சார்ந்த ஒரு பெண். தன் ஆட்சிக்கு உட்பட்ட பெண். அழைக்கின்றார். அவரும் வருகின்றார். 'அப்போதுதான் மாதவிலக்கிலிருந்து அவள் தூய்மையாக்கியிருந்தாள்!' எனச் சொல்கிறது விவிலியம். 'துணிந்து' அவரோடு உறவு கொள்கின்றார். 'நேச்சுரல் ஃபேமிலி பிளானிங்' முறைப்படி மாதவிலக்கு முடிந்த உடன் உறவு கொண்டால் கருத்தரிப்பு நடப்பதில்லை என்பது இயற்கை விதி. ஆனால் அந்த இயற்கை விதிக்கும் அப்பாற்பட்டு அவர் கருத்தரிக்கிறார். 'நான் கர்ப்பமாக இருக்கிறேன்!' - இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பெத்சேபா பேசும் முதல் வார்த்தைகள் இவைதாம். 'ஐபில், அபார்ட்டிஃபீசன்ட்' என்று நாகரீகம் வளராத காலம். ஆகையால் தாவீதின் மூளை வேகமாக முடிவெடுக்கிறது. உரியா வந்து அவளோடு இருந்தால் அந்தக் கர்ப்பத்திற்குக் காரணம் அவன் என்று சொல்லி விடலாமே! ஆனால் அன்று டிஎன்ஏ டெஸ்டிங் இருந்தால் இந்தச் சூழ்ச்சியும் செல்லுபடியாகாது. உரியாவும் அவசர அவசரமாக அழைத்து வரப்படுகிறார். 'உன் வீட்டிற்குப் போ!' என்கிறார் தாவீது. அவன் போவது போல போய் அரண்மனையிலேயே தூங்கி விடுகிறான். அடுத்த நாளும் அப்படியே நடக்கிறது. என்ன இவன் இப்படிப் பண்றானே! என எண்ணியவர் அவன் கையிலேயே அவனைப் போரின் உக்கிரம் அதிகம் உள்ள இடத்தில் நிறுத்திக் கொன்று விடுமாறு படைத்தலைவன் யோவாபுக்கு செய்தி அனுப்புகிறான். யோவாபும் அரச கட்டளையை நிறைவேற்றி விடுகிறான். தான் போர்க்களத்தில் செய்த மற்றொரு தவறை மறைப்பதற்காக தாவீதின் இந்த வலுவின்மையையும், இயலாமையையும் பயன்படுத்திக்கொள்கிறான். பின் பெத்சேபா அரண்மனையில் குடியிருக்கிறார். அரசவையில் ஒரு இடம் பெறுகின்றார்.

நாத்தான் வழியாக இறைவாக்குரைக்கும் யாவே இறைவன் அழகான ஒரு குட்டிக்கதை வழியாக தாவீதுக்கு அவர் தவற்றை உணர்த்துகின்றார். 'நீரே அம்மனிதன்!' என்ற வார்த்தைகள் தாவீதின் மனமாற்றத்தைத் தூண்டுகிறது. அந்த உறவின் வழியாக பிறந்த குழந்தை இறந்து விடுகிறது.

விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு நிகழ்வும் சும்மா டைம்பாசுக்கு எழுதப்படவில்லை. ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒரு காரணம். இந்த நிகழ்விற்குப் பின் இருக்கும் காரணம் என்ன தெரியுமா? தாவீது இஸ்ராயேல் மக்களின் மிகப்பெரும் அரசர். அவர் எருசலேம் நகரைக் கட்டியது போல எருசலேம் ஆலயத்தையும் கட்டுவார் என எல்லாரும் நினைத்தார்கள். 'கடவுளே அதைக் கட்ட அனுமதிக்கவில்லை!' என்று சொல்ல வேண்டும். எப்படிச் சொல்வது? ஏதாவது ஒரு தவறுக்கு தண்டனையாக இது நடக்க வேண்டும் என்று எண்ணுகின்ற ஆசிரியர் இந்நிகழ்வை எழுதுகின்றார்.

தாவீது செய்த தவறு என்ன? தன் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்தும் அரசனுக்கு உரியது என்பது அக்காலத்தில் எழுதாத சட்டம். ஆகையால் பெத்சேபாவிடம் உறவு கொண்டது தவறு அல்ல. அந்தத் தவறை மறைக்க உரியாவைக் கொன்றதும் தவறு அல்ல. ஏனெனில் உரியா அரசனின் பேச்சைக் கேட்கவில்லை! அதற்குத் தண்டனைதான் அவனது மரணம்! 'நான் உன் மனைவியோடு உறவு கொண்டு விட்டேன். அது உனக்கு எதிரான குற்றம்!' என அவனிடம் சொல்லி தாவீது கொன்றிருந்தால் அது குற்றம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

பெத்சேபா வற்புறுத்தப்பட்டதாகவும் விவிலியம் சொல்லவில்லை. ஆகையால் இது வன்முறையும் அல்ல. இந்தப் பெத்சேபாவின் வழிதான் உலகம் போற்றும் சாலமோன் அரசர் பிறக்கின்றார். இந்தப் பெத்சேபாவின் பெயர் இயேசுவின் தலைமுறைப் பட்டியலிலும் இருக்கின்றது.

எது தவறு? என்பதற்கு விடை இங்கே இல்லை. வாசிக்கின்ற ஒவ்வொருவரும் தான் அதைத் தனிப்பட்ட முறையில் கண்டுபிடிக்க வேண்டும். எனக்குச் சரி என்று படுவது உங்களுக்குத் தவறாக இருக்கலாம். 'எல்லாருக்கும் பொதுவான சரி! தவறு!' என்பது இல்லை.

உதாரணத்திற்கு, அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைவது சரியா? தவறா? ஐரோப்பியனைக் கேட்டால் 'சரி' என்பான். ஏனெனில் அவனுக்கு விசா தேவையில்லை. மற்றவர்கள் நுழைந்தால் அது 'தவறு'. அது எப்படி பாஸ்! எல்லாரும் மனிதர்கள்தானே! ஒரே மனித இனத்திற்கு ஏன் இரண்டு ஒழுங்குகள்?

இந்தப் பாடலை நான் வாசிக்கும் போதெல்லாம் எனக்கு தாவீதின் மேல் ஒரு பரிதாப உணர்வுதான் வரும். அதைவிட அந்தப் பெண்ணின் மேல். அதைவிட அந்த உரியாவின் மேல்.

ஒன்று மட்டும் புரிகிறது! பகலிலோ இரவிலோ தூக்கம் வரவில்லையென்றால் வாக்கிங் போகக் கூடாது!

'கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்!' (திபா 51:10)


1 comment:

  1. இன்றையத் திருப்பாடலின் பின்புலத்தை ஒரு நிகழ்வாக்த் தந்துள்ளீர்கள். இதில் யார் செய்தது தவறு? இதுதான் நம்மண்டையைக் குடையும் கேள்வி.ஒன்று மட்டும் தெளிவாகப் பரிகிறது." எந்த ஒரு நிகழ்வையும் நாம் பார்க்கும் பார்வை வேறு; இறைவன் பார்க்கும் பார்வை வேறு."எருசலேமைக் கட்டிய மாமன்னர் தாவீதை எருசலேம் ஆலயத்தைக்கட்ட அனுமதியாத இறைவன்,உடல்வலிமையும் மனவலிமையும் ஒருசேர இல்லாத பெத்சேபாவை இயேசுவின் தலைமுறைப் பட்டியலில் இடம் பெறச் செய்கிறார்.நாம் செய்யும் ஒரு தவறை ஆயிரம் காரணங்கள் கொண்டு நியாயப்படுத்தலாம்.ஆனால் செய்தது தவறு என்றுணர்ந்து வெளிவரத் தேவை " ஒரே ஒரு தூய உள்ளம்".இறைவா எனக்கதைத் தருவீரா?

    ReplyDelete