Saturday, June 7, 2014

எழுதுகோலென என் நாவும் ஆகிடுமோ?

திருப்பாடல் 45 அரசரின் திருமணப்பாடல். சாலமோன் அரசரின் திருமணத்தின் போது பாடப்பட்டிருக்கலாம் என்பது பரவலான கருத்து. பாடகர் தலைவர்க்கு இது அர்ப்பணம். இதன் மெட்டு 'லீலி மலர்கள்'. 'லீலி மலர்கள்' என்றாலே கத்தோலிக்கக் கிறித்தவர்களுக்கு நினைவிற்கு வருவது அன்னை மரியாளின் துணைவர் தூய யோசேப்பு. இப்பாடலை யோசேப்பு, மரியாள் திருமணம் அன்று பாடியிருக்கலாம் என்பதும் கருத்து.

சாலமோன் அரசரின் திருமணத்தைத் தொடர்ந்து நம்ம ஊர் 'மாங்கல்யம் தந்துனானே' மாதிரி எல்லாத் திருமணங்களிலும் இது பாடப்பட்டிருக்கலாம்.

இதை ஒரு காதல் பாடல் என்றே எபிரேய மூலப்பிரதி அழைக்கின்றது.

தொடக்கத் திருச்சபையில் இறையியல் முன்னோடிகளாக இருந்த தூய அகுஸ்தினார் மற்றும் ஒரிஜன் போன்றவர்கள் திருவெளிப்பாட்டு நூலை இத்திருப்பாடலுடன் இணைத்து இங்கே குறிப்பிடப்படும் மணமகன் இயேசு என்றும், குறிப்பிடப்படும் மணமகள் திருச்சபை என்றும் எழுதுகின்றனர். இன்னும் சிலர் இங்கே குறிப்பிடப்படும் மணமகளை அன்னை மரியாளுக்கு ஒப்பிடுகின்றனர்.

இந்தப் பாடல் நமக்கு என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

மணமகனைப் பாட 8 வரிகள், மணமகளைப் பாட 8 வரிகள், இறுதியில் பாடியவரின் ஆட்டோகிராப் 1 வரி என மொத்தம் 17 வரிகள் (வசனங்கள்) உள்ளன.

மணமகன் எப்படிப்பட்டவர்?
அ. பேரழகுப் பெருமகன்.
ஆ. அருள் கொண்டவர்.
இ. வீரமிகு மன்னர்.
ஈ. உண்மையைக் காத்திடுவார்.
உ. கூரிய கண்கள் உடையவர்.
ஊ. மகிழ்ச்சியின் நெய்யால் திருப்பொழிவு செய்யப்படுபவர்.
எ. நறுமணம் கமழ்பவர்.

மணமகள் எப்படிப்பட்டவர்?
அ. ஓபிரின் பொன் அணிந்தவள்.
ஆ. எழில் மிக்கவர்.
இ. அருள் தருபவர்.
ஈ. பலவண்ணப் பட்டுடுத்தியவர்.
உ. இளவரசர்களைப் பெற்றெடுப்பவர்.
ஊ. அரசரின் சக்தியாக இருப்பவர்.
எ. மாண்புமிக்கவள்.

ஒரு மணமகனும், மணமகளும் பெற்று வாழக் கூடிய அனைத்து பாக்கியங்களையும் இந்தத் திருப்பாடலின் ஆசிரியர் மிக அழகாக எழுதுகின்றார்.

இன்று நாம் யாருடைய திருமணத்திலாவது பங்கேற்று அவர்களை வாழ்த்த வேண்டுமென்றால் இது அதற்குரிய அத்தனை தகுதிகளையும் பெற்றிருக்கிறது.

'யோவானின் மகன் சீமோனே! நீ இவர்களை விட என்னை அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் கேட்ட வார்த்தைகளை வைத்து மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இப்படிக் குறிப்பிட்டார்:

ஒவ்வொரு மணமக்களை நாம் பார்க்கும் போதும் அவர்களிடம், 'உங்கள் இருவரிடமும் முதல் நாள் இருந்த அன்பு அதே போல இருக்கின்;றதா? அல்லது குறைந்துவிட்டதா?' எனக் கேட்கின்றோம்.

ஆனால் அருட்பணி நிலையில் இருக்கும் நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டியதும் இதுதான்: 'நீ இவர்களை விட என்னை அன்பு செய்கிறாயா?' என்று நம் உள்ளத்தின் மௌனத்தில் இயேசு நம்மையும் கேட்கின்றார்.

திருமணத் திருப்பாடல் காட்டும் மகிழ்ச்சி ஒவ்வொரு பொழுதும் திருமண மற்றும் அருட்பணி அர்ப்பணத்தை வாழ்ந்து காட்டுவதில் இருந்தால்...

'திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென நம் நாவும் ஆகிடுமே...!'


1 comment:

  1. இன்று திருமணங்களில் மணமக்களைப் பார்த்து "பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுங்கள்" என்கிறோமே அதன் முன்னோடியே இந்த 45ம் திருப்பாடல் என்று தெரிகிறது.அருட்பணி நிலையில் உள்ளவர்கள் மட்டுமல்ல இல்லறத்திலிருப்பவர்களையும் கேட்கக்கூடிய கேள்விதான்.." இவர்களை விட நீ என்னை அன்பு செய்கிறாயா?" நம் பதில் 'ஆம்' எனில் மகிழ்ச்சி கொள்வோம்.இலையெனில் யோசிப்போம்...பி.கு: இதே திருப்பாடல் திருமணம் முடித்த பெண்களைப்பார்த்து "உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு" என்று கூறுகிறது.இது கொடுமையல்லவா? இதற்குத் தங்களின் விளக்கம் கிடைக்குமா தந்தையே?

    ReplyDelete