Friday, June 20, 2014

கதிரவனும் நிலாவும் உள்ளவரை...

திபா 72 சாலமோனுக்கு உரியது. திபா 72ன் இறுதியில் ஒரு அடிக்குறிப்பு தரப்பட்டுள்ளது. ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுக்கள் நிறைவுற்றன. இப்பாடல் திருப்பாடல்கள் நூலின் இரண்டாம் பகுதியை நிறைவு செய்கிறது.

சாலமோன் அரசர் திருப்பொழிவு செய்யப்பட்டபோது பாடப்பட்ட பாடலாக இது இருக்கலாம் என்பது பலரின் கருத்து. இந்தப் பாடலின் 18 மற்றும் 19ஆம் வசனங்கள் பிற்சேர்க்கை.

இந்தப் பாடலில் உருவகங்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

உருவகங்களும் அவை தரும் அர்த்தமும் என்ன?

முதலில் இப்பாடலில் வரும் உருவகங்கள் எவை?

அ. மலைகள் மக்களுக்குச் சமாதானம் கொடுக்கட்டும்.
ஆ. குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும்.
இ. கதிரவனும், நிலாவும் உள்ளவரையில்.
ஈ. புல்வெளியில் பெய்யும் தூறலைப் போல.
உ. நிலத்தில் பொழியும் மழையைப் போல.
ஊ. நிலா உள்ள வரையில்.
எ. மலைகளின் உச்சியில் பயிர்கள்.
ஏ. வயல்வெளிப்புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக.
ஐ. கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக.

உருவகங்கள் நம் வாழ்வில் மிகப்பெரிய நிலையில் பங்கெடுக்கின்றன. நாம் பயன்படுத்தும் அன்றாட மொழியில் எண்ணற்ற உருவகங்கள் இருக்கின்றன.

உருவகத்திற்கு இரண்டு 'அர்த்த உலகங்கள்' உண்டு.

'காலைமுதல் மாலை வரை அவன் கட்டிலேயே இருந்தான்'.

இந்தச் சொற்றொடரை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்?

'காலைமுதல் மாலை வரை அவன் தூங்கினான்'.

'கட்டில்' என்பது ஒரு 'அர்த்த உலகம்'. 'தூக்கம்' என்பது மற்றொரு 'அர்த்த உலகம்'. நம் மூளை இரண்டையும் உடனடியாக ஒருங்கிணைத்து அர்த்தத்தைப் புரிந்து கொள்கிறது.

மேலே காணும் திபா உருவகங்கள் சொல்வது என்ன? நிறைவு. நீதி. அமைதி. வளமை.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு உருவகம். நாம் காண்பது ஒருவர். அவருக்குப் பின் ஒரு உலகம். இந்த இரண்டையும் இணைத்துப் பார்த்தால் தான் அந்த நபரை நாம் புரிந்து கொள்ள முடியும்.

'கடவுள்' என்பவரே ஒரு உருவகம் தானே!

'நீங்களும்' ஒரு உருவகம்!

'நானும்' ஒரு உருவகம்!

'கதிரவனும், நிலாவும் உள்ளவரையில்!'


1 comment:

  1. சாலமோன் அரசரின் திருப்பொழிவு குறித்து பாடப்பட்ட பாடல்.இங்கு குறிப்பட்டள்ள வரிகளைப் படிக்கும்போது நமக்கு மேல் உள்ள ஒருவரை,நாம் நமக்கு எல்லாம் என்று நினைக்கும் ஒருவரை வாழ்த்தும் முறை புரிகிறது.அடிவயிற்றிலிருந்து வரும் இந்த வாழ்த்துக்கள் கால வரைமுறைக்கு அப்பாற்பட்டது.நாட்டின் செழிப்புக்காக மட்டுமல்ல...ஏழைகள்,திக்கற்றோரின் நலனுக்காகவும் மன்றாட்டு வைக்கப்படுவது நம் மனத்தை இளகச்செய்கிறது.மற்றபடி இந்த 'உருவகங்கள்' அவை சொல்ல வரும் விஷயங்கள்..எதிரில் இருப்பவரை இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ள உதவட்டும்....

    ReplyDelete