Thursday, June 12, 2014

தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?

திருப்பாடல் 52 நாக்கைப் பற்றியது. 'கொஞ்சம் நாக்க நீட்டு!' என்ற வார்த்தையை நாம் எல்லாருமே கேட்டிருப்போம்: மருத்துவம் பார்க்க, உணவு ருசி பார்க்க, மாத்திரை விழுங்க, பிரெஞ்சு முத்தமிட என பல சூழல்களில் பயன்படும் இந்த நாக்கு மனித மொழியின் மிக அடிப்படை.

இறைவாக்கினர்கள், ஏன் மோசே அழைக்கப்படும் போது கூட, தங்களின் தடையாக அவர்கள் முன்வைப்பதும்: 'எனக்கு நாக்கு திக்கும்!' என்பது தான்.

திபா 52ன் பிண்ணனி இதுதான்: தாவீதின் பயணம் பற்றி தோவேகு சவுலிடம் போட்டுக் கொடுக்கின்றார் (1 சாமு 22:2-9). போட்டுக் கொடுப்பதுக்கும் இரண்டு அர்த்தங்கள் உள்ளன: ஒன்று, ஆட்டோக்காரர் நம்மிடம் கேட்பது, இரண்டு, நாம் யாரிடமாவது அடுத்தவரைப் பற்றி அல்லது அடுத்தவரைப் பற்றி நம்மிடம் யாராவது நமக்குத் தேவையற்ற அல்லது பயனற்ற தகவல்களைத் தருவது.

இரண்டு அர்த்தங்களும் சொல்வது என்ன? 'உள்ளதற்கு மேலாக!'

அதாவது தேவையானதற்கு மேல் பேசும் அனைத்துமே நாம் போட்டுக்கொடுப்பதுதான். நம் உரையாடல்களில் பல நேரங்களில் நாம் அடுத்தவரைப் பற்றிப் பேசவே விழைகிறோம். இது ஒரு defence mechanism. நம்மைப் பற்றிப் பேசினால் அங்கே கசப்புணர்வும், பகையும், சண்டையும் வர வாய்ப்பிருக்கிறது. ஆகையால் ரொம்ப பாதுகாப்பானது அடுத்தவரைப் பற்றிப் பேசுவதுதான்.

இத்தாலியின் செய்திச் சேனல்களைப் பார்க்கும் போது நான் இதை அதிகம் கவனித்திருக்கிறேன் 30 நிமிட செய்தி நேரத்தில் 3 நிமிடம் மட்டும்தான் இத்தாலியைப் பற்றி இருக்கும். மற்ற 27 நிமிடங்களும் இந்தியா, ஈராக், உக்ரைன், சிரியா, ஆப்பிரிக்கா என ஊர்க்கதைதான் பேசுவார்கள்.

எதற்காக நாம் அடுத்தவரைப் பற்றிப் பேசுகிறோம்?

1. டிஃபென்ஸ் மெக்கானிசம்.
2. அடுத்தவரைப் பேசும் போது நம்மையறியாமலே நம் மனம் அவரோடு நம்மை ஒப்பிட்டு நம்மை ஒருவித போலியான மேட்டிமை உணர்வு கொள்ளத் தூண்டுகிறது. இது ஒரு நொடிப்பொழுது போதை.
3. அடுத்தவரை நாம் பேசுபொருளாக எடுத்து அதன் வழியாக நாம் உரையாடுபவரோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள விழைகிறோம். உதாரணத்திற்கு, எனக்கு பக்கத்து வீட்டுக்காரன் கருப்புச் சட்டை போடுவது பிடிக்காது என வைத்துக்கொள்வோம். நீங்களும் தினமும் என்னிடம் வந்து கருப்புச் சட்டை போடுபவர்களைப் பற்றித் தவறாகப் பேசினால் உங்கள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு வரத் தொடங்கும்.

தாவீதைப் பற்றி சவுலிடம் தொவேகு எதற்காகப் புறணி பேசினார் என்பது பற்றித் தெளிவான கருத்து இல்லை.

'நரம்பில்லாத நாக்கு!' என்ற தமிழ்மொழியின் சொல்லாடலை தாவீதும் இங்கே பயன்படுத்துகிறார் (52:4).

நாக்கைப் பயன்படுத்தும் முறைபற்றி யாக்கோபு விரிவாகத் தன் திருச்சபைக்கு எழுதுகின்றார் (யாக்கோபு 3:1-12).

நாவடக்கம் பற்றி சீராக்கின் ஞானநூலும், நீதிமொழிகள் நூலும் அதிக ஆலோசனைகளை முன்வைக்கின்றன.
திபா 52 இரண்டு பாடங்களைத் தருகிறது:

1. யாரையும் பற்றி யாரிடமும் போட்டுக் கொடுக்காதீர்கள். நீங்கள் செய்வது உங்களுக்கு திரும்பச் செய்யப்படும்.

2. யாராவது உங்களைப் பற்றி மற்றவரிடம் புறங்கூறினால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். 'நானோ! பச்சை ஒலிவக்கன்று போல இருக்கின்றேன்!' என மட்டும் நினைத்துக்கொள்ளுங்கள் (52:8)

'தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்?'

1 comment:

  1. விவிலியம் மட்டுமா 'நாவடக்கம்' பற்றிக் கூறுகிறது..தெய்வப்புலவர் திருவள்ளுவரும் கூட ,'யாகாவராயினும் நாகாக்க' என்று கூறுகிறார். தாங்களும் திருப்பாடல்52ன் சாரத்தைச் சுருக்கி 2 தொகுப்புக்களாக்க் கொடுத்துள்ளீர்கள்.அதில் " நானோ பச்சை ஒலிவக்கன்று போல் இருக்கின்றேன்".... இதன் முழுப்பொருள் என்னவென்று சொல்வீர்களா தந்தையே?!

    ReplyDelete