Sunday, June 8, 2014

எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனா?

திருப்பாடல் 50 ஒரு இறைவாக்குப் பகுதி போல இருக்கின்றது. எருசலேம் ஆலயம் கட்டப்படுவதற்கு முன் ஒவ்வொரு குலத்திற்கும் தனித்தனியாக குலசாமிகள் இருந்தனர். குலசாமிகள் என்று சொல்வதை விட பொதுவான சாமி, ஆனால் குலகோயில்கள் இருந்தது என வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு கோயிலையும் நிர்வகிக்க குருக்கள் இருந்தனர். எருசலேம் ஆலயம் உருவானதற்குப் பின் தான் இஸ்ராயேல் மக்கள் வரலாற்றில் முழுமையான நிலையில் குருத்துவம் உருவானது.

இந்தக் கோயிலில் இருந்தவர்கள் எல்லாம் நம் கிராமத்துச் சாமியாடிகள் போல இருந்தனர். இவர்கள் குறி சொல்வர். செய்வினை வைப்பர். செய்வினை எடுப்பர். ஜோசியம் சொல்வர். பலி செலுத்துவர்.

இப்படி இருந்த ஒரு குலக்கோயிலில் நிலவிய ஊழலை எதிர்த்து ஒருவர் பாடும் பாடலே திருப்பாடல் 50.

இறைவனே அந்தக் கோயிலின் பூசாரிகளைப் பார்த்துப் பேசுவது போல இப்பாடலை எழுதியிருக்கின்றார் பாடகர்.

உங்கள் வீட்டின் காளைகளையோ,
உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ,
உங்கள் இல்லத்தின் பறவைகளையோ நான் கேட்கவில்லை...
என்று தொடங்கும் கடவுள்
சரமாரியாக அவர்களைச் சாடுகின்றார்.
ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை.
திருடர்களை உங்களோடு சேர்த்துக்கொள்கிறீர்கள்.
கற்புநெறி தவறுகிறவர்களோடு தொடர்பு கொள்கிறீர்கள்.
பொய் பேசுகிறீர்கள்.
புறணி பேசுகிறீர்கள்.

இப்படிச் சொல்லும் இறைவன்; இறுதியாகச் சொல்வது இதுதான்:

'நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்!'

ரொம்பவும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள். கடவுளும் நம்மைப் போன்றவர் என நினைத்து அவரை 'சாதாரணமாக' நினைப்பதுதான் மிகக் கொடுமையான பாவம்.

'அவர் என்ன கண்டுக்கவா போறார்?'
'நம்ம செய்யறத யார் பார்க்கப் போறா?'

மேற்காணும் குற்றச்சாட்டுகள் சாமுவேல் இறைவாக்கினர் சிறுவனாக இருந்தபோது ஏலி குடும்பத்திற்கு எதிராக இறைவனால் முன்வைக்கப்படுகின்றது (1 சாமுவேல் 1-3). ஒருவேளை அந்த உரைநடைப் பகுதியின் செய்யுள் பகுதிதான் இந்தப் பாடலோ?

இறைவனின் பணி செய்ய முன்வருபவர்களுக்கும், இறைவனை ஆர்வமுடன் தேடும் அனைவருக்கும் முன் கடவுள் நின்று கொண்டு கேட்பதாக இருக்கின்றது.

ஆன்மீகம் என்பது காதல் போல. இரண்டு பேருக்குள் நடப்பது இரண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும். இது சரி. இது தவறு என்று மூன்றாம் நபர் சொல்ல முடியாது. இதயமும், இதயமும் இணைந்து விட்டால் அது ஒரு புது உறவு. சில நேரங்களில் அந்த உறவிற்கு பெயர் இட முடியவில்லையென்றாலும் அந்த உறவு நிஜமானதுதான். அந்த உறவில் ஒருவர் மற்றவருக்குத் தேவையானது எது என்பதை உணர்ந்து நடத்தலே சால்பு.

ஆன்மீகம் இறைவனுக்கும் நமக்கும் உள்ள காதல்!

'நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்களா?'


1 comment:

  1. இத்திருப்பாடலில் " துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள், உங்களை நான் காத்திடுவேன்" என்று ஒரு தாய்க்குரிய வாஞ்சையோடு கூறும் இறைவன் நம் தீய செயல்கள் அவரை எப்படி வெறுப்பூட்டுகின்றன என்பதையும் ஒரு தந்தைக்குரிய கண்டிப்போடு வெளிப்படுத்துகிறார்.நாம் எந்நிலையிருப்பினும்,எப்பணிசெய்திடினும் அங்கங்கே நமக்குக் கிடைக்கும் உறவுகளின் புனிதம் காப்போம்.நம் உறவுகளை இறைவன்பால் இட்டுச்செல்லும் கருவிகளாயிருப்பது மட்டுமல்ல..அவர்கள் இறைவன் அன்பிலிருந்து வழுவிச்செல்ல நாம் காரணமாகாமல் பார்த்துக் கொள்வோம்.இறைவன் நம்மையும் நம் உறவுகளையும் ஆசீர்வதிக்கட்டும்...
    மூலத்தின் சாரம் பிசகாமல் தங்களின் அனுபவங்களையும் சேர்த்துக்கொடுப்பது கூடுதல் சுவை சேர்க்கிறது.பாராட்டுக்கள்...

    ReplyDelete