Wednesday, June 4, 2014

வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?

திருப்பாடல் 34ன் தலைப்பு எபிரேய மொழியில் மிக நீளமாக உள்ளது: 'தாவீதுக்கு உரியது. அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத் துரத்திவிட, அவர் வெளியேறினார். அப்போது அவர் பாடியது'.

இந்தத் தலைப்பை நாம் உண்மையானது என எடுத்துக்கொண்டால் இது சுட்டிக்காட்டும் விவிலியப் பகுதி 1 சாமுவேல் 21:10-22:1. தாவீதை சவுல் அரசர் பொறாமை கொண்டு கொல்லத் தேடுகின்றார். அந்த நிலையில் காத்து நாட்டு அரசன் அகிஷிடம் தஞ்சம் புகுகின்றார் தாவீது. அகிஷிடம் தஞ்சம் புகுந்த நிலையில் தான் வீரன் என நினைத்தால் இந்த நாட்டிலிலும் தனக்கு அடைக்கலம் கிடைக்காது என நினைத்து மனநிலை சரியில்லாதவர் போல நடிக்கின்றார். அதைப் பார்த்த அகிஷ் அவரை உடனடியாக தன் நாட்டிலிருந்து வெளியே துரத்துகின்றார். துன்பமும், வெறுமையும் சூழ நாட்டை விட்டு வெளியேறும் தாவீது பாடும் பாடலே இது.

இவ்வளவு துன்பம் மனத்தில் இருந்தாலும் பாடலின் முதல் வரியே துள்ளலாக இருக்கின்றது:
'ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன். அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்'. (34:1)
நாம் அடிக்கடிக் கேட்கும் இரண்டு இறைவசனங்களைக் கொண்டிருக்கிறது திபா 34:

அ. ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். (34:8)

ஆ. சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும் ஆண்டவரை நாடுவோருக்கு நன்மை ஏதும் குறையாது. (34:10)

இந்த இரண்டு இறைவசனங்களுமே இறைவனிடம் அடைக்கலம் புகுவதையே மையப்படுத்துகின்றன.
அ. ஆண்டவரின் திருமுகத்தை நாடுங்கள் எனவும், அவரைச் சுவைத்துப் பாருங்கள் எனவும் தாவீது அழைக்கின்றார். திருமுகத்தை எங்கே தேடுவது. இறைவன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையை theism என அழைப்பார்கள். எல்லாவற்றையும் இறைவனாகப் பார்க்கும் நம்பிக்கைக்குப் பெயர் pantheism. ஆனால் எல்லாவற்றையும் இறைவனில் பார்க்கும் நம்பிக்கைக்குப் பெயர் panentheism. தாவீது இப்பாடலில் குறிப்பிடும் நம்பிக்கையும் இந்தக் கடைசி வகை தான். எல்லாவற்றையும் இறைவனில், இறைத்திட்டத்தில் காண்பது. அப்படிக் காண்பவர்களுக்கு தாங்கள் அனுபவிக்கும் எல்லாமே இனிமையாகத் தோன்றும். இந்த நாட்களில் நான் இதையே தான் அனுபவிக்கப் பார்க்கிறேன். கடவுள் வேறு, குருத்துவம் வேறு, நண்பர்கள் வேறு, படிப்பு வேறு, பணி வேறு, பயணம் வேறு என்று train compartment போல வாழ்க்கையைப் பார்க்காமல் எல்லாம் இறைவனில் இயங்கும் இராட்டினம் போலப் பார்க்க விழைகிறேன்.

ஆ. சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும். நல்ல மொழிபெயர்ப்பு 'இளஞ்சிங்கங்கள் பட்டினி கிடந்தாலும்' என்றே இருந்திருக்க வேண்டும். தனக்குத் தேவையான உணவை எந்த நிலையிலும் போராடிப் பெற்றுக்கொள்கின்ற ஒரு ஆற்றல்மிக்க விலங்கு சிங்கம். தங்கள் ஆற்றலின் மேல் நம்பிக்கை உள்ளவர்கள் பட்டினியாக இருக்க நேரிட்டாலும், இறைவனின் ஆற்றல் மேல் நம்பிக்கை கொள்பவர்கள் எந்தவொரு குறையுமின்றி இருப்பார்கள் என்பதே இதன் அர்த்தம். அதற்காக, கடவுளை மட்டும் நம்பிக்கொண்டு வீட்டிலேயே ஓய்ந்திருந்தால் நம் தட்டில் உணவு வந்து விடுமா? இல்லை. நாம் செய்யும் வேலையையும், நாம் முன்னேற்ற நினைக்கும் சமுதாயத்தையும் இறைவனின் ஒரு பகுதியாகப் பார்த்தால் அதன் மேலும் நமக்கு ஆசை வரும். நாம் நன்றாகப் படிப்போம். நன்றாக வேலை செய்வோம். பட்டினி இன்று இருப்போம்.

இந்த இரண்டு வசனங்களுமே நாம் கொண்டிருக்கும் ஆன்மீகத்திற்குப் புதிய கண்ணோட்டம் கொடுக்கின்றன. இந்தப் புதிய கண்ணோட்டம் இருந்தால் வாழ்க்கையில் இன்பம் தானாய் வரும்.
தொடர்ந்து வாழ்வியல் மதிப்பீடுகளாக தாவீது ஆறு குணநலன்களையும் முன்வைக்கின்றார் (34:13-14):

அ. தீச்சொல் பேசாதே.
ஆ. வஞ்சகமொழி வேண்டாம்.
இ. தீமையைவிட்டு விலகு.
ஈ. நன்மையே செய்.
உ. நல்வாழ்வை நாடு.
ஊ. அதை அடைவதிலேயே கருத்தாயிரு.

முதல் பகுதியில் ஆன்மீகமும், இரண்டாம் பகுதியில் அறவியலும் என கோலோச்சுகிறது திருப்பாடல் 34.

'வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா?'

'நெடுநாள் வாழ நாட்டமா?'

To listen to the song on Psalm 34 please click the link:

Taste and See the Lord is Good

1 comment:

  1. இந்த 34ம் திருப்பாடல் சிறிது பெரிதாக இருப்பினும் ஒவ்வொரு வரியுமே துவண்டுபோன உள்ளத்தைத் தூக்கி விடுவதாக உள்ளது." இந்த ஏழை கூவி அழைத்தான்;ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்" எத்துணை ஆறுதல் தரும் வரிகள்.அவரை நம்பி இருப்போரின் உள்ளத்தை மட்டுமல்ல,உடற்பசியையும் ஆற்றுகிறார் என்பதை அந்த சிங்கக்குட்டிகளின்...... வரிகளில் அழகாகத் தெளிவு படுத்தியுள்ளதோடு "ஆண்டவரை நான் போற்றிடுவேன்" ...அழகான பாடலையும் கொடுத்ததற்காக நன்றிகள்.

    ReplyDelete