Sunday, June 15, 2014

நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல

நாம் எந்த நிலையில் இருக்கின்றோமோ அந்த நிலையிலேயே கடவுளை நினைக்கத் தோன்றுகிறது என்பதற்கு திபா 63 சிறந்த எடுத்துக்காட்டு. யூதாவின் பாலைநிலத்தில் சுற்றி வருகின்ற தாவீது (காண் 1 சாமுவேல் 23:14) கடவுளை நோக்கி 'நீரின்றி வறண்ட தரிசு நிலம் தண்ணீருக்காகக் காத்திருப்பது போல' தானும் இறைவன் மேல் தாகம் கொண்டிருப்பதாக எழுதுகின்றார்.

இந்தத் திருப்பாடலில் இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை சிந்திக்கும் தாவீது ஐந்து உருவகங்களைக் கையாளுகின்றார்:

அ. வறண்ட நிலம் - தாகம்
ஆ. அறுசுவை விருந்தின் நிறைவு
இ. இறக்கையின் நிழல்
ஈ. வலது கை.
உ. பற்றிக்கொண்டேன் - பற்றிக் கொண்டீர்.

நம் இந்திய மரபில் ஆன்மீகம் பற்றிப் பேசும் போது மெய்யிலார்கள் இரண்டு வகை ஆன்மீகத்தைச் சொல்கின்றனர்:

அ. குரங்கு ஆன்மீகம்.
ஆ. பூனை ஆன்மீகம்.

அ. குரங்கு ஆன்மீகம் என்றால் என்ன?

ஒரு குட்டிக் குரங்கு ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் தன் தாயை மட்டும் இறுகப் பற்றிக் கொண்டால் போதும். அடுத்தடுத்த கிளைக்குத் தாய் தாவும் போது அத்தோடு சேர்ந்து இதுவும் தாவிவிடும். எக்காரணம் கொண்டும் தாயை விட்டுவிடவே கூடாது. எந்த அளவிற்குப் பற்றிக் கொள்கின்றதோ அந்த அளவிற்குப் பாதுகாப்பு.

தாய்க்குரங்கு என்பது கடவுள். குட்டிக் குரங்கு என்பது நாம். நாம் மோட்சத்திற்குப் போக வேண்டும், மறுவாழ்வு அல்லது நிலைவாழ்வு பெற வேண்டும் என்றால் நாம் செய்வது ஒன்று மட்டும் தான் கடவுளை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். எப்படி? நம் நற்செயல்கள் வழியாக.

இவ்வகை ஆன்மீகம் மனிதரின் நற்செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவை. மோட்சமோ, நரகமோ நம் கையில் தான் உள்ளது. கடவுள் கையில் அல்ல.

ஆ. பூனை ஆன்மீகம் என்றால் என்ன?

மேலே சொன்னதற்கு நேர் எதிர்மாறானது இது. தாய்ப் பூனையே தன் குட்டிப் பூனையைக் கடித்து எங்கெல்லாம் கொண்;டு போக வேண்டுமோ அங்கே கொண்டு போகும். குட்டிப்பூனைக்கென்று எந்த வேலையும் கிடையாது. எங்கெல்லாம் தாய்ப்பூனை தூக்கிக் கொண்டு போகிறது அங்கெல்லாம் போக வேண்டும். முழுக்க முழுக்கத் தன் பாதுகாப்பிற்கு தாய்ப்பூனையை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும்.

தாய்ப்பூனை என்பது கடவுள். குட்டிப் பூனை என்பது நாம். மோட்சம், நரகம் எல்லாம் நம் கையில் இல்லை. அது கடவுள் கையில். யாரை எங்கே தூக்கிக் கொண்டு போக நினைக்கிறாரோ அங்கே அவர் தூக்கிக் கொண்டு போவார். அவரை நாம் ஒன்றும் கேட்க முடியாது.

இவ்வகை ஆன்மீகம் கடவுளின் அன்பை மட்டும் முன் நிறுத்துவது. நம் நற்செயல்களால் நன்மையும் இல்லை. தீமையும் இல்லை. எல்லாம் கடவுள் கையில் தான் உள்ளது.

முதல் வகை ஆன்மீகம் நம்மை மூச்சுத்திணற வைக்கும். எந்நேரமும் நாம் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். இரண்டாம் வகை ஆன்மீகம் நம்மைச் சோம்பேறியாக்கி விடும்.

கிறித்தவ ஆன்மீகத்தை 'கோழிக்குஞ்சு' ஆன்மீகம் என அழைக்கலாம்:

கோழிக்குஞ்சு ஆன்மீகம் என்றால் என்ன?

தாய்க்கோழி தன் குஞ்சுகளோடு சேர்ந்து இரை தேடும். கழுகோ, பருந்தோ, காகமோ வந்தால் அது குரல் கொடுக்கும். அந்நேரம் எல்லாக் குஞ்சுகளும் தாய்க்கோழியின் இறக்கைக்குள் ஓடி ஒளிந்து கொள்ளும். ஒளிந்து கொள்பவை எல்லாம் பாதுகாப்பாக இருக்கும். ஒளிந்து கொள்ளாதவை கழுகிடம் மாட்டிக் கொள்ளும்.

தாய்க்கோழி என்பது கடவுள். கோழிக்குஞ்சுகள் நாம். சுற்றி வரும் கழுகு 'பேய்' என வைத்துக்கொள்வோம். தாய்க்கோழியின் குரல் தான் இயேசு அல்லது பைபிள் அல்லது திருச்சபை அல்லது மறைக்கல்வி அல்லது மனச்சான்று. இந்தக் குரலின் படி யாரெல்லாம் தாயிடம் அடைக்கலம் பெறுகிறார்களோ அவர்கள் காப்பாற்றப் படுவார்கள். மற்றவர்கள் 'பேயிடம்' மாட்டிக்கொள்வார்கள் - மாட்டிக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது. இப்போதைக்கு அப்படி வைத்துக்கொள்வோம்.

ஏனெனில் நரகம் என்று ஒன்று இருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. அன்பே உருவான கடவுள் எப்படி நரகத்தை உருவாக்க முடியும்? அவரின் அன்பை விட நம் பாவம் பெரிதா? அவரின் அன்பு சிறிதென்றால் அவர் எப்படிக் கடவுளாக இருக்க முடியும்? கேட்கக் கூடாத கேள்வி - ஆனால் தேவையான கேள்வி!

தாவீதின் திபா 63ல் இந்த மூன்று ஆன்மீகத்தின் நிழல்களும் தெரிகின்றன:

'நான் உம்மை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்' (63:8அ) என்ற வார்த்தைகளில் 'குரங்கு ஆன்மீகமும்', 'உமது வலக்கை என்னை இறுகப் பிடித்துள்ளது' (63:8ஆ) என்ற வார்த்தைகளில் 'பூனை ஆன்மீகமும்', 'உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன்' (63:7) என்ற வார்த்தைகளில் 'கோழிக்குஞ்சு ஆன்மீகமும்' நிழலாடுகின்றது.

இன்றும் சிலர் தங்கள் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களை 'பூனைக்குட்டி' என்றும் 'குரங்குக்குட்டி' என்றும் 'கோழிக்குஞ்சு' என்றும் கொஞ்சிப் பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் ஆன்மீகமோ?


1 comment:

  1. தாங்கள் குறிப்பிட்டுள்ள மூன்று வகை ஆன்மீகங்களை அலசித் பார்க்கையில் நமக்கு மேலே உள்ள ஒருவரைச் சார்ந்து,இறுதியில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அவரிடம் நம்மைக் கையளிப்பதே ஆன்மீகம் என்று புரிகிறது.கூட்டிச் செல்பவர்கள் யாராயிருப்பினும் அவர்கள் நம்மைப் பாதுகாப்பாகக் கரைசேர்ப்பார்களெனில் அவர்களுடன் செல்வது நல்லதுதானே! ஆனால் என்னைப் பொறுத்த மட்டில் என் தாயின் இறக்கைகள் தரும் கதகதப்பில் காற்றுக்கும்,கடும் புயலுக்கும் அஞ்சாமல் பயணிப்பதே பாதுகாப்பு...சுகம்..."ஆன்மீகமும்" கூட.ஆமாம்....நரகம் இருப்பதில் நம்பிக்கை இல்லை என்கிறீர்கள்.மகிழ்ச்சியே..அப்படியனால் 'மோட்சம்?' ஒரே குழப்பமா இருக்கே Father?!...

    ReplyDelete