Friday, June 13, 2014

சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?

திருப்பாடல் 55 இன்று நட்பைப் பற்றிச் சிந்திக்க அழைக்கிறது.

இந்தப் பாடலின் பின்புலமாக இருப்பது 1 சாமுவேல் 23:19 மற்றும் 26:1. இந்த நிகழ்வு தான் என்ன?

சவுல் தாவீதின் வளர்ச்சி கண்டு அவர் மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்கத் தேடுகின்றார். சவுலிடமிருந்து தப்பியோடும் தாவீது சீபியர் என்ற இனத்தார் வாழும் பாலைநிலத்திற்குத் தப்பியோடி அங்கே இருந்த மக்கள் நடுவில் ஒரு 'தாதாவாக' இருக்கிறார். அங்கே இருக்கும் லோக்கல் பஞ்சாயத்துக்களை தீர்த்து வைக்கவும், சுற்றி இருக்கின்ற தீங்குகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றார். இப்படி தாவீதிடமிருந்து நிறைய பலன்களைப் பெற்ற அவர்கள் திடீரென ஒருநாள் சவுல் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள். 'தாவீது எங்கள் நடுவில் தான் இருக்கிறார்' என சவுலிடம் தாவீதின் மறைவிடத்தைக் காட்டிக் கொடுத்துவிடுகின்றனர்.

வீரபாண்டியக் கட்டபொம்மன் காலத்தில் தன் நாட்டின் காட்டிற்குள் ஒளிந்திருந்த அவரை ஆங்கிலேய அரசிடம் காட்டிக் கொடுக்கின்றார் விஜயரகுநாதத் தொண்டைமான். ஏறக்குறைய இந்த நிகழ்வு போலத்தான் தாவீதுக்கும் இன்று நடக்கிறது.

தான் காட்டிக் கொடுத்த அந்த நபரை நினைத்து தாவீது பாடும் பாடலே இப்பாடல்.

இந்தப் பாடலின் மையமாக இருப்பது இரண்டு வசனங்கள்:

'ஆனால், அவன் வேறு யாருமல்ல. என் தோழனாகிய நீயே.
என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனமாகிய நீதான்.
நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்.
கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்' (55:13-14).

இந்த இரண்டு வசனங்களையும் பிரித்துப் பார்ப்போம்:

அ. தோழனாகிய நீ.
ஆ. நண்பனாகிய நீ.
இ. நெருங்கிப்பழகினவனாகிய நீ.

தமிழ் மொழிபெயர்ப்பு இந்த ஏறக்குறைய ஒரே அர்த்தம் கொடுப்பதாக இருக்கிறது. எபிரேய மொழியில் இந்த மூன்று வார்த்தைகளும் வேறு வேறு:

அ. என் புதையலாகிய நீ.
ஆ. என் தோலைவிட எனக்கு நெருக்கமான நீ.
இ. என் இதயத்தின் ஏக்கங்களை அறிந்த நீ.

வெறும் 'நண்பன்' என்ற வார்த்தை எபிரேய மொழி தரும் ஆழத்தை மறைப்பது போலவே இருக்கிறது.

நட்பு அல்லது நண்பர் அல்லது உறவு என்பது இந்த மூன்றைப் போலத்தான் இருக்க வேண்டும்.

இந்த நட்பை இன்னும் மூன்று வார்த்தைகளால் அழகுபடுத்துகிறார் தாவீது:

அ. ஒன்று சேர்ந்து உரையாடினோம்.
ஆ. மக்கள் நடுவே நடனமாடினோம்.
இ. கடவுளின் இல்லத்திற்குச் சென்றோம்.

உறவு என்பது இரண்டு மனிதர்களுக்கு இடையே இருப்பது என்றாலும் அங்கே சமூகமும், கடவுளும் சாட்சியாக நிற்கின்றனர் என்று சொல்கிறது இந்த வசனம். ஒரு நட்பிற்கு சாட்சிகள் மூன்று: நட்பில் இருக்கும் இருவர், மக்கள், கடவுள். எந்த ஒரு நட்பும் கடவுளால் வந்தது என்று தான் சொல்லத் தோன்றுகிறது. 'நல்ல நட்பு, 'தீய நட்பு' என்று சொல்கிறோம். தீயதிலும் ஒரு நன்மை இருக்கத்தானே செய்கின்றது. நட்பில் கடவுள் தான் இணைப்புப் பாலம். நமக்குத் தீமை என நினைத்தால் கடவுள் ஏன் அந்த நட்பை அனுமதிக்க வேண்டும்? நம் வாழ்வில் வரும் அனைத்து நட்புக்கும் நாம் நன்றி கூறவும், அந்த நட்பின் சாட்சி கடவுள் என்று உணரவும் நம்மை அழைக்கிறது இத்திருப்பாடல்.

1 சாமுவேல் 23:16-18 ல் தாவீது-யோனத்தான் நட்பு பற்றி எழுதப்பட்டுள்ளது. தாவீதிடம் யோனத்தான் அழகாகக் கூறுகிறார்:

அ. கடவுள் உன்னைக் காப்பார்.
ஆ. அஞ்சாதே.
இ. நீ தான் இஸ்ரயேலின் அரசன்.

யோனத்தானின் பெருந்தன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. பிறப்புரிமைப்படி சவுலுக்குப் பின் ஆட்சி செய்ய வேண்டியது அவரின் மகன் யோனத்தான் தான். ஆனால் அதை மிக இலகுவாக தன் நண்பனுக்கு விட்டுக்கொடுக்கின்றார். எந்த வித பொறாமையோ, வெறுப்போ அவரிடம் இல்லை.

'இன்று இது உன்னுடையதா, அது நாளை வேறொருவனுடையது!' என்று கீதை தெரிந்தவர் யோனத்தான்!

இன்று நாம் அன்பு செய்யும் நபரைப் பார்த்து நாமும் இதைச் சொல்லலாமே:

அ. கடவுள் உன்னைக் காப்பார்.
ஆ. அஞ்சாதே.
இ. நீ தான் என் இளவரசன் - இளவரசி!

'புறாவுக்கு உள்ளது போன்று சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்?'


1 comment:

  1. யாரையமே காட்டிக் கொடுப்பதென்பது ஒரு கொடூர செயல்.அதிலும் நாம் அன்பு செய்தவர்களே நம்மைக் காட்டிக் கொடுப்பது ஒரு கொலைக்குச்சம்ம்.இயேசுவின் காலத்திலிருந்தே காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.தாவீதின் வார்த்தைகளில் வெளிப்படும் வேதனையின் ஆழம் உறவின் புனித்த்தை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.ஆனாலும் கூட இறுதியில் அவர் வாயிலிருந்து பறப்படும்"ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளர்களை ஒருபோதும் வீழ்ச்சியுற்ற விடமாட்டார்" எனும் வார்த்தைகள் அடிபட்ட இதயங்களுக்கு மருந்தாக அமைகிறது.இங்கு கூறப்பட்டுள்ள உதிரி சேர்க்கைகள் ஆசிரியரின் கருத்துக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.மிக்க நன்று.

    ReplyDelete