Monday, January 31, 2022

சிமெண்ட்டிங்

இன்றைய (1 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 5:21-43)

சிமெண்ட்டிங்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு வல்ல செயல்கள் நிகழ்கின்றன. பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வருந்திய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டதால் நலம் பெறுகின்றார். தொழுகைக்கூடத் தலைவர் யாயிரின் பன்னிரு வயது மகள் உயிர் பெறுகிறார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் இடையில் ஒரு நிகழ்வு நடக்கிறது. அந்த நிகழ்வு எனக்கு எப்போதும் ஆச்சர்யம் தருவதுண்டு.

அது என்ன நிகழ்வு?

இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்கிறார்.

வீட்டிலிருந்து வந்தவர்கள் யாயரின் உறவினர்களாக இருந்திருக்கலாம். அல்லது பணியாளர்களாக இருந்திருக்கலாம். மகள் இறந்த செய்தியை அறிவிப்பதோடு அவர்கள் நின்றிருந்தால் பரவாயில்லை. 'போதகரை ஏன் தொந்தவு செய்கிறீர்?' எனக் கேட்கின்றனர். இரண்டு விடயங்கள் இந்தக் கேள்வியில் அடங்கியுள்ளன: ஒன்று, இறந்த ஒருவர் உயிர் பெற்று வருதல் இயலாது. இரண்டு, இறந்தவரை உயிர்த்தெழச் செய்ய கடவுளால் மட்டுமே இயலும். இயேசு வெறும் போதகர்தான். கடவுள் இல்லை. 

பணியாளர்கள் அல்லது உறவினர்களின் இவ்வார்த்தைகள் மிக எதார்த்தமாகத் தெரிகின்றன. நம் அறிவுக்கு ஏற்புடையதாகவும் இருக்கின்றன. 

ஆனால், அறிவுக்கு அப்பாற்பட்டவை இருக்கின்றன என்றும், அவற்றைக் காண நமக்கு நம்பிக்கை அவசியம்.

நாம் சில நேரங்களில் அறிவாகச் சிந்திக்கிறோம் அல்லது பேசுகிறோம் என்ற நினைப்பில் வல்ல செயல்கள் நடப்பதை மறுக்கிறோம். மேலாண்மையியலில் இதை 'சிமெண்ட்டிங் தாட்ஸ்' என்கிறார்கள். அதாவது, நம் வீட்டுக்கு வெளியே மண் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மண்ணில் திடீரென ஒரு புல்லோ, செடியோ வளர்ந்து நிற்கும். அவற்றைப் பிடுங்கினாலும் இன்னும் சில நாள்களில் மீண்டும் ஏதோ ஒன்று வளர்ந்து நிற்கும். ஆனால், அந்த இடத்தில் நாம் சிமெண்ட் கொட்டிப் பூசிவிட்டால், எதுவுமே அந்த இடத்தில் முளைக்காது. அதாவது, வளர்ச்சி இருந்த இடத்தில் சிமெண்டிங் செய்வதால் வளர்ச்சி நிறுத்தப்படுகிறது அல்லது தடுக்கப்படுகிறது. 

அன்றாடம் நாமும் வளர்கிறோம். நம் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக நாம் சிமெண்ட்டிங் செய்துகொள்கிறோம் சில நேரங்களில். இந்த சிமெண்ட்டிங் சில நேரங்களில் நமக்கு வெளியிலிருந்து வரலாம். அல்லது நமக்கு உள்ளிருந்து வரலாம். இவ்வகை எண்ணங்கள் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடுகின்றன.

இவற்றை நாம் இரு வழிகளில் வெல்லலாம்?

ஒன்று, பன்னிரு ஆண்டுகளாக வருந்திய அந்த இளவல்போல அசைக்கு முடியாத நம்பிக்கை கொள்வது. அந்த நம்பிக்கையை நமக்கு நாமே உறுதியாக்கிக் கொள்வது.

இரண்டு, 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்!' என்னும் இயேசுவின் குரலை நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கச் செய்வது.

இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் அப்சலோம் இறந்த செய்தி கேட்டு தாவீது அழுது புலம்புகின்றார். நேற்றைய வாசகத்தில், இதே அப்சலோம் தன்னைக் கொல்ல வருவதைக் கேட்டுத் தப்பி ஓடுகின்றார். தன்னைக் கொல்ல வந்த எதிரி இறந்ததாக மகிழ்வதற்குப் பதிலாக, 'என் மகன் அப்சலோமே, உனக்குப் பதிலாக நான் இறந்திருக்கக் கூடாதா!' என அழுகின்றார். 

பத்சேபா நிகழ்வின்போது, 'உன் வீட்டின்மேல் ஒரு வாள் எப்போதும் தொங்கிக் கொண்டேயிருக்கும்' என நாத்தான் வழியாக எச்சரிக்கின்றார் ஆண்டவராகிய கடவுள். பாவம் தாவீது! வாள் அடுத்தடுத்த அவருடைய அனைத்து உறவுகளையும் அவரிடமிருந்து பிரிக்கிறது.

உடல் வாதையினால் தன் தலைமேல் தொங்கிய வாளை நம்பிக்கையால் உடைத்தெறிகிறார் இளவல்.

தன் பணியாளர்கள் கொண்டு வந்த இறப்பின் வாளை நம்பிக்கையால் உடைத்தெறிகிறார் யாயிர்.

நம்மை நாமே அழிக்கும் வாள்களாக நம்மோடும் நம்மைச் சுற்றியும் இருப்பவை சிமெண்ட்டிங் தாட்ஸ். அவற்றை உடனே அழித்தல் நலம்.

 

Saturday, January 29, 2022

எதிராளியாய்

ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு

எரேமியா 1:4-5, 17-19 1 கொரிந்தியர் 12:31-13:13 லூக்கா 4:21-30

எதிராளியாய்

கறுப்பின அடிமை ஒருவரின் பேரனான ஜெஸ்ஸி ஓவன்ஸ் 1936ஆம் ஆண்டு நாசி ஜெர்மனி நகர் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கங்கள் வென்றவர். இவர் தன் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார்: '1928ஆம் ஆண்டு ஒஹையோவில் நான் அன்றாடம் உடற்பயிற்சி செய்யச் செல்வேன். தொடக்கத்தில் எனக்கு மிகவும் சோம்பலாக இருந்தது. சோம்பலைக் காரணம் காட்டி நான் சில நாள்கள் பயிற்சியைத் தள்ளிப் போட்டேன். பின் தட்ப வெப்பநிலையைக் காரணம் காட்டினேன். பின் என் உடல் வலியைக் காரணம் காட்டினேன். ஆனால், பறிற்சிக்கு என்னைத் தினமும் அழைத்த என் கோச் எனக்கு ஒரு எதிராளியாகத் தோன்றினார். அவரை இதற்காகவே வெறுத்த நான் ஒரு கட்டத்தில் அவர் சொல்வதுபோல செய்ய ஆரம்பித்தேன். ஒலிம்பிக் போட்டிகள் அறிவிக்கப்பட்டன. என் உடற்பயிற்சி மேல் நான் நம்பிக்கை கொண்டிருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக நாசிச 'ஆரிய மேட்டிமை' மேலாண்மை என் மனத்தில் பயத்தை உண்டாக்கியது. அந்த நாள்களில் என் உடல்நலமும் குன்றியது. ஆனால், 'என்னை மற்றவர்கள் ஒதுக்கி வைக்கும்' மனப்பான்மைக்கு நான் என்றும் எதிராளி என்று பதிவு செய்ய ஓடினேன்.' இன்று அவருடைய சாதனைகள் முறியடிக்கப்பட்டாலும், அவர் அன்று தனக்கெனப் பதித்த முத்திரை அவருக்கானதே.

மனித வாழ்வின் தனி மனித வெற்றியும், குழும வெற்றியும் அடையும் வழி எதிராளியாக மாறுவதே. எதிராளியாக மாறுவது என்பது எதிர்த்து நிற்பது அல்லது எதிர்நீச்சல் போடுவது. எதிராளி என்பவர் பகையாளி அல்ல. பகையாளி என்பது ஒரு முடிந்த நிலை. ஆனால், எதிராளி என்பது ஒரு தொடர்நிலை.

'இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்' என்ற என் காலை எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சுறுசுறுப்பாக வேலைகள் செய்ய முடிகிறது. 'கொஞ்சம் இனிப்பு சாப்பிடு. அப்புறம் மாத்திரை போட்டுக் கொள்ளலாம்' என்ற என் எண்ணத்திற்கு எதிராளியாக நிற்கும்போதுதான், நான் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க முடிகிறது. ஆங்கிலேயேர்க்கு எதிராளியாய் நம் முன்னோர்கள் நின்றதால்தான் இன்று நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்க முடிகிறது. இப்படியாக கறுப்பின மக்கள் எழுச்சி, அடக்குமுறைகளுக்கு எதிரான எழுச்சி என சமூக நிகழ்வுகளிலும், இராஜாராம் மோகன்ராய், மார்ட்டின் லூத்தர், அம்பேத்கர், அன்னை தெரசா போன்றவர்கள் எடுத்த நிலைப்பாடுகளிலும், 'எதிராளியாய்' இருப்பதன் அவசியம் புரிகிறது. குடும்பத்தில் நடக்கும் இழப்புக்களையும் தாண்டிக் குடும்பத்தை எழுப்பும் அப்பாக்கள், அம்மாக்கள், வறுமையிலும், இயலாமையிலும் சாதிக்கும் குழந்தைகள் என எல்லாருமே 'எதிராளியாய்' இருப்பதால்தான் சாதிக்க இயல்பவர்கள் ஆகிறார்கள்.

மொத்தமாகச் சொன்னால், 'ஓடுகின்ற தண்ணீரின் ஓட்டத்திற்குத் தன்னையே கையளிக்கின்ற படகு கரை ஒதுங்குகிறது. ஓட்டத்திற்கு எதிராளியாய் நிற்கிற படகு மறுகரை சேர்கிறது.' இன்றைய இறைவாக்கு வழிபாடு, 'எரேமியா,' 'பவுல்,' 'இயேசு' என்ற மூன்று எதிராளிகளின் நிலைப்பாட்டைப் பதிவு செய்து, நம்மையும் எதிராளிகளாய் வாழ அழைக்கிறது. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 1:4-5, 17-19) யாவே இறைவன் எரேமியாவை அழைக்கின்றார். எருசலேமின் அழிவையும், பாபிலோனியாவுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்டதையும் நேருக்கு நேர் பார்த்த இறைவாக்கினர் எரேமியா. 'நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்' என்னும் வாக்கியத்தில் எரேமியாவின் தேர்ந்துகொள்ளப்பட்ட நிலையையும், ஒரு குறிப்பிட்ட பணிக்கென 'ஒதுக்கிவைக்கப்பட்ட' நிலையையும் பார்க்கின்றோம். 'திருநிலைப்படுத்துதல்' என்பது பொறுப்புமிக்க வார்த்தை. ஏனெனில், திருநிலைப்படுத்தப்படும் நபர் சிறப்பான பணி ஒன்றிற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறார். அவர் அச்சிறப்பான பணியிலிருந்து கொஞ்சம் விலகிவிடவோ, அதே நேரம் தானே மற்ற பணிகளைத் தேடிச் செல்லவோ கூடாது. எரேமியாவின் அழைப்பு இறைவாக்குரைக்கவும், அதிலும் யூதாவின் தலைவர்களுக்கும், அரசர்களுக்கும், குருக்களுக்கும் இறைவாக்குரைக்கவுமாக இருக்கிறது. சாதாரண நபர்களுக்கு ஒன்றைச் சொல்லி நம்பவைத்துவிடலாம். ஆனால், மேற்கண்ட மூவருக்கும் சொல்வது மிகப்பெரிய சவால். அதுவும் நல்ல செய்தி என்றால் பரவாயில்லை. அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், உடன்படிக்கைக்கு எதிராக அவர்கள் செய்த தவறுகளையும், அவர்களின் சிலைவழிபாட்டையும் சுட்டிக்காட்டுவது எரேமியாவுக்குப் பெரிய சவாலாக இருந்தது. மேலும், அவர்கள் ஆட்சி செய்த 'எருசலேமின் அழிவையும்' அவரே முன்னுரைக்கவும் வேண்டியிருந்தது. இவரின் இந்த இறைவாக்கு அவரைப் பொதுவான எதிரியாக்கிவிடுகிறது. அவர் ஏளனத்திற்கும், கேலிப் பேச்சிற்கும், வன்முறைக்கும், சிறைத்தண்டனைக்கும் ஆளாகின்றார். ஆனாலும், தன் இறைவாக்குப் பணியில் அவர் பின்வாங்கவே இல்லை. ஒரு கட்டத்தில், 'ஆண்டவரே! நீர் என்னை ஏமாற்றிவிட்டீர், நான் ஏமாந்து போனேன்' (20:7) என்று விரக்தி அடைந்தாலும், 'சுற்றிலும் ஒரே திகில்! அவன் மேல் பழிசுமத்துவோம்' (20:10) என்று மக்களின் கிளர்ச்சி பயத்தைத் தந்தாலும், 'உம் சொற்களை என்னால் அடக்கி வைக்க முடியாது' (20:9) என்றும் 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்' (20:11) என்று நம்பிக்கை கொள்ளவும் செய்கிறார் எரேமியா. இவ்வாறாக, தவறான சமய எண்ணங்களிலும், தங்களின் மேட்டிமைப் போக்கிலும் மூழ்கி இருந்த தலைவர்களுக்கும், மக்களுக்கும் 'எதிராளியாய்' நிற்கிறார் எரேமியா. இவரின் இந்தத் துணிவிற்குக் காரணம், 'உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' (1:19) என்ற ஆண்டவரின் வாக்குறுதியே.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:31-13:13) பவுல் 'பல்வேறு கொடைகள்' பற்றிய தன் போதனையை நிறைவு செய்கிறார். கொரிந்து நகர திருஅவை உறுப்பினர்கள் தாங்கள் பெற்றிருந்த அருள்கொடைகள் பற்றியும், செயல்பாடுகள் பற்றியும், தொண்டுகள் பற்றியும் அதிகம் பெருமை பாராட்டிக்கொண்டும், தாங்கள் பெற்றிருந்த ஞானம் நிறைந்த சொல்வளம், அறிவு சார்ந்து சொல்வளம், நம்பிக்கை, பிணிதீர்க்கும் கொடை, வல்ல செயல் செய்யும் ஆற்றல், இறைவாக்குரைக்கும் ஆற்றல், பரவசப் பேச்சு, அதை விளக்கும் ஆற்றல் போன்ற கொடைகளை முன்னிறுத்தி, ஒருவர் மற்றவரை ஒப்பீடு செய்துகொண்டு, பொறாமைப்பட்டு, தங்களுக்குள் கட்சி மனப்பான்மை கொண்டு பிளவுபட்டிருந்தனர். கடந்த வார வாசகத்தில் 'ஒரே உடல் பல உறுப்புகள்' என்று அவர்களை அறியாமையிலிருந்து அறிவுக்கு அழைத்த பவுல், இன்னும் ஒரு படி போய், 'எல்லாவற்றையும் விட சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்' (12:31) என்று சொல்லி அன்பை முன்வைக்கிறார். அவர்கள் தாங்கள் பெருமை கொண்டிருந்த - பரவசப் பேச்சு, இறைவாக்குரைக்கும் ஆற்றல், மறைபொருள்கள் விளக்கும் ஆற்றல், மலைகளை இடம் பெயரச் செய்யும் நம்பிக்கை, தன்னையே எரிக்கும் அளவிற்கு தற்கையளிப்பு - அனைத்தும் அன்பை ஊற்றாகக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றால் ஒரு பயனும் இல்லை என்கிறார். ஏனெனில், அன்பு இல்லாத இடத்தில் இவை யாவும் தனி மனித பெருமைக்காகவும், புகழுக்காகவும், பண ஈட்டிற்காகவும் மட்டுமே பயன்படும்.

கிரேக்க மொழியில் அன்பு என்பதற்கு நான்கு வார்த்தைகள் உள்ளன: (அ) அகாபே (மேன்மையான அன்பு), (ஆ) ஈரோஸ் (உடல் சார்ந்த அன்பு, காமம்), (இ) ஃபிலியா (நட்பு அல்லது நலம்விரும்புதல்), (ஈ) ஸ்டோர்கே (பெற்றோர்-பிள்ளை பாசம்). பவுல் பயன்படுத்தும் வார்த்தை, 'அகாபே.' மூன்று நிலைகளில் அன்பு முக்கியத்துவம் பெறுகின்றது: (அ) மேன்மையான அருட்கொடையை விட அன்பு சிறந்தது. (ஆ) முதன்மையான திறன்களைவிடச் சிறந்தது.(இ) கதாநாயக வெற்றிச் செயல்களைவிடச் சிறந்தது. தொடர்ந்து அன்பு இப்படி இருக்கும், அப்படி இருக்காது என நேர்முக மற்றும் எதிர்மறை வார்த்தைகளில் பட்டியலிடுகின்றார் பவுல். மேலும், அன்பின் குணத்தை பெரிதுபடுத்தியும் காட்டுகின்றார்: 'எல்லாவற்றையும்' பொறுத்துக்கொள்ளும். 'எல்லாவற்றையும்' நம்பும். 'எல்லாவற்றையும்' எதிர்நோக்கி இருக்கும். 'எல்லாவற்றிலும்' மனஉறுதியாய் இருக்கும். மேலும், இந்த அன்பு அழியாதது என்கிறார் பவுல். ஏனெனில், இவ்வன்பு கடவுளில் ஊற்றெடுக்கிறது. கடவுள் அழிவில்லாதவர். எது எப்படியோ அன்பு இருந்தால் சரி! எல் கிரேக்கோ என்பவர் 'நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு' என்ற மூன்று மதிப்பீடுகளையும், மூன்று பெண்களாக உருவகித்து (மோதெனா ட்ரிப்டிக்) ஒரு படம் வரைந்துள்ளார். இதில் அன்பு என்ற பெண்ணின் காலைப் பிடித்துக்கொண்டு நிறைய குழந்தைகள் இருக்கும். ஆம், அன்பின் குழந்தைகள் கணக்கிலடங்காதவை! அன்பு என்றும் மேலனாது.

பவுல் இப்படி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதிய அன்பின் பாடல் கேட்பதற்கு நமக்கு இனிமையாக இருக்கிறது. ஆனால், பவுலின் திருச்சபைக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், அவர்கள் கொண்டிருந்த அனைத்துப் பிரச்சினைகளையும் - பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிவான ஊதியம், தன்னலம், எரிச்சல், தீவினை, பொய் - சுட்டிக்காட்டு, இச்செயல்கள் அன்பிற்கு இல்லை என்று சொல்வதன் வழியாக, 'உங்களிடத்தில் அன்பு இல்லை' என மறைமுகமாக அவர்களுக்கு எச்சரிக்கை விடுகின்றார் பவுல். பவுலின் இந்த மடலுக்காக கொரிந்து நகர மக்கள் அவரை நிராகரித்தார்கள் என்பதை நாம் அவரின் இரண்டாம் மடலில் வாசிக்கிறோம். இவ்வாறாக, பவுல், அன்பு பற்றிய போதனையால், அன்பை மற்ற எல்லாவற்றையும் விட உயர்த்தியதால், கொரிந்து நகரத் திருச்சபையின் 'எதிராளியாக' மாறுகின்றார். பவுலின் துணிவிற்குக் காரணம், இவர் கடவுளின் உடனிருப்பை அனுபவித்த விதமே. ஆகையால்தான், 'இப்போது நான் அறைகுறையாய் அறிகிறேன். அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன்' (13:12) என உறுதியாகக் கூறுகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 4:21-30), இயேசுவின் நாசரேத்துப் போதனை அதைக் கேட்டவர்களின் நடுவில் ஏற்படுத்திய எதிர்வினையைப் பதிவு செய்கிறது. எசாயா இறைவாக்கினரின் பகுதியை வாசித்தவர், 'இது ஆண்டவரின் அருள்வாக்கு!' என்று இயேசு சொல்லியிருந்தால், எல்லாரும், 'ஆகா, ஓகோ, நல்லா வாசிக்கிற தம்பி!' என்று உச்சி முகர்ந்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், இயேசு அப்படிச் சொல்லவில்லையே! 'நீங்கள் கேட்ட இறைவாக்கு இன்று நீங்கள் கேட்டதில் நிறைவேறியது!' என்கிறார். 'என்னது மெசியா பற்றிய எசாயா இறைவாக்கு நிறைவேறுகிறதா?' 'யார்ட்ட?' 'இவர்ட்டயா?' 'தம்பி, ஆர் யு ஓகே?' 'என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறீங்களா?' 'இவர் யோசேப்போட பையன்தான!' என ஆளாளுக்கு பேச ஆரம்பிக்கின்றனர். 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' (லூக்கா 1:22) என்ற அவர்களின் வார்த்தைகள் இயேசு தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தார் என்பதைக் குத்திக் காட்டி, அவரின் பிறப்பைக் கேலி செய்வதாகக் கூட இருந்திருக்கலாம். சில நொடிகளில் எல்லாம் மாறிப்போனது. இயேசுவின் போதனையும், பணியும் புறவினத்தாரையும் உள்ளடக்கும் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எலியா மற்றும் எலிசா போல தன்னுடைய இறைவாக்குப் பணியும் எல்லாருக்கும் உரியது என்பதில் தெளிவாக இருக்கிறார் இயேசு. அவர் தங்களின் எதிர்பார்ப்பிற்கு முரணாக இருந்ததால் அவரைப் புறக்கணிக்கின்றனர் மக்கள். அவரைப் பாராட்டிய சில நொடிகளில் அவர்மேல் சீற்றம் (கோபத்தின் கொடூர வடிவம்) கொண்டு அவரை ஊருக்கு வெளியே துரத்தி மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிட முனைகின்றனர். ஆக, இயேசு தன் போதனையின் வழியாக தன் சொந்த ஊர் மக்களுக்கு 'எதிராளியாக' மாறினார். தன் இலக்கோடு சமரசம் செய்துகொள்ளாத இயேசு தன்னலம் மற்றும் குறுகிய எண்ணம் கொண்ட அந்த மக்களிடமிருந்து விலகித் தன் வழியே செல்கின்றார்.

இவ்வாறாக, எரேமியா தன் இனத்து அரசர்களுக்கும், மக்களுக்கும் தன் இறைவாக்குப் பணியால் எதிராளியாகவும், பவுல் தன் கொரிந்து நகர திருஅவைக்குத் தன் 'அன்பு' பற்றிய போதனையால் எதிராளியாகவும், இயேசு அனைவரையும் உள்ளடக்கிய இறைவார்த்தைப் பணியால் தன் சொந்த ஊர் மக்களுக்கு எதிராளியாகவும் மாறுகின்றனர். ஆனால், இவர்களை எதிர்த்தவர்கள் நடுவில் இவர்கள் பின்வாங்கவில்லை. இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 71) சொல்வதுபோல, 'என் தலைவரே, நீரே என் நம்பிக்கை. இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன்' என்று துணிந்து முன்செல்கின்றனர்.

இன்று நம் தனிப்பட்ட வாழ்விலும், சமூக, மற்றும் அரசியல் வாழ்விலும் எதிராளியாக இருக்க இன்று நாம் அழைக்கப்படுகிறோம். எதிராளியாக மாறுவதற்கு மூன்று குணங்கள் அவசியம்: (அ) 'என்னால் முடியும்' என்ற தன்னம்பிக்கை. தான் சிறுவன் என்ற நிலையில் இருந்தாலும் எரேமியாவும், தான் அறிமுகமில்லாதவன் என்ற நிலையில் இருந்தாலும் பவுல், தான் சொந்த ஊர்க்காரன் என்றாலும் இயேசுவும், தங்களால் முடியும் எனத் தங்கள் மேல் முழு நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். (ஆ) 'என் கடவுள் என்னோடு' - தன்னம்பிக்கையை நம்மை விடப் பெரிய ஒன்றோடு கட்ட வேண்டும். அது விதியாகவோ, கடவுளாகவோ, கொள்கையாகவோ இருக்கலாம். மனிதர்கள்மேலும், இடங்களின் மேலும் கட்டவே கூடாது. ஏனெனில் அவர்களும், அவைகளும் மாறக்கூடியவை.. எரேமியா தன் ஆண்டவரின் மேல், பவுல் இயேசுவின் மேல், இயேசு தன் தந்தையின் மேல் நம்பிக்கையைக் கட்டியிருந்தனர். (இ) 'இலக்குத் தெளிவு' - நான் எதற்காக இங்கே இருக்கிறேன்? நான் எதை நோக்கிச் செல்கின்றேன்? என்ற கேள்விகள்தாம் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றன. எரேமியா, பவுல், இயேசு மூவரும் தங்கள் இலக்கை முன்வைத்து நடந்தனர். வாழ்வில் 'எதிராளி' நிலை என்பது நம் மாற்றத்திற்கான வளர்ச்சிநிலை.

Friday, January 28, 2022

அக்கரைக்குச் செல்வோம்!

இன்றைய (29 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 4:35-41)

அக்கரைக்குச் செல்வோம்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்!' என்று தன் சீடர்களை அழைக்க, 'படகிலிருந்தவாறே அவரை அழைத்துச் செல்கிறார்கள்.' அக்கரைக்குப் போவோம் என்றதால் என்னவோ, அக்கரை வரும் வரை தூங்குவோம் என எண்ணித் தூங்கி விடுகின்றார் இயேசு. 

இப்படித்தான் கடவுள். 'இதைச் செய்! அதைச் செய்!' என்று நம் உள்ளத்தில் எதையாவது தூண்டிவிட்டு, நாம் அதைச் செய்யத் தொடங்கியவுடன் அவர் தூங்கிவிடுகின்றார். சுற்றிலும் அலை அடைக்க, முன்னாலும் செல்ல இயலாமல், பின்னாலும் செல்ல இயலாமல் நாம் தவிக்கிறோம்.

சீடர்கள், 'போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லiயா?' எனக் கேட்கின்றனர். பயத்தினால் வரும் விரக்தியின் உச்சத்தில் இப்படி முறையிடுகிறார்கள் சீடர்கள். 'அக்கரைக்குப் போவோம்!' என்று சொன்ன அவர், நம்மை அக்கரை சேர்க்காமல் சாக விடுவாரா என்ன? சீடர்கள் தங்கள் பயத்திலும் விரக்தியிலும் நம்பிக்கையை இழக்கின்றனர்.

நாமும் சில நேரங்களில், சிறிய பிரச்சினைக்குக் கூட, நாமே அழிந்துவிட்டதுபோல மிகைப்படுத்தி யோசிக்கின்றோம். 'போதகரே, வாழப் போகிறோமே! உமக்குக் கவலை இல்லையா?' என்று கடவுளைத் தட்டி எழுப்புவதுதான் சரியாக இருக்கும்.

விழித்தெழுந்த இயேசு முதலில் கடலையும், இரண்டாவதாக சீடர்களையும் கடிந்துகொள்கின்றார். கடல் என்பது யூத மரபில் தீமையின் உறைவிடமாக இருந்தது. ஆக, தீமையின்மேல் வெற்றிகொள்கின்றார் இயேசு. தான் தீமையை வெல்பவர் என்ற நம்பிக்கையை அவர்கள் பெற்றுக்கொள்ளுமாறு 'ஏன் அஞ்சுகிறீர்கள்?' எனக் கேட்கிறார் இயேசு. 

ஆக, இயேசு தருகின்ற பாடம் இதுதான்:

'அக்கரைக்குச் செல்வோம்' என்று நம்மை அழைக்கிறவர் மறுகரை சேர்க்கும் வரை நம் உடன் வருவார் என்ற நம்பிக்கை நமக்கு அவசியம். சில நேரங்களில் கடவுள் நம்மை விட்டு விலகித் தூங்குவதுபோல நாம் உணரலாம். ஆனால், தூங்கினாலும் அவர் தன் கனவிலும் நம்மையே காண்கிறார்.

முதல் வாசகத்தில், பத்சேபா உறவில் பதற்றப்படுகின்ற தாவீது உரியாவைக் கொலை செய்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கின்றார். மனிதர்களின் கண்களுக்கு மறைவாய் இருக்கின்ற ஒன்று கடவுளுக்கு வெட்ட வெளிச்சமாக இருக்கும் என்பதை மறந்துவிட்டார் தாவீது.

ஒரு குட்டிக் கதையுடன் தாவீதிடம் வருகின்றார் நாத்தான். கதை கேட்ட தாவீது, 'ஆண்டவர்மேல் ஆணை! இதைச் செய்தவன் கட்டாயம் சாகவேண்டும். இரக்கமின்றி அவன் இதைச் செய்ததால் அவன் ஓர் ஆட்டுக்குட்டிக்காக நான்கு மடங்கு திருப்பித் தரவேண்டும்' என்று எழுகின்றார்.

'நீயே அம்மனிதன்!' என்று தாவீதிடம் விரல் நீட்டுகிறார் நாத்தான்.

'நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்' என சரணாகதி அடைகின்றார் தாவீது.

பாவம்! தாவீதின் குழந்தையின்மேல் கையை நீட்டுகிறார் கடவுள். எப்படியாவது கடவுள் இரங்கிவிட மாட்டாரா என்று குழந்தைக்காக நோன்பிருக்கிறார் தாவீது.

தாவீதின் எளிய உள்ளம் நமக்கு ஆச்சர்யம் தருகிறது.

போரில் கொடூரமாக உரியாவை கொலை செய்யச் சொன்னவர், பிஞ்சுக் குழந்தைக்காக அழுகின்றார். அது இறந்துவிடக் கூடாது என மன்றாடுகின்றார். இது மனமாற்றத்தின் விளைவாகக் கூட இருக்கலாம்.

தன் மனமாற்றத்தால் அக்கரைக்குச் செல்கின்றார் தாவீது.

நம்பிக்கையால் சீடர்கள் அக்கரைக்குச் செல்கின்றனர்.

நாமும் அவ்வாறே!



Thursday, January 27, 2022

தானாக வளரும்

இன்றைய (28 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 4:26-34)

தானாக வளரும்

நம்ம வாழ்க்கைல சில நேரங்களில் நாம இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என நினைத்து பரபரப்பாகவே இருக்கிறோம். அடுத்த என்ன செய்றது? இதை எப்படி சமாளிக்கிறது? அவர்ட்ட எப்படி பேசுறது? என நினைத்து, அல்லது அதிகமாக நினைத்து நம் ஆற்றலை வீணாக்குகிறோம். 

இறையாட்சி பற்றி இயேசு கூறும் இரு உவமைகள் நமக்கு வாழ்க்கைப் பாடங்களைத் தருகின்றன: முதல் உவமையில், ஒருவர் விதை ஒன்றை தன் நிலத்தில் விதைக்கிறார். அது தானாக வளரத் தொடங்கி பெரிய மரமாகிறது. அவருடைய எந்த முயற்சியும் இல்லாமல் இயற்கை தன் போக்கில் அதை நடக்கிறது. இரண்டாவது உவமையில், கடுகு விதை ஒன்று விதைக்கப்படுகிறது. கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஒன்று உயர்ந்து நிற்கிறது.

ஒரு பக்கம், நம் உழைப்பு அவசியம். அதாவது, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்வது. நிலத்தில் விதையை விதைப்பது.

இன்னொரு பக்கம், நம் துணையில்லாமலும் அது வளரும் என்று நம்புவது. பல நேரங்களில் நம்மில் இதுதான் குறைவுபடுகிறது. நிலத்தில் நட்டு வைத்த செடி ஒன்று தினமும் முளைக்கிறதா என்று தோண்டிப் பார்த்த கதைநபரைப் போல, நாம் ரொம்பவே கவலைப்பட்டுக் கலங்குகிறோம்.

தொடக்கத் திருஅவையில் இறையாட்சி பற்றிய கவலை சீடர்களுக்கு அப்படித்தான் இருந்திருக்கும். 'இது எப்படி வளரும்?' என்ற கேள்வி இருந்திருக்கும். ஆனால், அது தானாகவே வளர்கிறது. ஏனெனில், அதன் ஆற்றல் அப்படிப்பட்டது.

முதல் வாசகத்தில், தாவீது பத்சேபாவுடன் உறவு கொண்டதையும், தொடர்ந்து அவருடைய கணவர் உரியாவைக் கொன்றதையும் வாசிக்கின்றோம்.

மதிய நேரத்தில் தாவீது பேசாமல் தூங்கியிருந்தால் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்திருக்காது. அனைத்தையும் தன் கைக்குள் எடுத்து தானே முடிவெடுத்து, அவசர அவசரமாகச் செயல்படுகின்றார். ஆனாலும், ஆண்டவர் தொடர்ந்து அவருடன் இருக்கின்றார். 

ஆக, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ, நாம் செய்ய வேண்டியதை மட்டும் முழுமையாகச் செய்ய இன்றைய நாள் நம்மை அழைக்கிறது.

இன்று அக்வினா நகர் புனித தோமாவை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். புனித அகுஸ்தினாரும் இவரும் திருஅவை இறையியலின் இரு பெரும் தூண்கள். அறிவுப் பெருங்களஞ்சியமாக இவர் வளர்ந்தார். ஆனால், இவரின் தொடக்கம் என்னவோ சிறிய கடுகுவிதைபோல்தான் இருந்தது.

Wednesday, January 26, 2022

உள்ளவருக்கு கொடுக்கப்படும்

இன்றைய (27 ஜனவரி 2022) நற்செய்தி (லூக் 4:21-25)

உள்ளவருக்கு கொடுக்கப்படும்

'உள்ளவருக்குக் கொடுக்கப்படும். இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்னும் இயேசுவின் வார்த்தைகளை நற்செய்தி வாசகத்தில் வாசித்தவுடன், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆக்ஸ்ஃபாம் என்னும் நிறுவனம் வெளியிட்ட நிதிநிலை அறிக்கை நினைவுக்கு வருகிறது. கோவித்-19 பெருந்தொற்றுக் காலத்தில் பணக்காரர்களின் வருமானம் 106 மடங்கு கூடியிருக்கிறது என்றும், ஏழைகளின் வருமானம் 89 மடங்கு குறைந்துள்ளது என்றும் சொல்கிறது அறிக்கை. பெருந்தொற்று பணக்காரர்களைப் பெரும் பணக்காரர்களாக ஆக்கிவிட்டது. இல்லாதவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கிவிட்டது.

'(பணம்) உள்ளவருக்குக் கொடுக்கப்படும். (பணம்) இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்' என்று இயேசுவின் வார்த்தைகளைச் சற்றே நீட்டிப் பார்த்தால் இயேசுவின் சிந்தனை கார்ப்பரேட் சிந்தனை போலத் தெரிகிறது.

இன்றைய நற்செய்தி இரு பிரிவுகளாக அமைந்துள்ளது: முதல் பிரிவில், 'விளக்கைக் கொண்டு வருவது எதற்காக?' என்னும் கேள்வியை எழுப்புகின்ற இயேசு, அதற்கான விடையையும் அவரே அளிக்கின்றார். இரண்டாம் பிரிவில், நாம் அளக்கின்ற அளவை பற்றிப் பேசுகின்றார். இவ்விரு பிரிவுகளும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுபட்டு இருந்தாலும், இரண்டுக்கும் ஏதோ ஓர் இணக்கம் இருக்கவே செய்கின்றது. அதாவது, ஒன்று எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அது நிறைவேற்றினால் அதனால் பயன் பெறுகிறவர்கள் அதிகமாக இருப்பார்கள். விளக்குத் தண்டின் மேல் வைக்கப்படுகின்ற விளக்கு நிறைய வெளிச்சத்தை அளக்கும். கட்டிலின் கீழ் உள்ள விளக்கு குறைவான வெளிச்சத்தை அளக்கும். நிறைய வெளிச்சத்தை அளந்தால் அதனால் பயன் பெறுகிறவர்கள் அதிகம் பேர். குறைவான வெளிச்சத்தை அளந்தால் அதனால் பயன் பெறுகிறவர்கள் குறைவான பேர்.

விளக்கு என்பது சீடத்துவத்தை அல்லது சீடர்களின் சாட்சிய வாழ்வை இங்கே குறிக்கிறது. இயேசுவின் சீடராக இருப்பவர் தன் இயல்பை முழுமையமாக வெளிப்படுத்த வேண்டும். தான் எந்த நோக்கத்திற்காகச் சீடராக மாறினாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். தன் குழுமத்திற்குப் பயனுள்ளவராக மாற வேண்டும். அப்போதுதான் அவர் சரியான அளவையால் அளக்கிறார். அப்போதுதான் அவரிடம் உள்ளது வளரும். கட்டிலுக்குக் கீழ் வைக்கப்படும் விளக்கு தன் முழு பயனைத் தருவதில்லை. இன்னொரு பக்கம் கட்டிலுக்கே அது ஆபத்தைக் கொண்டுவந்துவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில், தன் கைகளையும் மடியையும் இறைவன் அளவுகடந்த விதத்தில் நிறைத்ததற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுகின்றார் தாவீது. தன் எளிய நிலையை உணர்கின்ற தாவீது, ஆண்டவரின் பேரன்பின் முன் திக்குமுக்காடியவராய், 'இது மனித வழக்கம் அல்லவே!' என்று கடவுளிடம் சரணாகதி அடைகின்றார். 

இன்று என் விளக்கை நான் எங்கே ஏற்றி வைத்துள்ளேன்?

என் அளவை பெரியதாக இருக்கிறதா?



Tuesday, January 25, 2022

இறைவார்த்தை

இன்றைய (26 ஜனவரி 2022) நற்செய்தி

இறைவார்த்தை

திரு. ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'அறம்' என்னும் சிறுகதையை நேற்று வாசித்தேன். ஓர் எழுத்தாளர் அடைகின்ற துன்பத்தின் பின்புலத்தில் எழுத்துகளின் ஆற்றலை மிக அழகாக எடுத்துரைக்கிறது இக்கதை. கதையின் நாயகர் பெரியவர் கதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்:

'அப்ப தெரிஞ்சுது சொல்லுன்னா என்னான்னு. அது அர்ச்சுனன் வில்லு. எடுக்கிறப்ப ஒண்ணு. தொடுக்கிறப்ப நூறு. படுறப்ப ஆயிரம் ...'

சொல் ஒன்றாக இருந்தாலும் அது ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது என்பது ஆசிரியரின் கருத்து.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விதைப்பவர் எடுத்துக்காட்டையும், அந்த எடுத்துக்காட்டுக்கு இயேசு தரும் விளக்கத்தையும் வாசிக்கின்றோம். 'விதைப்பவர் இறைவார்த்தையை விதைக்கிறார்' என நேரடியாக விளக்கம் தருகிறார் இயேசு. விதையின் ஆற்றல் அதைக் கேட்பவரைப் பொருத்து மாறுபடுகிறது. அல்லது நிலம் விதை பலன்தருதலைப் பாதிக்கிறது. 

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட இறைவார்த்தை முப்பது, அறுபது, நூறு என மூன்று நிலைகளில் பலன் தருகிறது என்னும் வாக்கியத்தை, மத்தேயு, நூறு, அறுபது, முப்பது என எழுதுகின்றார். லூக்காவோ மொத்தமாக நூறு என மட்டும் எழுதுகின்றார்.

விதை ஒன்றுதான். நிலமும் ஒன்றுதான். பின் எப்படி விளைச்சலில் வேறுபாடு?

இந்த வாக்கியத்தைப் புரிந்துகொள்ள முதல் ஏற்பாட்டு நிகழ்வு ஒன்றை எடுத்துக்கொள்வோம். கெராரில் வாழ்க்கை நடத்துகின்ற ஈசாக்கு 'அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறு மடங்கு அறுவடை செய்தார். ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்.' (தொநூ 26:12).

ஆக, ஆண்டவரின் ஆசி விளைச்சலின் மடங்கைக் கூட்டுகிறது.

விதை, நிலம், ஆசி என மூன்றும் இணையும் போது விளைச்சல் நூறு மடங்காகிறது.

இன்றைய நாளில் நாம் புனித திமொத்தேயு மற்றும் தீத்து என்னும் தொடக்கத் திருஅவை ஆயர்களை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். பவுலின் உடனுழைப்பாளர்களாக இருந்த இந்த இளவல்கள், நம்பிக்கையில் நல்ல மகன்களாகவும், சபைகளை வழிநடத்துவதில் திறம்படைத்தவர்களாகவும் இருந்தனர். தாங்கள் புதிதாக கிறிஸ்தவ நம்பிக்கையைத் தழுவினாலும், தங்கள் உள்ளம் என்னும் நிலத்தை அதற்கேற்றாற் போல பக்குவப்படுத்திக்கொள்கின்றனர். 

இறைவார்த்தையை நல்ல நிலம் போல ஏற்றுக்கொண்ட இவர்கள், திருத்தூதர்களையும் நம்மையும் இணைக்கும் இணைப்புக் கோடுகளாக உள்ளனர்.

Monday, January 24, 2022

சவுல் பவுலாக

இன்றைய (25 ஜனவரி 2022) திருநாள்

சவுல் பவுலாக

இன்று புனித பவுலின் மனமாற்றத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

பவுலின் அழைத்தல் நிகழ்வு மூன்று விதங்களில் கொடுக்கப்பட்டுள்ளது: (அ) கலாத்திய நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், தாயின் கருவில் இருக்கும்போதே கடவுள் தன்னை அழைத்ததாகப் பவுல் கூறுகின்றார் (காண். கலா 1:15). (ஆ) தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் கடவுள் பவுலைத் தடுத்தாட்கொண்டதாகப் பதிவு செய்கின்றார் லூக்கா (காண். திப 9, 22, 26). (இ) பர்னபா வழியாக பவுல் கிறிஸ்தவத்தைத் தழுவுகின்றார். திருத்தூதர்களுக்குப் பவுலை அறிமுகப்படுத்துகின்ற பர்னபா அவருடைய பாதை மாற்றத்திற்கு உதவி செய்கின்றார்.

பவுலின் அழைத்தல் அல்லது மனமாற்றம் பற்றிய பதிவுகள் தங்களிலே முரண்பட்டாலும் ஒன்றை மட்டும் நமக்கு உறுதியாகச் சொல்கின்றன: பவுல் முழுமையான மாற்றம் பெறுகின்றார். பவுலின் பாதை மாறுகின்றது. பவுலின் இலக்கு மாறுகின்றது.

பவுலின் மனமாற்ற நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம் எனக்குள் ஒரு கேள்வி வரும்: தன்னை அனுப்பிய தலைமைச்சங்கத்திற்குப் பவுல் என்ன மறுமொழி கூறியிருப்பார்? அவரின் வாழ்க்கையே மறுமொழியாக இருந்திருக்கும்.

தமஸ்கு நிகழ்வில் பவுல் எழுப்பும் இரு கேள்விகள் நமக்குச் சவால்களாக அமைகின்றன:

(அ) 'ஆண்டவரே, நீர் யார்?'

'ஆண்டவரே' என்பதற்கு 'கிரியே' என்னும் கிரேக்கச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'கிரியே' என்பதை 'ஐயா' அல்லது 'ஆண்டவர்' என்று மொழிபெயர்க்கலாம். 'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?' என்னும் கேள்வி பவுலுக்கு ஆச்சர்யம் தந்திருக்கலாம். தன் பெயரை அறிந்த இவர் யார்? என்னும் கேள்வியே, 'நீர் யார்?' என்று கேட்கத் தூண்டுகிறது. 'நீ துன்புறுத்தும் இயேசு நானே' என்று தன்னை வெளிப்படுத்துகின்றார் ஆண்டவர். நாம் ஆண்டவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டுள்ளோம். நம் பெற்றோர், ஞானப் பெற்றோர், மறையுரைகள், மறைக்கல்வி வகுப்புகள் போன்றவை, 'ஆண்டவர் யார்?' என்பதை நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளன. ஆனால், இதைக் கடந்து, 'ஆண்டவரே, நீர் யார்?' என்று நாம் அவரைப் பார்த்து எழுப்பும் கேள்விதான் நம் மனமாற்றம் அல்லது வாழ்வு மாற்றத்தின் முதற்படியாக இருக்க முடியும். விவிலியம் வாசிக்கும்போது, இறைவேண்டல் செய்யும்போது, நம் தனிமையில், மௌனத்தில், 'ஆண்டவரே, நீர் யார்?' என்று நாம் கேட்கும் ஒற்றைக் கேள்வி, நம் குதிரைகளிலிருந்து நம்மைத் தள்ளிவிடும்.

(ஆ) 'ஆண்டவரே, நான் என்ன செய்ய வேண்டும்?'

இந்தக் கேள்வி திப 22இல் மட்டுமே உள்ளது. 'ஆண்டவரே, நீர் யார்?' என்று நாம் அவரைக் கேட்ட அந்த நொடியே, 'நான் யார்?' என்பதை அவர் நமக்குக் காட்டுகின்றார். பவுலுடைய தயார்நிலை நம்மை இங்கே வியக்கவைக்கிறது. அவர் பெற்ற அனுபவம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அவர் உடனடியாக, 'நான் என்ன செய்ய வேண்டும்?' என்று சரணடைகின்றார். பவுல் என்ன செய்ய வேண்டும் என்பது அனனியா வழியாக அவருக்குச் சொல்லப்படுகின்றது: 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எனது பெயரை எடுத்துச் லெ;ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (திப 9:15). தன் திட்டத்தை ஒதுக்கி வைத்து விட்டு இறைத்திட்டத்தைத் தழுவிக்கொள்கின்றார் பவுல். தன் பயணத்தின் இலக்கை மாற்றுகின்றார்.

இன்று நாம் எந்த வாழ்வியல் நிலையில் இருந்தாலும், மேற்காணும் இரு கேள்விகளை நாம் கேட்கும்போது நம் வாழ்க்கைப் பாதை மாறவே செய்கின்றது.

கடவுளுக்கு எதிராக வாள் எடுத்தவர் கடவுளின் வாளாக மாறுகின்றார்.

Sunday, January 23, 2022

வலியவரைக் கட்டுதல்

இன்றைய (24 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 3:22-30)

வலியவரைக் கட்டுதல்

விமர்சனங்கள் தவிர்க்க இயலாதவை. நாம் பேசும் ஒவ்வொன்றுமே விமர்சனம்தான். 'இந்த வாட்ச் நல்லா இருக்கு!' 'நீங்க நல்லா இருக்கீங்க!' 'இந்தக் கலர் உங்களுக்கு பொருத்துமா இருக்கு!' என்று நாம் எதைப் பற்றிப் பேசினாலும், அது விமர்சனமே. நம்மிடம் மற்றவர்கள் பகிர்வதும் விமர்சனங்களே.

நேர்முகமான விமர்சனங்கள் நம்மை வளர்க்கின்றன.

எதிர்மறையான விமர்சனங்கள் நம்மைத் தளர்க்கின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் தாவீது எதிர்மறையான விமர்சனம் ஒன்றை எதிர்கொள்கின்றார். தன் முப்பதாவது வயதில் அரசராகப் பொறுப்பேற்றபின் தன் சொந்த ஊருக்கு வருகின்றார். அங்கிருந்த எபூசிய இனத்தவர்கள், 'நீர் இங்கே வர முடியாது. பார்வையற்றவரும் முடவரும் கூட உம்மை அப்புறப்படுத்தி விடுவார்கள்!' என்று சொல்லி தாவீதுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு பேய்களை ஓட்டுவதைக் கண்ட மறைநூல் அறிஞர்கள், 'இவனைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறது. பேய்களின் தலைவனைக் கொண்டே இவன் பேய்களை ஓட்டுகிறான்' என்றும் சொல்லி அவரைக் குறித்து இடறல் படுகின்றனர்.

தாவீது மற்றும் இயேசு என்னும் இரு இளவல்களும் மிக அழகாக மேற்காணும் எதிர்மறை விமர்சனங்களைக் கையாளுகின்றனர்.

அவர்கள் செய்வது என்ன?

'வலியவரைக் கட்டுகின்றனர்'

வலியவரைக் கட்டினால் அவர் வலுவிழந்து போவார்.

தாவீது எபூசியரை வெற்றிகொள்கின்றார். 

இயேசு மறைநூல் அறிஞர்களுக்குத் தான் யாரெனத் தெளிவுபடுத்துகின்றார்.

எபூசியரும் மறைநூல் அறிஞர்களும் தாவீது மற்றும் இயேசுவிடமிருந்த இறை ஆற்றலை மறுத்ததுடன், தீயவன் அவர்களில் இருப்பதாகச் சொல்லி, அவர்களது ஆற்றலை இழிவுபடுத்துகின்றனர்.

நாம் வலியவரைக் கட்டிவிட்டால் அவர் வலுவிழந்து போகின்றார். கட்டியவர் வலியவர் ஆகின்றார். சாத்தான் வலியவர் போலத் தெரிந்தாலும் அவரைக் கட்டிய இயேசு அதைவிட வலியவர் ஆகின்றார்.

இந்த நாள் தரும் செய்திகள் இரண்டு:

ஒன்று, எனக்கு அடுத்திருப்பவர் அரும்பெரும் செயல்கள் செய்யும்போது நான் வீசும் விமர்சனம் என்ன? நான் அளிக்கும் விமர்சனம் அவரைப் பற்றி அல்ல, மாறாக, என்னைப் பற்றியே பேசுகிறது.

இரண்டு, இன்று நான் கட்டிவைக்க வேண்டிய வலியவர் யார்? அவரை நான் மேற்கொள்வது எப்படி?

Saturday, January 22, 2022

அறியாமையிலிருந்து விடுதலை

ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிறு

I. நெகேமியா 8:2-4,5-6,8-10 II. 1 கொரிந்தியர் 12:12-30 III. லூக்கா 1:1-4, 4:14-21

அறியாமையிலிருந்து விடுதலை

2020ஆம் ஆண்டு முதல், ஆண்டின் பொதுக்காலம் 3ஆம் ஞாயிற்றை 'இறைவார்த்தை ஞாயிறு' எனக் கொண்டாடுமாறு, நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'அப்பெர்யுய்த் இல்லிஸ்' என்னும் மடல் வழியாக அழைப்பு விடுத்தார். இந்த ஆண்டு, நாம் கூட்டொருங்கியக்கத் திருஅவைக்கான மாமன்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்ற வேளையில், 'இறைவார்த்தை ஒளியில் நம் பயணம்' அறியாமையிலிருந்து விடுதலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று சிந்திப்போம்.

ஜென் துறவி கிம்கானிடம் ஓர் இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஓர் உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு செம்புற்றுக் கனி (ஸ்ட்ராபெரி) கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.

'ஞானம் பெறுதல்' என்பது வெறும் உணர்வு அன்று. மாறாக, ஒருவரை விடுதலைக்கு இட்டுச் செல்லும் செயல். ஏனெனில், அறியாமை என்பது ஞானம் அடைவதற்கான தடையாக இருக்கிறது. அல்லது அறியாமை அகலும்போது ஞானம் பிறக்கிறது.

இன்றைய முதல் வாசகம் (காண். நெகே 8:2-4,5-6,8-10) நெகேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய கி.மு. 450ல் நெகேமியா ஆளுநராக இருந்தபோதுதான் சிதைந்து கிடந்த எருசலேம் நகரையும் ஆலயத்தையும் கட்டி எழுப்புகின்றார். எருசலேம் நகரின் மதில்களைக் கட்டி முடித்த அவர், ஏழைகளின் கடன்களை செல்வந்தர்கள் மன்னிக்க வேண்டும் என்று சமூகப் புரட்சியும், ஆலயத்தின் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தவும் செய்தார். இவரோடு தோள் கொடுத்து நின்றவர் மறைநூல் அறிஞரும் குருவுமான எஸ்ரா. இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும், சமயக் கண்டுகொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.

எஸ்ரா தொடங்கிய மறுமலர்ச்சி ஒரு சமூக நிகழ்வாகத் தொடங்குகிறது. அனைத்து மக்களையும் தண்ணீர் வாயிலுக்கு முன் இருந்த வளாகத்தில் ஒன்றுகூட்டுகிறார் எஸ்ரா. அவர்கள் முன் திருச்சட்டத்தை வாசிக்கின்றார். 'ஒரே ஆளென மக்கள் கூடிவந்தார்கள்' எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர். அதாவது, இவ்வளவு நாள்கள் தங்களுக்குள் மக்கள் வேறுபட்டுக் கிடந்தாலும், அவர்களின் வெறுமை மற்றும் அடிமைத்தன அனுபவம் எல்லாரையும் ஒன்றுகூட்டி, அவர்களுக்குள் இருந்த வேற்றுமைகளைக் களைகின்றது. 'ஆண்களும், பெண்களும், புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்க சிறுவர்களும்' என அனைவரும் இணைந்து வருகின்றனர். இந்தச் சொல்லாடல் இரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எருசலேம் ஆலயம் ஆண்களை மட்டுமே உள்ளே அனுமதித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் நிறுத்தப்பட்டனர். ஆனால், தோரா என்னும் இறைவார்த்தையை கேட்க எல்லாரும் அழைக்கப்படுகின்றனர். மேலும், தோரா முன் எல்லாரும் சமம் என்னும் நிலை உருவாகிறது.

எஸ்ரா திருச்சட்ட நூலை வாசிக்க, மக்கள் அறியாமையிலிருந்து விடுதலை பெறும் நிகழ்வு மூன்று பகுதிகளாக நடக்கிறது: (அ) 'திருநூலைத் திறந்தபோது எல்லாரும் எழுந்து நின்றார்கள்,' (ஆ) 'எஸ்ராவோடு இணைந்து கடவுளை வணங்கினர்,' (இ) 'வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்துகொண்டனர்.' 'எழுந்து நிற்றல்' மக்களின் தயார்நிலையையும், 'முகங்குப்புற பணிந்து வணங்குதல்' அவர்களின் சரணாகதியையும், 'பொருளைப் புரிந்துகொள்ளுதல்' அவர்கள் பெற்ற தெளிவையும் குறிக்கிறது. திருச்சட்ட நூலின் பொருள் புரிந்த மக்கள் அழுது புலம்பியதாகவும் அவர்களை எஸ்ரா ஆறுதல் படுத்துவதாகவும் பதிவு செய்கிறார் ஆசிரியர்.

இவர்களின் கண்ணீர் இவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறச் செய்கிறது. ஆகையால்தான், மக்களின் கண்ணீர்ப் பெருக்கைக் கண்ட எஸ்ரா உடனடியாக, 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள். எனவே அழுது புலம்ப வேண்டாம். நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள். எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பி வையுங்கள் ... ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என அறிவுறுத்துகிறார்.

எஸ்ராவின் இவ்வார்த்தைகளில், (அ) 'அழ வேண்டாம்' என்ற கட்டளையும், (ஆ) இல்லாதவரோடு பகிருங்கள் என்ற கரிசனையும், (இ) 'ஆண்டவரின் மகிழ்வே உங்களின் வலிமை' என்ற வாக்குறுதியும் இருக்கிறது. 'அழவேண்டாம்' என்ற செய்தியானது இங்கே நான்கு முறை சொல்லப்படுகின்றது. 'ஆண்டவரின் மகிழ்வே' என்னும் சொல்லாடலை, 'ஆண்டவர் தரும் மகிழ்வு' அல்லது 'ஆண்டவர் என்னும் மகிழ்வு' என்று பொருள் கொள்ளலாம். இனி இறைவார்த்தையின் வடிவில் விளங்கும் இறைவனின் மகிழ்ச்சியே இஸ்ரயேல் மக்களின் வலிமையாக இருக்கப்போகிறது. ஆக, இறைவனைப் பற்றிய அறியாமையில் இருந்த மக்கள் அவரின் இருப்பை திருச்சட்ட நூல் வாசிப்பின் வழியாக உணர்ந்ததால், அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 12:12-30), தங்களுக்குள் யார் பெரியவர்? யார் அதிகக் கொடைகள் பெற்றவர்? தங்களுள் யார் மேன்மையானவர்? என்ற பிளவுபட்டு நின்ற கொரிந்து நகரத் திருச்சபைக்கு, உடல் மற்றும் அதன் இருப்பு-இயக்கத்தை உருவமாக முன்வைத்து அனைத்து உறுப்புகளும் இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றார். முதல் பிரிவில் (12:12-13), தூய ஆவியார் வழியாக ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற அனைவரும் கிறிஸ்துவின் உடலின் உறுப்பினர் ஆகிறார்கள் என்ற இறையியலை முன்வைக்கின்றார் பவுல். இரண்டாம் பிரிவு (12:14-26) மனித உடல், அதன் உறுப்புக்களின் இருப்பு, இயக்கம், இன்றியமையாமை பற்றி விளக்குகிறது. மூன்றாம் பிரிவில் (12:27-30), 'நீங்கள் கிறிஸ்துவின் உடல். ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்' என்று மறுபடியும் வலியுறுத்தி, திருச்சபையின் பல்வேறு பணிநிலைகளை எடுத்துரைக்கின்றார்.

திருச்சபையின் பணிநிலைகள் எல்லாம் படிநிலைகள் என்ற அறியாமையில் இருந்துகொண்டு ஒருவர் மற்றவரோடு சண்டையிட்டுக்கொண்டிருந்த மக்களை அவர்களின் அறியாமையிலிருந்து விடுதலை செய்து, அவர்களின் தனித்தன்மை மற்றும் ஒருங்கியக்கத்தை நினைவூட்டுகின்றார் பவுல். தங்களுக்குள் நிலவிய ஒருமையை அறியாதவாறு அவர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க, அவர்கள் தங்களின் வேற்றுமைகளை மட்டும் முன்னிறுத்தி ஒருவர் மற்றவரைத் தாழ்த்தவும், காயப்படுத்தவும், அழிக்கவும் முயல்வது தவறு என்பது இதிலிருந்து தெளிவாகிறது. ஆக, 'நான்' என்ற அறியாமையிலிருந்து விடுதலை செய்து, 'நாம்' என்ற அறிவிற்குத் தன் திருச்சபையை அழைத்துச் செல்கிறார் பவுல்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:1-4, 4:14-21) இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது: (அ) லூக்காவின் நற்செய்தி முன்னுரை (1:1-4), (ஆ) இயேசுவின் பணித் தொடக்கம் (4:14-21).

லூக்கா தன் நற்செய்தி தான் ஆராய்ச்சி செய்ததன் பயனாக எழுதப்பட்டது எனவும், இதன் நோக்கம், தியோபில் அவர்கள் தான் கேட்டதை உறுதி செய்துகொள்வதற்காகவும் என்று சொல்வதன் வழியாக, 'தெயோபில்' அவர்களின் கிறிஸ்துவைப் பற்றிய 'அறியாமையிலிருந்து அவரை விடுதலை செய்வதற்கும்' என்று மொழிகிறார். நற்செய்தி வாசகத்தின் இரண்டாம் பிரிவை இன்னும் மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) இயேசுவின் கலிலேயப் பணி (14:14-15), (ஆ) இயேசு எசாயா இறைவாக்கினர் வாசகத்தை வாசித்தல் (14:16-20), (இ) இயேசுவின் போதனை (14:21).

மாற்கு 6ல் இயேசு நாசரேத்தில் பணி தொடங்குவதை ஒத்ததாக இருக்கிறது லூக்காவின் இந்தப் படைப்பு. மாற்கு நற்செய்தியாளருக்கும், லூக்கா நற்செய்தியாளருக்கும் இதில் உள்ள பெரிய வேறுபாடு என்னவென்றால் எசாயாவின் இறைவாக்குப் பகுதியை இயேசு வாசிக்கும் நிகழ்வுதான். 'இயேசு தம் சொந்த ஊரான நாசரேத்துக்கு வந்தார்' என லூக்கா நிகழ்வைத் தொடங்குகிறார். நாசரேத்து இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் முக்கியமான ஒரு ஊர் (காண். 1:26, 2:4, 39, 51).  இயேசுவின் காலத்தில் தோரா நூல் எழுத்துவடிவத்தில் முழுமை பெற்று, தொழுகைக் கூடங்களில் வாசிக்கப்பட்டது. இறைவாக்கு நூல்கள் வாசிக்கப்படுவதற்கு வாய்ப்பில்லையென்றாலும், எசாயா 61 முக்கியமான பகுதியாக இருந்ததால் அது செபக்கூட வாசகத்தில் இடம் பெற்றது. எசாயா 61ல் தான் 'மெசியா', அதாவது 'அருள்பொழிவு பெற்றவர்' என்ற வார்த்தை வருகிறது. ஒட்டுமொத்த யூத நம்பிக்கையின் அடிப்படையே மெசியாவின் வருகையே. இந்தப் பகுதியை இயேசுவே விரும்பி எடுத்தாரா, அல்லது அது விரித்து அவரிடம் கொடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

லூக்கா 4:18-19, எசாயா 61:1 மற்றும் 58:6ன் கிரேக்க பதிப்பிலிருந்து (எழுபதின்மர் நூல்) எடுக்கப்பட்டுள்ளது. இதை அப்படியே எடுத்து பயன்படுத்தாமல், லூக்கா கொஞ்சம் மாற்றம் செய்கின்றார்: 'ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.ஏழையருக்கு நற்செய்தி அறிவிக்கவும், ('உள்ளம் உடைந்தோரை குணப்படுத்தவும்' என்னும் வாக்கியத்தை விட்டுவிடுகின்றார்), சிறைப்பட்டோருக்கு விடுதலையை பறைசாற்றவும், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என அறிக்கையிடவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.' மேலும், 'கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும்...' என்று தொடருமுன் இயேசு சுருளை சுருட்டிவிடுகிறார். இயேசு வாசித்த இந்த இறைவாக்குப் பகுதியில் மையமாக இருப்பது, 'பார்வையற்றோர் பார்வை பெறுவர்' என்பதுதான். இங்கே வெறும் புறக்கண் பார்வையை மற்றும் இறைவாக்கினர் குறிப்பிடவில்லை. மாறாக, 'ஆண்டவரின் ஆவியையும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்க வந்த அருள்பொழிவு பெற்றவரான' இயேசுவை அடையாளம் கண்டுகொள்ளும் அகப்பார்வையைத்தான் குறிக்கிறது. ஆகையால்தான், சற்று நேரத்தில், 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்று தன்னில் மறைநூல் வாக்கு நிறைவேறுவதாக அறிக்கையிடுகின்றார் இயேசு. ஆக, தெயோபில் அவர்கள் லூக்காவின் பதிவின் வழியாகவும், நாசரேத்து மக்கள் இயேசுவின் போதனை வழியாகவும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.

இவ்வாறாக, முதல் வாசகத்தில் எஸ்ராவின் திருச்சட்ட நூல் வாசிப்பு எருசலேம் மக்களுக்கும், இரண்டாம் வாசகத்தில் பவுலின் 'உடல் உருவகம்' கொரிந்து நகர மக்களுக்கும், நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் தொழுகைக்கூடப் போதனை நாசரேத்து மக்களுக்கும் 'அறியாமையிலிருந்து விடுதலை' தருவதாக இருக்கின்றது. இம்மூன்றையும் இணைத்து இன்றைய பதிலுரைப் பாடல், 'ஆண்டவரின் நியமங்கள் சரியானவை. அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை. அவை கண்களை ஒளிர்விக்கின்றன' (திபா 19) என்கிறது.

இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள் என்று பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை ஆராய்கிறோம். ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது 'அக விடுதலையில்தான்.' இன்று என் மனத்தில் இருக்கும் அறியாமை இருள் அழிந்தால்தான் என்னால் அடுத்தவரைச் சரியாகப் பார்க்க முடியும். இறைவார்த்தை என்னும் உண்மை நமக்கு விடுதலை தருகின்றது. நாம் பெறுகிற இந்த விடுதலை எப்படி வெளிப்பட வேண்டும்? (அ) ஆண்டவரின் மகிழ்வு நம் வலிiமாக வேண்டும். ஏனெனில், நம் மகிழ்வுகள் குறுகியவை. அவை நம் வல்லமையைக் கரைத்துவிடுபவை. ஆனால், ஆண்டவரில் கொள்ளும் மகிழ்வு நமக்கு வலுவூட்டும். (ஆ) வேற்றுமை பாரட்டாமல் ஒற்றுமையைக் கொண்டாடுவது. இப்படிக் கொண்டாடும்போது நம்மால் ஒருவர் மற்றவரின் திறன்களை மதிக்க முடிகிறது. (இ) தியோபில் போல ஏக்கமும், நாசரேத்து மக்கள் போல 'இயேசுவின்மேல் கண்களைப் பதிய வைத்தலும்' கொண்டிருப்பது. மகிழ்ச்சி, ஒற்றுமை, நம்பிக்கை - இவை மூன்றும் அறியாமையிலிருந்து விடுதலை பெறுபவர் சுவைக்கும் கனிகள்.

Friday, January 21, 2022

அன்புடையார்

இன்றைய (22 ஜனவரி 2022) முதல் வாசகம் (2 சாமு 1)

அன்புடையார்

சவுலும் யோனத்தானும் இறந்த செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்படுவதையும், தாவீது இச்செய்திக்கு ஆற்றும் பதிலிறுப்பும் இன்றைய முதல் வாசகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

'இறப்பு அனைத்தையும் சமமாக்குகிறது' என்று சொல்லப்படுவதுண்டு. நம் உள்ளத்து உணர்வுகளை அது சமமாக்கிவிடுகிறது. நாம் விரும்பாதவர்கள் அல்லது நம்மை விரும்பாதவர்கள் இறந்து போனால் அவர்கள்மேல் உள்ள கோபம், அல்லது அவர்கள் நம்மேல் கொண்டிருந்த கோபம் அனைத்தும் அவருடனே இறந்துவிடுகின்றன. நம்மை அறியாமல் ஒருவித சோகம் நம்மைப் பற்றிக்கொள்கின்றது. இறப்பு மானுட உள்ளத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. நம்மோடு இருந்த ஒருவர் இன்று நம்மோடு இல்லை என்ற எதார்த்தத்தை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சவுல் மற்றும் யோனத்தான் போர்க்களத்தில் இறந்துகிடக்கின்றனர். போரில் பல வீரர்கள் ஓடிவிட, சிலர் மட்டும் நின்று சண்டையிடுகின்றனர். அவர்களில் சவுலும் யோனத்தானும் அடங்குவர். அவர்கள் தங்களுக்காகப் போரிடவில்லை. மாறாக, தங்கள் மக்களுக்காகப் போரிடுகின்றனர். போரில் இறப்பது என்பது பெருமையாகக் கருதப்பட்டாலும், போர்க்களத்தில் கேட்க யாரும் இல்லாமல் இறந்து கிடப்பது ஒரு கொடுமையான எதார்த்தம். மேலும், எதிரிகளின் கைகளில் இறந்தவர்களின் உடல் கிடைத்துவிட்டால் அவர்கள் அதை இன்னும் இழிவுபடுத்துவர். இப்படிப்பட்ட ஓர் இறப்பை சவுலும் யோனத்தானும் எதிர்கொள்கின்றனர்.

இதையே, 'இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கிறது!' என்று புலம்புகின்றார் தாவீது. மேலும், 'அன்புடையார், அருளுடையார், வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்!' என்று பாடுகின்றார். தந்தையும் மகனும் இணைந்தே நிற்கின்றனர்.

யோனத்தான் சவுலின் மூத்த மகன். யோனத்தானின் மகன் மெபிபொஷெத். தாவீதுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டு தாவீதுடன் நட்பு பாராட்டுகின்றார் யோனத்தான். அன்றைய கால வழக்கப்படி, மூத்த மகன்தான் அரசனுக்குப் பின்னர் அரியணை ஏற முடியும். ஆனால், தாவீதுக்காக அந்த உரிமையை விட்டுக் கொடுக்கின்றார்.

'சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என்மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!' என யோனத்தானை நினைத்து அழுகின்றார் தாவீது. 'மகளிரின் காதல்' என்னும் சொல்லாடல் தாவீதுக்கும் யோனத்தானுக்கும் இடையே இருந்த நெருக்கமான உறவை எடுத்துச் சொல்கின்றது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு மதிமயங்கியிருப்பதாகக் கேள்விப்படுகின்ற அவருடைய உறவினர்கள் அவரைத் தேடி வருகின்றனர். இயேசு தான் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட எதிர்மறையான அடையாளங்களையும் சுமந்தார்.

அடையாளங்கள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன. ஒன்று, நம் இறப்பில். இரண்டு, நம் பரந்த மனப்பான்மையில்.

தாவீதின் நம்பிக்கைப் பார்வை பெரியது. அனைத்தையும், அனைவரையும் இறைத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே காண்கின்றார்.

சவுல் மற்றும் யோனத்தான் ஆகியோரால் தான் அரியணை ஏற முடிந்தது என்பதை இறுதிவரை உணர்ந்தவராக இருக்கின்றார் தாவீது. நாள்கள் நகர நகர அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்பவராக மாறுகின்றார் தாவீது.

இதுவே ஞானம்.

Thursday, January 20, 2022

என்னிலும் நீதிமான்

இன்றைய (21 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 24:2-20)

என்னிலும் நீதிமான்

'நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய். ஆனால், நானோ உனக்குத் தீங்கு செய்தேன். ஆண்டவர் என்னை உம்மிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை.'

- இப்படியாக, சவுல் தாவீதை வாழ்த்துகிறார்.

சவுல் தாவீPதைக் கொல்வதற்காக அவரைத் தேடி வருகின்றார். ஆனால், சவுல் தாவீதின் கையருகில் இருந்தும் சவுலைக் கொல்லாது விடுகின்றார் தாவீது. இந்த நிகழ்வில் சில சொல்லாடல்களும் செயல்களும் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

(அ) நமக்கருகிருப்பவர்களின் தவறான வழிநடத்துதல்

தாவீதின் ஆள்கள் அவரிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக, சவுலையும் அவருடைய வலுவற்ற நிலையையும் கண்டவுடன், 'இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கேற்ப அவனுக்குச் செய் என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே!' என்று தாவீதிடம் சொல்கின்றனர். ஆண்டவர் தாவீதுக்கு அப்படி ஒன்றும் சொல்லவில்லை. தாவீது இவ்வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. தன் பெருந்தன்மை மற்றவர்களின் சிறிய புத்தியால் தவறிவிடக்கூடாது என்பதில் மிகக் கருத்தாக இருக்கிறார். ஆனால், உடனிருக்கும் மனிதர்களின் வார்த்தைகளைக் கேட்டுச் செயல்படுவதாக சவுலைக் கடிந்துகொள்கின்றார் தாவீது.

(ஆ) மனவருத்தம்

சவுலைத் தான் நெருங்கியதற்கு அடையாளமாக அவருடைய மேலாடையின் தொங்கலை அறுத்துக்கொள்கின்றார் தாவீது. இச்செயலுக்காக உடனே வருந்துகிறார். ஏனெனில், 'ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் தன் கரம் படக் கூடாது' என்னும் கருத்து கொண்டவர் தாவீது. மேலாடையின்மேல் கரம் பட்டதும் தவறு என மனவருத்தம் கொள்கின்றார் தாவீது.

(இ) 'தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்'

'தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும்' என்னும் பழமொழி ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார் தாவீது. 'நல்ல மரம் நல்ல கனியைக் கொடுக்கும்' என்னும் இயேசுவின் வார்த்தைகளின் எதிர்ச்சொல்லாடலாக இது உள்ளது. இப்படிச் சொல்வதன் வழியாக, தான் நல்லவர் என்றும், தன்னிடம் தீமை என்பது இல்லை என்றும் உரைக்கிறார் தாவீது.

(ஈ) செத்த நாய்

'இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின்தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தௌ;ளுப் பூச்சியை அன்றோ?' என்று சவுலிடம் கேட்கின்றார் தாவீது. அரச மேன்மையில் இருக்கும் ஒருவர் அந்த மேன்மையை மறந்துவிட்டு, அனைவரும் விலகிச் செல்லும் செத்த நாயைக் கண்டும், யாரும் கண்டுகொள்ளாத தௌ;ளுப் பூச்சியைக் கண்டும் செல்லத் தேவையில்லை என்கிறார் தாவீது. தாவீதின் தாழ்ச்சி நமக்கு இங்கே ஆச்சர்யம் தருகின்றது.

(உ) ஆண்டவர் நன்மை செய்வார்

'இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்கு ஈடாக, ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக! இதோ, நீ திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்றும் இப்போது அறிகிறேன்' என்று தாவீதை வாழ்த்துகின்றார் சவுல். ஆக, நாம் ஒருவருக்குச் செய்யும் நன்மை அல்லது நாம் ஒருவருக்குக் காட்டும் தாராள உள்ளம் அல்லது பரந்த மனப்பான்மை கடவுளிடமிருந்து நமக்கு ஆசியைப் பெற்றுத் தருகின்றது.


Wednesday, January 19, 2022

பொறாமை

இன்றைய (20 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 18:6-9, 19:1-7)

பொறாமை

சவுலின் போதாத நேரம் அனைத்தும் அவருக்கு எதிராகவே நடக்கின்றது. சவுலின் அனுமதியுடன்தான் தாவீது போர்க்களத்தில் கோலியாத்தை எதிர்கொள்கின்றார், வெற்றி பெறுகின்றார். ஆக, சவுலின் சார்பாகவே தாவீது போரிடுகின்றார். தாவீதின் வெற்றி சவுலின் வெற்றியே. தாவீதின் வெற்றியும் தன் வெற்றியே என்று கொண்டாடுவதற்குப் பதிலாக, அவர்மேல் பொறாமை கொண்டு அவரை அழிக்கத் தேடுகின்றார் சவுல்.

சவுலைச் சந்திக்க வந்த பெண்கள் பாடிக்கொண்டே வருகின்றனர். பாடகருக்கே உரிய பாணியில், மிகைப்படுத்திப் பாடுகின்றனர்: 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றார்.' 'ஆமாம் அப்படித்தான்!' என்று சவுல் சொல்லிவிட்டு நகர்ந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. மாறாக, அவர் அந்த வார்த்தைகளைத் தன் மூளைக்குள் எடுத்துக்கொண்டு அதீதமாகச் சிந்திக்கின்றார். 

விளைவு, பொறாமை.

பொறாமை ஒரு தீ. பொறாமையின் ஊற்று கோபமே. பொறாமையினால் சந்தேகம் வலுக்கிறது.

திருவள்ளுவர் தன் திருக்குறளில், 'அழுக்காறாமை' (161-170 குறள்கள்) என்னும் பகுதியில் பொறாமையின் தீய இயல்புகளை மிக  அழகாக எடுத்துரைக்கின்றார்.

'ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு' (குறள் 161)

'ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்' என எழுதுகின்றார். 

பொறாமை கொள்வதால் சவுல் அடையும் துன்பங்கள் எவை?

(அ) குறுகிய பார்வை

பொறாமை அடுத்தவரைப் பற்றிய ஓர் அச்சத்தை நமக்குள் உருவாக்குகிறது. எதார்த்தத்தைவிட மிகப் பெரிய தோற்றத்தை ஏற்படுத்துவதால் அச்சம் வருகிறது. ஆனால், உண்மையில் நம் பார்வை குறுகுகின்றது. சவுல் தாவீதை மிகவும் மிகைப்படுத்திப் பார்க்கின்றார். இப்போதே தன் அரியணை பறிபோய்விட்டதாக உணர்கின்றார். ஆனால், உண்மையில் தாவீது ஓர் இளவல். அவ்வளவுதான். சவுலுக்குக் கட்டுப்பட்டவர்தான். பொறாமையால் சவுலின் பார்வை சுருங்குகிறது.

(ஆ) அழிக்க நினைக்கும் எண்ணம்

பொறாமை அடுத்தவரின் இருப்பை அழிக்குமாறு நம்மைத் தூண்டுகிறது. அடுத்தவரை அழிக்க இயலாத நிலையில், அவருடைய நற்பெயரையாவது அழித்துவிட முயற்சி செய்கிறது. அடுத்தவரின் இருத்தல் இருக்கும் வரை பொறாமை இருக்கும். சவுல் தாவீதைக் கொல்ல நினைக்கிறார். பொறாமை கொண்ட உள்ளம் குறுகிவிடுவதால், இதைத்தவிர வேறொன்றும் அதனால் சிந்திக்க இயலாது.

(இ) சிறுவனும் புத்தி சொல்லும் நிலை வரும்

தன் தந்தை சவுல் தாவீதின்மேல் பொறாமை கொண்டிருப்பதைக் காண்கின்ற யோனத்தான் அவருக்கு நல்ல புத்தி சொல்கின்றார். தந்தை மகனுக்கு அறிவுறுத்தும் நிலை மாறி, மகன் தந்தைக்கு அறிவுறுத்தும் நிலை ஏற்படக் காரணம் சவுலின் பொறாமையே. 

பொறாமையை எப்படிக் களைவது?

பெருந்தன்மையை வளர்த்துக்கொள்வதன் வழியாகவும், இருத்தலை ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், மற்றவர்களைக் கொண்டாடுவதன் வழியாகவும் வெற்றி கொள்ள முடியும். பொறாமை யார்மேல் வருகிறதோ அவரை வெற்றிகொண்டு என் நண்பராக்கிவிட்டால் அவருடைய வெற்றியும் என் வெற்றியாக மாறிவிடும்.

இன்னொரு பக்கம் பொறாமை என்பது நம் மனத்தின் எண்ணமே தவிர, வெளியில் அது உண்மையாக இல்லை. நம் மனத்தில்தான் நாம் எண்ணங்களை உருவாக்கிக்கொண்டு பொறாமை கொள்கின்றோம்.


Tuesday, January 18, 2022

ஆண்டவரின் போர்

இன்றைய (19 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 17:32-33,37,40-50)

ஆண்டவரின் போர்

தாவீது கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றிபெறும் நிகழ்வை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். 

இந்த நிகழ்வு நமக்கு மூன்று பாடங்களைக் கற்றுத் தருகின்றது:

(அ) தானாக முன்வருதல்

கோலியாத் பற்றிய அச்சத்தில் மக்கள் இருந்தபோது, அவரை எதிர்கொள்வதற்குத் தாமாகவே முன்வருகின்றார் தாவீது. தாவீதின் இறைநம்பிக்கையே அவருடைய தன்னம்பிக்கையின் ஊற்றாக இருக்கிறது. ஆண்டவர் தன்னோடு இருக்கிறார் என்ற ஆழ்ந்த நம்பிக்கை அவருடைய முன்னெடுப்புக்கும் முன்னேறிச் செல்தலுக்கும் காரணமாக இருக்கின்றது.

(ஆ) ஆண்டவரின் போர்

கோலியாத்தின்மேல் கூழாங்கல்லை எறியும் தாவீதின் செயலைப் பார்க்கும்போது, தாவீதின் செயலுக்கும் கோலியாத்தின் வீழ்ச்சிக்கும் தொடர்பே இல்லாதது போல இருக்கிறது. தாவீது 'வழவழப்பான ஐந்து கூழாங்கற்களை எடுக்கின்றார்.' கவனில் வைத்து எய்யப்படுகின்ற கல் கூர்மையானதாக அல்லது சொரசொரப்பானதாக இருக்க வேண்டும். வழவழப்பான கல் நழுவி ஓடும். மேலும், தாவீது தன் பைக்குள் கையை விட்டு குத்துமதிப்பாக ஒரு கல்லை எடுக்கின்றார். வழவழப்பான கல் நெற்றியில் பதிந்தது என எழுதுகின்றார் ஆசிரியர். இதுவும் ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் வழியாக முழுக்க முழுக்க ஆண்டவரே இந்நிகழ்வை நடத்துகின்றார் என்பது தெளிவாகிறது.

(இ) தன்மேல் கவனம்

தாவீது கோலியாத்தை அணுகிச் செல்லும்போது அவரைச் சபிக்கின்றார் கோலியாத்து. ஆனால், அதைக் கண்டுகொள்ளவில்லை தாவீது. தன் கவனம் சிதறாதவாறு பார்த்துக்கொள்கின்றார் தாவீது. மேலும், கோலியாத்தின் எவ்வித எதிர்மறையான வார்த்தைகளுக்கும் எதிர்வினை ஆற்றவில்லை தாவீது.

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் கோலியாத்துகள் நிறையவே இருக்கின்றன. நம் குடும்பத்தில், பணித்தளத்தில், சமூகத்தில் என நாம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளும் நெருக்கடிகளும் கூடிக்கொண்டே இருக்கின்றன. 'இது ஆண்டவரின் போர்!' என்ற எண்ணம் ஒன்றே நம்மை உந்தித் தள்ளும்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 3:1-6), ஓய்வுநாளில் தொழுகைக்கூடத்தில் நலம் தருகின்றார் இயேசு. ஆனால், இயேசுவின் இச்செயல் அவருடைய எதிரிகளின் கோபத்தைத் தூண்டுகிறது. இருந்தாலும் அவர்களை எதிர்கொள்கின்றார் இயேசு.

Monday, January 17, 2022

இன்னொரு சிறுவன்

இன்றைய (18 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 16:1-13)

இன்னொரு சிறுவன்

'உன் பிள்ளைகள் இத்தனை பேர்தானா?' என்று சாமுவேல் கேட்க, 'இன்னொரு சிறுவன் இருக்கிறான். அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான்' என்று பதிலளித்தார் ஈசாய்.

சவுலை ஆண்டவர் புறக்கணித்துவிடுகின்றார். இஸ்ரயேல் மக்களுக்கென இன்னொரு அரசரை அருள்பொழிவு செய்யுமாறு சாமுவேலை ஆண்டவர் அனுப்புகின்றார். இந்த இடத்தில், அன்று விளங்கிய அரசியல் காழ்ப்புணர்வைச் சற்றே புரிந்துகொள்தல் நலம். சவுல் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர். தாவீது யூதா குலத்தைச் சார்ந்தவர். இந்த இரு குலங்களுக்கும் இடையே பனிப்போர் இருந்துகொண்டே வந்தது. தன் எதிரியின் குலத்தை இழிவு செய்வதும், தன் குலத்தை மேன்மையாக எழுதுவதும் இயல்பு. சாமுவேல் யூதா குலத்தைச் சார்ந்தவர். ஆக, பென்யமின் குலத்திலிருந்து வந்த தலைமைத்துவம் தோல்வியாக முடிந்தது என்றும், யூதா குலத்திலிருந்து வரவருக்கின்ற தலைமைத்துவமே வெற்றியாக மலரும் என்று ஆசிரியர் சொல்ல விழைகின்றார். மேலும், விவிலிய நூல்கள் பெரும்பாலும் யூதா குலத்து ஆசிரியர்களால் எழுதப்பட்டவை. அவர்கள் தங்கள் குலத்தையும், தங்கள் குலத்தின் தலைவர்களையும் பற்றி பெருமையாகவே எழுதுகின்றனர்.

சவுல் மற்றும் தாவீது ஆகியோரின் அறிமுகங்களை நாம் சற்றே ஆய்ந்து பார்ப்போம்:

(அ) சவுல் கழுதையைத் தேடி வருகின்றார். தாவீது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கின்றார். 'கழுதை' என்பது அன்றைய வாகனமாகக் கருதப்பட்டாலும், 'கழுதை மேய்த்தல்' அல்லது 'கழுதை தேடுதல்' என்பது இழிதொழிலாகக் கருதப்பட்டது. மாறாக, உணவு மற்றும் உடைக்குப் பயன்படும் ஆடு வளர்த்தல் மேன்மையான செயலாகக் கருதப்பட்டது. பென்யமினிலிருந்து வரும் தலைவர் கழுதை மேய்க்கின்றார். யூதாவிலிருந்து வரும் தலைவர் ஆடு மேய்க்கின்றார்.

(ஆ) சவுல் இளைஞராக இருந்தார். தாவீது சிறுவனாக இருந்தார். வயதில் குறைந்தவராக இருந்தாலும் ஆண்டவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர் தாவீது என்று தாவீதை மேன்மைப்படுத்துகின்றார் ஆசிரியர்.

(இ) சவுல் இளமையும் அழகும் கொண்டவராக இருக்கிறார். தாவீது சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் உடையவராக இருந்தார். ஒருவரின் இளமையும் அழகும் மாறக் கூடியவை. ஆனால், மேனியின் நிறமும் கண்களின் ஒளியும் என்றும் நிலைத்திருப்பவை. ஆக, நிலையற்ற அழகைக் கொண்டவர் சவுல் என்றும், நிலையான அழகைக் கொண்டவர் தாவீது என்றும் பிரிவு பாராட்டுகின்றார் ஆசிரியர்.

சாதிய அல்லது இன அல்லது குழு சார்பு மற்றும் வெறுப்பு என்பது மனித குலம் தோன்றியதிலிருந்தே இருக்கின்றது. பென்யமின் மற்றும் யூதா குலத்திற்கு இடையேயான இந்த வெறுப்பு அரசியல் நமக்கு அதிர்ச்சி தருகின்றது. 'தாவீதின் மகன் இயேசு' என்று நாம் வழங்கும் சொல்லாடல் கூட கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டுமோ என்று தோன்றுகின்றது! ஏனெனில், இதுவும் ஓர் அரசியல் சொல்லாடலே! 

பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் அழகாகச் சொல்வார்: 'இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போராட்டம் தொடங்கி, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டை வரை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது சமயமும் அரசியலுமே. சமயத்தையும் அரசியலையும் இணைத்தே சொல்பவை புனித நூல்களே.'

சாமுவேல் நூலின் அரசியலை ஒரு பக்கம் விடுத்து, தாவீது தெரிந்துகொள்ளப்படும் இந்தப் பகுதி நமக்குத் தரும் செய்தி என்ன?

கடவுள் எளியவரைத் தெரிந்துகொள்கின்றார். அவருடைய தெரிதல் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. 'எளியவரைத் தெரிந்துகொள்கின்றார்' என்று நாம் சொல்லும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அப்படி எனில், 'கடவுள் வலியவரைத் தெரிந்துகொள்வதில்லையா?' 'கடவுள் பாகுபாடு பார்ப்பவரா?' என்ற கேள்விகள் எழக் கூடும்.

சாமுவேல் தோற்றத்தையும் உயரத்தையும் பார்க்கின்றார். ஏனெனில், சவுலின் உயரமே முன்னொரு முறை சாமுவேலின் கண்களில் பட்டது. சாமுவேலின் பார்வையை மாற்றுகின்றார் கடவுள்.

தான் எதற்காக அழைக்கப்பட்டோம் என்று தாவீது எண்ணிப் பார்ப்பதற்குள், அவருடைய தலையின்மேல் எண்ணெய் ஊற்றப்படுகின்றது. 'இதற்கு நீ சம்மதிக்கிறாயா? இது உனக்கு விருப்பமா?' என்று வாழ்க்கை நம்மிடம் அனுமதியும் விருப்பமும் கேட்பதில்லை. 'நம் கன்னத்தில் அறைகிறது' அல்லது 'நம் தலையில் எண்ணெய் வார்க்கிறது.'

'ஆண்டவரின் ஆவி தாவீதின்மேல் நிறைவாக இருந்தது' எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

என்னதான் விவிலியத்தில் அரசியல் இருந்தாலும், அனைத்தையும் கடந்து நிற்பது என்னவோ ஆண்டவரின் ஆவியே.


Sunday, January 16, 2022

நீக்கிவிட்டார்!

இன்றைய (17 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 15:16-23)

நீக்கிவிட்டார்!

சவுல் ஆண்டவராகிய கடவுளால் நிராகரிக்கப்படுவதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இஸ்ரயேலின் போர் விதிகளில் ஒன்று எதிரி நாட்டை அழிக்கும்போது முற்றிலும் - ஆண்கள், பெண்கள், ஆடுகள், மாடுகள், விளைச்சல் - அழிக்க வேண்டும். ஏனெனில், அப்படி அழிக்காமல் விடப்படுகின்ற ஒன்று, இஸ்ரயேல் மக்களை ஆண்டவராகிய கடவுளின் உடன்படிக்கைப் பிரமாணிக்கத்திலிருந்து மாற்றக் கூடும். 

அமலேக்கியருடன் நேர்ந்த சண்டையில் அரசர் மற்றும் ஆண்கள் கொல்லப்பட, சவுல் சில ஆடு, மாடுகளைக் கொல்லாமல் விடுகின்றார். நிகழ்வின்படி, தன் வீரர்கள் அப்படிச் செய்ததாக சாமுவேலிடம் சவுல் சொல்கின்றார்.

சவுலின் சறுக்கலுக்கான காரணங்கள் எவை?

(அ) கீழ்ப்படியாமை

'கீழ்ப்படிதல் பலியைவிடச் சிறந்தது' என சவுலுக்கு அறிவுறுத்துகின்றார் சாமுவேல். கீழ்ப்படியாமை என்பது செயல். அதைத் தூண்டுவது ஆணவம் என்னும் உணர்வு. சவுல் தன்னைக் கடவுளுக்கு இணையாக்கிக் கொண்டு தனக்கென வரையறைகள் வகுக்கக் தொடங்குகிறார். அதுவே கீழ்ப்படியாமை என்னும் செயலாக மாறுகிறது.

(ஆ) இலக்கு வழிகளை நியாயப்படுத்துமா?

அறநெறியில் உள்ள முக்கிய விதிகளில் ஒன்று: 'நல்ல இலக்குகள் கெட்ட வழிகளை நியாயப்படுத்துவதில்லை.' தேர்வில் முதல் மதிப்பெண் வாங்குவது நல்ல இலக்கு. ஆனால், நான் அடுத்தவரைப் பார்த்து எழுதி அதை வாங்கினாலும் பரவாயில்லை என நினைத்தல் தவறு. ஆடு, மாடுகளைப் பலியிடுவதற்காக விட்டு வைத்ததாகச் சொல்கின்றார் சவுல். பலி செலுத்துதல் என்னும் இலக்கு நல்லதுதான். ஆனால், நல்ல இலக்கு கெட்ட வழியை ஒருபோதும் நியாயப்படுத்துவது இல்லை (End never justifies the means).

(இ) பொறுப்புணர்வின்மை

தான் அரசராக இருந்தாலும், தன் வீரர்கள்மேல் பொறுப்பைச் சுமத்திவிட்டு தான் விலகிக் கொள்ள நினைக்கின்றார் சவுல். அரசராக இருந்து போரை வழிநடத்தியதால் வெற்றி, தோல்வி என அனைத்துக்கும் அவரே பொறுப்பானவர்.

கடவுள் நம்மை உயரே தூக்கி நிறுத்துகின்றார். அந்த உயரத்தில் நிற்கத் தொடர் முயற்சி அவசியம்.

Friday, January 14, 2022

கழுதை தேடி வந்தவர்

இன்றைய (15 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 9:1-4, 17-19, 10:1)

கழுதை தேடி வந்தவர்

சாமுவேல் 1 மற்றும் 2ஆம் நூல்கள் மிக அழகான கதையாடல்களைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு புரட்டிப்போடுதல்கள் இக்கதையாடல்களில் நடக்கின்றன. மனித வாழ்வின் எதார்த்தங்கள், ஏமாற்றங்கள், உயர்வுகள், தாழ்வுகள், உணர்வுப் பிறழ்வுகள், உறவுப் பிறழ்வுகள் என்று பிண்ணி நிற்கும் கதையாடல்கள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி போல இருக்கின்றன.

கழுதையைத் தேடி வந்தவர் அரசர் ஆகிறார் - இதுதான் இன்றைய முதல் வாசகத்தின் சுருக்கம்.

நேற்றைய வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் கேட்டுக்கொண்டபடி அவர்களுக்கென ஓர் அரசரை நியமிக்குமாறு சாமுவேலுக்கு அறிவுறுத்துகின்றார் ஆண்டவராகிய கடவுள். இன்றைய வாசகத்தில், அந்த அரசரை அவர் அடையாளம் காட்டுகின்றார்.

சவுல் பென்யமின் குலத்தைச் சார்ந்தவர். பென்யமின் யாக்கோபின் கடைசி மகன். ஆக, இந்தக் குலமும் கடைநிலைக் குலமாக இருந்தது. ஆனால், இந்தக் கடையனையே முதல்வன் ஆக்குகின்றார். சவுலைப் பற்றிய மூன்று பெயரெச்சங்கள் இங்கே கவனிக்கத்தக்கவை: (அ) சவுல் இளமை கொண்டவர், (ஆ) சவுல் அனைத்து இஸ்ரயேல் ஆண்களை விட அழகுடையவர், (இ) சவுல் அனைவரையும் விட உயரமானவர். தங்கள் அரசரைப் பற்றிய மிகைப்படுத்துதலாக இது இருந்தாலும், இம்மூன்று பெயரெச்சங்களும் முக்கியமானவை. 'இளமை கொண்டவர்' என்பதால் ஆற்றல் அதிகம் உள்ளவர் சவுல். 'அழகுடையவர்' என்பதால் அனைவரையும் ஈர்க்கக் கூடியவர். உடல்சார் அழகும் ஈர்ப்புத்தன்மையும் முக்கியமில்லை என நாம் பல நேரங்களில் நினைக்கின்றோம். ஆனால், நாம் எடுக்கும் முடிவுகள் பல இவற்றை மையப்படுத்தியதாகவே இருக்கின்றன. 'உயரமானவர்' என்பதால் போரில் மிகவும் பயன்படக் கூடியவர். ஏனெனில், எதிரிகள் பார்ப்பதை விட இவரால் அதிகமாகப் பார்க்க முடியும்.

'பணியாளன் ஒருவனைக் கூட்டிக்கொண்டு கழுதைகளைத் தேடிப் போ!' என அவரை அனுப்புகிறார் அவருடைய தந்தை.

நிகழ்வை முழுவதும் படித்தால் இன்னும் அழகாக இருக்கும். சில பெண்கள் தண்ணீர் எடுக்கச் செல்கிறார்கள். விவிலியத்தில் தண்ணீர், குளம், கிணறு என வரும் இடங்கள் முக்கியமானவை. ஏனெனில், அந்த நிகழ்வுகளில் திருமணம் நடக்கும். இஸ்ரயேலின் அரசன் என்னும் மணமகனாக மாறுகிறார் சவுல்.

'ஆண்டவர் தம் உரிமைச் சொத்துக்குத் தலைவனாக இருக்கும்படி உன்னைத் திருப்பொழிவு செய்துள்ளார் அன்றோ?' என்று சொல்லி சவுலை அருள்பொழிவு செய்கின்றார் சாமுவேல். 'அன்றோ?' என்ற கேள்வி வாசகருக்கு நெருடலைத் தருகின்றது. ஏனெனில், தான் திருப்பொழிவு செய்யப்பட்ட நிலையை விரைவில் மறந்துவிடுகின்றார் சவுல். 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் ஆச்சர்யமானவை. நாம் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையோடு நாம் இறந்துவிட்டோம். இனி வருவதெல்லாம் நமக்கு ஆச்சர்யங்கள் என அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் வாழ்க்கை இனிதாகும். சாதாரண கழுதையைத் தேடி வந்தவரைக் கடவுள் இஸ்ரயேலின் முதல் அரசராக மாற்றுகின்றார். கடவுள் நம் வாழ்வில் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள் மேன்மையானவை.

(ஆ) மேலானதைக் கண்டவுடன் கீழானதை விட வேண்டும். அரசர் நிலைக்கு நாம் உயர்த்தப்பட்டால் கழுதையைத் தேடுவதை விட வேண்டும். 'கழுதை கிடைத்துவிடும். நீ அந்தக் கவலையை விடு! நீ பட வேண்டிய கவலை மக்களைக் குறித்து!' என சவுலின் பார்வையை மாற்றுகின்றார் சாமுவேல். ஆனால், சில ஆண்டுகளில் சவுல் அமலேக்கியரின் ஆடு, மாடுகளைப் பிடித்து வைத்துக்கொண்டதன் நிமித்தம் தன் அரச நிலையை இழக்கின்றார். அரசராக மாறினாலும், அவருடைய எண்ணம் என்னவோ கழுதைமேலேயே இருந்தது. பாவம் சவுல்!

(இ) அன்றாட வாழ்வின் பணிகள். அன்றாட வாழ்வின் பணிகளை நாம் எவ்வளவு மேன்மையாகச் செய்ய வேண்டுமோ அவ்வளவு மேன்மையாகச் செய்ய வேண்டும். அந்தக் காலத்தில் கழுதையைத் தேடிச் செல்தல் என்பது காணாமல் போன இன்றைய பென்ஸ் அல்லது பிஎம்டபுள்யு வாகனத்தைத் தேடிப் போவது. 'போதும் பார்த்துக்கொள்ளலாம்!' என ஓய்ந்துவிடாமல், அதை எப்படியாவது காண வேண்டும் என்று தேடியதால்தான் திருக்காட்சியாளரான சாமுவேலிடம் வருகின்றார் சவுல். 'இதுதான் நான். இவ்வளவுதான் என் வேலை' எனச் சுருக்கிக் கொள்ளாமல் நாம் நம் எல்லைகளை விரித்துக்கொண்டே சென்றால், வாழ்க்கை நமக்கு நிறைய ஆச்சர்யங்களோடு காத்திருக்கின்றது.

சவுல் தன் பணியைச் சரியாக முடிக்கவில்லை என்றாலும், அவரின் தொடக்கம் என்னவோ மிகவும் அழகாகவே இருந்தது.

ஏனெனில், சவுல் அழகானவர்!


Thursday, January 13, 2022

அரசனைத் தாரும்

இன்றைய (14 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 8:4-7, 10-22)

அரசனைத் தாரும்

நேற்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் சமூகத்தில் அருள்பணி நிலை சந்தித்த பிறழ்வுகளைக் கண்டோம். இன்றைய வாசகத்தில், இறைவாக்குப் பணி நிலையும் பிறழ்வுகளைச் சந்திக்கிறது. 'இதோ, உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறைகளில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்!' என இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கேட்கின்றனர். மூன்று காரணங்களுக்காக அவர்கள் தங்களுக்கென அரசரை வேண்டுகிறார்கள்: ஒன்று, இறைவாக்கினர் சாமுவேலின் மகன்கள் தலைமைத்துவப் பண்பு இல்லாதவர்களாக இருந்தனர். இரண்டு, அண்டை நாட்டவர்கள் கொண்டிருந்த அரசர்கள் அவர்களுக்கென ஓர் அடையாளமாக இருந்தனர். கடவுள் இஸ்ரயேல் மக்களின் அரசராக இருந்தாலும், அவர் மற்ற அரசர்களைப் போல காணக் கூடிய நிலையில் அரசாளவில்லை. மூன்று, தங்களுக்கென நீதி வழங்க – அதாவது, நன்மை தீமையைக் கண்டறிந்து சொல்ல, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண. 

இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பம் சாமுவேலுக்கும் ஆண்டவராகிய கடவுளுக்கும் மனவருத்தம் தருகின்றது. அரசனின் உரிமைகள் எனச் சிலவற்றைப் பட்டியலிடுகின்றார் சாமுவேல். பிந்தைய அரசர்கள் அனுபவித்த உரிமைகளின் பின்புலத்தில் இந்த லிஸ்ட் எழுதப்பட்டிருக்கலாம். அரசன் மக்களின் பிள்ளைகள், கால்நடைகள், விளைச்சல், உடைமை ஆகிய அனைத்தின்மேலும் உரிமை கோருகிறான். பின்நாள்களில் தங்களுடைய அரசர்களின் சிலைவழிபாட்டால்தான் இஸ்ரயேல் மக்கள் அசீரியா மற்றும் பாபிலோனியாவின் அடிமைகளாக மாறுகின்றனர். மக்கள் கடவுளிடம் தங்களுடைய அரசருக்கு எதிராக முறையிட்டபோது ஆண்டவர் அவர்களுடைய குரலுக்குச் செவிகொடுக்கவில்லை.

முதலில் இஸ்ரயேல் மக்களின் விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்க மறுத்த ஆண்டவர், தன் மனத்தை மாற்றிக்கொண்டு, 'அவர்கள்மீது ஓர் அரசனை ஆளச் செய்' என்று சாமுவேலுக்குக் கட்டளையிடுகின்றார்.

இறைவனின் தலைமையை ஏற்க மறுக்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் தலைமையை ஏற்ற மக்கள் கூட்டம் அவர் பேசுவதைக் கேட்க வீடு முழுவதும் நிரம்பி நிற்கின்றது. முடக்குவாதமுற்ற தங்கள் நண்பர் ஒருவரை இயேசுவிடம் அழைத்து வருகின்ற நால்வர் வீட்டின் கூரையைப் பிரித்து அவரை இயேசுவின் முன் இறக்குகின்றனர். இயேசுவும் அந்த நபருக்கு நலம் தருகின்றார். மக்களின் உள்ளத்தின்மேலும், அவர்களிடமிருந்து பாவத்தை மன்னிப்பதன் வழியாக, அரசராக ஆளுகின்றார் இயேசு.

'ஆளுதல்' என்பது மிக முக்கியமான பணி. 

வாகனத்தை இயக்குகின்ற ஓட்டுநர் அதன் நகர்தலைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கின்றார். ஒரு சுக்கான் கயிற்றை வைத்து மாலுமி தன் கப்பலின் திசையை மாற்றுகின்றார். நம்மை நாமே நெறியாளுகை செய்யவும், நம் இலக்கு நோக்கி நம்மை வழிநடத்தவும், நம் தெரிவுகளை வரையறை செய்யவும் நமக்கென ஓர் ஆளுகை தேவைப்படுகின்றது. 

காற்றில் அடித்துச் செல்லும் காகிதம் போல இருந்த இஸ்ரயேல் மக்கள் தங்களைப் பட்டமென வழிநடத்த அரசரை வேண்டுகின்றனர். ஆனால், அவர்களின் அரசர்கள் காகிதமாக அவர்களைக் கசக்கி வீசினர் என்பதே எதார்த்தம்.

நான் என்னை எப்படி அரசாளுகிறேன்? பாவம் என்மேல் ஆட்சி செலுத்தாமல் இருக்க, நான் இயேசுவிடம் வருகிறேனா?


Wednesday, January 12, 2022

கடவுளின் பேழை

இன்றைய (13 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 4:1-11)

கடவுளின் பேழை

வெளிப்புற அடையாளங்களும் பொருள்களும் நம்மைக் காப்பாற்ற இயலாது, மாறாக, நம் அக இயல்பே நம்மைக் காப்பாற்ற இயலும் எனக் கற்பிக்கிறது இன்றைய முதல் வாசகம்.

முதல் வாசகத்தின் சூழல், பெலிஸ்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையேயான போர். போரில் இஸ்ரயேல் மக்கள் நான்காயிரம் பேர் இறக்கின்றனர். தங்கள் தோல்விக்கான காரணத்தை ஆய்ந்தறிகின்ற இஸ்ரயேலின் பெரியோர்கள் தங்களிடம் கடவுளின் உடன்படிக்கைப் பேழை இல்லாததால் தாங்கள் தோல்வி அடைந்ததாக எண்ணி, பேழையை சீலோவிடமிருந்து கொண்டு வருகின்றனர். பேழை நகருக்குள் வந்தவுடன் கடவுளின் மாட்சி தங்களிடம் வந்துவிட்டதை உணர்ந்து ஆர்ப்பரித்து அக்களிக்கின்றனர். இந்த ஆர்ப்பரிப்பு எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. மறுபடியும் நடக்கின்ற போரில், இஸ்ரயேல் மக்கள் முப்பதாயிரம் பேர் மடிகின்றனர். ஏறக்குறைய பத்து மடங்கு அதிக மக்கள் இறக்கின்றனர்.

கடவுளின் பேழை தங்களோடு இருந்தும் இஸ்ரயேல் மக்கள் தோல்வி அடைந்தது ஏன்?

மூன்று காரணங்களை இங்கே குறிப்பிடலாம்:

ஒன்று, வெறும் வெளிப்புற அடையாளங்கள் மேல் நம்பிக்கை. அதாவது, கடவுளின் உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாக இருப்பதை விடுத்து, அந்த உடன்படிக்கைப் பேழை தங்களோடு இருந்தால் போதும் என்ற மனநிலையில் இஸ்ரயேல் மக்கள் இருந்தனர். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு இரவு பற்றிய அச்சம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்த அச்சத்தைப் போக்க அவர் தன்னிடம் ஒரு புனிதப் பொருளை எப்போதும் வைத்துக்கொள்கின்றார். ஆனால், ஒருநாள் இரவில் வெளியே செல்லும்போது அச்சப்பட்டு நோய்வாய்ப்படுகின்றார். அவர் தன் மனத்திலிருந்த அச்சத்தை அகற்றுவதை விடுத்து, வெளிப்புறப் பொருள் தன்னைக் காப்பாற்றும் என நினைத்ததால் இப்போது நோய்வாய்ப்படுகின்றார்.

இரண்டு, தலைவர்களின் தகுதியின்மை. உடன்படிக்கைப் பேழையைத் தூக்கிக்கொண்டு வந்தவர்கள் ஏலியின் புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் என பதிவு செய்கின்றார் ஆசிரியர். இதற்கு முந்தைய பகுதியில் இவ்விருவரும் கடவுளுக்கென படைக்கப்பட்ட பலிப்பொருள்களைத் தங்களுடையதாக்கிக் கொள்கின்றனர். மேலும், சந்திப்புக் கூடாரத்தில் பணிபுரிகின்ற பெண்களோடு தகாத உறவில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக, நிர்வாகம் மற்றும் பாலியல் பிறழ்வுகளில் ஈடுபடுகின்றனர். இதைக் குறித்து அவர்களுடைய தந்தை ஏலி அவர்களை எச்சரிக்கின்றார்: 'நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்து மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகள் பற்றிக் கேள்விப்படுகிறேனே. வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல. ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வெறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால், ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்?' (1 சாமு 2:23-24). புதல்வர்கள் தங்கள் தந்தையின் எச்சரிக்கைக்குச் செவிசாய்த்து தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவில்லை. அதாவது, 'என்னை விட்டால் யாரும் இல்லை' என்ற மேட்டிமை உணர்வே அவர்களை இப்பிறழ்வுகளுக்கும் கடின உள்ளத்திற்கும் இட்டுச் சென்றது. தகுதியற்ற நிலையில் அவர்கள் இறைவனுக்குப் பணி செய்ததால் அனைவர்மேலும் அவர்கள் தண்டனையை வருவிக்கின்றனர்.

மூன்று, வழிகாட்டக் கூடிய தலைமையின்மை. போரில் இஸ்ரயேல் மக்களை வழிநடத்த அவர்களுக்கென்று தலைவர்கள் இல்லை. இதன் காரணமாகத்தான் அவர்கள் சாமுவேலிடம் தங்களுக்கென்ற ஓர் அரசனைக் கேட்கின்றனர். ஒரு தலைமை இல்லாதபோது அனைவரும் தங்களையே தலைவர்கள் ஆக்கிக்கொள்ள முயற்சி செய்வர். பல தலைமை ஒரே இடத்தில் இயங்குவது நிறுவனத்திற்குத் தோல்வியையே தருகின்றது.

இன்று நம் ஆன்மிக வாழ்விலும் சில 'ஆடோமேடிக் நம்பிக்கைகளை' நாம் கொண்டிருக்கலாம். திருப்பலி, நவநாள், செபமாலை, திருப்பயணம் போன்றவற்றில் நான் தவறாமல் இருக்கிறேன். ஆகையால் எனக்குத் தீங்கு எதுவும் நடக்காது என்று நினைக்கலாம். ஆனால், நம் உளப்பாங்கு புதுப்பிக்கப்பட்டு, நம் வாழ்வுப் பாதையில் மாற்றம் இல்லை என்றால், நாமும் வாழ்வில் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடலாம்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற தொழுநோயாளர், தன் நோயை நீக்குமாறு இயேசுவிடம் வேண்டுகின்றார். இயேசுவும் அவருக்கு நலம் தருகின்றார்.

இறைவனிடம் சரணாகதி அடைதல் நம் வெளிப்புறச் சடங்குகளை விட மேன்மையானது.


Tuesday, January 11, 2022

ஆண்டவரின் வார்த்தை

இன்றைய (12 ஜனவரி 2022) முதல் வாசகம் (1 சாமு 3:1-10,19-20)

ஆண்டவரின் வார்த்தை

இன்றைய முதல் வாசகம் சாமுவேலின் அழைப்பு நிகழ்வை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மிக நேர்த்தியாக எழுதப்பட்ட எபிரேய விவிலியப் பகுதிகளுள் இதுவும் ஒன்று. எபிரேயத்தில் வாசிக்கும்போது இதில் உள்ள சில சொல்லாடல்கள் மொழிபெயர்ப்புச் சிக்கல்களையும் தருகின்றன. 

'ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது' என்ற சோகமான வாக்கியத்துடன் நிகழ்வு தொடங்குகிறது. ஏனெனில், ஆண்டவருடைய பணிக்கென தேர்ந்துகொள்ளப்பட்ட நீதித்தலைவர்கள் மக்களை சிலைவழிபாட்டுக்குள் இட்டுச்சென்றனர். ஏலியின் மகன்கள் அதிகாரப் பிறழ்வு மற்றும் பாலியல் பிறழ்வு கொண்ட குருக்களாகப் பணியாற்றினர். ஆண்டவருடைய வார்த்தையைக் கேட்க ஆள்கள் இல்லாமல் போனதால், அவருடைய வார்த்தையும் அரிதாகப் போகின்றது. இதைத்தான், 'இறைவார்த்தைப் பஞ்சம்' என எச்சரிக்கின்றனர் இறைவாக்கினர்கள். உணவுப் பஞ்சத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், இறைவார்த்தைப் பஞ்சத்தை எப்படித் தாங்குவது?

தொடர்ந்து, நிகழ்வில் ஏலி படுத்திருக்கிறார் – அதாவது, பணி செய்ய இயலாத அளவுக்கு மூப்பு. கண் பார்வை மங்கிவிட்டதால் அவரால் காண இயலவில்லை. இருந்தாலும், 'கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை'. இதுதான் கடவுளின் மாட்சி. மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், கடவுள் அங்கே, அவர்கள் நடுவே தன் ஒளியை ஒளிரச் செய்கின்றார். 

கடவுளின் பேழை வைக்கப்பட்ட இடத்தில் சாமுவேல் தூங்குகிறார். இந்த வரியைக் கற்பனை செய்து பார்த்தாலே நம் உடல் சிலிர்க்கிறது. கடவுளின் மாட்சி உறைந்து நிற்கும் ஒரு பேழை – அதாவது, கடவுளே அங்கு இருக்கிறார். அந்த இடத்தில் ஓர் இளவல் கையை மடக்கி, காலைச் சுருக்கித் தூங்குகிறான்.

'சாமுவேல்' என ஆண்டவர் அழைக்க, அருகிலிருந்த பேழையைப் பார்க்காமல், அடுத்த அறையிலிருந்து ஏலியைத் தேடி ஓடுகின்றார் இளவல். இரண்டாம் முறையும் இப்படியே நடக்கின்றது. 'சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை' என்று ஒரு வாக்கியத்தைப் பதிவிடுகின்றார் ஆசிரியர். மூன்றாம் முறையாக ஓடியபோதுதான் ஏலி உணர்கின்றார். வார்த்தை அரிதாக இருந்ததால் ஏலியும் ஆண்டவரை மறந்துவிட்டார். 'ஆண்டவரே, பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்று சொல்லுமாறு ஏலி அறிவுறுத்த, சாமுவேலோ, 'பேசும், உம் அடியான் கேட்கிறேன்' என்கிறார். இதன் மறைபொருள் இந்நாள் வரை விளங்கவில்லை. 

இந்த இடத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது.

'ஆண்டவர் சாமுவேலோடு இருந்தார். சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை' எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

ஆண்டவரின் வார்த்தையை சாமுவேல் கேட்டதால், அவரின் வார்த்தைகள் நம்பிக்கைக்கு உரியதாக மாறுகின்றன. வார்த்தைகள் அரிதாக இருக்கும்வரை தான் அவற்றுக்கு மதிப்பு. ஏனெனில், வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. அவை செயல்கள். 

நற்செய்தி வாசகத்தில், பல அரும் அடையாளங்கள் நிகழ்த்தி, பலரைக் குணமாக்கிய இயேசு தனியே இறைவேண்டல் செய்கின்றார் இரவு முழுவதும். காலையில் அவரைத் தேடி வருகின்ற சீடர்கள், 'எல்லாரும் உம்மைத் தேடுகிறார்கள்' என்று சொன்னபோது, 'வாருங்கள். வேறிடம் செல்வோம்!' என்கிறார் இயேசு.

தான் அரிதாக இருக்க விரும்புகின்றார் இயேசு.

அரிதாக இருக்கும் வரைதான் மதிப்பு இருக்கிறது.

'நேற்றும் இங்கு வந்தார். இன்றும் இங்கும் வருகிறார். நாளையும் இங்கு வருவார்' என்று மக்கள் கூட்டம் இயேசுவை நினைக்கத் தொடங்கிவிட்டால், அவர் சாதாரண நபராக மாறிவிடுவார். தன் வார்த்தையும் செயலும் முன்னிலையும் அரிதாக இருக்க வேண்டும் என விரும்புகின்ற இயேசு, தானே அடுத்த ஊருக்குச் செல்கின்றார்.

ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்ததால் அது மதிப்புக்குரியதாக இருந்தது.

இயேசுவின் பிரசன்னம் அரிதாக இருந்ததால் மக்கள் அதைத் தேடி வந்தனர்.

நம் வார்த்தைகளும், இருத்தலும் அரிதாக – மதிப்புக்குரியதாக - இருந்தால் நலம். அரிதாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? அமைதி காக்க வேண்டும். நமக்குள்ளேயே ஆழமாகச் செல்ல வேண்டும். ஏனெனில், ஆழத்தில்தான் பொன்னும் வைரமும் இருக்கின்றன. 

Monday, January 10, 2022

தீய ஆவி

இன்றைய (11 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 1:21-28)

தீய ஆவி

இயேசு தொழுகைக்கூடத்திலிருந்த தீய ஆவியை விரட்டும் நிகழ்வை வாசிக்கும்போதெல்லாம், நற்செய்தியாளர்களின் நகைச்சுவை உணர்வுதான் என் நினைவுக்கு வரும். நற்செய்தியாளர்கள் தங்கள் நூல்களை எழுதிய காலத்தில் புதிய நம்பிக்கையைத் தழுவியவர்கள், அதாவது இயேசுவை கிறிஸ்து என ஏற்றுக்கொண்டவர்கள் யூதர்களின் தொழுகைக்கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் தொழுகைக்கூடத்தைக் கேலி செய்யும் நோக்குடன் நற்செய்தியாளர் தம் பதிவை எழுதியிருக்கலாம். அதாவது, தீய ஆவி பிடித்தவர்கள்தாம் தொழுகைக்கூடத்திற்கு வருவார்கள் என்றும், தொழுகைக்கூடத்தில் இருப்பது தீய ஆவிதான் என்றும் முரணைப் பதிவு செய்ய விரும்பியிருப்பார் ஆசிரியர். மேலும், தொழுகைக்கூடத்தில் உள்ள தீய ஆவியை ஓட்டுகின்ற அதிகாரம் யூத சமயத்திற்கு அல்ல, மாறாக, தங்கள் இயேசு கிறிஸ்துவுக்கே உள்ளது என்று குறிப்பிடுவதற்காக எழுதியிருப்பார்.

நிகழ்வின்படி, தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்த நபர் ஒருவர் இருக்கின்றார். இயேசு வருவதைக் கண்ட அவர், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கூச்சலிடுகின்றார். இயேசு கேட்க வேண்டிய கேள்வியை அந்த நபர் கேட்கின்றார். அந்த நபரின் கூச்சலை வேறு யாரும் அதட்டுவதாக இல்லை. அவர்கள் எல்லாரும் சேர்ந்து இயேசுவிடம், 'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கேட்பது போல உள்ளது அவர்களது அமைதி.

ஆனால், இயேசு தீய ஆவியை விரட்டுகின்றார். மக்கள் அனைவரும் வியப்புறுகின்றனர்.

முதல் வாசகத்தில், அன்னா கடவுளின் முன்னிலையில் அழுது செபிப்பதைத் தவறாகப் புரிந்துகொள்கின்ற குரு ஏலி, 'குடிகாரி' என அவரைக் கடிந்துகொள்கின்றார்.

'தீய ஆவி பிடித்தவர்,' 'குடிகாரி' போன்றவை அடையாளக் குறிகள். மற்றவர்களை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்வதற்கு முன்னர் இப்படியான ஒரு லேபிள் அல்லது அடையாளக் குறியை மற்றவர்கள்மேல் பதித்துவிடுகின்றோம். இப்படி நாம் அடையாளம் இட்டுவிட்டால் அவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள முயற்சி செய்யத் தேவையில்லை.

இயேசு இவ்வகையான அடையாளங்களைக் களைகின்றார். 

இந்த நிகழ்வு நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) 'இங்கு என்ன வேலை?'

நம்மில் ஏதோ ஒரு பகுதியில் தீய ஆவி குடியிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை நாம் அதட்டி வெளியேற்றும்போது, 'உனக்கு என்ன வேலை?' என்று நம்மை அது அதட்டவும் வாய்ப்பிருக்கிறது. நம்மில் குடிகொள்ளும் தீமையை அடையாளம் காணுதல் நலம்.

(ஆ) அடையாளங்கள் மறுத்தல்

நம்மேல் மற்றவர்கள் இடும் அடையாளங்கள் நம்மைக் கட்டி வைப்பது போல, நமக்கு நாமே இடும் அடையாளங்களும் நம்மைக் கட்டிவைக்கின்றன. நம் வளர்ச்சியைத் தடுக்கின்றன. நமக்கு நாமே இட்டுகொள்ளும் எதிர்மறையான லேபிள்களை நாம் களைய முயற்சி செய்தல் வேண்டும்.

(இ) கடவுள் ஆற்றும் செயல்பாடு

அன்னாவை ஏலி கடிந்து கொண்டாலும், 'இஸ்ரயேலின் ஆண்டவர் உன் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்' என அவருக்கு ஆறுதல் சொல்கின்றார். இயேசுவை தீய ஆவி பிடித்த நபர் கடிந்துகொண்டாலும், அவர் அவரைக் குணமாக்குகின்றார். இறைவன் குறுக்கிடும்போது நம் வாழ்வில் மாற்றம் நிகழ்ந்தே தீருகிறது. இறைவனின் குறுக்கீட்டை நாம் கண்டுகொள்ளத் தடையாக இருக்கின்ற காரணிகள் எவை?


Sunday, January 9, 2022

பெரிதினும் பெரிது

இன்றைய (10 ஜனவரி 2022) நற்செய்தி (மாற் 1:14-20)

பெரிதினும் பெரிது

கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து ஆண்டின் பொதுக்காலத்திற்குள் நுழைகின்றோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் பணித் தொடக்கத்தை (மாற்கு நற்செய்தியாளரின் பதிவு) வாசிக்கின்றோம். இன்று தொடங்கி சில நாள்களுக்கு சாமுவேல் முதல் நூலிலிருந்து முதல் வாசகத்தைக் கேட்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது: முதல் பகுதியில் இயேசு மனமாற்றத்தின் செய்தியை அறிவிக்கின்றார். இரண்டாம் பகுதியில் தன் முதற்சீடர்களை அழைக்கின்றார்.

'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்பதே இயேசுவின் அறிக்கையாக இருக்கின்றது. 'காலம்' என்பது விவிலியத்தில் இரு நிலைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. ஒன்று, 'க்ரோனோஸ்' – அதாவது நாள்காட்டி நேரம். 'மூன்று நாள்களுக்குப் பின்,' 'ஆறு நாள்களுக்குப் பின்' என்று நற்செய்தி நூல்களில் வரும் பதிவுகளில், இவ்வகையான நேரத்தைப் பார்க்கின்றோம். இரண்டு, 'கைரோஸ்' – அதாவது தொகுப்பு நேரம். சபை உரையாளர் நூலில், 'பிறக்க ஒரு காலம். இறக்க ஒரு காலம் ... நட ஒரு காலம். அறுவடைக்கு ஒரு காலம்' என்று சொல்லும் பகுதியில், இத்தகைய நேரத்தைக் காண்கின்றோம். நம் வாழ்வை நாம் திரும்பிப் பார்க்கும்போது, 'நாள்காட்டி நேரம்' மறைந்து, 'தொகுப்பு நேரமே' நினைவில் நிற்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் படித்துக்கொண்டிருந்த நேரம், நாம் யாரையாவது சந்தித்த நேரம், புதிய பணியில் இருந்த நேரம், அந்தப் பணி நிறைவுபெற்ற நேரம் என்று நாம் நினைவில் கொள்கின்றோம். நாள்காட்டி நேரத்தை விட தொகுப்பு நேரம் பெரியது. நாள்காட்டி நேரம் விடுத்து, தொகுப்பு நேரத்திற்குள் கடப்பதே முதிர்ச்சி. 

தன்னைப் பற்றி இறைவாக்குகள் உரைக்கப்பட்டதன் காலம் நிறைவேறியதாகவும், இறைவாக்குகள் இப்போது நிறைவேறுவதாகவும் சொல்கின்றார் இயேசு. தொடர்ந்து, 'மனம் மாறி நற்செய்தி நம்புங்கள்' என அழைக்கிறார் இயேசு. 'மனம் மாறுதல்' என்பதை 'பாதை திருப்புதல்' என்று புரிந்துகொள்ளலாம். 'நற்செய்தி' என்பது இங்கே இயேசுவையும், அவர் அறிவிக்கும் செய்தியையும் குறிக்கின்றது. அதாவது, பாதை மாறுகின்ற ஒருவர்தான் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், அவர் அறிவிக்கின்ற நற்செய்தியைப் பற்றிக்கொள்ளவும் முடியும்.

நற்செய்தி வாசகத்தில் இரண்டாம் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்த முதற் சீடர்களை, 'நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்கிறார் இயேசு. அதாவது, அவர்கள் இதுவரை கொண்டிருந்த பார்வையை மிகவே அகலமாக்குகின்றார். ஆனால், முதற்சீடர்கள் இயேசுவிடம் எந்தவொரு எதிர்கேள்வியும் கேட்கவில்லை. உடனடியாக தங்கள் வலைகளையும், தங்கள் தந்தையையும், கூலியாள்களையும், படகுகளையும் விட்டுவிட்டு இயேசுவின் பின்னால் செல்கின்றனர். இதுதான் அவர்களுடைய பாதை மாற்றம். மீன்பிடிக் காலம் முடிந்தது என்றும், இனி மனித அறுவடைக் காலம் தொடங்கியது என்றும் சீடர்கள் உணர்கின்றனர்.

முதல் வாசகத்தில், எல்கானா-அன்னா-பெனின்னா குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்கின்றார் ஆசிரியர் 'குழந்தைப் பேறு இல்லாத காலம்' மறைந்து 'குழந்தை பேற்றுக் காலம்' தொடங்குவதன் அறிமுகமாக இது உள்ளது.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) நம் பார்வையை அகலமாக்குவது. மீன்பிடித்தல் போதும் என்று குனிந்துகொண்டே இருப்பவர்கள் தங்கள் கண்முன் நிற்கும் மெசியாவையும், புதிய வாழ்க்கையையும் கண்டுகொள்ள முடியாது.

(ஆ) உடனடி பாதை மாற்றம். பழைய காரியங்களைச் செய்துகொண்டே புதிய விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. புதிய விளைவுகள் வேண்டுமெனில், முயற்சிகளும் புதியனவாக இருத்தல் வேண்டும்.

(இ) காலத்தைப் பற்றிய உணர்வு. காலத்தைப் பற்றிய உணர்வு மனிதர்களாகிய நாம் பெற்றிருக்கின்ற பெரிய கொடை. இந்த உணர்வே நம் வாழ்வை நாம் மேன்மையாக வாழ நம்மைத் தூண்டுகிறது.