ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு
I. இணைச்சட்டம் 4:1-2,6-8 II. யாக்கோபு 1:17-18,21-22,27 III. மாற்கு 7:1-8,14-15,21-23
இதய உருவாக்கம்
'கல்வியின் இதயம் என்பது, இதயத்திற்குக் கல்வி புகட்டுவது' என்பது ஆங்கிலப் பழமொழி. சமயங்களின் விதிமுறைகளின் நோக்கம் இதய உருவாக்கமே என்று முன்மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.
முதல் மற்றும் இரண்டாவது ஏற்பாடுகளில் 'கட்டளை' என்ற வார்த்தை முதன்மையானதாக இருக்கின்றது. முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு இரண்டு கட்டளைகளாக இவற்றைச் சுருக்கித் தருவதுடன், புதிய கட்டளை என்று அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகின்றார்.
இன்றைய முதல் வாசகத்தின் சூழல் மோசேயின் இரண்டாம் கட்டளை வழங்குதல். அதாவது, சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் பயணத்தில் அத்தலைமுறை மறைந்து புதிய தலைமுறை பிறக்கின்றது. புதிய தலைமுறைக்கு ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளையும் விதிமுறைகளையும் நியமங்களையும் மீண்டும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் மோசே. மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் இக்கட்டளைகளை அவர்கள் கடைப்பிடித்தல் அவசியம்.
விவிலியத்தில் சட்டம் என்பதை நாம் இன்றைய சட்டம் பற்றிய புரிதலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கொரோனா பெருந்தொற்று தடுப்பு பற்றிய விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் அரசு வெளியிடுகின்றது. அதன்படி, சிலவற்றைத் தடுக்கிறது. சிலவற்றை அனுமதிக்கிறது. அரசுக்கு மக்கள்மேல் உள்ள அக்கறையினால் இதைச் செய்தாலும், அரசுக்கும் மக்களுக்கும் நேரடியான எந்த உறவும் இல்லை. ஆனால், முதல் ஏற்பாட்டில் சட்டங்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றை நாம் உடன்படிக்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் எம் மக்களாக இருப்பீர்கள்' என்று இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், அவர்களைத் தம் உரிமைச் சொத்து என ஆக்கிக்கொள்கின்றார். ஆண்டவர் தருகின்ற உணவும், பாதுகாப்பும், உறவும் உடன்படிக்கை அவர்களுக்கு வழங்குகின்ற உரிமைகள் ஆகும். உரிமைகளின் மறுபக்கமே கடமைகள். இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்க சில கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக, கட்டளைகளை மீறுவது என்பது உடன்படிக்கை உறவை மீறுவதற்கு ஒப்பானது.
ஆகையால்தான், 'இஸ்ரயேலரே! கேளுங்கள்!' என்கிறார் மோசே. ஏனெனில், 'கேள்' என்பதற்கு, தமிழில் இருப்பது போலவே, 'செவிகொடு' மற்றும் 'கீழ்ப்படி' என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, கட்டளைகளைக் கேட்டுக் கீழ்ப்படிதலின் முதல் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்பது. இதையே, 'மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?' என்று மோசே கேட்கின்றார். இரண்டாவதாக, கட்டளைகள் வழியாக இஸ்ரயேல் மக்கள் ஞானமும் அறிவாற்றலும் பெற்றனர். அறிவாற்றல் என்பது தேர்ந்து தெளிதல். எடுத்துக்காட்டாக, திருமண உறவில் பிரமாணிக்கமாக இருக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் வரும்போது, 'விபசாரம் செய்யாதே!' என்ற கட்டளை, அவர்கள் எளிதாகத் தேர்ந்து தெளிய உதவி செய்தது.
இவ்வாறாக, கட்டளைகள், நெறிமுறைகள், மற்றும் நியமங்கள் இஸ்ரயேல் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி உடன்படிக்கை உறவில் அவர்கள் நிலைத்திருக்கவும், ஒவ்வொரு சூழலிலும் தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு உதவி செய்கின்றன.
இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் யாக்கோபு எருசலேம் திருஅவையின் தலைவராக விளங்கியவர். இவர் இயேசுவின் சகோதரர். இவருடைய பெயரில் இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது எனவும், இத்திருமுகத்தின் ஆசிரியர் ஒரு யூதக் கிறிஸ்தவராக இருந்திருக்கலாம் என்பது பரவலான கருத்து. இணைச்சட்ட நூலில் நாம் காண்பது போலவே, பல வாழ்வியல் பாடங்களும் அறிவுரைகளும் இத்திருமுகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைக் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றனர். இரண்டாம் ஏற்பாட்டில் புதிய இஸ்ரயேல் மக்கள் பெற்றிருக்கின்ற மீட்பு என்ற கொடை கடவுளிடமிருந்து வருகின்றது என்பதை ஆசிரியர் முதலில் பதிவு செய்கின்றார்: 'நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.' உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் பெற்றெடுக்கப்பட்ட மக்கள், இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் அல்லாமல், அதன்படி நடக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
சமய வாழ்வு என்பது இரண்டு நிலைகளில் வெளிப்பட வேண்டும் என ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்: ஒன்று, 'துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிக்க வேண்டும்.' அன்றைய கிரேக்க-உரோமை சமூகத்தில் சொத்துரிமையும் சமூக மேனிலையும் ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. தந்தையரை இழந்த பிள்ளைகளும், கணவர்களை இழந்த மனைவியிரும் எந்தவொரு உரிமையும் இன்றி இருந்தனர். ஆக, சமூக மற்றும் பொருளாதார ஆதாரத்தை இவர்களுக்கு நம்பிக்கையாளர்கள் வழங்க வேண்டும். அல்லது சமூக நீதியுணர்வு கொண்டிருக்க வேண்டும். இரண்டு, 'உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வது.' தங்களைச் சுற்றியுள்ள புறவினத்து மக்களின் சமய மற்றும் அறநெறி வாழ்வியல் முறையை விட நம்பிக்கையாளர்கள் சிறந்த வாழ்வியல் முறையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆக, கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள சமய அடையாளம் அல்லது கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டு, தாங்கள் சமூக நீதியுணர்விலும், மேலான வாழ்வியல் நெறியிலும் வளர்வதே இதய உருவாக்கம்.
இயேசுவுக்கும் அவருடைய சமகாலத்து சமயத் தலைவர்களுக்கும் இடையே எழுந்த உரசல் ஒன்றை நம் கண்முன் கொண்டு வருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கட்டளைகளை மிகவும் நுணுக்கமாகக் கடைப்பிடித்தனர். கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில் கட்டளைகளின் பின்புலத்தில் நிறைய சடங்குகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு, 'மூதாதையர் மரபு' என்று பெயரிட்டனர். அப்படிப்பட்ட மரபில் ஒன்றுதான் கைகளைக் கழுவுதல், கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்றவை. இயேசுவின் சீடர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தங்களைப் போன்ற போதகர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசு அவர்களின் செய்கையைக் கண்டிக்காமல் இருப்பதை அவர்கள் இயேசுவிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு, கடவுளின் கட்டளையின் நோக்கம் என்ன என்பதையும், அதை எப்படிப் பின்பற்றுவது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.
கட்டளைகளைப் பின்பற்றுவதை இயேசு தடை செய்யவில்லை. மாறாக, அதற்கு ஒரு புதிய புரிதலைக் கொடுக்கின்றார். வெளிப்புறச் செயல்பாடுகளும் நடைமுறைகளும் சட்டத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளங்கள் என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முன்மொழிந்தபோது, இதய உருவாக்கமே சட்டத்தைப் பின்பற்றுவதன் அடையாளம் என்ற புதிய புரிதலைக் கொடுக்கின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது, இயேசு மேன்மையான அறநெறி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.
எசாயாவின் இறைவாக்குப் பகுதியை மேற்கோள் காட்டி அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றார். மனிதக் கட்டளைகளைக் கடவுளின் கோட்பாடுகள் என்று கற்பிக்கும் அவர்களின் ஆன்மிகம் உதட்டளவில் மட்டுமே உள்ளது என்று எச்சரிக்கின்றார். முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் கட்டளைகளை வழங்கியதன் நோக்கம் உடன்படிக்கை உறவை நிலைப்படுத்தவே. கைகளைக் கழுவுவதாலும், பாத்திரங்களைக் கழுவுவதாலும் அந்த உடன்படிக்கை உறவு மேம்படுவதில்லை. மாறாக, தூய்மையான மனச்சான்றும், சமத்துவமான பார்வையுமே உடன்படிக்கை உறவை மேம்படுத்துகின்றன. யூதர்கள்-புறவினத்தார்கள், ஆண்கள்-பெண்கள் என்று மனிதர்களை வெளிப்புறத்தில் தூய்மை-தீட்டு என்று பாகுபடுத்திய பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்திலிருந்த தீட்டு பற்றிக் கண்டுகொள்ளவில்லை. அல்லது அகத்தீட்டு அவர்களிடம் அதிகம் இருந்ததால்தான் மக்களை புறத்தில் தீட்டாக்கிப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
ஆக, அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் இதய உருவாக்கம் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.
இவ்வாறாக, முதல் வாசகத்தில், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது உடன்படிக்கை உறவை ஆழப்படுத்தி, இஸ்ரயேல் மக்களின் அறிவாற்றலைக் கூர்மைப்படுத்துகின்றது. இவ்வாறாக, இதய உருவாக்கம் நிகழ்கிறது.
இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவர்கள், தங்களுடைய சமய வாழ்வை நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், மேன்மையான அறநெறி வாழ்வை வாழ்வதிலும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே, இதய உருவாக்கம்.
நற்செய்தி வாசகத்தில், கட்டளைகளை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கின்றோம் என்ற எண்ணத்தில், கடவுள் நம்மிடம் பார்க்கின்ற அகத்தின் தூய்மையைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது. புறத்தூய்மையை விடுத்து, அகத்தைத் தூய்மையாக வைக்க முயற்சி செய்யும்போது இதய உருவாக்கம் நடைபெறுகின்றது.
பெருந்தொற்றுக் காலத்தில், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நெறிமுறையில் இருக்கின்றது. இவை சடங்குகள் அல்ல. மாறாக, இவற்றால் தூய்மை பற்றிய உணர்வும், மற்றவர்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வும் தூண்டப்படுகின்றது. இப்படியாக, சமூக வாழ்வு, சமய ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டம் என அனைத்து நிலைகளிலும் விதிமுறைகள் நம் இதயங்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த நோக்கத்தை நாம் மறந்துவிடும்போது, நாம் அகம் நோக்கிப் பார்ப்பதை விடுத்துப் புறம் நோக்கிப் பார்த்து மற்றவர்களைத் தீர்ப்பிடத் தொடங்குகின்றோம்.
இதய உருவாக்கம் என்றால் என்ன?
கடவுளுக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கும் உள்ள உறவின் ஒழுங்கமைவே இதய உருவாக்கம். இயேசு சுட்டிக்காட்டுகின்ற 'பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு' ஆகியவை மேற்காணும் உறவின் ஒழுங்கமைவைச் சீர்குலைக்கின்றன.
பல நேரங்களில் இதய உருவாக்கத்தை விடுத்து, மரபு உருவாக்கத்திற்கும், சடங்குகள் உருவாக்கத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஏனெனில், அது நமக்கு எளிதாகவும், மற்றவர்களால் பாராட்டப்படக் கூடியதாகவும் இருக்கிறது.
'ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்திடத் தகுதியுள்ளவர் யார்?' என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கும் கேள்வியே (காண். திபா 15) நம் உள்ளத்திலும் எழ வேண்டும். அந்தக் கேள்விக்கு விடையளிக்கின்ற கடவுள், 'அவரையும் மற்றவர்களையும் நோக்கிய நேரிய இதயத்தின் உருவாக்கமே தகுதி' என வரையறுக்கின்றார்.
மரபுகள் நம்மைத் தன்மையம் கொண்டதாகவும், தற்பெருமை கொள்பவர்களாகவும், மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களாகவும் மாற்றிவிடுகின்றன.
நாம் வாசிக்கின்ற இறைவார்த்தை, பங்கேற்கின்ற திருப்பலி, மேற்கொள்கின்ற திருப்பயணம், உச்சரிக்கின்ற செபங்கள், உருட்டுகின்ற செபமாலை மணிகள் அனைத்தும் நம் இதய உருவாக்கத்தை நோக்கியதாக இருந்தால் நலம். அவை வெறும் 'மூதாதையர் மரபு அல்லது வெளிப்புறச் சடங்கு' என்று சுருங்கிவிட்டால் நம் இதயம் அவரிடமிருந்து தூரமாகி விட்டது என்று பொருள்.