Wednesday, December 30, 2020

இவரது நிறைவிலிருந்து

இன்றைய (31 டிசம்பர் 2020) நற்செய்தி (யோவா 1:1-18)

இவரது நிறைவிலிருந்து

இன்று ஆண்டின் இறுதிநாள்.

'இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் (அருளுக்கு மேல் அருள்) பெற்றுள்ளோம்' என்னும் இன்றைய நற்செய்தி வாசக வார்த்தைகள் இந்த ஆண்டு முழுவதும் நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றிகூறுமாறு நம்மைத் தூண்டுகின்றன.

மேலும், கடவுள் மனுவுருவாதல் நிகழ்வை மிக அழகான இரண்டு வார்த்தைகளில் பதிவு செய்கின்றார் யோவான்: 'வெளிப்பாடு' 'பதிலிறுப்பு'

கடவுள் தம்மை வெளிப்படுத்துகின்றார். மனிதர்கள் அதற்குப் பதிலிறுப்பு செய்கின்றனர். வெளிப்பாடும் பதிலிறுப்பும் சந்திக்கும் அந்தப் புள்ளியில் மனுவுருவாதல் நடந்தேறுகிறது.

எல்லாரும் பதிலிறுப்பு செய்தார்களா? இல்லை.

ஏரோது போன்றவர்கள் வெளிப்பாட்டை எதிர்த்தார்கள்.

எருசலேம் நகரத்தவர் வெளிப்பாட்டைக் கண்டுகொள்ளவில்லை.

மரியா, யோசேப்பு, எலிசபெத்து, சக்கரியா, சிமியோன், அன்னா, இடையர்கள், ஞானியர்கள் போன்றவர்கள் வெளிப்பாட்டுக்குத் திறந்த மனத்துடன் பதிலிறுப்பு செய்கின்றனர்.

இந்த ஆண்டு முழுவதும் இறைவன் தம்மைப் பல நிலைகளில், பல நபர்கள் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். நம் பதிலிறுப்பு எப்படி இருந்துள்ளது?

சில நேரங்களில் வெளிப்பாட்டை எதிர்த்திருக்கலாம் நாம்! அல்லது அதைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம்! அல்லது திறந்த மனத்துடன் பதிலிறுப்பு செய்திருக்கலாம்.

பதிலிறுப்பு செய்பவர்கள் பெறும் கொடை அளப்பரியது.

'அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்' என்று யோவான் பதிவு செய்கின்றார்.

'கடவுளின் பிள்ளை' என்ற அடையாளம் நம்மை ஒருவர் மற்றவரோடு இணைப்பதோடு, நம் வாழ்வை மிகவே புரட்டிப் போடுகிறது. நம் எண்ணங்களையும் செயல்களையும் உயர்த்துகிறது.

நிற்க.

இந்த ஆண்டு ஓர் இறைவேண்டலோடு நிறைவு செய்வோம்:

இறைவா,

இதோ உம் திருமுன் நான் நிறைவுடன் நிற்கின்றேன்.

உம் கைகளால் என் கொடைகள் நிறைந்துள்ளன.

நான் தடுமாறிய பொழுதுகள், தடம் மாறிய நேரங்கள்

தவறவிட்ட வாக்குறுதிகள், தவறி விட்ட உறவுகள் அனைத்தையும்

உம் பாதம் ஒப்படைக்கின்றேன்.

உம் திருமகனின் பிஞ்சு விரல் பிடித்து புதிய ஆண்டுக்குள் நடக்க விரும்புகிறேன்.

என் உள்ளத்தின் வெறுமை, தனிமை, சோர்வு, விரக்தி, ஏமாற்றம் அனைத்தும்

கடந்து போகும்!

நீர் என்னைவிட்டுக் கடந்து போகாமலிருந்தால்!

6 comments:

  1. நாம் கடந்து போகவிருக்கும் இவ்வாண்டின் இறுதியில் இறைவன் நமக்குத் தந்த வெளிப்பாட்டிற்கு நம் பதிலிறுப்பு என்னவென்று சோதித்துப்பார்க்க அழைக்கிறார் தந்தை. இவ்வாண்டில் “ நான் இறைவனின் பிள்ளை” என உணரச்செய்த நேரங்கள் பல. வேதனைகளும்,சோதனைகளும் என்னைப்புரட்டிப்போட்ட பொழுதுகள் பலவாயினும்
    “ அஞ்சாதே! உன் கரம் பிடித்து உன்னோடு நானும் பயணிக்கிறேன்” என அவர் என செவிகளில் கிசுகிசுத்த பொழுதுகள் பல. அந்த நன்றி உணர்வோடு தந்தையின் செபத்தையும் உச்சரித்துக்கொண்டே என் விரல்களால் அதைப் பதிவு செய்ய விழைகிறேன்.
    “ இறைவா!
    இதோ உம் திருமுன் நிறைவுடன் நான் நிற்கிறேன்.
    உம் கொடைகளால் என் கைகள் நிறைந்துள்ளன.
    நான் தடுமாறிய பொழுதுகள்,தடம் மாறிய நேரங்கள்
    தவறவிட்ட வாக்குறுதிகள்,தவறவிட்ட உறவுகள் அனைத்தும் உம் பாதம் ஒப்படைக்கிறேன்.
    உம் திருமகனின் பிஞ்சுவிரல் பிடித்து புதிய ஆண்டுக்குள் நடக்க விரும்புகிறேன்.
    உள்ளத்தின். வெறுமை,தனிமை,சோர்வு, விரக்தி,ஏமாற்றம் அனைத்தும் கடந்து போகும்!
    நீர் என்னை விட்டுக் கடந்து போகாதிருந்தால்!”

    அவர் நம்மை விட்டுக் கடந்து போகமாட்டார் எனும் நம்பிக்கை விதைகளைத் தூவிய தந்தைக்கும்,ஆண்டு முழுதும் நம்மைத் தன் கண்ணின் கருவிழியாய்க் காத்த இறைவனுக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. இந்த ஆண்டு ஓர் இறைவேண்டலோடு நிறைவு செய்வோம்:

    Yes

    வழி நடத்திய நுமக்கு எமது நன்றிகள்🙏

    ReplyDelete