Friday, December 18, 2020

உம்மால் பேசவே இயலாது!

இன்றைய (19 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 1:5-25)

உம்மால் பேசவே இயலாது!

இன்றைய முதல் மற்றும் நற்செய்தி வாசகங்கள் மிகவும் கலர்ஃபுல்லாக இருக்கின்றன. முதல் வாசகத்தில் சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்படவும் நிகழவும் செய்கிறது. நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்படுகிறது. 

இவ்விரு நிகழ்வுகளுக்கும் சில பொருத்தங்கள் உள்ளன:

இரண்டிலுமே ஆண்டவரின் தூதர் வருகிறார். தூதர் சந்திக்க வரும்போது இரண்டு பேருமே (சிம்சோனின் அம்மா, சக்கரியா) தங்கள் அன்றாடப் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். 'உனக்கொரு மகன் பிறப்பான்! அவன் நான் சொல்வது போல இருப்பான்!' என்று இருவருக்குமே சொல்கின்ற வானதூதர் இரு குழந்தைகளின் நடை, உடை, பழக்கவழக்கம் பற்றிச் சொல்கின்றார். இரு குழந்தைகளுமே (சிம்சோன் மற்றும் யோவான்) கடவுளுக்கான நாசீர் (அர்ப்பணிக்கப்பட்டவர்) என வளர்கின்றனர்.

இரண்டு நிகழ்வுகளுக்கும் மிக முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சிம்சோனின் அம்மா மௌனமாகக் கேட்டுக்கொள்கின்றார். சக்கரியாவோ எதிர்கேள்வி கேட்கின்றார். எதிர்கேள்வி கேட்டதன் விளைவு, கடவுள் அவரை 'ம்யூட்' ஆக்கிவிடுகின்றார். ஆனால், திருமுழுக்கு யோவான் ஒரு குரல் என்பதைக் காட்டுவதற்காகவே, அவருடைய தந்தை 'ம்யூட்' ஆக்கப்பட்டு ஒரு எதிர்மறை ஒளியில் வைக்கப்படுகின்றார்.

சக்கரியாவின் வாழ்வில் அந்த நாள் ஒரு பொன்நாள். ஏனெனில், ஏறக்குறைய 24 ஆயிரம் குருக்கள் இருந்த அக்காலத்தில் தன் வாழ்வில் ஒருமுறைதான் ஒரு குரு ஆலயத்தில் திருப்பணி செய்யும் வாய்ப்பு பெறுவார். ஆக, அவர் பெயருக்கு சீட்டு விழுந்ததே ஒரு நேர்முகமான அடையாளம். ஒரு நல்லது நடந்தவுடன், அடுத்த நல்லது நடக்கிறது. அவருடைய மன்றாட்டு கேட்கப்படுகிறது. அவருக்கு ஒரு குழந்தை வாக்களிக்கப்படுகிறது. தொடர்ந்து இன்னொரு நல்லது நடக்கிறது. மக்களின் நடுவில் இருந்த அவமான வார்த்தைகள் களையப்பட்டு அனைவரும் அவரை வியந்து பார்க்கின்றனர்.

இதுதான் கடவுளின் செயல்பாடு. இதை 'டோமினோ விளைவு' என்றும் சொல்லலாம். ஒரு நல்லது நடந்தால் தொடர்ந்து நல்லவை நடந்துகொண்டே இருக்கும்.

நிகழ்வின் தொடக்கத்தில் வாசகருக்கு சக்கரியா மற்றும் எலிசபெத்து தம்பதியினரின் வலி நமக்குப் புரிகிறது. அவர்கள் இருவருமே கடவுள் பார்வையில் நேர்மையானவர்களாக விளங்குகின்றனர். அனைத்துக் கட்டளைகளுக்கும் ஒழுங்குகளுக்கும் ஏற்ப அவர்கள் நடக்கிறார்கள், ஆனால், பிள்ளை இல்லை. அவர்களுடைய சமகாலத்தில் மலட்டுத்தன்மை அல்லது குழந்தைப்பேறின்மை என்பது ஒருவர் செய்த பாவத்தால் விளைவது என்று கருதப்பட்டது. ஆனால், இங்கே நாம் காண்பது நேர்மையாளர் அனுபவிக்கும் துன்பம். யோபு போல, தோபித்து போல நேர்மையாளராக இருந்த சக்கரியாவும் எலிசபெத்தும் துன்பம் அனுபவிக்கின்றனர்.

மேலும், சக்கரியா-எலிசபெத்திடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், தங்களுடைய குழந்தைக்கு பிறந்தது முதல் இரண்டாவது இடம்தான் என்பதை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர். வழக்கமாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் எப்போதும் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், இந்தத் தம்பதியினருக்குத் தெரியும், தன் மகன் ஒரு குரல்தான் என்று. அவன் மெசியாவுக்கு முன் செல்வான், அவன் மெசியா அல்ல. மணமகனின் குரல் கேட்பான், ஆனால், மணமகன் அல்லன். சிரிப்பான், ஆனால் அவன் சிரிப்பு அவனுக்குச் சொந்தமல்ல. அழுவான், பாவம்! அவன் அழுகையும் அவனுக்குச் சொந்தமில்லை. திரைக்குப் பின்னே நின்று மறைந்துசெல்லும் ஒரு கதாநாயகனைப் பெற்றெடுக்கிறார்கள். நிழலாகவே மறைந்துவிடும் ஒரு நிஜத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.

சக்கரியாவின் மௌனம் அவரை உள்நோக்கிப் புறப்படச் செய்தது.

மௌனமே பெரிய குரல் என்று அவர் உணர்ந்தார்!

3 comments:

  1. எனக்குத் தெரிந்து, நேர்மையாளர்கள் தான், இவ்வுலகில் மிகவும் துன்பம் அனுபவிக்கின்றனர்.


    நானும் இரண்டாம்,மூன்றாம், நான்காம் இடம் தான், என்பதை, விரும்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் போல...

    Not always first.


    மௌனமே, பெரிய குரல் என்பதை
    நானும் உணர, முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.

    நானும், உள்நோக்கிப் புறப்பட்ட,அது உதவட்டும்.

    இல்லை, நிழலாக மறைந்து விடும்,நிஜமாகிப் போகிறேன்.

    நன்றி🙏

    ReplyDelete
  2. மனத்தின் உள்ளே எட்டிப்பார்க்கும்....கண்களைக் கசியச் செய்யும் ஒரு பதிவு. ‘ஒரு நல்லது நடந்தால் தொடர்ந்து நல்லவை நடந்து கொண்டே இருக்கும்’ என்ற ‘டோமினோ’ விளைவு பற்றிக்கூறி முடிப்பதற்குள், யோவான் பிறந்தபின் சக்காரியா- எலிசபெத் அனுபவித்த வலிகளை ஒன்றன் பின்ஒன்றாக வாசிக்கையில் நெஞ்சில் ஏதோ நெருடுகிறது.

    “ திரைக்குப்பின்னே நின்று மறைந்து செல்லும் ஒரு கதாநாயகனைப் பெற்றெடுக்கிறார்கள். நிழலாகவே மறைந்துவிடும் ஒரு நிஜத்தைப் பெற்றெடுக்கிறார்கள்.” வாசிக்கும் போதே வலிக்கிறது. இத்தனை துள்ளியமாக காலம் கடந்து ஒரு பிள்ளையைப் பெற்ற பெற்றோரின் கையறு நிலையைத் தந்தையால் மட்டுமே உணரவைக்க முடியும்.

    “திருமுழுக்கு யோவான் ஒரு ‘குரல்’ என்பதைக் காட்டவே அவர் தந்தை ‘ம்யூட்’ செய்யப்படுகிறார்”, “ மௌனமே பெரிய குரல் என்பதை அவர் உணர்ந்தார்” என்பதும் என் வாழ்வில் “நான் ம்யூட்” செய்யப்படும் நேரங்களில் நான் பெருமூச்சு விட எந்தக் காரணமும் இல்லை; ஏனெனில் “மௌனமே பெரிய குரல்” என்பதை நானும் உணரவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    இயேசுவின் பிறப்பை மகிழ்வுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்த வேளையிலும் இத்தனை பெரிய சோகத்தை வாசகரின் நெஞ்சில் ஏற்றிய தந்தை வியப்புக்குரியவரே! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  3. Me to my son: Do u know why Zachariah was mute but not Mary though they both asked kind of the same question?

    My son: oh yes, its because God didn't want Jesus to be mute. What if He made Mary mute and Jesus was born mute? He wanted her to be perfect..that's why.!

    Me: ....

    (sometimes u need little eyes to see great things)

    ReplyDelete