Tuesday, December 1, 2020

நீங்கள் பேறுபெற்றவர்கள்

இன்றைய (1 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 10:21-24)

நீங்கள் பேறுபெற்றவர்கள்

நம்மிடம் உள்ள நன்மைத்தனத்தையும், நாம் பெற்ற பேறுகளையும் எண்ணிக்கொள்ள இன்றைய நாள் அழைப்பு விடுக்கிறது.

'நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பு பெற்றோர் பேறுபெற்றோர்' என்று தன் சீடர்களைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு அவர்கள் பெற்ற நன்மைத்தனத்தை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுவதோடு, நன்மைகளையும் நேர்முகமானவற்றையுமே பட்டியலிட நம்மை அழைக்கின்றார்.

ஒரு சிறிய பயிற்சி.

இப்போது நாம் இந்த மின்னஞ்சலை அல்லது பதிவை வாசிக்கிறோம். இதில் நாம் பெற்றுள்ள பேறுகள் எவை?

நமக்கு எழுதப்படிக்கத் தெரிகிறது.

நம்மிடம் திறன்பேசி அல்லது கணிணி இருக்கிறது. அத்தோடு சேர்த்து இணைய இணைப்பு இருக்கிறது.

மின்சாரம் இருக்கிறது.

கண்கள் நன்றாகத் தெரிகின்றன.

இப்படியாக நாம் நிறையவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். 

ஆனால், இவற்றைச் செய்ய இயலாத யாரும் பேறுபெற்றவர்கள் இல்லை என்றோ, அல்லது குறைவானவர்கள் என்றோ நாம் எண்ணிவிடவும் இயலாது.

நம் நன்மைகளைப் பட்டியலிடக் காரணம் மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட அல்ல. மாறாக, அனைவரிலும் இருக்கும் நன்மைத்தனங்களைக் கண்டறியவே.

நற்செய்தி வாசகத்தின் தொடக்கத்தில் குழந்தையரின் ஞானத்தையும் புகழ்கின்றார் இயேசு. இங்கே, 'குழந்தையர்' என்ற சொல்லாடல் இயேசுவின் சீடர்களை உருவகப்படுத்தினாலும், குழந்தைகளுக்கும் கடவுள் வெளிப்பாடு சாத்தியம் எனச் சொல்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில், மெசியாவின் வருகையின்போது ஏற்படும் தலைகீழ் மாற்றங்களை முன்வைக்கிறார் எசாயா. ஓநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும் என்று தொடங்கும் இந்தப் பகுதியில் இயற்கையில் ஒன்றுக்கொன்ற எதிர்க்குணம் கொண்ட விலங்குகள், ஒன்றோடொன்று இணைந்து நிற்பதைக் காண்கிறோம்.

எதிரெதிர் துருவங்கள் ஒருங்கே இணைந்து செல்வது எப்போது?

ஒருவர் மற்றவரின் நன்மைத்தனத்தைக் கண்டுகொள்ளும்போது.

இன்று, நாம் பேறுபெற்ற நிலையை எண்ணிப்பார்ப்பதோடு, நமக்கு அடுத்திருப்பவர் பெற்றிருக்கின்ற கொடைகளுக்காகவும், நன்மைத்தனங்களுக்காகவும் நன்றி கூறுவோம். மற்றவர்களின் நன்மைத்தனத்தையும் அவர்கள் அடையாளம் காண உதவுவோம்.

1 comment:

  1. இன்று ஒரு புதிய மாதத்தின் முதல் நாள். நாம் பெற்ற கணக்கிலடங்கா பேறுகளுக்கு பட்டியலிட...நன்றி சொல்ல அழைக்கிறார் இயேசு. பட்டியலிடக்காரணம் மற்றவர்களைக்குறைத்து மதிப்பிட அல்ல...நம்மில் இருக்கும் நன்மைத்தனங்களைக்கண்டறியவே என்கிறார்

    ஒருவர் மற்றவரின் நன்மைத்தனங்களைக்கண்டுகொள்ளும் போது எதிரெதிர் துருவங்கள் கூட ஒருங்கே இணைந்து செல்லுமென்ரறிகிறோம்.

    இன்று நம் பேறுபெற்ற நிலையை எண்ணிப்பார்ப்பதோடு,நம்மைச்சுற்றியுள்ளோர் பெற்றுள்ள கொடைகளுக்காகவும்,நன்மைத்தனங்களுக்காகவும் நன்றிகூற அழைக்கப்படுகிறோம். இந்ந 2020 ம் ஆண்டு பலர் கோரோனாவின் பிடியில் சிக்கித்தவித்த நிலையிலும்,பல வேறு காரணங்களுக்காக மரணத்தைத் தழுவியபோதும் உங்களையும்,என்னையும் பாதுகாப்பாக நம் கரம்பற்றி நடத்தி வந்துள்ளார். அதிலும் இந்த வருடத்தின் இறுதியான மாதம் நமக்காக மட்டுமல்ல...நம்மவர்கள் பெற்ற நன்மைத்தனங்களை அவர்கள் அடையாளம் காண உதவுவோம்.

    “ நன்றி” என்ற சொல்லும்,செயலும் இறைவனுக்கு மிகப்பிடித்தவையாம்.ஆகவே அதை மீண்டும்,மீண்டும் சொல்லி அவரைப் புகழ்வதோடு வரப்போகும் நாட்களை அவர்கரங்களில் ஒப்புக்கொடுப்போம்.அழகான செயலுக்கு நம்மை இட்டுச்செல்லும் தந்தைக்கும்,அனைவருக்கும் பிறந்திருக்கும் புதிய மாதம் நன்மைத்தனங்களை அள்ளித்தரட்டும். தந்தைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்!!!

    ReplyDelete