இன்றைய (4 டிசம்பர் 2020) நற்செய்தி (மத் 9:27-31)
கண்கள் திறந்தன
பார்வையற்ற இருவருக்கு இயேசு பார்வை தருகின்றார். மற்ற வல்ல செயல்களிலிருந்து இது ஒரு முக்கியமான விடயத்தில் மாறுபடுகிறது. மற்ற வல்ல செயல்களில் இயேசு உடனடியாகச் செயல்படுகின்றார். இங்கே மட்டுமே, அவர்கள் தன் வீடு வரும் வரை அவர்களைப் பின் தொடர்ந்து வருமாறு செய்கின்றார்.
இந்த நீண்ட பயணம் எதற்காக?
'தாவீதின் மகனே, எங்கள் மேல் இரங்கும்!' என்று அவர்கள் வழியெல்லாம் நம்பிக்கை அறிக்கை செய்துகொண்டே வருகின்றனர்.
இந்த வல்ல செயல் பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற இயேசுவின் கடிந்துரையை மறந்து, வழியெங்கும் இயேசுவைப் பற்றிப் பேசிக்கொண்டே செல்கின்றனர்.
ஆக, இந்த நீண்ட பயணம் நம்பிக்கை அறிக்கையின் மற்றும் பரப்புரையின் பயணமாக இருக்கின்றது.
சில நேரங்களில் மெசியா அனுபவம் பெற நாம் நீண்ட பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.
இந்த நீண்ட பயணத்தில் இவர்கள் எதிர்கொள்ளும் தடைகள் மூன்று:
(அ) வெட்கம் அல்லது தயக்கம்
சாலையில் இரு ஆண்கள் கத்திக் கொண்டே ஓடி வருவது யூத மரபில் அவமானம் அல்லது வெட்கத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. பல நேரங்களில் நாம் நம்முடைய வெட்க அல்லது அவமான உணர்வினால் இயேசுவை ஏற்றுக்கொள்ளவும், அறிக்கையிடவும் தயங்கி நிற்கிறோம்.
(ஆ) உடன் வருபவரின் பின்னிழுத்தல்
ஒருவர் தன்னோடு வரும் இன்னொருவருக்கு நம்பிக்கை ஊட்டக் காரணமாக இருந்தாலும், சில நேரங்களில், ஒருவர் மற்றவரைப் பின்னிழுக்கும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கிறது. இன்று நாம் நமக்கு அருகில் இருப்பவரின் நம்பிக்கையைத் தூண்டி எழுப்புகிறோமா? அல்லது தட்டிப் பறிக்கிறோமா?
(இ) கூட்டம்
இயேசுவுடன் வழிநடந்த கூட்டமும் இவர்களது நம்பிக்கைப் பயணத்திற்குத் தடையாக இருந்திருக்கலாம். பல நேரங்களில் இயேசுவின் வல்ல செயல்கள் நடக்கும் இடத்தில் கூட்டம் ஒரு தடையாகவே இருக்கிறது.
பார்வையற்ற இருவரும் மேற்காணும் மூன்று தடைகளையும் வெல்கின்றனர்.
அவர்களின் நம்பிக்கை பலன் தருகிறது. அவர்களது கண்கள் திறக்கப்படுகின்றன.
கண்கள் மூடியிருந்தபோதே இயேசுவைப் பற்றி அறிக்கையிட்டவர்கள் கண்கள் திறந்தபின் சும்மாயிருப்பார்களா? இல்லை!
கண்கள் திறக்கப்படுவதே அவரைக் கண்டுகொள்ளவே! அவரைக் கண்டுகொள்வது அவரைப் பற்றி அறிக்கையிடவே!
இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 29:17-24), 'யாக்கோபு மானக் கேடு அடைவதில்லை. அவன் முகம் இனி வெளிறிப் போவதும் இல்லை' என்கிறார் இறைவாக்கினர். வெட்கமும் பயமும் மெசியாவின் வருகையால் மறைகின்றன.
நாமும் நம் பழைய வாழ்க்கையை எண்ணி வெட்கப்படத் தேவையில்லை. எதிர்வரும் நாள்களைப் பற்றிப் பயப்படத் தேவையில்லை.
கண்கள் திறக்கப்பட்டவர்களுக்கு வெட்கமும் பயமும் இருப்பதில்லை. வெட்கமும் பயமும் உள்ளவர்கள் கண்களைத் திறப்பதில்லை.
பார்வையற்ற இருவர் அவர்களிடமிருந்த நம்பிக்கையின் பலனாக இயேசுவிடமிருந்து பார்வை பெறுகின்றனர். கண்கள் மூடியிருந்தபோதே இயேசுவைப்பற்றி அறிக்கை இட்டவர்களால் கண்கள் திறந்தபின் சும்மா இருக்க இயலவில்லை.
ReplyDeleteகண்கள் திறக்கப்படுவதே அவரைக்கண்டுகொள்ளவே! அவரைக்கண்டுகொள்வது அவரைப்பற்றி அறிக்கையிடவே! ....அருமை!
பார்வை எனும் ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ள நாம் என்ன செய்கிறோம்?நம்மிடமுள்ள வெட்கமும்,பயமும் மெசியாவின் வருகையால் மறைகின்றனவா? அப்படியெனில் நாம் நம் பழைய வாழ்க்கையை எண்ணிப் பயப்படத்தேவையில்லை என்கிறார் தந்தை.
கண்கள் திறக்கப்பட்டவர்களுக்கு வெட்கமும்,பயமும் இருப்பதில்லை;
வெட்கமும்,பயமும் உள்ளவர்கள் கண்களைத்திறப்பதில்லை.....அருமை!
“ தாவீதின் மகனே எங்கள் மீது இரங்கும்!” எனும் வார்த்தைகள் என் மனத்தில் உச்ச ஸ்தாயியில் கேட்கிறது.கேட்க வைத்த தந்தைக்கு நன்றிகள,!!!