இன்றைய (14 டிசம்பர் 2020) முதல் வாசகம் (எண் 24:2-7,15-17)
கண் திறக்கப்பட்டவன்
பண்டைக் காலத்தில் சபிப்பதற்கும் ஆசீர் கூறுவதற்குமென நபர்கள் இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நமக்குச் சொல்கின்றனர். இதற்கான சான்றுகளை நாம் விவிலியத்திலும் பார்க்கிறோம். ஏதாவது ஒரு வழிபாட்டுத்தலத்தின் குரு அல்லது இறைவாக்கினராக இருக்கின்ற ஒருவர், தான் வழிபடும் அல்லது பணியாற்றும் தெய்வத்தின் பெயரால் மற்றவர்களைச் சபிக்கவும், அல்லது மற்றவர்களுக்கு ஆசீர் கூறவும் செய்வார். மேலும், இத்தகையோரின் உதவியைப் பெற்று அரசர்கள் ஒருவர் மற்றவரைச் சபித்துக்கொள்வதும் மரபு. ஏறக்குறைய நம்ம ஊர் செய்வினை, செயப்பாட்டு வினை போல!
பாலாக்கு அரசன் பிலயாம் என்ற ஓர் இறைவாக்கினரை அழைத்து, இஸ்ரயேல் மக்களைச் சபிக்க விழைகின்றான். ஆனால், பிலயாமின் கண்களைத் திறக்கின்ற கடவுள், பிலயாமின் கழுதை வழியாக அவருக்கு ஞானம் அருளுகின்றார். கண்கள் திறக்கப்பட்ட பிலயாம் இஸ்ரயேல் மக்களைச் சபிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு ஆசீர் வழங்குகின்றார்.
இந்த நிகழ்வையே இன்றைய முதல் வாசகத்தில் காண்கின்றோம்.
'கண் திறக்கப்பட்டவன்' என்றும், 'கண் மூடாதவன்' என்றும் தன்னையே அழைக்கின்றார் பிலயாம்.
பிலயாமின் இறைவாக்கு மூன்று நிலைகளில் அமைந்துள்ளது:
ஒன்று, இஸ்ரயேலின் கூடாரங்களும் இருப்பிடங்களும் அழகுடன் இருக்கும்.
ஒரு மனிதரின் கூடாரம் அல்லது இல்லம் அவருடைய அடையாளமாக இருக்கிறது. ஏறக்குறைய ஒரு மனிதரின் நீட்சிதான் அவருடைய இல்லம். அந்த இல்லத்திற்கு அந்த மனிதனின் அந்தரங்கம் அனைத்தும் தெரியும். யாக்கோபின் இல்லம் விரிந்து கிடக்கும் என்று சொல்வதன் வழியாக, யாக்கோபின் அடையாளம் அல்லது இருத்தலின் எல்லை விரிவடையும் என்கிறார் பிலயாம்.
இரண்டு, நிலம் வளமை பெறும்.
நிலம் அல்லது விளைச்சல் அல்லது விவசாயத்தின் வழியாக ஒருவர் தன் உழைப்பின் கனியை உண்கிறார். இஸ்ரயேல் மக்களின் நிலத்தையும் ஆசீர்வதிக்கின்றார் பிலயாம்.
மூன்று, விண்மீன் உதிக்கும்.
'யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும். இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று புறப்படும்' என்று சொல்வதன் வழியாக, மெசியாவின் பிறப்பை முன்னறிவிக்கின்றார் பிலயாம். இந்த இறைவாக்கின் பின்புலத்தில்தான், 'நாங்கள் அவருடைய விண்மீனைக் கண்டோம்' என்று ஞானியர் புறப்பட்டு வருவதாக மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகின்றார்.
மேற்காணும் மூன்று இறைவாக்குகளை உரைக்கும்போதும், பிலயாம் தன்னைக் 'கண் திறக்கப்பட்டவன்' என்று அடையாளப்படுத்துகின்றார். அதாவது, தான் இஸ்ரயேலின் ஆண்டவரை அறியாமல் இருந்தார் எனவும், அவரை அறிந்தவுடன் தன் கண்கள் திறக்கப்பட்டதாகவும் எழுதுகின்றார்.
மனித வார்த்தைகளின் ஆற்றலை நமக்கு இந்த நிகழ்வு எடுத்துச் சொல்கிறது. இறைவனின் ஆசீர் பெற்ற ஒருவர் தன்னுடைய வார்த்தைகளை இறைவனின் சார்பாக எடுத்துச் சொன்னால், அந்த வார்த்தை அப்படியே பலிக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் தலைமைக் குருக்களுக்கும் மூப்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஒன்று வருகிறது. இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் ஏற்றுக்கொள்ளத் தயங்கும் அவர்கள் கண்கள் திறந்திருந்தாலும், மூடியிருப்பது போல வாழ்கின்றனர்.
இயேசு எதிர்கேள்வி கேட்டபோது, 'எங்களுக்குத் தெரியாது!' என்று மறுக்கின்றனர். இயேசுவும் அவர்களுக்கு மறுமொழி பகர மறுக்கின்றார்.
இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்வது என்ன?
மெசியாவையும் அவருடைய விண்மீனையும் கண்டுகொள்ள நம் வெற்றுக்கண்கள் போதாது. மாறாக, கடவுளால் திறக்கப்பட்ட கண்கள் அவசியம்.
கண்கள் திறக்கப்பட்டவர்கள் மட்டுமே விண்மீனைக் காண முடியும்.
என்ன?
ReplyDeleteசெய்வினை,செயப்பாட்டு வினையா?🤔
ஒரு flow ல எது வேணுமொனாலும்,
சொல்வது.
இறைவனின் ஆசீர் பெற்ற ஒருவர் தன்னுடைய வார்த்தைகளை இறைவனின் சார்பாக எடுத்துச் சொன்னால், அந்த வார்த்தை அப்படியே பலிக்கிறது.
மெசியாவையும் அவருடைய விண்மீனையும் கண்டுகொள்ள நம் வெற்றுக்கண்கள் போதாது. மாறாக, கடவுளால் திறக்கப்பட்ட கண்கள் அவசியம்.
நன்றி🙏
இஸ்ரேலின் இறைவனை அறியாதிருந்த பிலயாம் அவரை அறிந்தவுடன் அவர் கண்கள் திறக்கப்படுவது இறை வார்த்தையை யார் எடுத்துச் சொல்லிடினும் அதற்கு வலிமை உண்டு என்பதைக்காட்டுகிறது. இதன் பின்னனியில் மெசியாவையும்,அவருடைய விண்மீனையும் கண்டுகொள்ள வெற்றுக்கண்கள் போதாது.....கடவுளால் திறக்கப்பட்ட கண்கள் வேண்டுமென்கிறார் தந்தை. நம் கண்கள் திறக்கப்பட செய்ய வேண்டியதைச்செய்தால் நம் கண்களும் திறக்கப்படுமென ஆரூடம் சொல்லும் தந்தைக்கு நன்றிகள் !
ReplyDelete