இன்றைய (8 டிசம்பர் 2020) திருநாள்
மரியாள் அமல உற்பவி
1854ஆம் ஆண்டு, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், 'அன்னை கன்னி மரியாள் தன் தாயின் கருவறையிலிருந்தே தொடக்கப் பாவம் இல்லாமல் பாதுகாக்கப்பட்டார்', என்று 'இன்எஃபாபிலிஸ் தேயுஸ்' என்ற போதகத்திரட்டின் வழியாக அறிவித்தார். பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில் பெர்னதெத்துக்கு தோன்றிய அன்னை கன்னி மரியாள், 'நாமே அமல உற்பவம்' என்று தன்னை வெளிப்படுத்தினார்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 3:9-15,20) நாம் வாசிக்கும் ஒரு வாக்கியத்தோடு நம் சிந்தனையைத் தொடங்குவோம்:
'பாம்பு என்னை ஏமாற்றியது!'
விலக்கப்பட்ட கனியை உண்டபின், ஆண்டவராகிய கடவுள் ஆதாம் மற்றும் ஏவாளிடம் உரையாடும் நிகழ்வில், நம் ஆதித்தாய், 'பாம்பு என்னை ஏமாற்றியது!' என்று கூறுகின்றாள். இம்மூன்று வார்த்தைகளை வாசிக்கும்போது அந்த நேரத்தில் அந்தத் தாயின் மனத்தில் ஓடிய எண்ணங்களை நம்மால் ஊகிக்க முடிகிறது. ஏவாளின் வார்த்தைகளில் நிறைய சோகம் அப்பியிருக்கிறது. ஒரு பக்கம் தன் கையறு நிலை, இன்னொரு பக்கம் குற்றவுணர்வு. இன்னொரு பக்கம், 'இனி இப்படிச் செய்யக் கூடாது' என்ற மனவுறுதி.
பாம்பு அவளை மட்டுமல்ல. இன்றும் நம்மை ஏமாற்றுகிறது.
பாம்பின் ஏமாற்றத்திலிருந்து தப்பியவர் நம் அன்னை கன்னி மரியாள்.
அண்மையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் 'மெக்டோ' (MGTOW - Men Going Their Own Way) என்ற ஓர் இயக்கம் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. அதாவது, தங்கள் சித்தாந்தத்தை ஆதாம்-ஏவாள் நிகழ்வில் மையம் கொண்டிருக்கின்ற இவர்கள், 'ஒரு பெண்ணை யாராலும் திருப்திப்படுத்த முடியாது. ஏதேன் தோட்டத்தையே அவளுக்குக் கொடுத்தாலும், விலக்கப்பட்ட கனியையே அவள் நாடுவாள்' என்று சொல்லி, பெண்களைத் தவிர்த்து வாழ முடியும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு, 'தங்கள் வழியே செல்லும் ஆண்கள்' என்று டேட்டிங் மற்றும் திருமண உறவு தவிர்த்து வாழ்கிறார்கள்.
இன்னொரு பக்கம் இன்னொரு இயக்கம். அந்த இயக்கத்தின் கொள்கை, 'யோலோ' (YOLO - You Only Live Once) என்பது. அதாவது, 'நீ ஒருமுறை தான் வாழ்கிறாய்' (ஆகவே, எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்! ஆண்-பெண் உறவு, சமூகம், சட்டதிட்டம், கடவுள் என எதையும் பொருட்படுத்தாதே! உனக்கு எது விருப்பமோ அதைச் செய்! உனக்கு இறப்பது விருப்பம் என்றாலும் இறந்துவிடு! எனச் சொல்லும் இயக்கம்).
இந்த இரண்டு இயக்கங்களுக்கும் நம் இன்றைய திருநாளுக்கும் என்ன தொடர்பு?
முதல் இயக்கம், மனிதர்களைத் தவறாகப் புரிந்துகொள்கிறது.
இரண்டாவது இயக்கம், பிறப்பு அல்லது வாழ்க்கையைத் தவறாகப் புரிந்துகொள்கிறது.
நாம் வாழ்வது ஒரு முறைதான்! அதை நன்றாக வாழலாமே!
உறவுகளில் ஏமாற்றங்கள் வரலாம்! ஆனால், ஏமாற்றாமல் உறவாடலாமே!
அன்னை கன்னி மரியாளின் அமல உற்பவத் திருவிழா, நம் பிறப்பின் மூன்று பரிமாணங்களை நமக்கு விளக்கிறது:
(அ) பிறப்பின் நோக்கம்
(ஆ) பிறப்பின் தன்மை
(இ) பிறப்பின் பயன்
(அ) பிறப்பின் நோக்கம்
நாம் யாரும் வரலாற்றுப் பிழைகள் அல்லர். ஆண்-பெண் உறவின் மயக்கத்தில் பிறந்தவர்கள் அல்லர். நம் பிறப்பு விபத்து அல்ல. நம் பிறப்புக்கென்று ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கம் நம்மைப் படைத்தவரால் வரையறுக்கப்படுகிறது. இதையே பவுல் இரண்டாம் வாசகத்தில் (காண். எபே 1:3-6,11-12), 'நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' என்கிறார். அன்னை கன்னி மரியாளின் பிறப்பின் நோக்கம் மெசியாவைப் பெற்றெடுப்பது. நம் வாழ்வில் நாம் நமக்கு நிர்ணயிப்பவை அனைத்தும் இலக்குகள். எடுத்துக்காட்டாக, நான் முனைவர் பட்டம் படிக்க வேண்டும், நல்ல பணியில் இருக்க வேண்டும், பொருளாதாரத்தில் சிறக்க வேண்டும் என்பவை நமக்கு நாமே நிர்ணயிக்கும் இலக்குகள். ஆனால், இலக்குகள் நம்மைப் படைத்தவரின் நோக்கத்தோடு இணைய வேண்டும். நல்ல பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்க வேண்டும் என்பது கொல்கொத்தா நகர் தெரசாவின் இலக்காக இருந்தது. ஆனால், ஆண்டவரின் நோக்கம் வேறாக இருந்தது. எனவே, தன் இலக்கை விடுத்து ஆண்டவரின் நோக்கத்தை அவர் பற்றிக்கொண்டார். மரியாள் தன் வாழ்வின் நோக்கத்தை வானதூதர் கபிரியேல் வழியாக அறிந்துகொள்கிறார். இன்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
(ஆ) பிறப்பின் தன்மை
பிறப்பின் தன்மை என்பது நாம் இந்த உலகிற்கு வந்த நிலையைக் குறிக்கிறது. அன்னை கன்னி மரியாள் ஒரு பெண் குழந்தையாக, நாசரேத்தூரில், அன்னா-சுவக்கிம் மகளாக, யூத சமூகத்தில், எபிரேய அல்லது அரமேய மொழி பேசுபவராகப் பிறக்கிறார். இதை நாம் தெரிவு செய்ய முடியாது. நாம் பாலினம், ஊர், பெற்றோர், மொழி, பின்புலம் அனைத்தும் கடவுளால் நம்மால் கொடுக்கப்பட்டவை. நாம் விரும்புகிறோமோ இல்லையோ அவற்றை நம்மால் மாற்ற முடியாது. அவை நம்மேல் பெரிய தாக்கத்தை இறுதிவரை ஏற்படுத்துகின்றன. நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவற்றைப் பரந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வது. இன்று நான் என் பிறப்பின் தன்மையை எப்படி எடுத்துக்கொள்கிறேன்?
(இ) பிறப்பின் பயன்
இது நம் வாழ்வின் கனியைக் குறிக்கிறது. அன்னை கன்னி மரியாளைப் பொருத்தவரையில், அவரின் பிறப்பின் பயன் மெசியாவைப் பெற்றெடுப்பதில் நிறைவேறுகிறது: 'இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர் ... அவர் பெரியவராயிருப்பார் ... உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்'. மரியாள் தன் பிறப்பின் பயனைத் தன் சரணாகதி வழியாக அடைந்தார்: 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!' இன்று பிறப்பின் பயனை நாம் அடைய வேண்டுமெனில் நம் முயற்சி அல்லது செயல்பாடும் அவசியம். தான் விலக்கப்பட்ட கனியை உண்டு கடவுளின் தண்டனைக்கு உள்ளானாலும், ஏவாள் தொடர்ந்து போராடுகிறாள். தன் அன்புக் குழந்தைகளே ஒருவர் மற்றவர்மேல் வன்மம் கொண்டிருந்தபோது அதையும் எதிர்கொள்கிறாள்.
இறைமனித உறவின் அடையாளம் அமல உற்பவம்.
மனிதப் பிறப்பின் ஆபரணம் அமல உற்பவம்.
இன்று,
நம் பிறப்பின் நோக்கம், தன்மை, பயன் ஆகியவற்றை அறிய விடாமல் பல பாம்புகள் நம்மை ஏமாற்றலாம்.
ஆனால், 'பாம்பு என்னை ஏமாற்றியது' என்ற அறிதலே நம் வாழ்க்கை மாற்றத்தின் தொடக்கம்.
முதல் ஏவாளை ஏமாற்றிய பாம்பு இரண்டாம் ஏவாளை ஏமாற்றவில்லை.
முதல் முறை நம்மை ஏமாற்றும் பாம்பு இரண்டாம் முறையும் நம்மை ஏமாற்ற நாம் அனுமதிக்க வேண்டாம்.
முதல் முறை அது ஏமாற்றினால் அது இயல்பாக நடக்கிறது.
இரண்டாம் முறையும் அது ஏமாற்றினால் அது நம் விருப்பத்தால், தெரிவால் நடக்கிறது.
அமல அன்னையைத் தங்கள் பாதுகாவலியாகக் கொண்டிருக்கும் தனிநபர்கள், நிறுவனங்கள், மறைமாவட்டங்கள், மற்றும் துறவற சபைகளுக்கு வாழ்த்துகள்!
இறைமனித உறவின் அடையாளம் அமல உற்பவம்.
ReplyDeleteமனிதப் பிறப்பின் ஆபரணம் அமல உற்பவம்.
நன்றி🙏
அருட்பணி. யேசு கருணாநிதி அவர்களே!
ஆமென்!
ReplyDelete“ அமல உற்பவி”....... ஏதேன் தோட்டத்துப் பாம்பு நம்மைக் கடிப்பதை அறிந்து கொள்ளவும்,மீண்டும் கடிக்க விடாமல் தடுக்கவும் நமக்குப் பாதுகாப்பு வளையமாக நிற்பவள்..
ReplyDeleteஇந்த நாள் எனக்கு மிகவும் நெருக்கமான நாள்.நான் முதன் முறையாக இறைவனை உட்கொண்ட நாளும் கூட.
நாம் வாழும் ஒரே வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழவும்....நாம் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாமல் வாழவும் இந்த அன்னை நம் உடன் வருவாளாக!
தந்தைக்கும் மற்றும் அனைவருக்கும் திருநாள் வாழ்த்துக்கள்!!!