Thursday, December 17, 2020

யோசேப்புக்கு அறிவிப்பு

இன்றைய (18 டிசம்பர் 2020) நற்செய்தி (மத் 1:18-24)

யோசேப்புக்கு அறிவிப்பு

புனித யோசேப்பு ஆண்டை நாம் தொடங்கி ஏறக்குறைய 10 நாள்கள் ஆகின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் பிறப்பு அறிவிப்பு பகுதியை வாசிக்கின்றோம். இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வை மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் பதிவுசெய்கின்றனர். ஆனால், மத்தேயு நற்செய்தியில் அறிவிப்பு, வானதூதர் வழியாக யோசேப்பின் கனவில் நடந்தேறுகிறது. லூக்கா நற்செய்தியில், வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு நேரிடையாக அறிவிக்கின்றார்.

மத்தேயு நற்செய்தியாளர் யோசேப்பு என்னும் கதைமாந்தரை முதன்முதலாக அறிமுகம் செய்யும் நிகழ்வு இதுதான். இந்த நிகழ்வு இயேசு பிறப்பு முன்னறிவிப்பைப் பற்றிச் சொல்வதுடன் யோசேப்பு என்னும் நன்மாந்தரைப் பற்றியும் சொல்கிறது.

இயேசுவின் பிறப்பு முன்னறிவிப்பு நிகழ்வில், யோசேப்பு நமக்குக் கற்றுத்தரும் ஆறு பாடங்களை நான் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

1. 'மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது' (மத் 1:18) - 'உன் தொடர்பைச் சரியாக அறி!'

மண ஒப்பந்தம் என்பதை ஆங்கிலத்தில் 'என்கேஜ்மென்ட்' என்று அழைக்கின்றோம். தொலைபேசி அழைப்பில் ஒருவரை நாம் அழைக்கும்போது அவர் இன்னொருவரோடு இணைப்பில் இருந்தால், அவர் அல்லது அவருடைய இணைப்பு 'என்கேஜ்ட்' என்று சொல்கிறோம். அதாவது, இணைப்பு என்பது ஒருவருக்கும் இன்னொருவருக்கும் என்று ஆகிவிடும்போது அங்கே மூன்றாவது ஒன்றுக்கு இடமில்லை. ஆனால், இன்று 'கான்ஃபெரன்ஸ் வசதியில்' அது சாத்தியமே. யோசேப்பின் இணைப்பு தொடக்கமுதலே தெளிவாக இருக்கிறது. 

என் தொடர்பு அல்லது இணைப்பு ஒன்றோடும் நன்றாகவும் இருக்கிறதா?

2. 'அவர்கள் கூடி வாழும் முன் மரிய கருவுற்றிருந்தது தெரிய வந்தது' (மத் 1:18) - 'உன்னைச் சுற்றி நடப்பவை பற்றி அறிந்துகொள்!'

யோசேப்பு என்னதான் மௌனியாக இருந்தாலும், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்தவராக இருக்கிறார். நம்மைச் சுற்றி நடப்பவை பற்றிய அறிவும், அந்த அறிவைப் பற்றிய தெளிவும் பல நேரங்களில் நாம் சரியான முடிவுகள் எடுக்க உதவுகின்றன. எடுத்துக்காட்டாக, வெளியே மழை விழுகிறது என்ற அறிவு எனக்கு இருந்தால்தான், நான் தகுந்த முன்தயாரிப்புடன் செல்வேன்.நம்மைச் சுற்றி நடப்பவை பற்றி அறிதலோடு, அந்த அறிதலை ஆய்வுக்கு உட்படுத்துகிறார் யோசேப்பு.

என்னைச் சுற்றி நடப்பவை பற்றிய என் அறிவு எப்படி இருக்கிறது?

3. 'யோசேப்பு நேர்மையாளர்' (மத் 1:19) - 'உன் கையெழுத்து வாக்கியம் பற்றிய தெளிவும் தெரிதலும்'

மேலாண்மையியலில், 'கையெழுத்து வாக்கியம்' என்று ஒன்று சொல்லப்படுவதுண்டு. அதாவது, என்னைப் பார்க்கும் மற்றொருவர், 'இவர்தான் அவர்!' என்று என்னை அப்படி அழைப்பாரோ அதுதான் என் கையெழுத்து வாக்கியம். இந்தக் கையெழுத்து வாக்கியத்தில் என் நடை, உடை, இயக்கம், மதிப்பீடு, கொள்கை அனைத்தும் தெரிந்துவிடும். எடுத்துக்காட்டாக, 'அவர் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை, மனிதர்களையும் மதிப்பதில்லை' - இது நேர்மையற்ற நடுவர் பற்றி லூக்கா வரைகின்ற கையெழுத்து வாக்கியம் (காண். லூக் 18:2). 'நேர்மையாளர்' என்பதுதான் யோசேப்பின் கையெழுத்து வாக்கியம். இங்கே, 'நேர்மையாளர்' என்ற வார்;த்தை உடனடியாக வாசகரின் மனத்தில் ஓர் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. யோசேப்பு சட்டம் சார்ந்த நேர்மையாளராக இருந்தால் அவர் உடனடியாகத் தன் மனைவியைக் கல்லால் எறிந்து கொல்லுமாறு ஒப்படைக்க வேண்டும். ஏனெனில் மோசேயின் சட்டம் அப்படித்தான் சொன்னது (காண். இச 22:22-24). ஆனால், யோசேப்பு சட்டத்தையும் கடந்த நேர்மையை, அதாவது, தனிமனித அறம் அல்லது நாணயம்சார் நேர்மையைக் கடைப்பிடிக்கிறார்.

என் கையெழுத்து வாக்கியம் என்ன?

4. 'அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்' (மத் 1:19) - 'உனக்கு அடுத்திருப்பவரின் மாண்பைக் காப்பதில்தான் உன் மாண்பு உயர்கிறது'

மானம்-அவமானம், மதிப்பு-கேலி என்பது நம் கலாச்சாரம் சார்ந்த ஒன்றாக இருக்கிறது. யூத சமயத்தில் மானம் அல்லது மதிப்பு மிகவும் முக்கியமானதொன்றாகக் கருதப்பட்டது. தன்னுடை மதிப்பை மட்டுமல்ல, பிறருடைய மதிப்பையும் மாண்பையும் உறுதி செய்வதில் கவனமாக இருக்கிறார் யோசேப்பு. பல நேரங்களில் நாம் நம் மாண்பைக் காத்துக்கொள்ள முயற்சி எடுக்கும் வேளையில், மற்றவர்களின் மாண்பைக் கெடுத்துவிடுகின்றோம். தன் மனைவி எந்த நிலையில் இருந்தாலும் அவர் மாண்புக்கு உரியவர் என நினைக்கின்றார். தன் மாண்பைக் காத்துக்கொள்ள இயலாத வறியவர்கள் மற்றும் எளியவர்களின் மாண்பைக் காக்க நாம் முயற்சி எடுக்க வேண்டும்.

நான் எனக்கு அடுத்திருப்பவரை மாண்புடன் நடத்துகிறேனா? என் மனத்திலும் அவரை மதிப்புடன் வைத்திருக்கிறேனா?

5. 'அவர் இவ்வாறு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றி' (மத் 5:20) - 'குழப்பம் அதிகமாக இருக்கும்போது யோசிக்காதே! அல்லது யோசித்துக்கொண்டே தூங்கிவிடு!'

இன்று நம்மை அதிகமாக வருத்தும் ஒரு நோய் 'ஓவர்திங்கிங்.' இதற்குக் காரணம் நம்மைச் சுற்றியிருக்கின்ற தகவல் பெருங்குப்பைகள். பத்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு தலைவலித்தது என்றால் நான் மருந்தகத்தில் ஒரு மாத்திரை வாங்கிச் சாப்பிடுவேன். ஆனால், இன்று எனக்குத் தலைவலித்தால் உடனே கூகுள் தேடுபொறி திறந்து, 'தலைவலிக்கான காரணங்கள்' எனத் தொடுதிரையில் பதிவிடுகிறேன். 'முன்பக்க தலைவலி, பின்பக்க தலைவலி, ஒருபக்க தலைவலி, உச்சியில் தலைவலி, காயத்துடன் தலைவலி, காயமில்லாமல் தலைவலி, வெளிப்புறத்தில் வலி, உள்புறத்தில் வலி' என எனக்கு எவ்வளோ தகவல்களை வழங்கி, நான் ஒன்றை இன்னொன்றோடு முடிச்சிட்டு, ஒருவேளை இது மிகவும் மோசமான மூளைசார் நோயாக இருக்குமோ? என அச்சம் கொள்கிறேன். ஏனெனில், 'ஓவர்திங்கிங்.' மேற்காணும் வரியை வாசிக்கும்போதெல்லாம் நான் யோசேப்பின் அந்நிலையைக் கற்பனை செய்து பார்ப்பதுண்டு. எவ்வளவு நேரம் யோசித்துக்கொண்டே இருந்திருப்பார்? ஒரு பேப்பரில் குறிப்பெடுத்திருப்பாரா? அல்லது தான் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஆணிகளில் ஒன்றை எடுத்து தனக்கு முன் இருந்த மரப்பலகையில் கீறிக்கொண்டிருந்தாரா? அல்லது தனக்கு முன் கிடந்த மண்ணில் சக்கை ஒன்றால் கிளறிக்கொண்டிருந்தாரா? அல்லது ஒருசாய்த்துப் படுத்துக்கொண்டு விரல்களைத் தொடையில் தட்டிக்கொண்டே இருந்தாரா? ஆனால்! பாவம்! அப்படியே தூங்கி விடுகிறார். 

நான் ஓவர்திங்கிங் செய்யும் நேரங்களிலிருந்து எப்படி விடுபடுகிறேன்?

6. 'ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' (மத் 1:24) - வெளிப்பாடு கனவில் வந்தாலும் ஏற்றுக்கொள்!

இறைவனின் வெளிப்பாடு எதன் வழியாக வந்தாலும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்ற பதிலிறுப்பு செய்தல் நலம். இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளில் நான்கு வகையான வெளிப்பாடுகள் இருக்கின்றன: (அ) வானதூதர் வழியாக கனவில் - யோசேப்புக்கு, (ஆ) வானதூதர் வழியாக நேரிடையாக - மரியாவுக்கு, (இ) நட்சத்திரம் வழியாக - ஞானிகளுக்கு, மற்றும் (ஈ) உள்ளுணர்வு வழியாக - சிமியோன் மற்றும் அன்னாவுக்கு. இன்று நமக்கும் நிறைய வெளிப்பாடுகளையும், குழப்பங்களில் தெளிவுகளையும் கடவுள் தருகின்றார். அவை வரும் ஊடகங்கள் வித்தியாசமானவை. நாம் அவற்றைச் சரியாகக் கண்டு, தெரிதல் அவசியம்.

இறைவனின் வெளிப்பாட்டுக்கு என் பதிலிறுப்பு எப்படி இருக்கிறது? 

1 comment:

  1. புனித யோசேப்பு குறித்த அழகான..அழுத்தமான வெளிப்பாடு.’இயேசுவின் பிறப்பு முன்னறவிப்பு நிகழ்வில்’ தந்தைக்கு நெருக்கமான பாடங்கள். நமக்கும் எல்லாமே சம்மதமெனினும் சில உள்ளத்தை ஊடுருவிப் பாய்வதாக உள்ளன.” என்னைச்சுற்றி நடப்பவற்றை நான் அறிந்து கொள்ளுதல் மிக அவசியம்.”....” எனக்கு அடுத்தவரை நான் மாண்புடன் வைத்திருப்பது.அவர் தவறைச்சுற்றிக்காட்ட வேண்டிய நிலை வந்திடினும் அதை சந்தடியின்றி செய்வது.” “ இதுவா..அதுவா...எது சரி? எனும் குழப்பம் ஏற்படுகையில் அதிகம் யோசிப்பதை நிறுத்தி சிந்தனையை கலங்கமற்ற தெளிந்த நீரோடையாக வைத்திருப்பது.” இறைவனின் வெளிப்பாடு ஒரு சிறு குழந்தை வழியே வந்தாலும்கூட அதை ஏற்றுக்கொண்டு பதிலிறுப்பு செய்வது..”... மேற்கூறியவை எல்லாம் நான் என் முயற்சியில் எடுக்கவேண்டியவை. ஆனால் அந்த “ கையெழுத்து வாக்கியம்” என்பது என்னைப்பற்றி என்னைச்சுற்றியிருப்பவர்கள் தர வேண்டியது. எனக்கு அதில் உடன்பாடு இருக்கலாம்...இல்லாமலும் போகலாம்.

    அன்று போல் நட்சத்திரம்,கனவு,ஞானிகள் போன்ற முறையில் இறைவன் தம் வெளிப்பாட்டை எனக்குத் தெரிவிக்காமல் போனாலும் என் “ உள்ளுணர்வு” என்பது என் கூடவே இருப்பது; அது நல்லதை மட்டுமே எனக்கு எடுத்து வைக்கும். அதைத் தெரிந்து கொண்டு,நம்பி அவற்றின்வழி நடப்பதே சால்பு என்கிறார் தந்தை.

    அமைதியான...ஆரவாரமற்ற யோசேப்பு பலருக்கு நெருக்கமானவர். ஒரு வாய்ச்சொல் வீரராக இல்லாமல் தன் மௌனத்தாலேயே மனிதரைத் தன் பக்கம் இழுப்பவர்.இவரைப்பற்றிய பலவிஷயங்களைப் பெரு முயற்சி எடுத்துக் கொடுத்த தந்தையைப் புனித. யோசேப்பு ஆசீர்வதிப்பாராக! நன்றிகள்!!!

    ReplyDelete