இன்றைய (15 டிசம்பர் 2020) நற்செய்தி (மத் 21:28-32)
எண்ணத்தை மாற்றிக் கொண்டு
இன்றைய நற்செய்தி வாசகத்தில் 'இரு புதல்வர்கள்' எடுத்துக்காட்டை இயேசு முன்வைக்கின்றார். இயேசுவின் உவமைகளில், இது 'தன்னாய்வு உவமை வகையை' சார்ந்தது. அதாவது, உவமையைக் கேட்கும் ஒருவர், அந்த உவமையின் கதைமாந்தருள் ஒருவரோடு தன்னைப் பொருத்திப் பார்த்தி ஆய்வு செய்து அதற்கேற்ற பதிலிறுப்பு செய்ய வேண்டும். இறைவாக்கினர் நாத்தான், தாவீது அரசரிடம் சொன்ன, 'குடியானவனும் ஆட்டுக்குட்டியும்' என்னும் உவமையும் இவ்வகை உவமையைச் சார்;ந்ததே. ஆகையால்தான் உவமையைக் கேட்டு முடித்தவுடன், 'இச்செயலைச் செய்தவன் உடனே சாக வேண்டும்!' எனத் துள்ளி எழுகின்றார் தாவீது.
மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணக்கிடக்கும் இந்த உவமைக்கும், மத்தேயு நற்செய்தியாளரின் சில கூறுகளுக்கும் முக்கியமான வித்தியாசங்கள் இருக்கின்றன:
(அ) இளையமகன் ஏற்பு
இஸ்ரயேல் மக்கள் தங்கள் இலக்கியங்களில் பேணி வளர்த்த ஓர் அழகிய வாழ்வியல் கூறு இது: இளைய மகன் ஏற்பு. இஸ்ரயேல் தன் சமகாலத்தில் தன்னைச் சுற்றியிருந்த நாடுகள் அல்லது மக்களினங்கள் நடுவே மிகவும் சிறியதாக இருந்தது. மிகவும் சிறியதாக இருக்கும் தன்னை மட்டுமே ஆண்டவராகிய கடவுள் தேர்ந்துகொண்டு உடன்படிக்கை செய்ததாக பெருமைப்பட்டுக் கொண்டது. விவிலியத்தின் கதையாடல்கள் அனைத்திலும் இந்தக் கூறு மிளிர்ந்தது: ஆபிரகாமின் இல்லத்தில் மூத்தவரான இஸ்மயேல் தள்ளப்படுகிறார், ஈசாக்கு அள்ளப்படுகிறார். ஈசாக்கின் வீட்டில் ஏசா தள்ளப்படுகிறார், யாக்கோபு அள்ளப்படுகிறார். யாக்கோபின் வீட்டில் மூத்தவர்கள் தள்ளப்பட 11வது மகனான யோசேப்பு அள்ளப்படுகிறார். லூக்கா நற்செய்தியாளரின் 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டிலும், 'இளையமகன் ஏற்புடையவராகி இல்லம் திரும்புகின்றார். மூத்த மகனோ முணுமுணுத்தவாறு நிற்கின்றார்.' மத்தேயு நற்செய்தியின் தலைமுறை அட்டவணையிலும் இளையமகன்களே அதிகம் தென்படுவர். ஆனால், இங்கே, இந்த உவமையில் தந்தைக்கு ஏற்புடையவராக மாறுபவர், 'இளைய மகன்' அல்ல, மாறாக, மூத்த மகன்.
(ஆ) இறையாட்சி
மத்தேயு நற்செய்தியாளர் பெரும்பாலும் 'விண்ணரசு' என்னும் சொல்லாட்சியையே பயன்படுத்துகிறார். இங்கே அவர், 'இறையாட்சி' என்று பயன்படுத்துவது நம் ஆர்வத்தை அதிகமாக்குகிறது. 'இறையாட்சி' அல்லது 'இறையரசு' என்பது மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் அதிகம் பயன்படுத்தும் சொல்லாட்சி.
(இ) வரிதண்டுவோரும் விலைமகளிரும்
'வரிதண்டுவோரும் பாவிகளும்' என்னும் சொல்லாட்சியே பெரும்பாலும் நற்செய்தி நூல்களில் பயன்படுத்தப்பட்டிருக்க, இந்த இடத்தில் மட்டும், 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது. 'விலைமகளிர்' என்னும் வார்த்தை தனியாக, 'காணாமல் போன மகன்' எடுத்துக்காட்டில் வருகிறது. அங்கே, இளைய மகனைச் சுட்டிக்காட்டி மூத்த மகன் இந்த வார்த்தையைச் சொல்கிறார் (காண். லூக் 15:30). 'வரிதண்டுவோரும் விலைமகளிரும்' என்னும் சொல்லாடல் வழியாக, மத்தேயு நற்செய்தியாளர் தன்னையும், முதல் ஏற்பாட்டு இரகாபையும் குறிப்பிட்டிருக்கலாம் என்பது என் கருத்து. ஏனெனில், மத்தேயுவின் சமகாலத்தவர்கள் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதபோது அவரே இயேசுவை முதலில் ஏற்றுப் பின்தொடர்கிறார். எரிக்கோ நகரை உளவு பார்க்கச் சென்ற இஸ்ரயேல் மக்களின் ஒற்றர்களை வரவேற்ற கானானிய விலைமகள் இராகாபு ஆண்டவராகிய கடவுளைத் தன் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றார்.
மேற்காணும், மூன்று சொல்லாட்சிகளும் இயேசுவின் சமகாலத்தில் அவருடைய இந்த உவமையைக் கேட்ட தலைமைக்குருக்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும் பெரிய இடறலாக இருந்திருக்க வேண்டும்.
'வரிதண்டுவோரையும் விலைமகளிரையும்' அவர்களைவிட மூத்தவர்கள் என அழைப்பதோடு, இளைய மகன் ஒதுக்கப்படுகிறான் என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.
இளைய மகனிடம் சொல் இருந்தது, ஆனால், செயல் இல்லை.
மூத்த மகனிடம் சொல் இல்லை, ஆனால், செயல் இருந்தது.
'சொல் பெரிதல்ல' என்பதை இங்கே, மலைப்பொழிவின் பின்புலத்தில் புரிந்துகொண்டால், 'என்னை நோக்கி, 'ஆண்டவரே! ஆண்டவரே!' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் நுழைவதில்லை' (காண். மத் 7:21) என்னும் வாக்கியத்தின் வழியாக, சொல்லை விட செயலே முக்கியம் என்பது தெளிவாகிறது.
இந்த உவமை நமக்குச் சொல்வது என்ன?
இந்த உவமையில் வரும் இளைய மகன், தவறான வாக்குறுதி தருகிறான் அல்லது தந்த வாக்குறுதியை மீறுகிறான். முகதுதிக்காக, தன் தந்தையை, 'ஆண்டவரே!' என அழைக்கிறான். ஆனால், தான் விரும்பியதைச் செய்கிறான்.
மூத்த மகன் ஒன்றே ஒன்றைச் செய்தான்: 'தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்'
அதாவது, தன் விருப்பத்திற்கு முரணாக அப்பாவின் விருப்பம் இருந்தாலும், அப்பாவின் விருப்பம் நோக்கித் தன் மனத்தைத் திருப்புகிறான்.
இதையே எதிர்மறையாக இயேசு அவர்களிடம், 'நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை' என்று தன் உவமையைக் கேட்பவர்களிடம் சொல்கின்றார்.
இன்று, நான் என் எண்ணத்தை இறைவிருப்பம் நோக்கி மாற்றிக்கொள்ளத் தயரா?
இறைவிருப்பத்திற்கு நான் முதலில், 'நோ!' ('இல்லை') என்று சொன்னாலும் பரவாயில்லை. என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள கடவுள் எனக்கு நேரம் கொடுக்கிறார். புனித அகுஸ்தினார் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். இல்லையா?
மூத்தவன்,இளையவன், அள்ளப்படுபவர்,தள்ளப்படுபவர்,விலைமாந்தர் என ஏகப்பட்ட கதை மாந்தர்களென அடுக்கிக்கொண்டே போகிறார் தந்தை. முதலில் உயர்ந்து நிற்பவன் இளையவன் எனத்தெரிந்தாலும் தன்னிடமிருந்த எதிர்மறை எண்ணத்தை மாற்றிக்கொண்டதற்காக.... தன் தந்தையை நோக்கித் தன் மனத்தை திருப்பியதற்காக மூத்த மகன் ஒன்றே செய்தாலும்,அதை நன்றே செய்தவனாகப் போற்றப்படுகிறான்.
ReplyDeleteநாமும் இறைவனை நோக்கி ‘இல்லை’ என்று சொன்ன தருணங்களுக்காக வருந்துவதும், ‘ஆம்’ என்று சொல்லிய தரணங்களுக்காக மகிழ்வதும் நியாயமே! இங்கேயும் தன் மேற்கோளாக..... தனக்கு வழிகாட்டியாக நினைக்கும் புனித.அகுஸ்தினாரை நம் முன்னுதாரணமாக க் காட்டும் தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!