Sunday, December 20, 2020

என் காதலர் குரல் கேட்கின்றது

இன்றைய (21 டிசம்பர் 2020) முதல் வாசகம் (இபா 2:8-14)

என் காதலர் குரல் கேட்கின்றது

இன்று இரண்டு முதல் வாசகங்கள் கொடுக்கப்பட்டு, நாம் ஒன்றைத் தெரிவுசெய்துகொள்ளுமாறு திருவழிபாடு நம்மை அழைக்கின்றது. இரண்டு வாசகங்களின் மையமாக இருக்கின்ற செய்தி மகிழ்ச்சிதான். இனிமைமிகு பாடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் ஒரு காதலியின் மகிழ்ச்சியையும், செப்பனியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள வாசகம் ஒரு மகளின் மகிழ்ச்சியையும் நமக்கு அறிமுகம் செய்கிறது. காதலியின் மகிழ்ச்சியையே நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இதே வாசகம் புனித மகதலா மரியாளின் திருநாளன்றும் நமக்கு முதல் வாசகமாக வருகிறது.

'என் காதலர் குரல் கேட்கிறது. இதோ, அவர் வந்துவிட்டார்!'

'நாம் சந்திக்கும் அனைவருமே நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றனர் - சிலர் வரும்போது, சிலர் போகும்போது' என்பது ஆஸ்கர் ஒயில்ட் அவர்களின் வாக்கியம்.

ஒருவரை நமக்குப் பிடிக்கிறதா அல்லது இல்லையா என்பதை அவருடைய உடனிருப்பு நம்மில் ஏற்படுத்தும் உணர்வை வைத்துச் சொல்லிவிடலாம். இல்லையா? சில நேரங்களில் மட்டுமே மனம் புத்தன் போல எவ்விதச் சலனமின்றி இருக்கும். 

துறவி ஒருவர் ஆற்றின் நடுவில் ஒரு படகில் அமர்ந்தவாறு தியானம் செய்துகொண்டிருந்தார். அந்நேரம் திடீரென அவருடைய படகில் இன்னொரு படகு வந்து மோதுகிறது. 'யார் அது கண் தெரியாதவன்?' எனக் கோபித்துக்கொண்டே கண்களைத் திறக்கின்றார். மோதிய படகில் யாரும் இல்லை. பரிசல் ஒன்று காற்றில் அடித்துக்கொண்டே வரப்பட்டு இவருடைய படகில் மோதியிருக்கிறது. 'வெற்றுப் படகையா திட்ட முடியும்?' எனத் தனக்குள் சிரித்துக்கொண்டே தியானத்தைத் தொடர்கின்றார்.

இதுதான் புத்தன் மனநிலை. நம்மேல் வந்து மோதுகின்ற வெற்றுப் படகுகளைத் திட்டியே பல நாள்கள் நம் மகிழ்ச்சியை, அமைதிiயை, மதிப்பை இழந்திருக்கின்றோம்.

காதலனின் வருகை காதலிக்கு மகிழ்ச்சி தருகிறது.

வருகின்ற காதலன் உடனே வந்து காதலி முன் நிற்கவில்லை. மாறாக, அவனுடைய வருகையே சின்னச் சின்ன விளையாட்டாக இருக்கிறது: 'மதிற்சுவருக்குப் பின் நிற்கின்றார். பலகணி வழியாகப் பார்க்கின்றார். பின்னல் தட்டி வழியாக நோக்குகின்றார்.' காதலன் இப்படியாக விளையாடியிருக்கலாம். அல்லது 'இப்படி எல்லாம் தன் காதலன் வந்து நின்று தனக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்க மாட்டானா?' என்ற ஒரு விஷ் ஃபுல்ஃபில்மென்ட் கொண்டிருக்கலாம். 'சர்ப்ரைஸ்க்கும்' 'ஷாக்கிற்கும்' சின்ன வித்தியாசம்தான். மகிழ்ச்சி விளைந்தால் சர்ப்ரைஸ்! துன்பம் விளைந்தால் ஷாக்!

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 1:39-45), காதலன் மற்றும் காதலி யார் என்பதை நமக்குச் சொல்கிறது. ஒரு பக்கம் எலிசபெத்தாம்மாளைக் காதலி என்றும், மரியாவை காதலன் என்றும், இன்னொரு பக்கம் வயிற்றில் இருந்த திருமுழுக்கு யோவானைக் காதலி என்றும், இயேசுவைக் காதலன் என்றும் உருவகித்துக்கொள்ள முடியும்.

மரியா எலிசபெத்தைக் காணப் புறப்பட்டுச் செல்கின்றார். மரியாவின் செல்கை மூன்று கூறுகளை உள்ளடக்கியுள்ளது: (அ) அவர் உடனே புறப்படுகின்றார், (ஆ) அவர் எந்தவொரு முன்னறிவிப்பும் தராமல் புறப்படுகின்றார், (இ) நீண்ட பயணமாக இருந்தாலும் புறப்படுகின்றார்.

யூதேய மலைநாட்டிலிலுள்ள எலிசபெத்தின் இல்லம் அமைந்த ஊர் அய்ன் கரிம் என்று மரபுவழியாக அறியப்படுகிறது. கலிலியேப் பகுதியிலிருந்து, சமாரியப் பகுதி தாண்டி, யூதேயா வருகின்றார் மரியா. இயேசுவின் இறையாட்சிப் பணியின் உருவகமாகவும் இது இருக்கிறது எனலாம். இயேசுவும் தன் பணியைக் கலிலேயாவில் தொடங்கி யூதேயாவில் நிறைவு செய்கின்றார். மரியா ஏறக்குறைய 150 கிமீ தூரம் பயணம் செய்திருக்க வேண்டும். பயணத்தை நிறைவு செய்ய அவருக்கு 5 நாள்கள் ஆகியிருக்கும்.

எதற்காக இவ்வளவு தூரப் பயணம்?

முதிர்கன்னியான எலிசபெத்துக்கு உதவி செய்யவா? அல்லது

வானதூதர் அறிவித்தவாறே எலிசபெத்து கருத்தரித்தார் என்பதை உறுதி செய்யவா? அல்லது

தான் கருவுற்றிருப்பதை தன் கணவர் யோசேப்பிடம் எப்படிச் சொல்வது என்று ஆலோசனை கேட்கவா? அல்லது

தன் குழப்பத்தை, அச்சத்தை, கலக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு தோள் தேவை என்ற தேடலிலா? அல்லது

'மெசியா வரப்போகிறார்!' 'அவர் என் வயிற்றில் பிறக்கப்போகிறார்!' என்ற மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துகொள்ளவா?

மரியாவின் பயணத்துக்கான காரணத்தை லூக்கா பதிவு செய்யவில்லை. 

செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் மரியா அவரை வாழ்த்துகிறார். வழக்கமாக யூதர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும், 'ஷலோம்!' என்ற சொல்லால் வாழ்த்தியிருக்கலாம். அந்த வாழ்த்தோடு இணைந்து அந்த அற்புதம் நடக்கிறது.

'ஷலோம்!' என்று ஸ்விட்ச்சை அழுத்த, 'காலிங் பெல்' தன் வயிற்றில் அடிப்பதை உணர்கின்றார் எலிசபெத்து. கதவு நோக்கி ஓடி வருகிறார். ஆச்சரியம்! மரியா என்னும் இளவல் அங்கே நிற்கின்றார். 'மிரியம்! என்னடா இங்க? எப்படி இவ்வளவு தூரம்? யாரும் உடன் வரவில்லையா?' என்று பரஸ்பர கேள்விகள் கேட்பதற்குப் பதிலாக, 'என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?' என்று உச்சி முகர்கின்றார். அந்த நிகழ்வை நாம் நம் கண்முன் நடப்பது போல யோசித்தால் நம் மெய் சிலிர்க்கிறது. தனக்கு முன் வந்து நிற்கின்ற ஒரு குட்டிப் பூவில் ஆண்டவரின் தாயைக் காண எலிசபெத்தால் எப்படி முடிந்தது?

நிற்க.
மகிழ்ச்சி என்பது இங்கே ஒரு எதார்த்தமான, இயல்பான ஒன்றாக நடந்தேறுகிறது. என்ன ஆச்சர்யம்! மகிழ்ச்சிக்காக நாம் எந்த முயற்சியும் செய்யவில்லை. அது தானாகவே நடந்தேறுகிறது.

நம் கதவருகில் வந்து நிற்கும் அனைவரையும், 'என் ஆண்டவரின் தாய், என் ஆண்டவரின் தந்தை' என்று 'கடவுள்தாங்குபவராக' பார்த்தால் அங்கே மகிழ்ச்சி சாத்தியம்.

அல்லது மரியா போல வாய் நிறைய மற்றவர்களை வாழ்த்தினால் அங்கே மகிழ்ச்சி சாத்தியம்.

காதலன் குரல் கேட்டால் மகிழ்ச்சி. கடவுளே அந்தக் காதலன் என்றால் மகிழ்ச்சி நிரந்தரம்.

4 comments:

  1. எலிசபெத்தும் ,மரியாவும் சந்திக்கும் நிகழ்வு எதேச்சையாக நடக்கிறது.’ ஷலோம்’ என்ற ஸ்விட்சை அழுத்த காலிங் பெல் தன் வயிற்றில் அடிப்பதை உணர்கிறார் எலிசபெத்து. அங்கே தன் முன் நிற்கும் மரியாவைக்கண்டு உச்சி முகர்கிறார். தன் முன் வந்து நின்ற குட்டிப்பூவில் ஆண்டவரைக் காண்கிறார் எலிசபெத்து. இது எப்படி சாத்தியம்? எனும் கேள்வியைக்கேட்டு அதற்கான பதிலையும் தருகிறார் தந்தை. ஆம்! நம் கதவருகில் வந்து நிற்கும் அனைவரையும் “ என் ஆண்டவரின் தாய், என் ஆண்டவரின் தந்தை” எனப்பார்த்தால மகிழ்ச்சி சாத்தியமே!மரியா போல ஒரு காதலன் / காதலி திடீரென்று கண்முன் வந்து நின்றால் யாருக்குமே மகிழ்ச்சி சாத்தியம்.காதலனோ...காதலியோ .....அது கடவுளாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி மட்டுமே நிரந்தரம்.

    என் புனிதப் பயணத்தில் மரியா கால்வலிக்க நடந்து வந்த காட்டுமேட்டையும்...அப்படி வந்து தன் அத்தையைக்கண்டு சிலிர்த்துப்போன இடத்தையும் பார்க்கும் வரம் கிடைத்தது. மலரும் நினைவுகளைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Simply superb👌
    Excellent narration👍

    பலகணி, மதிற்சுவர்,பின்னல்தட்டு வழியாக பயணித்து,நாசரேத் நங்கை கரம் பற்றி,அயின்கரீம் எலிசபேத்தை தழுவி.... மகிழ்ச்சி...

    எதார்த்தமாக இருந்தால் தான் அது "மகிழ்ச்சி"
    Otherwise it is " make up"

    என் கண் முன்,அடிக்கடி பரிணமிக்கும், ஒரு குட்டிப் புயலிலும்,நான் என் ஆண்டவரை காணும் முடிகிறது.🙏

    The way to நிரந்தர மகிழ்ச்சி 🤝
    இன்றைய நடை.... Marvelous!

    Switch, calling bell.,.

    Excitement delights the reader.

    ReplyDelete
  3. Excellent dear Thambi.

    ReplyDelete