இன்றைய (30 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 2:36-40)
அன்னா
சிமியோன் கைகளில் குழந்தை ஏந்தியதைத் தொடர்ந்து அங்கே வருகிறார் அன்னா.
சிமியோன் பற்றி எந்தப் பின்புலக் குறிப்பும் தராத லூக்கா, அன்னா பற்றி சில குறிப்புகளைத் தருகின்றார்: (அ) ஆசேர் குலத்தைச் சேர்ந்தவர், (ஆ) பானுவேலின் மகள், (இ) கைம்பெண், (ஈ) இறைவாக்கினர், (உ) வயது முதிர்ந்தவர், (ஊ) ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர், மற்றும் (எ) அவருக்கு வயது எண்பத்து நான்கு.
ஆசேர் குலத்துக்கு குலமுதுவர் யாக்கோபு இவ்வாற ஆசி வழங்குகிறார்: 'ஆசேரின் நிலம் ஊட்டமிக்க உணவளிக்கும். மன்னனும் விரும்பும் உணவை அவன் அளித்திடுவான்' (காண். தொநூ 49:20). மோசேயும் ஆசேர் குலத்திற்கு நீண்ட ஆசி வழங்குகின்றார்: 'ஆசேர் எல்லாக் குலங்களிடையே ஆசி பெற்றவனாவான். தன் உடன்பிறந்தாருக்கு உகந்தவனாய் இருப்பான். அவன் தன் காலை எண்ணெயில் தோய்ப்பான். உன் தாழ்ப்பாள்கள் இரும்பாலும் செம்பாலும் ஆனவை. உன் வாழ்நாள் அனைத்தும் நீ பாதுகாப்புடன் இருப்பாய்' (காண். இச 33:24).
'பானுவேல்' என்றால் எபிரேயத்தில் 'கடவுளின் முகம்' என்று பொருள். கடவுளின் முகத்தைப் பார்ப்பார் இவருடைய மகள் என்பதற்காக லூக்கா உருவாக்கிய காரணப்பெயராகவும் இது இருக்கலாம்.
'கைம்பெண்' - கைம்பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர் யூதச் சமூகத்தில். ஏனெனில், அவர்களுடைய பாவங்களுக்காகவே அவர்களது கணவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்று அவர்கள் எண்ணினர். ஆனால், கைம்பெண் ஒருத்தியும் கடவுளைக் கைகளில் ஏந்தும் பாக்கியம் பெற்றாள் என்று சொல்வதன் வழியாக லூக்கா அன்றைய சமூகத்தின் சிந்தனையைப் புரட்டிப் போடுகின்றார்.
'இறைவாக்கினர்' - ஆலயத்தில் அமர்ந்து இறைவனின் திருவுளச்சீட்டு எது என அறிய மக்களுக்கு உதவியவராக அன்னா இருக்கலாம்.
'வயது முதிர்ந்தவர்' - இங்கே, 'ஏழு' மற்றும் 'ஏழு முறை பன்னிரண்டு - எண்பத்து நான்கு' என்னும் இரு எண்களைப் பயன்படுத்துகிறார் லூக்கா, 'ஏழு' என்றால் நிறைவு. 'ஏழு முறை பன்னிரண்டு' என்றால் நிறைவிலும் நிறைவு. ஆக, திருமண வாழ்விலும், மண்ணக வாழ்விலும் நிறைவுடன் இருக்கின்றார் அன்னா.
'அன்னா' - 'இரக்கம்' என்பது பொருள்.
சிமியோன் குழந்தையைக் கைகளில் ஏந்தி குழந்தையின் தாயிடம் பேசுகின்றார்.
அன்னா, குழந்தையைக் கைகளில் ஏந்தவில்லை. ஆனால், குழந்தை பற்றி அனைவரிடமும் பேசுகின்றார்.
கடவுள் அனுபவம் பெற்ற சிமியோன் கடவுளிடம் பேசுகின்றார்.
கடவுள் அனுபவம் பெற்ற அன்னா மற்றவர்களிடம் பேசுகின்றார். தான் கண்டு அனுபவித்ததை மற்றவர்களுக்குச் சொல்கின்றார் அன்னா. இறையனுபவம் என்ற பெரிய புதையலைத் தனக்குள் வைத்துக்கொள்ளத் தெரியாத அன்னா தான் கண்ட அனைவரிடமும் தான் கண்ட புதையல் பற்றிப் பேசுகின்றார்.
இன்று நாம் இறையனுபவம் பெறுகின்றோம்.
தனிப்பட்ட வாழ்வில், பிறரைச் சந்தித்தலில், செபத்தில், வழிபாட்டில், இறைவார்த்தை வாசிப்பில் என நிறையத் தளங்களில் நாம் இறையனுபவம் பெறுகின்றோம்.
அனுபவம் பெற்றவுடன் அதற்கான நம் பதிலிறுப்பு எப்படி இருக்கிறது?
எனக்குள் அந்த அனுபவத்தைப் புதைத்துக்கொள்கிறேனா? அல்லது மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கிறேனா?
இங்கே அன்னா இன்னொன்றையும் நமக்குக் கற்றுத் தருகிறார்.
அவர் ஒருபோதும் தன்னைச் சூழலின் பலிகடா என்று உணரவில்லை. சீக்கிரம் முடிந்த திருமண வாழ்வை ஒரு பிரச்சினையாகப் பார்க்காமல், இறைப்பணிக்கான வாய்ப்பாகப் பார்க்கின்றார். நம் வாழ்வில் நமக்கு நேர்கின்ற நிகழ்வுகளையும் நேர்வுகளையும் நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், அவற்றுக்கான பதிலிறுப்பை நாம் கட்டுப்படுத்தலாம். அன்னாவின் பதிலிறுப்பு நேர்முகமானதாக இருந்தது.
மேலும், அன்னா நிறைய மனிதர்களைச் சம்பாதித்திருந்தார். தன் குடும்பம் விட்டு விலகிய அவர், தனக்குத் தெரிந்த அனைவரையும் தன் குடும்பம் என ஆக்கிக்கொள்கின்றார். ஆகையால்தான், அவரால் எல்லாரோடும் உரிமையோடு பேசவும் குழந்தை பற்றிப் பகிரவும் முடிந்தது.
அன்னாவின் கூன்விழுந்த உடல் கேள்விக்குறியாக வளைந்து கிடந்தது. ஆண்டவரைக் கண்டவுடன் அது ஆச்சர்யக்குறியாக நிமிர்ந்து நின்றது.
நம் வாழ்வில் நமக்கு நேர்கின்ற நிகழ்வுகளையும் நேர்வுகளையும் நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால், அவற்றுக்கான பதிலிறுப்பை நாம் கட்டுப்படுத்தலாம். அன்னாவின் பதிலிறுப்பு நேர்முகமானதாக இருந்தது.
ReplyDeleteGreat👍
அன்னாவின் கூன்விழுந்த உடல் கேள்விக்குறியாக வளைந்து கிடந்தது. ஆண்டவரைக் கண்டவுடன் அது ஆச்சர்யக்குறியாக நிமிர்ந்து நின்றது.👌
Excellent! Supeb🤝
அன்னா தனக்குத் தெரிந்த அனைவரையும் தன் குடும்பம் என ஆக்கிக்கொள்கின்றார்.
Lovely
I love this statement,richly.
இன்றையக் கதாநாயகன் ‘சிமியோன்’ எனில் நாளைய கதாநாயகியாக ‘அன்னாவை’ அறிமுகப்படுத்துகிறார் தந்தை.
ReplyDelete“கைம்பெண் ஒருத்தியும் இயேசுவைக் கைகளில் ஏந்தும் பாக்கியம் பெற்றாள்.....
அன்னா என்றாள் இரக்கம்” போன்ற வரிகள் அன்னாவை நமக்கு நெருக்கமாக்குகின்றன.
கடவுள் அனுபவம் பெற்ற சிமியோன் கடவுளிடம் பேசுகிறார்;
கடவுள் அனுபவம் பெற்ற அன்னா தான் பெற்ற ‘ இறையனுபவம் ‘ எனும் புதையல் பற்றி
மக்களிடம் பேசுகிறார்.
நமக்கு கிடைக்கும் இறையனுபவத்தை நாம் என்ன செய்கிறோம்?.... தந்தையின் கேள்வி. நமக்கு கிடைக்கும் இறையனுபவத்தை ஒரு புதையலாகக் கருதவும்,அப்புதையலைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளவும், நம் வாழ்வின் நிகழ்வுகளை நேர்முகமாகப் பார்க்கவும், நம் மனிதர்,நம் குடும்பம் தாண்டி அனைவரையும் நம் பேச்சால்...நடத்தையால் ஆட்கொள்ளவும் கற்றுத்தருகிறார் இந்த அன்னா!
வாழ்க்கை எனும் பந்தயத்தில் நாம் தோற்றுப்போகும் நேரங்களில் திருமண வாழ்விலும்,மண்ணக வாழ்விலும் நிறைவு கண்ட ‘ அன்னா’ நமக்குத் துணை வரட்டும்!
நாளுக்கு நாள் மெருகேறி வரும் தந்தையின் எழுத்து நடையும், ‘ நேர்வு’ போன்ற புதுப்புது வார்த்தைகளும் புருவங்களைத் தூக்க வைக்கின்றன.
“ கேள்விக்குறியாக இருந்த அன்னாவின் கூன் விழுந்த உடல் ஆண்டவரைக்கண்டவுடன் ஆச்சரியக்குறியானது.”........ இது ஒன்று போதாதா சாம்பிளுக்கு?
அழகான தமிழுக்காக மட்டுமல்ல....அழகான செய்திக்கும் சேர்த்தே தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!
Good Reflection Yesu. Happy New Year. May God bless you and your ministry
ReplyDeleteஆமென்!
ReplyDelete