Thursday, December 24, 2020

தீவனத் தொட்டியில் குழந்தை

கிறிஸ்து பிறப்பு பெருவிழா (நள்ளிரவு)

எசாயா 9:2-4, 6-7 தீத்து 2:11-14 லூக்கா 2:1-14

தீவனத் தொட்டியில் குழந்தை

'ஆதாமை, ஆண்டவராகிய கடவுள் ஏதேன் தோட்டத்தை விட்டு விரட்டினார். கண்ணீரும் கவலையுமாய் சற்றுத் தூரம் கடந்து திரும்பிப் பார்க்கும் ஆதாம், ஏதேன் தோட்டத்தை ஏக்கத்தோடு பார்க்கிறார். ஆதாமை வெளியே அனுப்பியதில் கடவுளுக்கும் சற்றே வருத்தம்.

'நான் கழுதையுடன் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டுமோ?

என் குழந்தையின் வாய், கழுதைகள் உண்ணும் தீவனத் தொட்டியில் பட வேண்டுமோ?'

என்று கேட்டுக்கொண்டே ஆதாம் நகர்கின்றார். 

அவரின் பார்வையிலிருந்து தோட்டமும் மறைகின்றது, கடவுளும் மறைகின்றார்.'

ரபிக்களின் மித்ராஷ் இலக்கியம் ஒன்று இப்படிக் குறிப்பிடுகிறது.

'காளை தன் உடைமையாளனை அறிந்துகொள்கிறது. கழுதை தன் தலைவன் தனக்குத் தீனி போடும் இடத்தைத் தெரிந்துகொள்கின்றது. ஆனால், இஸ்ரயேலோ என்னை அறிந்துகொள்ளவில்லை. என் மக்களோ என்னைப் புரிந்துகொள்ளவில்லை' (எசா 1:3) என்று எசாயா இறைவாக்கினர் ஆண்டவராகிய கடவுளின் சோக வார்த்தைகளைப் பதிவுசெய்கின்றார்.

ஒரு பக்கம், கழுதையின் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டிய கட்டாயம் ஆதாமுக்கு.

இன்னொரு பக்கம், தீவனத் தொட்டி இருந்தும் அதன் பக்கம் திரும்பாத இறுமாப்பு இஸ்ரயேலுக்கு.

இந்த இரண்டுக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கின்றது 'தீவனத் தொட்டியில் பொதிந்து வைக்கப்பட்ட குழந்தை.'

இயேசுவின் பிறப்பு நிகழ்வை வேகமாகப் பதிவு செய்யும் லூக்கா, 'தீவனத் தொட்டி' என்று வந்தவுடன், நிறுத்தி நிதானமாக மூன்று முறை அதை எழுதுகின்றார். 

கடவுள் நம் உணவாக மாறுகிறார். இன்று!

இரண்டாவதாக, 'விடுதியில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை' என்ற வார்த்தையில் மானுடத்தின் மறுப்பு மட்டுமல்லாமல், யோசேப்பின் எளிமையும் புரிகிறது. யோசேப்பு, தன் சொந்த ஊருக்கு வருகின்றார். சொந்த ஊரில் அவருக்கு வீடில்லை. அல்லது அவரைச் சொந்தம் என்று வைத்துக்கொள்ள யாரும் இல்லை. தனக்கென அவர் அங்கே எந்த இல்லத்தையும் வைத்துக்கொள்ளவில்லை. 

மூன்றாவதாக, 'நடக்கின்றவர்கள்' மெசியாவைக் கண்டுகொள்கின்றனர்.

முதல் வாசகத்தில், காரிருளில் நடந்த மக்கள் பேரொளியைக் காண்கின்றனர். பெத்லகேம் நோக்கி நடந்த யோசேப்பு மெசியா பிறப்பதைக் காண்கின்றார். மேலிருந்து கீழ் நடந்து வந்து தூதரணி மெசியாவின் செய்தியை அறிவிக்கின்றது.

ஆக, நடப்பவர்கள் கிறிஸ்துவைக் கண்டுகொள்கின்றனர்

3 comments:

  1. “ காளை அதன் உடைமையாளனையும்,கழுதை தன் தலைவன் தீனி போடும் இடத்தையும் தெரிந்து வைத்திருந்த போதிலும் இஸ்ரயேலோ என்னை அறிந்து கொள்ளவில்லை; என் மக்களோ என்னைப் புரிந்து கொள்ளவில்லை”....... ஆண்டவராகிய கடவுளின் சோக வார்த்தைகள். கிறிஸ்து பிறப்பின் இரவு நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் மகிழ்ச்சியை எதிர்பார்த்தால் சோக வார்த்தைகள் என் கண்களில் பளீரென்று பளிச்சிடுகின்றன.ஆனால் அடுத்த வரிகள் சற்றே ஆறுதல் தருகின்றன.ஆதாமின் தீவனத்தொட்டிக் கட்டாயத்திற்கும், இஸ்ரவேலின் இறுமாப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது தீவனத் தொட்டியின் குழந்தையால்.

    ஆனால் தீவனத் தொட்டியின் குழந்தை’ ‘அனைத்துலகோரின் அல்லலுக்கும் ஆறுதலைக் கொணர்கிறதா? தெரியவில்லை. இன்றும் கூட தனக்கென ஒரு இல்லம் என்ன...உள்ளத்தைத் தேடுவோர் எத்தனை பேர்? நம்மைச்சுற்றிக் கண்களைத் திறப்போம்; மௌனத்தில் அழுவோரின் மனங்களை மகிழ்ச்சியால் நிரப்புவோம்! நாமும் தீவனத்தொட்டியை மட்டுமல்ல....நம் இருள் சூழ்ந்த நேரங்களில் பேரொளியையும் சேர்த்தே காண்போம்.
    கிறிஸ்துவையும் கண்டு கொள்வோம்....

    தந்தைக்கும்...அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. Lord!
    Grant me that grace to walk towards YOU to see CHRIST,always....everywhere & in everybody.

    Thank you rev.father🙏

    ReplyDelete
  3. நான் கழுதையுடன் தீவனத் தொட்டியில் உணவருந்த வேண்டுமோ?

    என் குழந்தையின் வாய், கழுதைகள் உண்ணும் தீவனத் தொட்டியில் பட வேண்டுமோ?'

    என்று கேட்டுக்கொண்டே ஆதாம் நகர்கின்றார்.

    தங்கள் கற்பனை வளம்....

    👍

    ReplyDelete