இன்றைய (16 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 7:19-23)
வரவிருப்பவர் நீர்தாமா?
கடவுளர்களை நம்மால் சில நேரங்களில் புரிந்துகொள்ள முடிவதில்லை. நாம் ஒன்று கேட்டால், அவர்கள் இன்னொன்றை விடையாகச் சொல்வார்கள்.
'உம் பெயர் என்ன?' என்று மோசே கேட்டால், 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்று சொல்வார் கடவுள்.
'உம் பெயர் என்னவாக இருக்கிறது?' என்று சிம்சோனின் தந்தை மனோவாகு கேட்டால், 'அது வியப்புக்குரியது. அதைப் பற்றி உனக்கு என்ன?' என்று எதிர்கேள்வி கேட்பார் கடவுள்.
'நீ அரசன்தானோ?' என்ற பிலாத்து கேட்டால், 'அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை' என்று பிலாத்தையே குழப்பி விடுவார் இயேசு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'வரவிருப்பவர் நீர்தாமா?' என்று ஆண்டவரிடம் கேட்குமாறு தம் சீடர்களுள் இருவரை அனுப்புகிறார் இயேசு. ஆனால், இயேசுவோ இதற்கு நேரிடையாகப் பதில் அளிக்கவில்லை.
இந்த நிகழ்வைப் புரிந்துகொள்வதற்கு நாம் சில கேள்விகளைக் கேட்போம்:
மரியாள் எலிசபெத்தைச் சந்தித்த நிகழ்வில் மரியாளின் வாழ்த்தொலி கேட்டு, மீட்பரின் பிறப்பை எண்ணித் தன் வாயிற்றில் துள்ளிக் குதித்தார் யோவான்.
இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வில், 'எனக்குப் பின் வரவிருப்பவர்' என்று இயேசுவைச் சுட்டிக்காட்டுகிறார் யோவான்.
தன் சீடர்கள் இருவரைக் கூப்பிட்டு, 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி' என்று இயேசுவை அடையாளம் காட்டுகிறார் யோவான்.
அப்படியிருக்க,
இப்போது, 'வரவிருப்பவர் நீர்தாமோ?' என்று அவர் கேட்டு ஆள்களை அனுப்புவது ஏன்?
என்னைப் பொருத்தவரையில், இது விடை வேண்டிக் கேட்கப்படும் கேள்வி அல்ல. மாறாக, விடை தெரிந்தே கேட்கப்படும் கேள்வி. மேலும், விடை கேட்கப்படுபவர் இதன் வழியாக விடையை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். ஆக, இந்தக் கேள்வியின் வழியாக திருமுழுக்கு யோவான் இயேசுவுக்கு ஒரு செய்தியைச் சொல்லி அனுப்புகிறார். அதாவது, 'வரவிருக்கிறர் நீர்தாம்! இன்னும் ஏன் அமைதி காக்கிறீர்! விரைவில் செயல்படும்!' என்பதுதான் அந்தச் செய்தி.
ஆகையால்தான், இயேசுவும் அந்தக் கேள்வியின் விடை புரிந்தவாறு, நான் ஏற்கெனவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன் என யோவானுக்குச் செய்தி அனுப்புகிறார்.
'பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர். கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர். தொழுநோயாளர் நலமடைகின்றனர். காது கேளாதோர் கேட்கின்றனர். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.'
இன்னொரு பக்கம், திருமுழுக்கு யோவான் இயேசுவை ஓர் அரசியல் அல்லது சமூக மாற்றத்தை நேரிடையாக முன்னெடுக்கும் மெசியா எனத் தவறாகப் புரிந்திருக்கலாம். அந்தத் தவற்றைச் சரி செய்வதற்காகவும், இயேசு தன் பணியின் தன்மையைத் தெளிவுபடுத்துகிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
இங்கே, 'இருவர்' இயேசுவிடம் வருகின்றனர். ஏனெனில், யூத சமூகச் சட்டப்படி இருவரின் சாட்சியம்தான் செல்லும். இயேசுவின் சாட்சியம் உண்மையானது என்று உறுதிப்படுத்துவதாக இந்த இருவரின் உடனிருப்பு இருக்கின்றது.
இறுதியாக, 'என்னைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்' என்று சொல்கின்ற இயேசு, இந்நிகழ்வை வாசிக்கின்ற நமக்கும் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றார்.
இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
'நான் யார்?' என்பதற்கான விடையை என் வார்த்தைகள் அல்ல, மாறாக, என் செயல்களே சொல்ல வேண்டும் - இதுதான் இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.
அல்லது, 'நான் யார்?' என்பதற்கான விடையை, 'நான் யாருக்காக?' என்ற கேள்வியின் விடையாக மாற்றுகிறார் இயேசு. 'பார்வையற்றவர்களுக்காக, உடல் ஊனமுற்றவர்களுக்காக, தொழுநோயாளர்களுக்கா, காதுகேளாதவர்களுக்காக, இறந்தவர்களுக்காக நான்!' என்று சொல்கிறார் இயேசு.
இன்று, 'நான் யார்?' என்பதை என் செயல்கள் வெளிப்படுத்துகின்றனவா? என் மதிப்பீடுகள் என் செயலில் வெளிப்படுகின்றனவா? மேலும், 'நான் யாருக்காக?' என்பது என் வாழ்வில் புலப்படும்படியாக இருக்கிறது.
இரண்டாவதாக, தெளிவு தேவைப்படும்போது அது கடவுளாக இருந்தாலும் கேட்டுவிடுவது நல்லது. 'இது இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ?' என்று குழப்பிக்கொண்டிராமல், தொடர்புடைய நபரிடமே, 'நீர் தாமா?' எனக் கேட்டுவிடுகின்றார் யோவான். தெளிவற்ற நம் மனத்தை உடனே தெளிவாக்கிவிட்டால், தான் அடுத்த வேலையைச் செய்யலாம் என்று உடனுக்குடன் தெளிவுபடுத்திக்கொள்கிறார் யோவான்.
தன் *தாயின் வயிற்றில் துள்ளிக் குதித்தார் யோவான்.
ReplyDeleteஇன்றைய நற்செய்தி நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
'நான் யார்?' என்பதற்கான விடையை என் வார்த்தைகள் அல்ல, மாறாக, என் செயல்களே சொல்ல வேண்டும் - இதுதான் இயேசுவின் புரிதலாக இருக்கின்றது.
Yes action speaks louder than words.
‘நான் யார்?’ என்பதற்கான விடையை ‘நான் யாருக்காக?’ என்று மாற்றும் இயேசு அதற்கான விடையையும் “தான் பார்வையற்றவர்களுக்காக,உடல்ஊனமுற்றவர்களுக்காக,தொழு நோயாளிகளுக்காக,காது கேளாதவர்களுக்காக,இறந்தவர்களுக்காக” என்று கூடவே தருகிறார். என்னைக்கூட இந்தக் கேள்வி “ நான் யாருக்காக?” என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ள உதவுமென நம்புகிறேன்.
ReplyDeleteஅந்த இறுதி வரிகள் எனக்கு சொல்லும் செய்தி....ஆம்! அடிக்கடி சந்தேகங்கள் எட்டிப்பார்க்கும் நம் மனத்தை உடனே தெளிவாக்கிவிட்டால் அடுத்த வேலையைச் செய்யலாமே! யோவானுக்கு மட்டுமல்ல... தந்தைக்கும் சேர்த்தே நன்றி! எனக்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.
“ சொல் சாதிக்காததை செயல் சாதிக்கும்!” எனவே செயல்களை வாழ்வாக்குவோம்..... என்று கூறும் தந்தைக்கு நன்றிகள்!!!
என்று ஆண்டவரிடம் கேட்குமாறு தம் சீடர்களுள் இருவரை அனுப்புகிறார்
ReplyDelete(இயேசு)×
*யோவான் √