Tuesday, December 22, 2020

உம் விருப்பம் என்ன?

இன்றைய (23 டிசம்பர் 2020) நற்செய்தி (லூக் 1:57-66)

உம் விருப்பம் என்ன?

இன்றைய நற்செய்தியின் கதைக்களம் சக்கரியா-எலிசபெத்தம்மாளின் வீடு. திருமுழுக்கு யோவான் பிறந்துவிட்டார். அவருக்குப் பெயரிடும் சடங்கு நடைபெறுகிறது. பெயரிடுதலோடு இணைந்து விருத்தசேதனமும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் மகிழ்ச்சி மேலோங்கி நிற்கிறது.

எலிசபெத்து மற்றும் சக்கரியா தம்பதியினரின் சுற்றத்தார் நமக்கு ஆச்சர்யத்தக்க வகையில் இருக்கிறார்கள். எப்படி?

தங்கள் சுற்றத்தில் உள்ள வயது முதிர்ந்த தம்பதியினருக்கு ஆண்டவர் அருள்கூர்ந்ததை எண்ணி மகிழ்கின்றனர். வழக்கமாக, நம் நலன் கண்டு நம் சுற்றம் மகிழ்வதில்லை. ஒருவேளை நம் துன்பம் கண்டு அழும். ஆனால், நலன் கண்டு மகிழ்தல் மிகவும் அரிது.

இவர்கள் செய்கின்ற அடுத்த காரியம் இன்னும் பாராட்டுதற்குரியது.

வாய் பேச மூடியாத ஊமையிடம் போய், 'உம் விருப்பம் என்ன?' எனக் கேட்கின்றனர்.

கடவுளால் சபிக்கப்பட்டவர் சக்கரியா என்று அவர்கள் அவரை ஒதுக்கவில்லை.

'அவன் ஊமை! பேச மாட்டான்! நாம முடிவெடுப்போம்!' என அவர்கள் அவரை நிராகரிக்கவில்லை.

மாறாக,

'உம் விருப்பம் என்ன?' எனக் கேட்கின்றனர்.

நம் இல்லங்களில் உள்ள குழந்தைகள், முதியவர்கள், நோயுற்றவர்கள், கையறுநிலையில் உள்ளவர்கள், இயலாதவர்கள், மனம் அல்லது உடல்நலம் குன்றியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை நாம் எப்படிப் பார்க்கிறோம்?

அவர்கள் அனைவரும் நம் தயவில் அல்லது கருணையில் இருப்பவர்கள் என்று நாம் அவர்களை ஒதுக்கிவிடுகிறோமா?

அல்லது

'உம் விருப்பம் என்ன?' என்று அவர்களைக் கேட்கின்றோமா?

எலிசபெத்தின் சுற்றத்தார் ஏறக்குறைய சக்கரியாவுடன் இருந்து ஊமை பாஷை பழகிவிட்டனர். எல்லாமே பழக்கம்தான். இல்லையா?

ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டுகிறார் என்றால், அதே இரக்கத்தை நாம் மற்றவர்களுக்குக் காட்டும்போதுதான் அந்த வட்டம் நிறைவடையும்.

3 comments:

  1. திருமுழுக்கு யோவானின் பெயரிடுதல் சடங்கு. சக்காரியா தம்பதியினருக்கு அவர்களின் வயது முதிர்ந்த நிலையில் கிடைத்த செல்வத்தைக்கண்டு பெருமூச்சு விடவில்லை; பொறாமைப்படவில்லை... அவருடைய உறவினர்கள். ஆனால் மகிழ்கின்றனர். வாய் பேச முடியாதவரைப் பேசவைக்க முயற்சிக்கின்றனர்.

    நம்மைச்சுற்றியுள்ள நம் தயவில் உள்ளவர்களை...மாற்றுத திறனாளிகளை...வயதானவர்களை நாம் பார்க்கும் விதம் குறித்து நம்மைக் கேள்விக்குட்படுத்துகிறார் தந்தை.

    ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டுகிறார் என்றால்,அதே இரக்கத்தை நாம் மற்றவர்களுக்குக் காட்டும் போதுதான் அந்த வட்டம் நிறைவடையும்.

    “ ஆம் இரக்கம் உள்ளோர் பேறுபெற்றவர்கள்; ஏனெனில் அவர்கள் இறைவனின் இரக்கத்தைப் பெறுவர்.”

    நம்மைச்சுற்றி இரக்கம் வேண்டி நிற்பவர்களோடு நம் இரக்க செயலைப்பகிர அழைப்பு விடுக்கிறார் தந்தை. வாழ்த்தும்...நன்றியும்!!!

    ReplyDelete
  2. ஆண்டவர் நமக்கு இரக்கம் காட்டுகிறார் என்றால், அதே இரக்கத்தை நாம் மற்றவர்களுக்குக் காட்டும்போதுதான் அந்த வட்டம் நிறைவடையும்.


    இது பதிவிடுபவருக்கும் பொருந்தும் தானே?

    ReplyDelete