Wednesday, December 16, 2020

தலைமுறை அட்டவணை

இன்றைய (17 டிசம்பர் 2020) நற்செய்தி (மத் 1:1-17)

தலைமுறை அட்டவணை

திருவருகைக்காலத்தின் 17ஆம் நாள் முதல், வழிபாட்டின் நோக்கு சற்றே மாறுகிறது. கிறிஸ்து பிறப்பு பெருவிழாவுக்கு முந்தைய ஏழு நாள்கள் மெசியாவின் ஏழு தலைப்புகள் சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பல இடங்களில் நவநாள் செபம் இன்று தொடங்குகிறது. 

இலத்தீன் மொழியில், 'ஏரோ க்ராஸ்' (ERO CRAS) (தமிழில், 'நான் வருகிறேன், நாளை') என்று இந்த நவநாள் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பில் மெசியாவை அழைக்கிறது இந்த நவநாள் கொண்டாட்டம்:

டிசம்பர் 17: ஓ ஞானமே! (O Sapitentia!)
டிசம்பர் 18: ஓ ஆண்டவரே! (O Adonai!)
டிசம்பர் 19: ஓ ஈசாயின் தண்டே! (O Radix Jesse!)
டிசம்பர் 20: ஓ தாவீதின் சாவியே! (O Clavis David!)
டிசம்பர் 21: ஓ எழும் கதிரவனே (உதயசூரியனே)! (O Oriens!)
டிசம்பர் 22: ஓ நாடுகளின் அரசரே! (O Rex Gentium!)
டிசம்பர் 23: ஓ இம்மானுவேலே! (O Emmanuel!)

இன்று நாம் மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்யும் இயேசுவின் தலைமுறை அட்டவணையை வாசிக்கின்றோம். இயேசுவின் சமகாலத்து யூத சமூகத்தில் ஒருவரின் பிறப்பின் தூய்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக தலைமுறை அட்டவணைகள் பயன்படுத்தப்பட்டன. யூதர்களின் தலைமைச் சங்கம் தலைமுறை அட்டவணைகளை உறுதி செய்யும் அதிகாரம் பெற்றிருந்தது. குருக்களாகப் பணியாற்ற வருபவர்கள், இன்னும் குறிப்பாக தலைமைக்குருவாகத் தெரிவு செய்யப்படுகின்ற ஒருவர் தன் தலைமுறை அட்டவணை வழியாக, தான் தூய்மையான யூத குலத் தோன்றல் என்பதை உறுதிசெய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. மேலும், அரசர்களின் தலைமுறை அட்டவணைகள் அரண்மனைகளில் பாதுகாக்கப்பட்டன.

இந்தப் பின்புலத்தில் மத்தேயு நற்செய்தியாளரும் லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவுக்கென்று ஒரு தலைமுறை அட்டவணையை உருவாக்குகிறார்கள். ஆம்! 'உருவாக்குகிறார்கள்' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இரண்டு தலைமுறை அட்டவணைகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருப்பதோடு, அவர்கள் தலைமுறை அட்டவணையைக் கொண்டு செல்லும் விதமும் முற்றிலும் மாறுபடுகிறது. எடுத்துக்காட்டாக, மத்தேயு, இயேசுவை, 'ஆபிரகாமின் மகன்' எனக் காட்ட, லூக்காவோ இன்னும் நீட்டிச் சென்று, 'ஆதாமின் மகன், கடவுளின் மகன்' என்று காட்டுகின்றார். மேலும், மத்தேயு தாவீது அரசரின் குடும்ப வழியில் தலைமுறையை நகர்த்திச் செல்ல, லூக்காவோ நாத்தான் வழியில் நகர்த்துகிறார். இன்னும் சிறப்பாக, மத்தேயு நற்செய்தியாளரைப் பொருத்தவரையில் இயேசுவின் தாத்தா பெயர் யாக்கோபு. ஆனால், லூக்காவைப் பொருத்தவரையில் இயேசுவின் தாத்தா பெயர் ஏலி. 

மத்தேயு நற்செய்தியாளர் எழுதுகின்ற தலைமுறை அட்டவணையில் உள்ள மூன்று விடயங்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

(அ) மூன்றும் பதினான்கும்

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் தலைமுறையை, மூன்று முறை சுற்றிய பதினான்கு தலைமுறைகள் எனப் பதிவு செய்கின்றார். ஏழு என்பது யூதர்களைப் பொருத்தவரையில் நிறைவின் எண். இருமுறை ஏழு, அதாவது பதினான்கு, நிறைவிலும் நிறைவைக் குறிக்கின்றது. இன்னொரு பக்கம், 'தாவீது' என்ற பெயரின் எபிரேய எழுத்துக்களை எண்ணியல் அடிப்படையில் பார்த்தால், அதன் கூட்டத்தொகை '14' வருகிறது. ஆக, தாவீதின் மகன் இயேசு என்பதைக் காட்டுவதற்காக, தாவீது என்ற பெயரைக் குறிக்கும் எண் '14'ஐ மூன்று முறை எழுதுகிறார் மத்தேயு. மேலும், மூன்று மற்றும் பதினான்கைப் பெருக்கினால் '42' வருகிறது. இந்த '42'ஐ, 'ஆறு மற்றும் ஏழு' என்னும் பெருக்கலின் தொகை என்றும் சொல்லலாம். ஆக, இயேசுவுக்கு முன் ஆறு தலைமுறைகள் மறைய, நிறைவின் தலைமுறையாம் ஏழாம் தலைமுறை இயேசுவில் தொடங்குகிறது என்பதை அடையாளப்படுத்த, மத்தேயு, 3 மற்றும் 14 என்னும் எண்களைப் பயன்படுத்துகின்றார்.

(ஆ) நான்கு பெண்களும் மரியா

தாமார், இராகாபு, ரூத்து, உரியாவின் மனைவி (பத்சேபா) என்னும் நான்கு பெண்களும், மரியா என்ற இளவலின் பெயரும் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் வருமாறு பார்த்துக்கொள்கிறார் மத்தேயு. வழக்கமாக, தலைமுறை அட்டவணையை ஆண்களின் பெயர்கள்தாம் அலங்கரிக்கும். ஏனெனில், விதையிடுபவர்கள் ஆண்களே. பெண்கள் விதைஏற்பிகள் என்பது பண்டைக்காலப் புரிதல். மேற்காணும் நான்கு பெண்களும் புறவினத்துப் பெண்கள். மேலும், அவர்களுடைய கருத்தரித்தல்கள் இயல்பான முறையில் நடந்தவை அல்ல. ஆனால், இப்பெண்கள் தலைமுறை அட்டவணையில் பங்கேற்பதால், இயேசுவில், 'ஆண்-பெண், யூதர்-புறவினத்தார், தூய்மை-தீட்டு, நேர்மையாளர்-பாவி' என்னும் வேறுபாடு மறைகிறது என்பதும் புலனாகிறது. மரியா தன் கன்னித்தன்மையில் குழந்தை பெற்றெடுத்தது எப்படி என்று புருவம் உயர்த்திய தன் சமகாலத்து மக்களுக்கு, கடவுளின் செயலால் அனைத்தும் சாத்தியம் என்பதைக் காட்டவே மேற்காணும் நால்வரின் பெயர்களை உள்ளே நுழைக்கிறார் மத்தேயு.

(இ) யாக்கோபின் மகன், மரியாவின் கணவர் யோசேப்பு

வழக்கமாக, ஆண்களின் பெயரைச் சொல்லியே பெண்களின் பெயர் அறிமுகப்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, எங்கள் ஊரில் கருணாநிதி மனைவி மரிய செல்வம் என்று என் அம்மாவைக் குறிப்பிடுவார்களே தவிர, மரிய செல்வத்தின் மனைவி கருணாநிதி என்று குறிப்பிடுவதில்லை. ஆனால், மத்தேயு சற்றே மாறுபட்டு, யோசேப்பை மரியாவின் கணவர் என அறிமுகம் செய்கிறார். இங்கே மரியா வியத்தகு முறையில், தூய ஆவியாரால் கருத்தரித்து குழந்தையைப் பெற்றெடுத்தார் எனக் காட்டவே அப்படிப் பதிவு செய்கிறார். இன்னொரு கோணத்தில் பார்த்தால், யோசேப்பு, தன் தந்தைக்குரிய மகன் என்ற நிலையில் வேரூன்றியவராகவும், தன் மனைவிக்குரிய கணவன் என்ற நிலையில் கிளைபரப்புபவராகவும் நிற்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

நம் தலைமுறை அட்டவணை ஒன்றை இன்று தயார் செய்ய முயற்சித்தல் நலம். நாம் எவ்வளவுதூரம் கிளைபரப்பி கனி தந்தாலும், நம் வேர்களே நம்மைத் தாங்கி நிற்கின்றன.

நம் மூதாதையருக்காக நன்றி செலுத்துகின்ற வேளையில், நம் மூதாதையரில் யாரோ ஒருவர் ஆபிரகாமின் மகன், அல்லது ஆதாமின் மகனோடு நேரடியாக இணைக்கப்படுகிறார் என்ற உணர்வு, நம் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என ஏற்றுக் கொண்டாடச் செய்கிறது.

3 comments:

  1. நம் மூதாதையருக்காக நன்றி செலுத்துகின்ற வேளையில், நம் மூதாதையரில் யாரோ ஒருவர் ஆபிரகாமின் மகன், அல்லது ஆதாமின் மகனோடு நேரடியாக இணைக்கப்படுகிறார் என்ற உணர்வு, நம் அனைவரையும் சகோதர, சகோதரிகள் என ஏற்றுக் கொண்டாடச் செய்கிறது.👌🤝

    ReplyDelete
  2. இயற்கையான முறையில் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாமார்,,இராகாபு,ரூத்து, பெத்சபா எனும் பெண்களின் பெயரோடு, தூய ஆவியின் துணையால் கருத்தரித்த ‘மரியா’ எனும் இளவலின் பெயரும் இயேசுவின் தலைமுறை அட்டவணையில் வருகிறதெனில் “கடவுளின் அருளால் அனைத்தும் சாத்தியம்” எனும் புரிதலை நமக்குத் தரவே என்ற தொனியில் ஒலிக்கிறது இந்த அட்டவணை.

    ஆம்! உண்மைதான்! நாமும் கூட ஒரு அட்டவணையைத் தயார் செய்ய முயற்சித்தால் “நாம் எத்தனைதான் உயரே உயரே பறந்திடினும் நம் வேர்களே நம்மைத் தாங்கி நிற்கின்றன” என்ற இனிமையான உண்மை மட்டுமல்ல....இந்த வேர்கள் தான் நாம் அனைவருமே ஆதாம்- ஏவாளின் மக்கள் என்ற உணர்வுக்கு...உறவுக்கு அஸ்திவாரம் என்ற வெளிச்சமும் நம் கண்களுக்குப் புலப்படும்..இத்தனை அருமையான விஷயங்களை பெருமுயற்சியின் பின்னனியில் வழங்கிய தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    அதென்ன!? விதையிடுபவர்கள்....விதை ஏற்பிகள்...? தந்தையின் சொந்த அகராதியா??? சிறப்பு!

    ReplyDelete