Tuesday, December 8, 2020

கழுகுகள் போல்

இன்றைய (9 டிசம்பர் 2020) முதல் வாசகம் (எசா 40:25-31)

கழுகுகள் போல்

கடந்த வாரம் இணைய தளத்தில் துணுக்குச் செய்தி ஒன்று வெளி வந்தது. சென்னைக்கும் பெங்களுருக்கும் இடையே ஹைப்பர் லூப் (hyper loop) பயண வசதி ஏற்பாடு செய்ய இரு நிறுவனங்களுடன் நம் நாடு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வசதியின்படி வெறும் 20 நிமிடங்களில் நாம் மேற்காணும் இரு நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும். 

இந்தத் தொழில்நுட்பம் ஏற்கெனவே அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சான் பிரான்சிஸ்கோ நகரில் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின்படி வாகனப் பயணத்தின் இரு அடிப்படையான தடைகள் நீக்கப்படுகின்றன. சாலை அல்லது இருப்புப் பாதையில் செல்லும் வாகனங்கள் மற்றும் தொடர் வண்டிகளின் வேகத்தை இரு காரணிகள் குறைக்கின்றன: ஒன்று, உராய்வு. இரண்டு, காற்றின் எதிரழுத்தம். உராய்வை நீக்கும் முகத்தான் ஏற்கெனவே ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் காந்த சக்தியைப் பயன்படுத்தி அதிவேக வாகனங்களை இயக்குகின்றன. ஆனால், காற்றின் எதிரழுத்தத்தை இன்னும் நம்மால் வெல்ல முடியவில்லை. ஆனால், ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தின்படி, இரு நகரங்களுக்கு இடையே நீண்ட குழாய் பதிக்கப்படும். அந்தக் குழாயிலிள்ள காற்று வெளியேற்றப்பட்டு வெற்றிடம் உருவாக்கப்படும். ஏறக்குறைய விண்வெளி போல இருக்கின்ற அந்தக் குழாய் நடுவில் காந்த சக்தியைப் பயன்படுத்தி வாகனம் இயக்கப்படும். இதைச் செயல்படுத்துவதற்கு நிறைய தடைகள் இருந்தாலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

மேற்காணும் பயணத்தில், களைப்பும் சோர்வும் இருக்காது.

வெறும் இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்தின் களைப்பையும் சோர்வையும் போக்க மானுடம் முயற்சிகள் எடுக்க, கடவுளோ, மனித வாழ்க்கையின் களைப்பையும் சோர்வையும் போக்க முயற்சிகள் எடுப்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன.

'ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.'

இப்படியாக, இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள் எசாயா இறைவாக்கினர் வழியாகத் தன் மக்களுக்கு வாக்குறுதி தருகின்றார். 

அதாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் நம்பிக்கையின்மையாலும் சிலைவழிபாடு என்னும் பிறழ்வாலும் செய்த தவற்றுக்காக ஆண்டவரின் கைகளில் தண்டனை பெற்று பாபிலோனியாவில் அடிமைகளாக இருக்கின்றனர். அடிமைத்தனத்தில் அவர்கள் இருந்தாலும், ஆண்டவர்N;மல் நம்பிக்கை இழக்காமல் அவர்கள் இருந்தால் களைப்பும் சோர்வும் அவர்களை அணுகாது என்பது இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என அழைக்கின்ற இயேசு, 'என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது' என ஆறுதல் தருகின்றார்.

சோர்வற்ற, மற்றும் களைப்பற்ற நம் வாழ்க்கைப் பயணத்திற்கு, இறைநம்பிக்கை என்னும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

இறைநம்பிக்கை வர வேண்டுமெனில், நாம், உராய்வு மற்றும் எதிரழுத்தம் என்னும் காரணிகளைக் களைய வேண்டும்.

எப்படி?

முதலில், உராய்வு. உராய்வு என்பது வாகனத்தின் இயக்கத்திற்கு எவ்வளவு தடையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு உதவியாகவும் இருக்கிறது. ஏனெனில், உராய்வு இன்றி வாகனம் இயங்கவோ, வாகனத்தை நிறுத்தவோ முடியாது. நாம் இந்த உலகோடு கொள்கின்ற உறவு உராய்வு ஆகும். இது ஒரே நேரத்தில் இறைநம்பிக்கைக்கு உதவியாகவும், தடையாகவும் இருக்க முடியும். இஸ்ரயேல் மக்கள் தங்கள் உலக நாட்டங்களில் விழுந்து கிடந்ததால் இறைவன் நோக்கி நகர முடியவில்லை. இயேசுவின் காலத்தில் மக்கள் தங்கள் அரசியல் மற்றும் பொருளாதார தேக்கங்களில் விழுந்துகிடந்ததால் அவர்களால் இறைவன் நோக்கி நகர முடியவில்லை. 

இரண்டு, எதிரழுத்தம். நம் பயம், கோபம், தாழ்வு மனப்பான்மை, மற்றும் குற்றவுணர்வு போன்ற காரணிகள் நமக்கு எதிர்நிற்கும் காற்றாக நம் நம்பிக்கையைத் தடை செய்கின்றன. 

மேற்காணும் இரண்டை நாம் களைய நம்பிக்கை அவசியம்.

நம்பிக்கை வந்தால் மேற்காணும் இரண்டும் மறைந்துவிடும்.

2 comments:

  1. வெறும் இரு நகரங்களுக்கு இடையேயான பயணத்தின் களைப்பையும் சோர்வையும் போக்க மானுடம் முயற்சிகள் எடுக்க, கடவுளோ, மனித வாழ்க்கையின் களைப்பையும் சோர்வையும் போக்க முயற்சிகள் எடுப்பதை இன்றைய வாசகங்கள் நமக்குச் சொல்கின்றன. 👌

    ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர். அவர்கள் ஓடுவர். களைப்படையார். நடந்து செல்வர். சோர்வடையார்.'

    சோர்வற்ற, மற்றும் களைப்பற்ற நம் வாழ்க்கைப் பயணத்திற்கு, இறைநம்பிக்கை என்னும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் தேவைப்படுகிறது.

    Nice metaphor🤝

    I greatly admire your scientific approach and knowledge.

    How wonderfully you coin Science with Spirituality!

    👍

    ReplyDelete
  2. உறவுக்குச் சமமான ‘உராய்வும்’, பயம் மற்றும் கோபத்திற்குச் சமமான ‘எதிரழுத்தமும்’ ஆண்டவரில் நம் நம்பிக்கையைப் பின்னுக்குத் தள்ளி சோர்வையும்,களைப்பையும் நமக்கு முன் வைப்பதாகச் சொல்ல வரும் பதிவு. சோர்வு கூட சமயங்களில் பெரும் சுமைதான். தந்தையின் பயண களைப்பும் அனுபவமும் பேசுவதாக உணருகிறேன்.

    அதே சமயம் பெருஞ்சுமை சுமப்பவர்கள் எங்கே சென்றால்....யாரிடம் சென்றால் இளைப்பாறுதல் கிடைக்கும் எனும் இரகசியமும் தந்தைக்குத் தெரியாமலில்லை.
    “ ஆண்டவர் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர்; கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்.நடந்து செல்வர்; சோர்வடையார்.” நம்பிக்கையூட்டும்...சோர்வு போக்கும் வார்த்தைகள்!

    இந்த நுட்பம் தெரிந்தவர்களுக்கு “ ஹைபர்லூப்” என்ன? வேறு எந்த நுட்பமும் ஜுஜுபி.
    “இறைநம்பிக்கை” என்ற ஒரே கல்லில் உராய்வு மற்றும் எதிரழுத்தமெனும் இரு மாங்காய்களை வீழ்த்துவோம்! எப்படி?

    “எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான” இந்த த் தந்தைக்கு தெரியாத விஷயமென்று ஏதுமுண்டா? யோசிக்கிறேன்.நன்றியும்....வாழ்த்தும்.....

    ReplyDelete